சிறந்த நாவலுக்கான எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற் சிறப்புடையது இந்த நாவல். அந்நியர்கள் யார் என்ற கேள்வியை பல்வேறு தளங்களில் எழுப்பும் நாவல் இது. இந்த நாவலில் சில முக்கியக் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். துளசி –+ (ராம்சந்த்) கிஷோர், கணேசன்-+ சத்யா; சுரேஷ்+ கல்பனா- ((துர்காவைக் காப்பாற்றுபவள்) தூயவன் – தம்பி ரங்கராஜன். இவை தவிர சிறு சிறு இடங்களில் வரும் நிறைய கதாபாத்திரங்கள்.


மேற்கண்ட பட்டியலில் மிகவும் தேறாதவன் என்றால் அவன் சுரேஷ்தான்.  பலமுறை கல்பனா அவனைத் திருத்த முயன்றும் முடியாமல் போகிறது.  ஊருக்கு வேலை தேடி வரும் பெண்கள் என்றால் இவனுக்குக் கொண்டாட்டம்தான்.  பனியன் கம்பெனி வைத்திருக்கிறான்.  அதில் ஒரு சமயம் ஒரு கேரள ஆளை நம்பி ஐம்பதாயிரம் இழந்திருக்கிறான்.  வாழ்க்கை போராட்ட மயமானது என்று உணர்ந்தாலும் சிறு பெண்கள் அல்லது அபலைகளாக வருபவர்கள், அல்லது ஏதாவது வேலை தேடி வருபவர்கள் என அவன் கண்ணுக்குத் தெரிந்து பட்டால் வேறு வினையே வேண்டாம்.

பலமுறை கல்பனா வேதனைப் படுகிறாள்.  ஆனால் என்ன பலன். அவளிடத்திலேயே அவன் தாறுமாறாக, இன்னும் எவ்வளவு சிறுமை படுத்த முடியுமோ அப்படி அவளைத் தன் சொற்களால் ஊனமாக்குகிறான்.  ஒருமுறை சுவருக்கு சுண்ணாம்பு பூசுதல் பற்றிய பேச்சு வருகிறது. dசுண்ணாம்பு பூச வில்லையென்றால் அது கேவலமான பொம்பள மாதிரி இருக்கும் என்று கல்பனா சொல்ல, அதற்கு அவன் உன்ன மாதிரியா என்கிறான்.  பேச்சு வலுக்கிறது.

துளசி ஒடிசாவிலிருந்து வந்திருக்கிறாள்.வந்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன.. தமிழ மெல்ல மெல்லக் கற்றுக் கொண்டு மு்ழுமையாய் தமிழ் பேசுவாள். அவளுக்கு முதன் முதலில் அறிமுகமானது ராம்சந்த் தான்.  அவன் அவளுக்கு பல வகையிலும்  உதவி புரிந்திருக்கிறான்.  மனதுக்கு தைரியம் அளித்தவன் என்று சொல்லலாம். அவனைத் தேடி பல நேரங்களில் வருந்துகிறாள்.  ஆனால் ஒருநாள் அவன் கொல்லப்பட்டு மருத்துவமனையில் இருப்பதைக் காண்கிறாள். அந்த நினைவு அவள் மனதை விட்டு மறையவே இல்லை.  ராம் சந்த் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது பற்றி பல கணிப்புகள் இருக்கின்றன.  ஆனால் சரியான காரணம் தெரியவில்லை.  ஆசிரியர் அவன் கத்தி குத்துப் பட்டு உயிருக்காக பல இடங்களில் ஓடி அலைந்ததை விவரிக்கிறார்.

துளசி சற்று மன உறுதி உடையவள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று கூறும் போதே பலருடைய சந்தேகத்தைப் போக்கும் கடமையும் அவளுக்கு இருக்கிறது.  காவல் இலாகாவில் அவளுக்கு நல்ல பெயர் இருக்கிறது. வயிற்றுப் பாட்டுக்கு பல இடங்களில் உழைக்கிறாள்.  பனியன் கம்பெனியிலும் வேலை பார்க்கிறாள். தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஊருக்கு வரும் அபலைகள், கற்பழிக்கப்பட்ட பெண்கள், ஏமாற்றப்பட்ட பெண்கள்  என அனைவரையும் அவளுக்கு தெரிய வரும்  போது காப்பாற்றுகிறாள். பலமுறை போலீஸ் அவர்களையெல்லாம் தேடி வரும்போது, துணிந்து அந்த இலாக்காவிற்கும் மற்றவர்களுக்கும் தன்னால் முடிந்தவரை உதவி புரிகிறாள்.

