6
மேற்படி நடுக்கமூட்டும், ஆவிகளையும், ஆன்மாக்களையும் விட்டு இலக்கியத்துக்கு வந்தால், மரீனாவின் இலக்கிய அறிவும் கூட, வியக்கதக்கதாய் இருப்பதை கண்டு கிளிம் அதிசயிக்கின்றான். அது மிக மிக ஆழமானதாயும், சமயங்களில் உலக இலக்கிய வரலாற்றையே நாடி பிடித்து விடும் அளவுக்கு, பற்பல தளங்களுக்குள் ஊடுறுவுவதாகவும் அமைந்து விடுகின்றது.
இவளை ஒத்த, ஏனைய பலரைப் போலவே, பகுத்தறிவை அடியோடு வெறுக்கும் அவள், ஒரு சம்பாசனையின் போது, ‘இது சிறு குருவிகளுக்கான காலம் அல்ல’ என்ற தீர்ப்பை வழங்குவது கூட இத்தகைய ஓர் இலக்கிய அல்லது வாழ்நிலை நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்ட ஓர் கூற்றாகவே இருக்கின்றது. (1901 இல் கார்க்கியால் எழுதப்பட்டு, பலராலும் பெரிதும் புகழப்பட்ட ‘புயல் பறவையின் பாடல்’ (SONG OF THE STORMY PETREL) எனும் கதையையே மரீனா இவ்வாறு குறிக்கின்றாள்).
இதேப்போன்று, மறுபுறத்தில், நாவலின் இன்னுமொரு பாத்திரமான, மேலே கூறப்பட்ட, வெலண்டைனின், இலக்கியம் தொடர்பிலான கூற்றுக்களும், ஒரு புள்ளி வரை, மரீனாவின் பிரச்சினைக்குரிய இலக்கிய நிலைப்பாடுகளுடன் ஒட்டி செல்வதாகவே அமைந்துள்ளன. (இது குருவிகளுக்கான காலம் அல்ல என்பதுப்போல்)!
கிளிம்மை பொறுத்தவரை, டஸ்டாவஸ்கியின் அமைதியற்ற பாத்திரங்கள் கிளிம்மின் சிந்தையை ஆகர்சிப்பதாகத் தெரிகின்றது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான பிம்பங்களை தனக்குள் தேக்கி தேக்கிச் சேமித்து வைத்திருக்கும் கிளிம்மிற்கு அவ்விம்பங்களே பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அடிப்படைகளில் ஒன்றாக, காலப்போக்கில் உருவெடுப்பதாய் உள்ளது.
பிம்பங்கள் (IMPRESSIONS) ஒரு புறம்! தான் வாசித்து சிந்தித்த நூற்றுக்கணக்கான நூல்களின், கோட்பாடுகள் - இத்தியாதிகள் - இவை ஒரு புறம்!!
இந்த சுமைகளை சுமந்தவாறு, தன்னை சூழ உள்ள, வாழ்நிலையை (ACTUALITY) கிளிம் முகம் கொடுக்க நேரிடும் போதெல்லாம், அவை பகைமை பாராட்டுவதாகவும்,அவை தன்னுடன் முரண் படுவதாகவும் இருப்பதை கிளிம் உணரத் தலைப்படுகின்றான்.
காந்தியின் தத்துவம், காந்தியின் தத்துவமானது அகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்க, நடைமுறை வாழ்வோ – அது ஆங்கிலேயராக இருந்தால் என்ன, முஸ்லீம் சமூகம் - போன்ற சிறுபான்மை சமூகங்களின் கேள்விகளாயிருந்தால் என்ன – அல்லது தலீத்திய பிரச்சினைகளாக இருந்தால் என்ன –மேற்படி அழகான தத்துவம், எப்படி ஒரு சவாலை சந்திக்க நேரிடுகிறதோ – அதே போன்று – பிறிதொரு ‘சிறிய’ தளத்தில் தன் முரண்களை சந்திக்கின்றான் கிளிம். இதில், டாட்டாவுக்கும் பிர்லாவுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்ந்துவிட்டால், தத்துவத்தின் கதி, அதோ கதித்தான். (பினீக்ஸ் ஆசிரமத்து கழிப்பறைகளை சுத்தம் செய்திருந்தாலும் கூட!) இருந்தும், இந்த முரண்களில் இருந்து தன்னை காப்பாற்றக் கூடிய ஒரு தத்துவத்தை தேடி தன் தேடலை முன்னெடுக்கும் கிளிம்முக்கு, அத்தத்துவங்கள், முன்னரே குறித்தது போல், கைக்கு எட்டினாற் போல் தோன்றினாலும், எட்டமுடியாதவாறு, அவன் படைப்பு மனம் வெளிறும் ஓர் சூழ்நிலையிலேயே, இம் மரீனாவின் சம்பாசனைகளும் கைக்கோர்க்கின்றன.
