அஞ்சலி: மாத்தளை கார்த்திகேசு விடை பெற்றார்! மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -
நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.