மிகப் பெரிய விஷயம் என்ன தெரியுமா? வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வேலைத் தேடி தருவதே லோக்கல் என்று சொல்லக்கூடிய தமிழ் மக்கள்தான்.  வடநாட்டுக்காரன் , அதுவும் வேலை தேடி வருகின்றான் என்றால் பரிந்து போய் வேலை தேடித் தருகிறார்கள் நம்மூர் மக்கள். கிரிஸ்டோபர் என்ற வடநாட்டுக் காரனுக்கு சுரேஷினிடத்தில் வேலை வாங்கித் தர ஒரு பெண்தான் போகின்றாள்.

அதைப் பார்த்து விட்டு சுரேஷ் சொல்கிறான்:

என் நம்மாளுக இப்படி கூறு கெட்டுப் போயிட்டாங்க.. வடநாட்டுக் காரன்…அவனுக்கு  ஒரு பொம்பள வந்து வேலெ கேட்கிறா.  என்ன சம்பந்தம்..! யோசிச்சுப் பார்க்க வேண்டி இருக்கு.. இல்ல..சரி சரி. போயிட்டு நாளைக்கு வா..! (பக்.௧0௮)

தூயவன் என்றொரு ஒரு உத்தமமான கதாப்பாத்திரம். 

அவர் ஒரு பஞ்சாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய காலத்தில் ஏராளமான பஞ்சாலைகள் இருந்தன. இப்போது அவை இல்லை, அல்லது இட மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சில வேளை சமையல்…! மற்ற நேரம் ஹோட்டல். என்று அவர் காலம் தள்ளுகிறார். அவருடைய சித்தப்பா மகன் ரங்கராஜன் அவருடனே இருக்கிறான்.

ஒருமுறை தன் வாகனத்தில் வந்துக் கொண்டிருக்கும்போது ஒரு அபலைப் பெண்ணின் குரல் கேட்டு புதர் நடுவே இருக்கும் பெண்ணைக் காண்கிறார்.  அலங்கோலமான நிலை.  அவளைக் காப்பாற்றி தன் வீட்டீல் சில காலம் வைத்துக் கொள்கிறார். அவள்தான் துர்கா. போலிஸ் என்றால் அஞ்சுகிறாள். (சில காலம் கழித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்த்து விடலாம்  என்று நினைக்கிறார்)

ஆனால் துர்க்காவிற்கு இந்த இடம் பிடித்து விடுகிறது. வீட்டை அழகாக நிர்வாகம் செய்கிறாள். தோட்டம் அமைக்கிறாள், பக்கத்தில் உள்ள சிலருக்கு உதவிகள் செய்கிறாள். ஒருமுறை ரங்கராஜன் அவளை தன் வாகனத்தில் பின்னால் வைத்துச் செல்வதைப் பார்க்கிறார். கண்டிக்கிறார்.  துர்காவிற்கு வேலை தேடிக் கொடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார்.

அவளுக்கு வேலை கிடைக்கிறது.  வேறு இடத்திற்குச் செல்கிறாள். அவளை பல மாதம் கழித்து ஒரு பேருந்தில் பார்க்க நேர்கிறது.  அவள் பார்க்கவில்லை.  இவர் பார்க்கிறார். அவர் தனக்குள் சொல்லும் வார்த்தைகள் மிகப் பிரமாதம்:

இப்போது சற்று சோர்வாக இருப்பதாக அவள் தென்பட்டாலும் அவள் வாழ்க்கையை அவள் பாதுகாத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. (பக்.௨௩0)

