- அண்மையில் வெளியான எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் பற்றிய எனது விமர்சனம் ஜூலை மாதக் கணையாழி இதழில் வெளியாகியுள்ளது. கணையாழி சஞ்சிகை தற்போது மின்னிதழாக மட்டும் வெளியாகின்றது. மிகக்குறைந்த கட்டணத்தில் கணையாழிக்கான ஆண்டுச் சந்தாவைச் செலுத்த முடியும். அதற்கான இணையத்தள முகவரிகள்: 1. கணையாழி - https://kanaiyazhi.com & 2. மக்ஸெச்டர் - https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/All-Issues -
தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்றதும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் கல்கி, சாண்டில்யன்,ஜெகசிற்பியன் , அகிலன் , நா.பார்த்தசாரதி மற்றும் இவர்களையொட்டிக் கற்பனாவாதப் புனைவுகளாக வரலாற்றுப் புனைவுகளை எழுதியவர்கள். இவை பூரணமான வரலாற்றுப் புனைவுகள் அல்ல. வரலாற்றுச் சம்பவங்களை, ஆளுமைகளை உள்வாங்கிப் பின்னப்பட்ட, வெகுசன வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திடப் பின்னப்பட்ட கற்பனாவாதப்புனைவுகள். இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' போன்ற நாவல்கள். மிக அதிக அளவில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுத்தகவல்களின் அடிப்படையில் ஒரு காலகட்டத் சேர்ந்த சாதாரண மானுடர்களின் வாழ்வை வைத்துப் பின்னப்பட்ட புனைவுகள் அவை. இவ்வகையில் ஆட்சியாளர்கள், அவர்கள் வரலாறுகளைத் தவிர்த்துச் சாதாரண மானுடர்களின் வாழ்வை விபரிக்கும் மிகச்சிறந்த வரலாற்று நாவலொன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது. அதுதான் இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரம்' அக்காலத்திலிருந்த நாவலையொத்த வடிவமாகக் காப்பியத்தைக் கூறலாம். எனவே காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டது. அக்காப்பியம் அக்கால மாந்தர் வரலாற்றை, நிலவிய சமூக அமைப்பை, இருந்த நகர அமைப்பை, இருந்த ஆட்சி அமைப்பை, நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை, தொழிற்பிரிவுகளை எனப் பலவற்றைப்பற்றிய தகவல்களைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தையொட்டி சங்ககால மானுடர் வாழ்வை மையமாக வைத்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி வெகுசன வாசகர்களுக்காகச் சிறந்தொரு கற்பனாவாத வரலாற்றுப் படைப்பாக 'மணிபல்லவம்'என்னுமொரு நாவலைத் தந்துள்ளார். நான் வாசித்த வரலாற்று நாவல்கள் பற்றிய நினைவுகளெல்லாம் சிந்தையிலோடி மறைந்தன எழுத்தாளர் அண்டனூர் சுராவின் அண்மைக்கால நாவலான , 'சந்தியாப்' பதிப்பக வெளியீடாக வெளியான 'தீவாந்தரம்'நாவலை வாசித்தபோது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா அண்மைக்கால எழுத்தாளர்களில் தன் படைப்புகள் மூலம் , அவற்றுக்குக் கிடைத்த விருதுகள் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவராக இருப்பவர். கதை, கட்டுரை, நாவல் என்று இவரது இலக்கியப்பங்களிப்பு பரந்து பட்டது. மேலோட்டமாக எழுதிக்குவிப்பவர்களிலொருவரல்லர். ஆழ்ந்து சிந்தித்து, ஆழமாகத் தகவல்களைத்திரட்டி எழுதுபவர்களிலொருவர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இவரைபற்றி இவரது முத்தன் பள்ளம் நாவலுக்கான அணிந்துரையில் "அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி எனும் நீளும் தீவிர நாவலாசிரியர் வரிசையில் மற்றுமோர் படைப்பாளி என்று." என்று குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 'தீவாந்தரம்' நாவலை வாசித்தபோது இச்சிந்தனை மேலும் உறுதிப்பட்டது.
'தீவாந்தரம்' சிறந்ததொரு வரலாற்று நாவல். இதுவொரு கற்பனாவாத வரலாற்றுப் புனைவு அல்ல. அண்மைக்கால உண்மை வரலாற்றை, குறிப்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்ட வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகளையொட்டி எழுதப்பட்ட நாவல். பாரதத்தின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையொட்டி எழுத்தாள ர.சு.நல்லபெருமாள் 'கல்லுக்குள் ஈரம்' நாவல் எழுதியுள்ளார். எழுத்தாளர் மாலனும் 'ஜண கண மண' நாவல் எழுதியுள்ளார். மேலும் பலரும் எழுதியுள்ளார்கள். அவ்வகையில் எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்'நாவலும் பாரதத்தின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையொட்டிப் படைக்கப்பட்ட நாவல்களிலொன்று.