போதாதற்கு, தன் படைப்பு மனதின் வெளிறும் தன்மை குறித்து ஆரம்பத்தில் உணர்ந்து மனம் குமையும் கிளிம், நாள் செல்ல செல்ல அத்தகைய ஒரு வெளிறலை உணரவும் திறனற்றவனாய் நாளடைவில் உருவாகி விடுகின்றான். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை: யதார்த்தங்களுடனான, தன் உடன்பாடின்மை குறித்து அல்லது முரண்பாடுகள் குறித்து சிந்திக்கும் கிளிம், இதற்கான காரணங்களாக, மனிதனில், முக்கியமாக அன்றைய ரசிய மனிதனில், விரவி இருந்த, சீர்குலைவுற்ற, கட்டற்ற, இலக்கற்ற, ஒழுங்கற்ற மனநிலையினை அடிப்படைகளாகக் கணித்து, தன் வெளிறலை நியாயப்படுத்திக் கொள்ளவும் துணிகிறான். இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே, ஓர் அக உலக விடுதலையையும் (INNER FREEDOM) , கூடவே, முற்றும் முழுதான ஓர் பூரண உண்மைக்கான தேடலையும், தேடியலைந்து துன்புறும் டஸ்டாவாஸ்கியின் ஆன்ம அமைதியற்ற பாத்திரங்கள் அவனுக்குப் பெருத்த உற்சாகத்தை உண்டு பண்ணுபவையாக இருக்கின்றன.
இது அவனுக்கு ஓரளவு சாந்தத்தை மாத்திரமல்ல – ஓரளவு நம்பிக்கையும், கூடவே, மறுபுறமாய் தருகின்றது.
மக்கள் சாரிகளில் இருந்து அவனை வேறுபடுத்தி, அந்நியப்படுத்தி நிறுத்தும் அவனது போக்கிற்கு, மேலும் வலு சேர்க்கும் விதத்தில், மேற்படி பாத்திரங்கள், அவனோடு பயணிக்க முயல்கின்றன. வேறு வார்த்தையில் கூறினால், பகுத்தறிவை அல்லது யதார்த்த நடைமுறையை பகைக்கும் இப்போக்கு அல்லது பார்வை, எப்படி மரீனாவிடம், வியாபித்து காணக் கிட்டுகின்றதோ – அதே போல, அவற்றின் சாயல், கிளிம்மிடமும் காணக் கிடக்கின்றது.– இதற்கு, டஸ்டாவஸ்கியின் பாத்திரங்கள் உறுதுணையாகின்றன, எனலாம்.
சாரு நிவேதிதா முதல் ஜெயமோகன் வரை, இது போன்று, பகுத்தறிவை நிராகரிப்பதில், பெருமை கொள்ளும் ஒரு போக்கினை நாம் எமது தமிழ் இலக்கியத்தில், சற்று ஆழமாகவே தரிசிக்க முடியும். சாரு நிவேதித்தாவின் பெருமைப்படும் கூற்று: ‘நான் பித்த நிலையில் நின்றே எழுதுகிறேன்’ என்பதாகும். இத்தகைய துணிதலின் வேர், மேற்படி நடைமுறைகளை எல்லாம் உள்ளடக்கியே உள்ளது என்பதில் ஐயப்பாடில்லை. (வெங்கட் சாமிநாதன் காலம் தொட்டு. அல்லது பித்தா பிறை சூடி என்ற காலம் முதல்?) ஆக,‘பித்தநிலை’என்பது, எமது இலக்கிய விமர்சனத்தில் ஓர் இலக்கிய தகுதியாக (அல்லது ஆளுமை தகுதியாக) சித்தரிக்கப்பட்டுள்ளது, என்பது, நாம் கண்டு வரும் ஒரு பழங்கதையே.