இதைப் படிக்கையில் ஒரு காட்சி எனக்கு நினவுக்கு வந்தது. தாய்ப் பறவை சிறிது நாடக்ள் தன் குட்டிப் பறவைக்கு பறக்கக் கற்றுக் கொடுக்கும்.  பிறகு சற்று தள்ளி நின்று பார்க்கும்.  பிறகு ஓர் ஆறுதல் கொள்ளும் அல்லவா அதைப் போல,  தன்னிடம் வந்து சேர்ந்து இருந்த அபலைப் பெண்ணை யார் இப்படி பாதுக்காக்க முடியும்.  நகமே படாமல், மனதில் கேவலமான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல்  சொல்லபோனால் ஒரு பூவிற்கு எந்த வித காயமும் இல்லாமல் அப்படியே சமூகத்திற்குத் தர முடியுமா? முடிந்திருக்கிறது தூயவனுக்கு. அதனால்தான் அவர் தூயவன்!

இந்த நாவலில் மறக்க முடியாத கதாப்பாத்திரம் யார்?   மூவர் போட்டி போடுகின்றனர்: துளசி, துர்க்கா & மோகினி

என்னைப் பொறுத்த வரை துர்காவிற்கு சரியான வேலை கிடைத்து விட்டது என்றவுடனே மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னொரு கதாப்பாத்திரம் மோகினி.  எக்குத் தப்பாக சுரேஷிடத்தில் மாட்டிக் கொள்கிறாள்.  கல்பனா துடிக்கிறாள். அவள் மட்டுமா? படிக்கின்ற அனைவருமேதான். அவளைக் காப்பாற்ற துடிக்கின்றார்கள் இருவர். துளசி மற்றும் கல்பனா.  இதைத் தாண்டி நான்.

சுரேஷின் தொல்லை தாங்க முடியாது  மோகினி என்ற சிறு வயதுப் பெண் அண்ணா நகர் பூங்காவில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து விடுகிறாள் துளசி.  என்ன விஷயம்? எங்கே இருக்கிறாய்? என்ன விஷயம் என்று கேட்கையில் சுரேஷின் குடோன் என்கிறாள். துலசிக்கு புரிந்து படுகிறது.  என்ன வேலை பண்றீங்க

வீட்டு வேலை பண்றன்?

யார் அங்க அம்மா?

கல்பனா.

நீங்க அவங்க உறவா, சொ!ந்தக்காரங்களா இல்ல,

வேலைக்காரி

வேலைக்காரின்னா, சின்னப் பெண்ணு, என்னாச்சு, மூஞ்சி எல்லாம் வீங்கி இருக்கு…

இம்சை பண்ணுறான்

விஷயம் கேள்விப்படுகிறாள், கல்பனாவிடம் சொல்ல முடியவில்லை என்று வருந்துகிறது அந்த குழந்தை.  போலிஸிடம் போய் முறையிட அங்கு ஸ்டேஷனில் காத்து நிற்கும்  போது ஒரு கூட்டம் துளசியையும் இன்னொரு கூட்டம் மோகினியையும் வளைத்துக் கொள்கிறது. ஒரு கூட்டத்தில் கல்பனா இருந்தாள். அவள் துளசியைப் பார்த்து கை கூப்பி கெஞ்சினாள். சில நொடிகளில் அங்கு கூட்டம் இல்லை, மோகினியும் இல்லை.

முடிவு படிப்பவர்களுக்கே? 

மோகினி காப்பாற்றப்பட்டளா இல்லை அகப்பட்டுக் கொண்டாளா?  தெரியாது. அவளைக் காப்பற்றியது யார்? கலபனாவா? அல்லது துளசியா? ஆனால் இது இல்லாமல் அகப்பட்டுக் கொண்டாள் என்றால் சுரேஷிடமா? இல்லை வேறு யாரிடமாவதா? தெரியவில்லை.
முடிவு படிப்பவர்களுக்கே! ஆனால் தினந்தோறும் அகப்பட்டுக் கொண்ட வடநாட்டு அபலைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றது…

கதையை ஆசிரியர் இப்படி முடிக்கின்றார்.  புத்தாண்டு நோக்கி பல விடுதிகள் அமர்க்களமாக கொண்டாடத் துவங்கியுள்ளன.
ஆண்டுகள் பறக்கும் ..மனிதர்கள் மாறுவார்களா? சொந்த மண்ணிலே அந்நியராகத்தான் வலம் வந்துக் கொண்டிருக்கிறோம்.

