5
சென்ற அரசு அகன்ற பின், பொறுப்புகளை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசை “புதிய போத்தலில் பழைய கள்ளு” என்று எதிர்பாளர்களால் வர்ணணைக்கு உட்படுத்தப்பட்டாலும், “நகர்வுகளில்” அவர் இன்னமும் புதிய கள்ளாகவே தென்படுவதை விமர்சகர்கள் சுட்டிகாட்டாமல் இல்லை. இது காலம் வரை, இலங்கையின் நெருக்கடிக்கு, உண்மையான காரணம், இலங்கை தனது கடன் முறிகளை திறந்த சந்தையில் விற்றமையே என்பது குறித்து, அவர் இதுவரை வாய்திறவாமல் இருப்பதே அவரது சாமர்த்தியத்தை காட்டுவதாய் இருக்கிறது எனலாம். 51-57 கோடி பில்லியன் டாலரை வெளிநாட்டு கடனாய் (வெளிநாட்டு மொத்த கடன்களில் 47%) இருக்க தலையாய காரணமாய் அமைவது இக்கடன் முறிகளை விற்றதுவே - இதுவே, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மூலகாரணம் என்பது குறித்து இதுவரை அவர் ஒரு வார்த்தையும் கூறினார் இல்லை. இருந்தும், “சீன கடன்பொறி”, அல்லது “இந்திய கடன்பொறி” என்ற கதை மேலெழும்பும் போதெல்லாம் மௌனம் காப்பது, அல்லது அவற்றை கண்டும் காணாதது போல் இருப்பது இவரது உயரிய பண்புகளில் ஒன்றாகின்றது. பிராந்திய-உலக வல்லரசுகளை மோதவிட்டு, அதில் வர கூடிய லாப-நட்டங்களை வளைத்து போட்டுக்கொள்ளும் ஓர் அணுகுமுறையானது ஏற்கனவே இலங்கைக்கு அறிமுகமான, புளிப்புத்தட்டிப்போன ஓர் நடைமுறைதான். எனினும், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமெரிக்க சார்பும், பெருந்தேசிய உணர்வும் இந்நடைமுறைக்கு புது மெருகு சேர்ப்பவையே என்று கூறினால் அது மிகையாகாது.
உதாரணமாக, சில மாதங்களின் முன்னால் இடம்பெற்ற WION நேர்காணலின் போதுகூட, இத்தனை நூல்களில், உங்களின் இதயத்திற்கு நெருக்கமான நூல் எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, ஒரு நொடியும் தாமதிக்காமல் “அது மகாவம்சம் தான்” என கூறி நின்றார். இதுபோலவே, அவரது வீடு, எதிர்ப்பு போராட்டகாரர்களால் அண்மையில் எரியூட்டப்பட்டு விட்டபின்னர், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தனது வீட்டில் 25 புத்தர் சிலைகள் இருந்தன என்றும், அவை போராட்டகாரர்களால் தற்போது எரியூட்டப்பட்டுவிட்ட பின்னர், இப்போது எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் என்றும், இதுபோலவே தனது வீட்டில் இருந்த 200 பண்டை காலத்து ஓவியங்கள் எரியூட்டப்பட்டு விட்டன என்றும் அவர் தன் உரையின் போது கூறி நின்றார். இச்சூழலில் இருக்ககூடிய, எந்தவொரு தலைவரும், தான் பெற்ற நட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடமிருந்து பரிதாப அலைகளை பெறமுயற்சித்திருப்பார்களே அன்றி வேறு எதனையும் செய்திருக்க துணிந்திருக்க மாட்டார்கள். இந்த வேறுபாடு, அவரது மனோ திடத்தையும், திட்டம் வகுக்கும் அவரது அளப்பரிய ஆற்றலையுமே பறைசாற்றுவதாய் உள்ளது என ஆய்வாளர்கள் புகழ்ந்துள்ளனர். இக்கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்து, எதிர்ப்பலைகளை படைபலம் கொண்டு அழிப்பது அல்லது ஒடுக்குவது, மேலும் இருக்கும் எதிர்ப்பலை சூழலை தகுந்த மாற்றீடால் மாற்றியமைக்கப்படுவது, போன்ற தேவைகளை அவர் அறியாமல் இருக்க முடியாது என நம்பலாம்.