மறுபுறத்தில், சாரு நிவேதிதாவை போன்றே, ஜெயமோகனை எடுத்துக் கொண்டாலும், ‘பித்தநிலைபோலவே’ ‘ஆட்கொண்டு விடப்பட்ட’ ஒரு நிலையில் (எமது மூன்று வயது ஞானசம்பந்தரைப் போல்) படைப்பாளி உள்ளுணர்வு தகிக்க, அனைத்து தர்க்கங்களும், பொது புத்தியும் ஒட்டுமொத்தமாய் ஒதுக்கி தள்ளப்பட்டு தூக்கி எறியப்பட, தொன்மமும், ஆழ்மன படிவும் எழுந்து ஓடி வர, எழுத தொடங்குகிறான் என்று முடிப்பார். கூடவே,தான்,விமானம் ரன்வேயில் ஓடுவது போல ஓடி, உயர உயர வட்டமடித்து, மேலெழும்பி, ஒரு பரவச புள்ளியினை கண்டு பரவசப்பட (SUBLIME), தன் எழுத்தை ஒரு வாகனமாக பயன்படுத்துகிறேன் என்று அவரால் முன்வைக்கப்படும் கூற்றும் பாங்கும் கூட, இவ்வகையில் பிரபலப்பட்ட ஒன்றே. (வெலண்டைனின் புறாவை போன்று!).
மொத்தத்தில், பித்த நிலை ஒருபுறமாயும், ஆட்கொள்ளப்பட்டுவிட்ட நிலை மறுபுறமாயும், ஆட்சி செய்ய அவரவரின் பாவப்பட்ட அரசியல் முன்னிலை நோக்கி நகர்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே. கிளிம் முடிவு செய்வான்: டஸ்டாவஸ்க்கி, கோகோல், மாத்திரமல்ல - இவ்வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்கள் லினோய்ட் அன்ட்ரீயேவும், ஷோலபோவும் ஆவர் என. லினொய்ட் என்ட்ரீயெவ் (1817-1919) எனும் ரஸ்ய எழுத்தாளர் அடிப்படையில் மனிதரை – சமூகத்தை வெறுக்கும் பார்வை கொண்டவராய் இருந்தார்.
மனிதனை விட குரூரமான விலங்கு வேறு எதுவுமே இல்லை என்பதும், மனிதனாய்ப் பிறப்பதை விட வேறு என்ன துன்பம் தான் மனிதனுக்கு நேர்ந்து விட போகின்றது என்பதும், அறிவும் மடைமையும், ‘முடிவிலி’ அல்லது ‘எல்லையின்மை’ என்ற கருத்தாடலின் பின்னணியில், ஒன்றுதான் என்பதுவும் இவ் எழுத்தாளனின் அசைக்க முடியாத நம்பிக்கை வாக்குகளாகின்றன.
இதேபோலவே, ஷோலபோவை (1863-1923) எடுத்துக் கொண்டால் முற்றும் முழுதாய் தனியர்கள் சார்பு சிந்தனை உலகத்தைக் கொண்டதாகவும், ஒழுக்க கோட்பாடுகளை முற்றாக நிராகரிப்பதாயும் இவரது உலகமும் எழுத்தும் உருப் பெறுவன.
இவரது, முக்கிய படைப்பாக கூறப்படுவது, பெட்டி டீமன் (PETTY DEMON) எனும் குறுநாவலாகும்.
உள்மன விகாரங்கள், பாலியல் சிறுமைகள், சித்த சீர்குலைவு, மனப் பிறழ்வுகள், சமூக ஒழுங்கு விதிகளில் இருந்து முற்றாய் தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் போக்கு - கூடவே , தன் வாழ்நிலைக்காக, தன்னளவில் ஓரளவு முண்டியடித்தல் - இவை அனைத்தும், பல்வேறு விமர்சகர்களால் இவர் படைப்பு குறித்து, ஏற்கனவே, சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒன்றே.