நாவலில் பல விஷயங்கள் மிகப் பிரமாதமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்பது வடநாட்டு மக்கள் அதிகம் புழங்கும் இடமாக இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் அவர்கள்தான்.. ஊட்டி,சிவன் மலை, சென்னிமலை குற்றாலம் என எல்லா இடங்களிலும் அவர்களே இருக்கிறார்கள். அவர்கள் வந்து தங்கும் அறை மிகச் சிறியதுதான்.  எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவை வயிறார சாப்பாடு.(பீகாரி நேப்பாளி என.  கூட்டமாக போறாங்க, ஏதாச்சும் பொன்னுக பின்னாலதான் திரியறானுக.

இடைத்தரகர்கள்வடநாட்டிலிருந்து பத்து இருபது பேரைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு வேலை கிடைக்கும். அதில் சிலர் காதல் விவகாரங்களில் சிக்கி தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருப்பார்கள்.. கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எங்காவது கிராம ஓரங்களில் கிடப்பார்கள்.

முகம் சிதையாமல் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் காவல்துறைக்கு ப்ரச்னை இல்லை.. . இல்லை..சிதைந்துப் போயிருந்தால் அடையாளம் கான்பதற்காக சுவரொட்டிகளில் அவர்களின் முகங்கள் காணப்படும். (ஒரே ஒரு இணைப்புச் செய்தி.. இப்போது சிலப்பதிகாரத்தை நினவு கூரலாம்.   பூம்புகார் விட்டு விட்டு நல்வாழக்கை வாழத் துடித்த கோவலன் கண்ணகியின் கதை நினக்கலாம். மனம் முழுவதும் கனத்துப் போகிறது…)

கடையில் இந்தியில்தான் விலை சொல்லப்படுகிறது.  பல தமிழ் மக்கள் ஹிந்தி பேசுகின்றனர்.  சொல்லப்போனால் ஹிந்தி கற்கின்றனர். தூயவனே கூட ஹிந்தி கற்றுக்கொள்கிறார். முப்பது நாட்களில் ஹிந்தி என்ற புத்தத்தை மனப்பாடம் செய்கிறார்
தமிழ் நாட்டு ஆண்கள் வடநாட்டு பெண்களிடத்தில் தவறாக நடந்துக் கொள்கிறார்கள்.  அதனால் சில பெண்கள் மிரண்டு ஓடுகிறார்கள்.

வட நாட்டு மக்கள் தமிழ் நாட்டில் அதிகம் என்று சொல்ல இதை கேட்டு சோம சுந்தரம் சிரிக்கிறார். அவர் சொல்லும் கருத்து மிக முக்கியம்:

நம்மாளுக வேலை செய்ய மாட்டேங்கிறாங்க.. அவங்க நம்மாளுக்கு கொடுக்கற கூலியில் பாதிக்கு வேலை செய்யறாங்க.. சோறு போட்டா வேலை செய்யறாங்க. அதுவே போதுங்கிறாங்க.. பையா..பையான்னு ஒத்துமையா இருக்கானுங்க.. அந்த ஒற்றுமையும் நம்மாளுங்கிட்ட பார்க்க முடியுமா? (ப.௧௨0)

இன்னொரு விஷயமும் கூறப்படுகிறது:

நூத்துக்கணக்குல இந்திக்காரங்க இருக்காங்க வெளியே போனா அவனுக நாலு பேரு இந்தியில் பேசி சிரிக்கிறாங்க..நம்மல கிண்டல் பண்ற மாதிரி இருக்கு, வேற வழி இல்ல.  அடிப்படையா கொஞ்சம் வேலை செய்யணும்.. அதற்கு இந்தி இல்லாமல் முடியாது

இன்னொருவர் கூறுகிறார்: அந்த வடநாட்டுக் காரங்க பார்த்து நமக்குப் பொறாமை:- நல்ல அழகா  இருக்காங்க.. வாட்டசாட்டமா இருக்காங்க, எந்த வேலை கொடுத்தாலும் வேலை செய்ய்றாங்க. எவ்வளவு காசு கம்மியா கொடுத்தாலும் வேலை செய்யுறாங்க.