இவரது அரசில், புலம்பெயர் அமைப்புகளுக்கான தடை நீக்கம் என்பது புலம்பெயர் மக்களின் டாலர் இறக்குமதியையும், வரகூடிய ஜெனீவா கூட்டத்தொடரையும் சமாளிப்பதற்காக வகுக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று கூறுவோரும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், இதனுடன் இணைந்தாற் போல், இந்தியாவை, தமிழர் கேள்வியிலிருந்து கத்தரித்து விடுவதும் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருக்கலாம். அதாவது, சீன தூதுவர் தன் பிரச்சினைக்குரிய கட்டுரையில் குறிப்பிட்ட, வட நாட்டால் மேற்கொள்ளப்பட்ட, கடந்தகால 17 ஆக்கிரமிப்புகளை தவிர்த்து கொள்வது என்றாலும் சரி (கப்பல் முரணுக்கு பின், சீன தூதுவரால் எழுதப்பட்ட கட்டுரை - இது இந்திய வெளிவிவகார அமைச்சரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.) அல்லது இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் சுவாத்தியத்தை மாற்றியமைப்பதென்றாலும் சரி-தமிழர் கேள்வியானது, இந்திய கண்கானிப்பு ராடரிலிருந்து “முதலில்” அகற்றப்பட்டேயாக வேண்டும் என்பது அடிப்படையாகின்றது.
ஆக, யுவாங்-5 கப்பலை முடுக்கி விடுதல் என்பது, ஒருபுறம் இலங்கையின் நலன்களையும் மறுபுறம் உலக ஒழுங்கில் மேற்கின் நலன்களையும் கட்டிக்காக்கும் அரசியலை உள்ளடக்குவதாக இருந்தது. ஆனால், இதுவுமே சில வேளைகளில், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துக்களையும் உள்ளடக்கவே செய்கின்றது என்பதும் சில ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது.
6
உக்ரைன் போரானது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு குளிர் கால பின்னணியில், வெவ்வேறு படிமுறைகளில், வேகமாக முன்னேறி செல்கின்றது. மறுபுறத்தில், சீன-தாய்வான்-அமெரிக்க நெருக்கடிகளும் முற்றியவாறு முன்னேறுகின்றன. உக்ரைன் போர் முனையில், நாளுக்கு நாள் அதி நவீன ஆயுதங்களும், முதலீடுகளும் (மூன்று கோடி டொலர்) இதுவரை கண்டிராத அளவில், இறக்கி விடுவதில், மேற்கு, ஈடுபட்டிருப்பதாய் கூறிக் கொள்கின்றது. ஆனால் ரஷ்யாவோ, “குளிர் கால ஏவுகனையை” எதிர்ப்பார்த்து தன் திட்டங்களை வகுத்து வருகின்றது. குளிர்காலமானது, தான் எதிர்ப்பார்க்கும் நன்மைகளை தராதவிடத்தில் மாத்திரமே, தன் அடுத்த படிமுறை திட்டத்தை ரஷ்யா இறக்கி விட முனையும் எனலாம். ஆனால், சீன கடல்பரப்பு, இக் குளிர்கால நடவடிக்கைகளால் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றது என்பது தனியான கேள்வி.
பெலோஸ்கியின் விஜயத்தின் பின்னர், முதன் முறையாக தனது இரு யுத்த கப்பல்களை, தாய்வான் நீரிணைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. (28.09.2022) ஏற்கனவே இவ்வகை கப்பல் பயணிப்புகள் தொடர்பில், கடும் எச்சரிக்கைகளை விடுத்திருந்த சீனம் என்ன பதில் நடவடிக்கைகளில் இப்போது ஈடுபட கூடும் என்ற கரிசனை உலக ஆய்வாளர்களின் மத்தியில் அப்பி போயிருந்தது.
இவ்விரு கப்பல்களையும், சீனத்தின் யுத்த விமானங்கள் மோப்பம் பிடித்து கொண்டும், மிக அருகாமையில் சூழ்ந்து கொண்டும், “Simulated Attacks” பயிற்சியுடன் தமது கண்டனத்தை முடித்து கொண்டன. இப்படி முடித்துக் கொள்ள காரணம், இரு கப்பல்களுமே, “Innocent Passage” என்ற பாதுகாப்பு விதிகளுக்குள் அல்லது வரையறைக்குள் இயங்க சம்மதித்திருந்தமையே ஆகும் என கூறப்பட்டது. அதாவது, அவை, தமது ஆயுத மற்றும் ராடர்கள் அனைத்தையும் முற்றாக அணைத்து - செயலிழக்க செய்துவிட்டு, (Turn Off Weapons and Fire Control System) ,Innocent Passage என்ற அடிப்படையில் நீரிணையில் பயணிக்க சம்மதம் தெரிவித்திருந்தன என்பதேயாகும். அதாவது கைகளை தலைக்கு மேல் தூக்கியவாறு நடப்பது என்று விளங்கி கொள்ளலாம். இது நடந்து முடிந்த சில நாட்களில், உலகின் மறு முனையில், ரஷ்யா தனது Vostok–2022 ஆயுத பயிற்சியை 13 இடங்களில், ஆரம்பித்து விட்டது.