ஆனால் ஷோலபோவ் பின்வரும் பொருள்படக் கூறுவார்: “மனிதன் என்பவன் அவனவனது ஆத்மா பொறுத்து, நான்கு நல்ல வார்த்தைகளை கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ள ஆசைப்படுகின்றான். ஆனால் உண்மை அதுவல்ல. இதை வாசித்து, அனைவரும் நினைக்க கூடும் - இது என்னைப்பற்றிய ஒரு கதை என்று. தவறு நண்பர்களே. இது உங்களைப் பற்றியது. உங்களின் அந்தரங்க ஆன்மா பற்றியது…”
ஒதுக்குப்புற கிராம ஆசிரியன் ஒருவனின், இவ் ஒதுக்குப்புறக் கதை, ஷோலபோவின் வாழ்க்கை எதிரொலியா என்று கேட்பவர் அநேகர் உண்டு.
காரணம் ஷோலபோவ் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இத்தகைய பின்னணிகளை உள்ளடக்கியதுதான். அவரது தந்தை ஓர் அடிமை-விவசாயி.. பின் தையல் தொழில். இவரோ, முறைதவறிப் பிறந்த ஒரு குழந்தை. தந்தை இறப்பு. பின், தாய், தப்ப முடியாமல், குழந்தைகளுடன் வீட்டு வேலைக்காரியாக வாழ்வு. ஷோலபோ வளர்ந்து–ஆசிரியராகி, பத்து வருடங்கள், ஒரு ஒதுக்குப்புற கிராமம் ஒன்றில், தனது விருப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட குரோத நிலையில், ஆசிரியராய், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய நிர்பந்தம் - இந்நிலையில், எவ்வழியிலாவது, நகரத்துக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்ற அவரின் தணியாத முஸ்தீபு, அவா! - இது அவரின் சித்திரம்.
கதையில் வரும் ஆசிரியனின் அக உலகும் மிகவும் சிறுமைப்பட்டது. தான் வசித்த வீட்டை விட்டு அகலும் போது கூட, அதை அவன் தாங்கமுடியாத துர்நாற்ற அழுக்குகளால் நிறைத்து விடுகின்றான். காரணம், பிரபஞ்சத்துக்கு எதிரான தன் கோபத்தை, அதற்கூடாகப் பதிவு செய்து கொள்கின்றானாம் - சொலபோவ் கூறுகிறார். இப்படியாய், அல்லது இதை விட மோசமாய் நூல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது. இறுதியில், இவரின் கூற்று: “என்ன செய்வது… இது உங்களின் அந்தரங்க ஆன்மாவைப் பற்றியது”.
இருந்தும், இவர், ஒரு, சமூகக் கோபம் கொண்ட எழுத்தாளர் என்றும், கதாநாயக விரோத (ANTI-HERO) எழுத்தாளர் என்றும் ஒதுக்குபுற விமர்சகர்களால் மறுபுறமாய் கொண்டாடப்படுவதும் அவதானிக்கத்தக்கதே.
மனிதனின் சிறுமைகளையும், இருண்மைகளையும் எழுதும் எழுத்தாளர்களும் வர்ணிக்கும் எழுத்தும், தமிழ் இலக்கிய உலகில், பஞ்சமற்று இன்று காணக்கிட்டுகின்றன என்பது ஒரு பக்கம் இருக்க, இவற்றை ‘நவீனத்துவம்’ என்றோ அல்லது வேறு ஒரு தத்துவத்தின் பெயர் சூட்டியோ, அவற்றுக்கு ஒரு வித அழகுபடுத்தல், அந்தஸ்த்தை நேரடியாக, அல்லது மறைமுகமாகத் தந்து – சொல்லுவதுப் போல் சொல்லி – தேடிக் கொடுக்க முனையும் விமர்சகர்கள் எம்மிடை இல்லாமலும் இல்லை. சொலபோவ் கூறுவதுப்போல், என்ன செய்வது, இது உங்களின் ஆன்மா என்பதுப்போல், என்ன செய்வது, இதுவெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்வு - இலக்கியம், நவீனத்துவம் என்றெல்லாம் தத்தமது நியாயப்பாடுகளை முன்வைக்கும் போக்கு வலுவாய் இயங்கும் நிலைமையில் எமது தமிழ் இலக்கிய உலகம், அன்றைய ரசியாவைப் போல இல்லாமலும் இல்லை.