இதில் உறைக்கும் உண்மை சொல்லப்படுகிறது:

என்ன ஞாயம் கிடக்கு, வடக்கத்தி காரன் வரக்கூடாதாயா, வேலை பார்க்கக் கூடாதா…?  நீங்க உற்பத்தி பண்ண வெள்ளை பனியன் மட்டும் எதுக்கு வடக்கு மக்களுக்கு அனுப்பறீங்க .. அது மட்டும் சரியா? (௧௨௮)

பலர் பனியன் கம்பெனியில் வேலை பார்கின்றனர்.  நின்று கொண்டே வேலை செய்வதால் பலருக்கு உடல் நலம் சரியில்லாமல் போகிறது.

இதற்கிடையில் பல வடநாட்டுப் பெண்கள் உள்ளூர்க்காரர்களால் கடத்தப்படுகின்றனர்.  அல்லது கொலை செய்யப்படுகின்றனர்.  பெண்களாக இருந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லி கற்பழிப்பு செய்து விட்டு, அடையாளம் தெரியாதபடி கொலையும் செய்து போட்டு விடுகிறார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது.. ஒரு கார் வருகிறது..லைன் வீட்டின் அருகே கார் நிற்கிறது.. மூன்று பெண்கள் வரிசையாக வந்து காரின் அருகில் நின்றார்கள்.  அவர்கள் அனைவரும் நல்ல சிவப்பு நிறத்தில் இருந்தார்கள்.. இந்த பெண்களை எல்லாம் வார இறுதியில் எங்கெங்கோ கூட்டிச் செல்லவும் கடத்தப்படவும் இருக்கிற  விஷயங்கள்.. (௧௨௮)

சில நேரங்களில் வேலை கேட்டு வருகிறவர்களை  வேலை தருவதாகக் கூறி கெடுத்தும் விடுகிறார்கள். அவ்வாறு கற்பழிக்கப்பட்டு கிடந்தவர்களில் ஒருத்திதான் துர்கா.  அவளைத்தான் தூயவன் காப்பாற்றுகிறார். வேலை கொடுக்கிறார்.

என்னதான் அலைபேசி, கூகுள் என்று சொன்னாலும் அதிலும் சில தகவல் குறித்து விளக்கம் கேட்கையில் தாறுமாறாகப் பதில் வருகிறது.  காமராசர் என்று அடிக்கப் போகையில் காம் என்று வரும்  போதே அசிங்கமான படங்கள் தென்படுகின்றன.

ஆசிரியப் பணி ஒன்றும் மிகப் பிரமாதமான வேலை கிடையாது.  அதுவும் தமிழ் மொழ் கற்றுத் தரும் ஆசிரியர்கள் படும் பாடு கேலிக்கூத்துதான். திருமணத்தில் அநியாயமாக சாப்பாடு வீணாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பல போராட்டங்களை இந்த நாவல் விவரிக்கிறது:

குடிநீர் பிரச்னை, மதவாத எதிர்ப்பு, சமூக நீதி இல்லை, சாதி பிரச்னை இருக்கிறது.  மதவாதிகள் உள்ளே நுழைந்து மத மாற்றம் செய்யத் தொடங்குவார்கள் என்ற பயம் இருக்கிறது.

சரியான சம்பளம் வேண்டும்.

நாதஸ்வரம் மேளம் எல்லாம் போய் விட்டது அதற்குப் பதிலாக கெண்டை மேளம் வாசிக்கப்படுகிறது.  அதை மிக எளிதாக என்ஜீனியருக்குப் படிக்கும் ஆண்கள் கற்றுக் கொள்கிறார்கள்.  வருமானம் கிடைக்கிறது அது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
வீடு கட்ட ஆற்று மணல் இல்லை. எம் சாண்ட் வந்து விட்டது .. அது மலேசியாவிலிருந்து வந்திருக்கிறது என்று செய்தி.  ஆசிரியர் அதை சற்று அழகாக பதிவிட்டிருப்பார். இப்போதைக்கு எம்சாண்ட் என்றால் அது மலேசிய மணல் என்றாகிவிடது என்ற எண்ணம் வந்தது .என்கிறார்.

