1. உடலின் மனம்
பாலியல் தொழிலாளிதான் அவள்
அண்ணே அண்ணே என்று பகலில் விளிப்பவர்களோடு
அன்றன்றைய இரவுகளில் நெடுஞ்சாலை மேம்பாலத்தடி அதிகாலையிருளில்
இடுக்குமுடுக்கில் படுத்தெழவேண்டிய பிழைப்பு
அவசர அவசரமாய் ‘சோலி’ முடிப்பவர்கள்
அவளளவில் அருளாளர்கள்.
அன்னாரொருவரிடமிருந்து கிடைத்த பணத்தில்
அடுத்த வீட்டில் இரண்டு மூன்று மணிநேரங்கள்
பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுவந்திருக்கும்
நான்கு வயதுமகனுக்கும் ஆறு வயது மகளுக்கும்
தெருவோரக்கடையிலிருந்து டீ பன் வாங்கிக்கொண்டு விரைந்தாள்
வழியில் குறுக்கிட்ட வாடிக்கையாளரொருவன்
வரச்சொல்லி யழைக்க
’விழித்துக்கொண்டு காத்திருப்பார்கள் குழந்தைகள்’
எனச் சொல்லி கையிலிருந்ததைக் காட்ட
”அட, வாடீ” என்று இடுப்பை வளைத்து இழுத்தவன் கையை
வெடுக்கென கடித்து அகன்றவளின்
ஒவ்வொரு பல்லும்
பிளேடாய்
பிச்சுவாக்கத்தியாய்
அருவாமணையாய்
அரிவாளாய்….
2. ஒட்டுத்தையல்களும் கந்தலான வாழ்வுரிமையும்
வாயைத் தைத்துவைத்துதான்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் சாமான்யர்கள்
வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன
சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன
சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்
’செலக்டிவ்’ மௌனங்கள்; மறதிகள்
சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து
ஷேர் செய்து தலையை சிலுப்பிக்கொள்ளுதலே
சமூகப் பிரக்ஞையாக.
சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ
சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக் கொண்டுவிட
சொல்லியா தரவேண்டும்?
சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்
சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்
ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்
அடுக்குமாடிக் கட்டடங்களும்
கிடுகிடுவென வளர்ந்தோங்கிய
பெருநிறுவன வியாபாரங்களும்.
சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்
பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
எட்டாக்கனியாக
சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும்
வாழ்க்கை யென்றாக
வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்
வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி
மடங்கி வளைந்து முழந்தாளிட்டு
மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு
மரத்துப் போய்விட்ட உணர்வுடன்
மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்
சொற்களால் பிதுங்கும் இதழ்களை
இறுக்கித் தைத்துவைப்பதே
இயல்பாகிய
இகவுலக வாழ்வில்
இங்கே இன்று…..
இருந்திரந்து
இரந்திருந்து
இருந்திறந்து
இறந்திருந்து
இருந்திருந்திருந்திருந்து…..
3. நிகழ்த்துகலை
இன்னொருவர் தலைமீது காகம்
எச்சமிட்டுச் சென்றால்
அருகிருப்பவருக்கு அப்படியொரு சிரிப்பு.
தன் தலையில் விழவில்லையே என்ற இறுமாப்பு.
மனிதத் தலைகள் காகங்களின் இலவசக் கழிப்பறைகள்
என்று கோணவாய்ச் சிரிப்போடு
தத்துப்பித்தென்று சில முத்திரை வாசகங்களை
உரிய ஏற்ற இறக்கங்களைக் குரலில் வரவழைத்து
உரத்துச் சொல்வது அவர்தம் தனிச்சிறப்பு.
விட்டால்
காக்காய்க்கு நல்லவரை அடையாளங்காணத் தெரியும்
என்று கதைக்கவும் தயங்கமாட்டார்கள்.
