மேலைநாட்டு ஆய்வாளர்களின் இந்தியவியல் தொடர்பான ஆய்வு முயற்சிகள், பல்வேறு துறைசார்ந்த புதிய திருப்புமுனைகள் ஏற்பட வழிவகுத்ததுடன் பிற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தமை வரலாறு எடுத்தியம்பும் நிலைப்பாடாகும். அவ்வடிப்படையில், இந்துக் கலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை மேலைத்தேச மக்களுக்கு அறிமுகம்செய்த சிறந்த பெண்மணியாக ஸ்டெல்லா க்றாம்ரிச் (Stella Kramrisch) திகழ்கின்றார். இவர் ஒரு அமெரிக்க முன்னோடி கலை வரலாற்றாசிரியர் ஆவார். 20ஆம் நூற்றாண்டில் இந்தியக் கலையில் முன்னணி நிபுணராக இருந்தவர். இந்தியக் கலைகள் தொடர்பான அவருடைய ஆய்வுப் புலமை இன்றுவரை ஒரு அளவுகோலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்டெல்லா க்றாம்ரிச் 1896ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி ஒஸ்ட்ரியாவின் நிகோல்ஸ்பர்க் (தற்போதைய செக் குடியரசின் மிகுலோவ்) எனுமிடத்தில் பிறந்தார். இவர் பலே நடனத்தைப் பயின்றதோடு அந்நடனத்தில் மிகுந்த ஆர்வமுடையவராகவும் விளங்கினார். பத்து வயதில் தனது பெற்றோருடன் வியன்னாவுக்கு இடம்பெயர்ந்தார். அவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேக்ஸ் டிவோராக் மற்றும் ஜோசப் ஸ்ட்ரைகோவ்ஸ்கி ஆகிய பேராசிரியர்களிடம் கலை வரலாற்றுத் துறையில் கற்றார். கலைஇரசனை, இந்துக் கலைகள் என்பவற்றில் அதியுன்னத ஆர்வம் கொண்ட ஒருவராக விளங்கினார்.
இதனால் அவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலைகள், சமஸ்கிருதம், தத்துவம், இலக்கியம் மற்றும் மானுடவியல் போன்றவற்றைக் கற்றார். 1919ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று தனது கற்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய கலை வரலாற்றை ஆராய்ந்து கற்பித்தார். இவர் ஒருநாள் பகவத்கீதையை பார்க்க நேர்ந்த போது “என்னுடைய மூச்சை நிறுத்தும் அளவிற்கு என்னைக் கவர்ந்திருந்தது” என்று கூறியமை இந்து மூலங்களில் கொண்ட பிரமிப்பைக் காட்டுகின்றது.
தனது வாழ்நாளில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். அந்தவகையில், 1919 காலப்பகுதியில் இந்தியாவில் ஆரம்பகால பௌத்த சிற்பக்கலையின் சாரம் (The Essence of Early Buddhist Sculpture in India) எனும் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதிய பின்னர், ஒக்ஸ்போர்டில் மூன்று விரிவுரைகளை நிகழ்த்துவதற்காக 1919ஆம் ஆண்டு பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் லண்டன் சென்றார். 1922 - 1924 காலப்பகுதியில் சாந்திநிகேதனில் (Shantiniketan) உள்ள கலா பவனாவில் (Kala - Bhavana ) கற்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தோடு 1924-1950 வரையான காலப்பகுதியில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கற்பித்ததுடன் லண்டனில் உள்ள Courtauld Institute நிறுவனத்தில் 1937-1940வரை பணிபுரிந்தார்.
அதுமாத்திரமின்றி 1950முதல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) தெற்காசிய பிராந்திய கற்கைகள் துறையில் (Department of South Asia Regional Studies) பேராசிரியையாக இருந்தார். அவர் 1969இல் ஓய்வு பெறும் வரை தெற்காசிய கலைப் பேராசிரியையாக இருந்த அதேவேளை 1964-1982வரை நியூயார்க்கில் உள்ளs Institute of Fine Arts எனும் நிலையத்தில் இந்தியக் கலைகளுக்கான இணைப் பேராசிரியையாகவும் இருந்தார். அதேபோன்று 1954 - 1979 வரையான காலப்பகுதியில் பிலாடல்பியா அருங்காட்சியகத்தில் (Philadelphia Museum) அரங்க நிர்மாணிப்பாளராக கடமையாற்றினார். “அறியப்படாத இந்தியாவில் பண்டைய காலத்து மக்களின் சடங்கும் கலையும்” (Unknown India : Ritual Art in Tribe and Village) என்ற தலைப்பில் 500க்கும் அதிகமான சமயப் பொருட்களை காட்சிப்படுத்தி கண்காட்சி நிகழ்த்தினார்.
அதே அருங்காட்சியகத்தில் பன்னிரெண்டு வருட திட்டமிட்ட ஆய்வின் பிரகாரம் 1981இல் “சிவனுடைய உருவமைதிகள்” (Manifestations of Shiva) என்ற தலைப்பில் கண்காட்சியை நடாத்தினார். இதுதான் கடவுளைப் பற்றிய முதலாவது பெரிய கண்காட்சியாக அமைந்தது. இந்தியக் கலைகள், சிற்பங்கள் தொடர்பான கண்காட்சியாகவே அதனை ஒழுங்கமைத்திருந்தார். சோழர்காலத்து வெண்கலத்தாலான இராமர், சிவன், கிரு~;ணர், ராதை முதலான உருவங்களும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டன.