செப்டெம்பர் ஒன்று தொடக்கம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ் யுத்த பயிற்சியில் கிட்டத்தட்ட 50,000 துருப்புகளையும் குண்டு வீச்சு விமானங்கள் உட்பட, ரஷ்யாவின் 140 போர் விமானங்களும் 60 கப்பல்களும் மற்றும் தாங்கிகளும் இடம்பெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமானது, சீனம் முதன்முறையாக தனது வான்-தரை-கடல் படைகள், ஆகிய மூன்றையும் இம்முறையே பங்கேற்க அனுப்பி வைத்ததாகும். இதுபோலவே முக்கியமானது இந்தியாவின் பங்கேற்பும் ஆகும். அதாவது, அமெரிக்காவின் அழுத்தங்களை தாண்டி, பங்கெடுக்க முன்வந்தள்ள இந்தியாவின் பாத்திரம் சர்வதேச அளவில் நிதானிக்கப்படுகின்றது. அதாவது யுவாங்வாங்-5 கப்பல் விவகாரத்தால் இன்னும் நிலைகுலையாமல் இந்தியா இருந்து வருவதையே இது காட்டி நிற்கின்றது. இப்பின்னணியிலேயே இலங்கையின் இருப்பும் நகர்வும், இந்துமகா சமத்திரத்துக்குள் அகப்பட்டு திணறுகின்றது.
அண்மையில் திரு. சுமந்திரன் அவர்கள் சபையில் தெரிவித்திருந்தார்: “ரணில் விக்கிரமசிங்க வழமையாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார்… ஆனால் தற்போது சிங்களத்தில்தான் கையொப்பம் இடுகின்றார்… அவரது மனநிலை மாறுகின்றது” (02.09.2022: வீரகேசரி). இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் தற்போதைய அரசு, தன் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென்றால் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று, எதிர்ப்பலைகளை முறியடிப்பது. மற்றது, நிலவும் எதிர்ப்பலை அரசியல் சுவாத்தியத்தை மாற்றி அமைப்பது. இதில் இரண்டாவது அம்சத்திலேயே, இன ஒடுக்கலின் மூல வேர் குடியிருக்க போகின்றது.
இதனை மேற்கத்தைய அரசியல் உணர்வது மாத்திரமல்ல – அங்கீரகரிக்க செய்யவும் முற்படுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில், கூர்மையடைந்து வரும் சர்வதேச முரண்களின் பின்னணியில், தனக்கு சார்பான ஒரு அரசை, கேந்திர நிலையங்களில் ஒன்றான இலங்கையில் நிலைநிறுத்தி கொள்வது என்பது தேவைப்படும் ஒன்றாகின்றது. இக்காரணத்தினாலேயே தமிழ் தலைமைகள் என்றைவிடவும் இன்று மிக எச்சரிக்கையுடன் தம் அடிகளை எடுத்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் உள்ளாகுகின்றார்கள் - ஜெனிவா ஆகட்டும் அல்லது நமது பிறநாட்டு உறவுகளாகட்டும் அல்லது தமது கோரிக்கைகளை முன்வைக்கும் தோரணைகள் ஆகட்டும். ஆனால் இவை இவற்றை விடுத்து மனம் போன போக்கில் கருமங்களை ஆற்றலாம் என்பது எளிது என்றாலும் விலைகளை, இறுதியில், இங்குள்ளவர்களே செலுத்தியாக வேண்டும்.
எதிர்ப்லைகளை முறியடிப்பது அல்லது இனவாதத்தை முடுக்கி எதிர்ப்பலை அரசியலை, இனவாதம் கொண்டு மாற்றீடு செய்வது என்பதனை அண்டை நாட்டு பிரதேச வல்லரசான இந்தியா எப்படி நோக்க கூடும் என்ற கேள்வி இப்பின்னணியிலேயே பார்க்கத்தக்கது. இதன் காரணத்தினாலேயே, இந்தியாவை, உலக ஒழுங்கில் சீன-ரஷ்ய கூட்டில் இருந்து கத்தரித்து விட சம்பந்தப்பட்ட சக்திகள் விரும்புவதாய் தெரிகின்றது. இதுபோலவே தமிழர் கேள்வியை கூட இந்தியாவிடம் இருந்து கத்தரித்து விடுவதில் சம்பந்தப்பட்ட சக்திகள் விருப்பம் காட்டலாம். ஏனெனில் இவை அனைத்தும், ஒன்றுடன் ஒன்று நெருங்கி சம்பந்தம் ப10ண்டவை என்பதனையே மேற்கண்ட உதாரணங்கள் தெளிவுற கூறி நிற்கின்றன. இது அரசியல். ஆனால் இந்த அரசியல் அனைத்துமே நகர்த்தப்படும் போது பல்வேறு வேடங்கள் ப10ண்டே நகர்த்தப்படுகின்றன – அவற்றை நாடி பிடித்தலே, தலைமைகளின் சாணக்கியம் என்றாகின்றது.
முற்றும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.