சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினக் கருப்பொருளாக ‘Give to Gain’ ‘வழங்கிப் பெறுவோம்’ என்பதாக உணர்த்தப்;படுகின்றது. உலகளாவிய ரீதியில் சமத்துவத்தை அடைவதற்கு தாராள மனப்பான்மையுடனும், கூட்டுப் பணியுடனும், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பங்களிப்பதன் மூலம் அதனை அடையும் வகையில் வலுவுறுத்துவதாக அமைகின்றது. குறிப்பாக மரியாதை, அறிவு, சமத்துவமான நீதி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது.
அமெரிக்காவில் தொழிற்புரட்சி நகரான நியூயோர்க்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக்கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்த்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள்கூடிக் குரல் எழுப்பினர். தொடர்ந்து போராடினர்;. பெண்கள் அமைப்புகள் பல தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டு கொதித்து எழுந்தனர். அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள் போராட்டத்தின் தாக்கம் கண்டு நில குலைந்து போனார். போராட்டம் என்பது மிகவும் பெரியது. போராடினால்த்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளாந்தெழுந்தது.
அதன் விளைவாக 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு கம்யூனிஸ ஆர்வலரும் பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவருமான கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்தேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
1917ஆம் ஆண்டில் ரஷ்யப் பெண்கள் ‘உணவும் அமைதியும்’ என்ற பெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்தத்திகதி அதாவது மார்ச் மாதம் எட்டாம் திகதியென்பது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவர்களின் அந்த நான்கு நாட்கள் இடம்பெற்ற போராட்டத்தில்தான் கிறகோரியன் நாட்காட்டியில் காட்டப்பட்ட மார்ச் மாதம் எட்டாம் திகதியை பெண்கள் தினத்திற்கான நாளாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள் என்பதனைப் பார்க்க முடிகின்றது.
மகளிர் தினத்தில் ஊதாநிறத்தைத்தான் பயன்படுத்துவார்கள். ஊதாநிறம் நீதி மற்றும் கண்ணியத்தைக் குறிப்பதனால் சர்வதேச பெண்கள் தினத்தில் ஊதா நிற ஆடைகளையே அவர்கள் முக்கிய நிறமாகப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் பெண்களாகிய நாம் சுயமரியாதையாக இருப்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை நினைவிருத்தவேண்டும். அதுதான் பெண்கள் குறித்த சுயமரியாதை என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்;. எங்கே சுயமரியாதை கிடைக்கின்றதோ அங்கே அவள் மகிழ்ச்சியாக இருக்கின்றாள். எல்லோரும் சமம் என்பதை சமூகத்தினால் போற்றப்படவேண்டும். பெண் என்ற அடையாளத்தைச் சமூகம் சுமத்திக்கொண்டிருப்பதை விடுவிக்கும் போதுதான் அங்கே சுயமரியாதை ஒரு பெண்ணுக்குக் கிடைக்கின்றது.
பெண்மை என்பது இயற்கையின் அற்புதமான படைப்பு. அந்தப் பெண் தான் சுதந்திரமாக இயங்கும்பொழுது மனம் மலர்கின்றது. தான் செய்ய விரும்புவதை செய்வது மட்டுமல்ல சுதந்திரம், அவள் தான் செய்ய விரும்பாததை செய்யாமல் இருப்பதுவும்; சுதந்திரம்தான் என்பதை உணர்த்தவேண்டும்.
பெண்கள் முன்பைவிட பல்வேறு தளங்களில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தத்தமது திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி வருகின்றமை போற்றுதற்குரியது. அவர்களின் பெருமைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் உரையாடியும் வந்திருக்கின்றோம். ஆனால் புதிய அலையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய இளம் சமுதாயத்தினரின் சிக்கல்கள் எமக்குப் புரிவதேயில்லை. இளையவர்கள் சிறப்பாகத்தான் வளர்ந்து வருகின்றார்கள். படிப்படியாக அவர்கள் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
வாழ்க்கையில் வெற்றி என்பது தானாக வந்து வெற்றிவாகை சூடுவதில்லை. யாரிடமிருந்து அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளும்போது வெற்றி கிடைக்கின்றது. நாளை உலகம் உனக்காத்தான் எனச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புவதைப் செய்து கொண்டிருப்பதுதான் மிகப் பெரும் நிறைவைத் தரும் எனக் கொள்ள வேண்டும்.
. பெண்களுக்கெதிரான குற்றங்;கள் எங்கே நடக்கின்றனவோ அங்கே பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்;டத்தின் நியாயங்களை சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதும்தான் உண்மையான மகளிர் தினமாக நாம் கொள்ளலாம். ஆனால் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் காதலர் தினத்தைப்போலவே சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாட்டமாகச் செய்யப்பட்டு வருகின்றது. பெண்கள் தினம் என்பது இன்று அதன் முக்கியத்துவத்தை இழந்து எல்லோரினதும் மன மகிழ்;ச்சிக்கும், கொண்டாத்துக்கு மட்டுமே என்று மாறி இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது.
இன்று மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் பெண்கள் தினமானது ஒரு நூற்றாண்டுக் காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டங்கள்தான் இன்றைய எமது ஆர்ப்பரிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளுக்காக அவர்கள் குரல்கள் கொடுக்காவிட்டால் இன்றும் நம்முடைய குரல்கள் நசுக்கப்பட்டேயிருந்திருக்கும்;.
வாக்குரிமைகளுக்காகப் போராடி அதைப் பெற்றுத்தராவிட்டால் இன்று நாம் வாக்களிக்கும் உரிமையற்று வெறும் அலங்காரப் பதுமையாகவே இருந்து கொண்டிருப்போம். இன்று பெண்களாகிய நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகளையெல்லாம் போராடிப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த முன்னோடிப் பெண்கள் அனைவரையும் இவ்வேளை நாம் போற்றுவோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