மரீனா கூறுவாள் கிளிம்மிடம் : தீர்க்கதரிசிகளாய் (PROPHETS) நீண்ட நாள் ஜொலிக்க கூடியவர்கள் ரசியாவில் இருவரே. ஒருவர் சொலொபோவ், மற்றவர் லெனோய்ட் அன்ட்ரீவ்”
“துணிச்சல்-துணிகரம், என்று எடுத்துக் கொண்டால் என்ட்ரியெவ்வை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை… சற்றே அவர் குரூரமாய் (CRUDE) எழுதினார் என்பது உண்மைத்தான். ஆனால் அதில் எந்த ஒரு கெடுதல் இருப்பதாகவும் தெரியவில்லை. உண்மையில், அது, அவரை மேலும் புத்திசாலித்தனமாக, காட்ட வழிகோலியது. மிகுந்த தனித்துவமுடையவர் (ORIGINALITY). மிகுந்த பராக்கிரமம் பொருந்தியவர். உண்மையில் டாஸ்தவாஸ்கியை விட சிந்தனையில் மிக எளிமையானவராகத் தோற்றம் காட்டினாலும், அவரை விட இவர், முழுமை பெற்றவர் என்றே நான் கூறுவேன்…”
இந்தச், சம்பாசணையின் போது, ஒரு நூலை எட்டி இழுத்தெடுக்கும், மரீனா, ஒரு பக்கத்தைத், திறந்து, மெல்ல மெதுவாய் கிளிம்முக்கு வாசித்துக் காட்டத் தொடங்குகிறாள்: “மனிதர்கள் நேசிக்கப்பட விரும்புகிறார்கள்… அவர்களது ஆன்மாவைப் பற்றி அழகழகான வார்த்தைகள் கூறப்படுபவற்றை ஆராதிக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளைப் பார்க்க, கேட்க விரும்புவதில்லை…”
தொடர்ந்தும் நூலை அவனுக்கு, வாசித்துக் காட்டும் அவள், மூடி வைத்துவிட்டு கூறுவாள்: “விடயம் இதுதான்… சொலபோவின் கெட்ட ஆவிகள், டாஸ்தவாஸ்கியின் கெட்ட ஆவிகளை விட சிறியதும் கொடூரமானதும் என்பதல்ல…!” கூறி முடித்து., கிளிம்மிடம், அந்நூலைத் தருவாள்- வாசிக்கப்பட வேண்டிய நூல் என்று கூறி: “PETTY DEMON”.
இதே போல, நாவலில் வரும்,மற்ற பாத்திரமான வெலன்னைடன், பிறிதொரு சந்தர்ப்பத்தில், “ஆட்சிபெnலவ்வை (ARTSIBASHEV) நீங்கள் வாசித்ததுண்டா? நேர்மையான– மிக - நேர்மையான மனிதன். ஒரு நேர்மையான எழுத்தாளன். அவன்தான் டாஸ்டாவஸ்கியின் பாதாள மனிதனை வெளியே கொண்டு வந்து திரிய விட்டவன் - எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல் ஆட்சிபெnலவ் கூறுகிறான்: “மனிதன் என்பவன் ஒரு கருங்காலியாக அல்லது ஒரு விலங்காக இருக்க அனைத்து உரிமைகளையும் உடையவன் தான். அதுதான் இயற்கை. வாழ்க்கையின் அடிப்படை, ரகசியம் அல்லது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அனைத்து ஆசைகளையும், அது எவ்வளவுத்தான் கொடுமையாக இருப்பினும், அது மற்றவர்களுக்கு எத்தகைய கேடு விளைவிப்பதாக இருப்பினும்,அனுபவித்தல், ஆழ அனுபவித்தல் என்பதே அது. மற்றவர்கள்! நல்லது-அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? சண்டையா? சரி. போட்டுக் கொள்வோம். ஒரு உண்மையான மனிதன் - ஒரு பலசாலியான மனிதன் - அவன் எப்போதுமே ஒரு தீச்செயல் புரிபவனாக – ஒரு கேடு விளைவிப்பவனாகத்தான் இருக்கிறான், ஒரு பொது மக்கள் பார்வையில்! ஆனால் இப்பார்வை, பாமர முட்டாள்களினால், தமது தற்பாதுகாப்புக்காக கடைந்தெடுக்கப்பட்ட ஒன்று - இப்படித்தான் ஆர்ட்சிபெலவ் கூறுகிறான்”
[தொடரும்]