 இது வெறும் மணலுக்குச் சொல்லப்பட்ட கருத்து அல்ல..மலேசிய தமிழர்களா ? அவர்களது பட்ட பாடான பிழைப்பா.. ! அதைப்போல தமிழகமும் ஆகிவிடுமா? சொந்த மண்ணிலேயே அந்நியர்கள் போல வாழ்வா? (௨௫௨)

மிக அருமையான வரிகள் பற்றி குறித்தாக வேண்டும்.

வாழ்க்கை என்பதிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு இருக்கிறோம் என்பதை வெளிப்படு்த்தும் வரிகள் இவை (பக். ௭௨-௭௩)

பலர் ஆயுதபூஜைக்கு அல்லது தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று விடுகிறார்கள்.  திரும்பி வரும்போது புதுக் கம்பெனியைத்தான் நாட வேண்டியிருக்கும்

துளசிக்கே அந்த நிலை.. உடம்பு சுகமில்லாமல் போய் விடுகிற போது மறுபடியும் வேலைக்குப் போகும் இடைவெளிக்குப் பின் புது கம்பெனிக்குத்தான் போக வேண்டி இருந்தது.

வாழ்க்கை எவ்வளவு வேகமாக் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்..

சண்டே மார்க்கெட் என்று ஒவ்வொரு பகுதியிலும்  உண்டு. துளசிக்கு அதைப் பார்க்க ஆசை.  தமிழ் மக்களிடமிருந்து ஏன் அன்னியப்பட்டுக் கொண்டிருக்க்றோம் என்று துளசி நினைப்பதுண்டு.

அது கூட நல்லது என்று நினைப்பாள்.

காரணம் எந்த சச்சரவும் சண்டையும் இல்லாம் தனித்து வாழ முடிவது ஆறுதலாகத்தான் அவளுக்குப் பட்டிருக்கிறது.

நூதமான திருட்டு பற்றி பேசுகிறார்  ஆசிரியர்:

வடநாட்டுக்காரங்க குறி சொல்றதா வருகிறார்கள். குறி போட்டுவிட்டு அந்த வீட்டுல போய் திருடுவாங்க  அது ஒரு கோடங்கி கும்பல்

அதற்கு ஒருவர் கேட்கிறார்:

கோடங்கி வருகிறார்களா இல்லையா கோடங்கி வேசத்துல வடநாட்டுக் காரங்களா இல்லெ உளவு பாக்க போலிஸ் வருதா யாருக்குத் தெரியும்?

கட்டாயமாக எல்லோரும் பாராட்டும்படியான ஒரு விஷயம் அதை ஆசிரியர் கூறுகிறார்:

தூயவன் தனக்கு தெரிந்தவரிடத்தில் அவருடைய பணிகள் குறித்துப் பேசுகிறார்.  அவர் ஒரு பக்கத்திற்கு விடியற் காலையிலிருந்து தூங்கும் வரையிலான பணிகளைக் குறிப்பிடுகிறார்.

திடிரென்று உங்களுடைய  மனைவி குறித்து ஒன்றுமே சொல்லவே இல்லையே என்று கேட்க அந்த நண்பர் சற்று தடுமாறுகிறார், பிறகு சொல்கிறார்:

மனைவிதான் எல்லாமே பண்றாங்க.. பாருங்களேன். ஒரு நாள் வேலை என்று குறிப்பிடுகையில் அவங்களப் பத்தி குறிப்பிட்ட அளவு கூட சொல்ல இல்லாமப் போச்சு..அவங்க விடாம வேலை பாத்துகிட்டெ இருக்காங்க.. நான் என் மனைவியை என்னுடைய நடவடிக்கையில எங்காவது சொல்லி இருக்கணும்…! (பக்.௧௩௯)

கதையின் தலைப்பு அந்நியர்கள்:

இதில் அட்டையின் மேல் ஒரு பெண்ணின் படம் வரையப்பட்டிருக்கிறது.  இது  யார்?

துர்கா,

கல்பனா, மோகினி..

அல்லது மூன்று பெண்களின் கலவையா?

மோகினி மிகச் சிறு வயதுப் பெண்.  சுரேஷின் ஆளுமையில் அகப்பட்டுத் துடிப்பவள். கல்பனா திருமணம் செய்துக் கொண்டதாலோ என்னவோ, சில சமயம் எதிர்த்துப் பேசினாலும் பல நேரங்களில் அடங்கி நிற்பவளாக இருக்கிறாள். அவனை விட்டு வெளியே வர முடியாதவளாக இருக்கிறாள் துளசியோ போராடுகிறாள், முடிந்த வரை.