புறம்பேசி முடித்த பிறகு மறவாமல் சொல்லிக்கொள் வார்கள்
‘நமக்கெதற்கு பொல்லாப்பு’
சரி தப்பு என்பதெல்லாம்
அவரவருக்குக் காப்பாகவும் அடுத்தவருக்கு ஆப்பாகவும்
உருமாறும் திறமெழுத
வேறொரு (Half-Boiled) KAFKAவால்தான் முடியும்
குப்புற விழுந்தாலும் ஒட்ட வழியில்லாதபடி மீசையை
மழித்துக்கொண்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்
கழுகு மூக்கில் நாம் சுண்டெலியாகும்வரை
பழகாது வலி;
தத்துவம், ஆன்மிகம், அபத்த நாடகம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம்,
சந்தர்ப்ப சூழல், குறிப்புரை பொழிப்புரை பரப்புரையெனத்
தேவையான பழமொழி புதுமொழிகளோடு
ஆங்காங்கே பீடமமைத்துப்
பிப்பிப்பீ டும்டும்டும் கொக்கரக்கோ பெப்பரப்பே யென
கலந்துகட்டிக் கூட்டாஞ்சோறிடுவதாய்
ஆகப் பெருமுழக்கமிடுவது
அடடாவோ பழக எளிதான பழியறு வாழ்நெறி
அடி தெறி
என வாழ்ந்துகொண்டிருப்பார் சிலபலர்
இங்கே ஒப்பாரும் மிக்காரும் இலராக….
4. ஃபேஸ்புக் டைம்லைன் என்னும்
நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும்
மிகை ஒப்பனை வரிகளின் உதவியுடன்
தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவர்
பெண்ணெனில் ஒரு பட்டாம்பூச்சியைத்
தன் காதோரக் கூந்தலில் செருகிக்கொள்கிறார்
ஆணெனில் அதைத் தன் சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறார்.
பட்டாம்பூச்சி படபடவென சிறகுகளை
பயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்து
ரத்தக்கண்ணீர் வடிப்பவர்
பெண்ணெனில் ஒரு சோகப்பாட்டு பாடுகிறார்.
ஆணெனில் கண்ணீரை அடக்கிக்கொள்ள உதடுகளும் தாடையும் இறுக
தலைகுனிந்து அமர்ந்தபடியிருக்கிறார்.
பெண்ணோ ஆணோ துயரத்திலாழ்ந்திருக்கும்போது
தம் முகம் கோணலாகக்காணப்படவில்லையே என்ற கவலை
இருவருக்குமே இருப்பது இயல்புதானே...
அந்த ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு கவிஞரை
மறவாமல் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை நினைவுகூர்கிறார்கள்.
பெண் என்றால் ஆணையும் ஆண் என்றால் பெண்ணையும்
அதிகம் நினைவுகூர்வதும் இயல்புதானே
நினைவுகூரப்படுபவர் அகில உலகம் அறிந்தவராக இருப்பதும்
ஆறே ஆறு பேர் அறிந்தவராக இருப்பதும்
அந்தந்த நேரத்துத் தேவையைப் பொறுத்தது
நினைவுகூரப்படுபவர் நினைவுகூரப்படுவதாலேயே அதிகம்
நினைவுகூரப்படுபவராகி அதற்கான நன்றியுணர்வில்
நிர்க்கதியாகி நிற்கும் தோற்றத்தை நிலைக்கண்ணாடி பிரதிபலிக்க
தாம் ஏற்கும் பாத்திரம் அதுவேயாகிய நடை யுடை பாவனையுடன்
மேடையேறிச் செல்கிறார். மணியடிக்கிறது. மேலேறிச் செல்கிறது திரை.
காலவரையற்ற நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.
5. மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும்
மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் அடிமையில்லைதான்
அதற்காக, மூல ஆசிரியராகிவிட
முடியுமா என்ன?
அன்றி மூல ஆசிரியரின் இணையாசிரியராகி
விடலாகுமா?
கேள்வி முடியும் முன்பே
முடியும் ஆகும் முடியும் ஆகுமென்று
முடிந்த முடிவாக மொழிபெயர்ப்பாளர்
முன்மொழிய
அன்பு காரணமாகவோ பண்பு காரணமாகவோ
மூல ஆசிரியர் அதை வழிமொழிய
மகிழ்ந்துபோன மொழிபெயர்ப்பாளர்
உருவைக் கருவாக்கி
எருவை வெறுவாக்கி
பருவை மருவாக்கி
சிறுவை பெருவாக்கியதோடு நில்லாமல்
ஒருவை ஓரங்கட்டி
திருவைத் திருட்டுப்போகச் செய்து
இரவைப் பகலாக்கி
பறவையை பிராணியாக்கி
பிரண்டையை யாளியாக்கிக்கொண்டே போக
மொழிபெயர்ப்பொரு மீள்கவிதையாக்கம்
என்று முழங்கி
மூல கவிதையின் நுட்பங்களெல்லாம்
மொழிபெயர்ப்பில் வெட்டி
யகற்றப்பட்டுவிட்டதில்
மூல கவிதையின் ஆணிவேர்
ஆட்டங்காண
முளைவிதை முடங்கிக்கொண்டது
அடியாழத்தில்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.