இதனைவிட இந்துக்கலைகள் தொடர்பாகவும் பல நூல்களை இவர் எழுதியுள்ளார். அந்தவகையில், “இந்துக்கோயில்” (The Hindu Temple) எனும் இந்நூல் இரண்டு தொகுதிகளைக் கொண்டது. இந்துக் கோயில்களின் கட்டடக்கலை பற்றிய அம்சங்களை அறிய விரும்பும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கோயிற் கட்டடக்கலை தொடர்பான பல்வேறு விடயங்களை இந்து மரபில் நின்று வெளிக்காட்டுவதாக இந்நூல் காணப்படுகின்றது. இந்துக் கோயிலை வெறும் காட்சிப்பொருளாகச் சித்தரிக்காமல், புனிதமான ஓர் அடையாளமாகவும், ஆன்மீக ஈடேற்றத்தை அடைவதற்கான ஓரிடமாகவும் காண்பிக்கின்றது.
அத்துடன் ஆரம்பகாலத்திலிருந்து வளர்ச்சி பெற்ற கட்டக்கலையின் பல்பரிமாணங்களை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது. கோயிலின் சிகர அமைப்பு முறை, மேல்கட்டமைப்புகள், கர்ப்பக்கிரஹத்தின் அமைப்பு, மண்டபத்தின் அமைப்பு மற்றும் பிற அமைப்புகள் தொடர்பாக குறிப்பிடுகின்ற அதேவேளை ப்ரஹத்சம்ஹிதை போன்ற பண்டைய சமஸ்கிருத நூல்களில் விபரிக்கப்பட்டுள்ள கோயில்களின் வகைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. சுருங்கக் கூறுவதாயின் பண்டைய இந்திய கோயில் கட்டடக்கலை பற்றிய மிக விரிவான விடயங்களை வெளிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
அதேபோன்று ஐனெயைn ளுஉரடிவரசந எனும் நூலும் குறிப்பிடத்தக்கது. இந்நூல் இந்திய சிற்பக் கலையின் கட்டமைப்பையும் அதனோடு தொடர்புடைய விடயங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிற்பங்களின் வெளிப்புறத் தோற்றங்கள், புவியியல் அம்சங்கள், காலவரிசை தொடர்பாக நிலவிய சர்ச்சைகளுக்கான தீர்வாக இந்நூல் அமைந்துள்ளது. அழகியல் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்துவது இந்நூலின் நோக்கமாக இருந்தாலும் இந்தியக் கலைஞர்களின் சிற்பசாஸ்த்திரம் தழுவிய கைவண்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு ஆக்கமான “சிவனின் சந்நிதானம்” (The Presence of Siva) எனும் நூலில் இந்து சமயத்தின் மூன்று பிரதான கடவுளர்களில் ஒருவரான சிவனின் தோற்றத்தை, இந்து இலக்கியங்களான வேதம், புராணங்களில் சித்தரிக்கப்படும் விதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனின் வடிவங்கள், சிவனின் சிறப்புத்தன்மைகள் அத்துடன் இந்தியாவில் நிலவுகின்ற சிவ வழிபாட்டுடன் தொடர்புடைய தொன்மங்களில் உள்ள சிக்கல்கள் அவற்றிலுள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
இதனைத் தவிர The Art of India : Traditions of Indian Sculpture Painting and Architecture 1928இல் பதிபிக்கப்பெற்ற The Visnudharmottaram : A Treaties on Indian Painting and Image – Making மற்றும் Unknown India: Ritual Art in Tribe and Village முதலானவை புகழ்பெற்ற அவருடைய நூல்களாகும். இதனைத் தவிர இவரால் எழுதப்பட்ட இன்னும் பல நூல்களும் உண்டு. அவ்வடிப்படையில், பல்வேறு பணிகளைச் செய்த ஸ்டெல்லா க்றாம்றிச், 1982இல் இந்திய அரசாங்கத்தினால் பத்மபூசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வுலகில் தொண்ணூற்றேழு வயதுவரை வாழ்ந்த இவர் 1993இல் காலமானார்.
நிறைவாக இவை யாவற்றையும் தொகுத்து நோக்குவோமாயின் ஸ்டெல்லா க்றாம்ரிச் பண்டைய இந்தியக் கலைகள் தொடர்பாக ஆய்வு செய்த உலகப் புகழ்பெற்ற நிபுணர் என்பது யாவரும் அறிந்தவொன்றே. இவருடைய கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலை தொடர்பான ஆய்வாராய்ச்சிகள், இந்தியவியல் தொடர்பான ஆய்வு முயற்சிகளில் இந்துக் கலைகளின் தனித்தன்மையையும் சிறப்புத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாகவும் மேலைத் தேசத்தவர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இவருடைய இந்துக் கலைகளுடன் தொடர்புடைய ஆய்வு நூல்களைப் புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் இந்துக் கலைக் கோட்பாட்டு ஆய்வுகள் முழுமைபெற முடியாது என்கின்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதென்றால் மிகையாகாது.
உசாத்துணைகள்
1. https://www.amazon.com/Indian-Sculpture-Ancient-Classical-Mediaeval/dp/8120836146 (01/06/2022), (06.00am)
2. https://www.amazon.com/Hindu-Temple-Volumes-Pt/dp/8120802225 (01/06/2022), (06.13am)
3. http://dla.library.upenn.edu/dla/pacscl/ead.html?id=PACSCL_PMA_PMA001 (01/06/2022), (06.17am)
4. https://en.m.wikipedia.org/wiki/Stella_Kramrisch (02/06/2022), (06.45am)
5. https://www.perlego.com/book/1990202/the-presence-of-siva-pdf (02/06/2022), (06.53am)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.