அந்நியர்கள் யார்? முன்பு வெளிநாட்டிலிருந்து வந்த வரை அல்லது இந்தியா கடந்து வெளி நாடு என்பது அந்நிய நாடு என்றனர்.

விருந்து என்ற சொல் புழக்கத்தில் இருக்கிறது. ஊருக்கு புதியதாக வருபவர் அல்லது முன்பின் பழக்கமில்லாதவர்தான் விருந்தினர்.  அவருக்கு உணவு, உறையுள் கொடுத்து இன்புற்றிருந்த நாடு நம் நாடு.  இப்போது அண்ணன், தம்பி, பெரியப்பா போன்றோர் விருந்தினர் ஆகி விட்டனர்.  முன் கூட்டியே நம் வரவை அவர்களுக்கு அறிவிக்க வேண்டியிருக்கிறது.  மனித நேயத்தை மறந்து விட்டோமா தெரியவில்லை?

அதனால் இப்போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் வந்தாலேயே அன்னியர்கள்.  காரணம் இங்கு பல மொழிகள் பேசப்படுகின்றன. உனவு, உடை, பழக்க வழக்கம் எல்லாமே மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பக்கத்து வீட்டுக்காரன் நமக்கு அந்நியன்தான். நமக்கு யாரைப் பற்றியும் அவ்வளவாகத் தெரிந்துக் கொள்வதில் விருப்பமில்லை.  ஏதோ ஒரு காரணத்திற்காக, காரியத்திற்காக ஒன்று கூடுகிறோம். பிறகு பிரிகிறோம். மிகப் பெரிய வீடு இருந்தும் அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை, ஒரு தனி கைப்பேசி..

ஆனால் என் மனதிற்குப் பட்டதை உரைக்கிறேன்.

நாம் ஒருவருடன் ஏதோவொரு பந்தத்தால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அது திருமணம் அல்லது நண்பன் என்ற போர்வை இருக்கலாம்.  ஆனால் அவர்கள் நம்மை புரிந்துக் கொள்ளாதவரை, இல்லை இல்லை நாம் சொல்வதை குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்ளாதவர், அல்லது மரியாதை கொடுத்து கேட்காதவரை  நாம் எல்லோருமே அநிநியர்கள்தான்.

மு மேத்தா புயலுக்கு முன் என்ற கவிதையில் இப்படி எழுதிகிறார்.

இந்தியாவின் வாழக்கைப் பயணத்தில்
இதுவரை வழிப்போக்கர்களாகவே இருந்தோம்
எதையோ தொலைத்துவிட்ட ஏக்க உணர்வோடு
இறுதிவரை தேடிச்செல்கிற
தேசாந்திரிகளாய்த் திரிந்தோம்
சொந்த மண்ணிலேயே
அன்னியர்போல் உணர்ந்தோம்…

இவருடைய கவிதை சற்று பரந்துப்பட்ட நோக்கில் எழுதப்பட்டதோ தெரியவில்லை..

வரிகளை மாற்ற வேண்டுமோ?
சொந்த வீட்டிலேயே
அந்நியர் போல் உணர்ந்தோம்..!
குறளின் வரிகள் நினவுக்கு வருகின்றன.
தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு!
எது நம்முடைய வீடு? எது நம்முடைய எண்ணம்?
மற்றவர்களால் நாம் அடக்கப்படாதவரை, 
ஆக்ரமிப்பு செய்யப்படாதவரை!

சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆசிரியரின் ஒவ்வொரு பக்கமும் நம்மை நின்று நிதானமாகப் படிக்க வைக்கிறது.அடுத்த பகக்த்தில் என்ன  விவரமோ என்று மனதை அலைய வைக்கிறது. பல்வேறு இடம் பெயர்ந்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது . இன்றைய உலகமயமாக்கப்பட்டச் சூழலில் மனிதர்களின் நெருக்கடிகளைச் சரியாகச் சொல்லும் நவீன உலகின் சிறந்த எழுத்துப் பிரதி இது

 ( ரூ250 கவிதாபதிப்பகம், சென்னை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்