''தீவாந்தரம்' விரிந்த , பன்னூறு பக்கங்களைக்கொண்ட நாவலல்ல. 215 பக்கங்களைக்கொண்ட கைக்கடக்கமானதொரு நாவல். பல கைக்கடக்க நாவல்களை உலக இலக்கியத்தில் காணலாம். ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்', ஸ்டீன்பெக்கின் 'முத்து' ஆகியவை சிறந்த உதாரணங்கள். ஒரு நாவலின் வெற்றியை அதன் பக்கங்களின் அளவு தீர்மானிப்பதில்லை. பாத்திரப்படைப்பு, உரையாடல், மொழிநடை எனப் பல காரணிகளே அதன் சிறப்பை அல்லது தரத்தைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் பார்த்தால் 'தீவாந்தரம்' நாவலை அணுகுவோமாயின் இதன் இடத்தை அல்லது தரத்தை நிர்ணயிக்க முடியும்.
சிறந்ததொரு வரலாற்று நாவலின் வெற்றியானது சரித்திரச் சம்பவங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்துத்தருவதல்ல. மாறாக வாசகர்களை அச்சரித்திரச் சம்பவங்கள் நடைபெற்ற காலகட்டத்துக்கு, இடத்துக்கு அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அதனை நாவலாசிரியர் எவ்விதம் சாதிக்கின்றார்? வரலாற்றுப் புனைவொன்றில் பாத்திரப்படைப்புகளூடு, அப்படைப்புகளின் உரையாடல்களூடு, சம்பவங்களூடு , இவற்றை வெளிப்படுத்தும் மொழி நடையினூடு நாவலாசிரியரொருவர் வாசகர்களை அக்காலகட்டத்துக்குக் காவிச்செல்கின்றார். அக்காலகட்ட மாந்தர்கள் தம் எண்ணங்களூடு ,உணர்வுகளூடு அக்காலகட்டச் சமுதாய அமைப்பினை அறிய வைக்கின்றார். இவற்றின் அடிப்படையில் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்',நாவலை அணுகினேன்.
நாவல் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் நிகழ்ந்த பிரதானமான வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றையொட்டிப் பின்னப்பட்டுள்ளது. 'கப்பலோட்டிய தமிழன்'என்று நாமனைவரும் அறிந்த சுதந்திரப்போராட்ட வீரரும், எழுத்தாளரும், மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட வக்கீலும், வர்த்தகருமான வ.உ.சி (வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை), சுதந்திரப்போராட்ட வீரரான சுப்பிரமணியம் சிவா ஆகியோருக்கு முறையே நீதிபதி பின்ஹே என்னும் ஆங்கிலேயரால் அளிக்கப்பட்ட 40 வருட 'தீவாந்தரம்' சிறைத்தண்டனை மற்றும் பத்தாண்டு தீவாந்தரச் சிறைத்தண்டனைத் தீர்ப்புகள் பற்றிப் பேசுகின்றது. சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணியம் சிவாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புப் பற்றிப் பேசுகின்றது. அவற்றுக்கான இந்திய நீதிபதியான சங்கரன் நாயரின் தடையுத்தரவு பற்றிப் பேசுகின்றது. நீதிபதி பின்ஹேயைக் காப்பதற்காக நீதிபதி பின்ஹேயின் நெருங்கிய நண்பரும், ஆங்கிலேயருமான மில்லர் வ.உசி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் மீதான தண்டனைகளை ஏற்று, அவற்றுக்கான காலத்தைக் குறைத்துத் தீர்ப்பு வழங்கியதைப் பற்றிப் பேசுகின்றது. வ.உ.சி, சுப்பிரமணியம் சிவா ஆகியோரின் கைதுகளைத்தொடர்ந்து திருநெல்வேலியில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள். அவற்றின் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான உதவிக் கலக்டர் ஆஷின் துப்பாக்கிச் சூடு, அதன் விளைவாக ஏற்பட்ட மரணங்கள், குறிப்பாகச் பதின்ம வயதுச் சிறுவனான சுசீந்திரனின் மரணம் பற்றிய நீதிமன்ற விசாரணைகளைப்பற்றிப் பேசுகின்றது.
இவற்றைப்பேசும் நாவல் சாட்சிகளின் நீதிமன்ற சாட்சியங்களூடு எம்மை அக்காலகட்டத்துக்கே காவிச்செல்கின்றது. அடக்குமுறைகளை நியாயப்படுத்தும் ஆங்கிலேய அரச அதிகாரிகளின் எண்ணங்கள் அவர்கள் உணர்வுகள், சாட்சியங்களூடு வெளிப்படுகின்றன. உதாரணமாக நீதிபதி பின்ஹே., மில்லர் ஆகியோர் தம் தீர்ப்புகளை எழுதுவதற்கு முன்னர் பல்வேறு வழிகளில் சிந்திக்கின்றார்கள். அவை அவர்களின் பாரபட்சத் தீர்ப்புகளுக்கான் காரணங்களை வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களுக்கு எதிரான வழக்குகளை ஆங்கிலேயர்களே விசாரிக்க வேண்டுமென்ற நடைமுறை எழுதப்படாத சட்டமாக இருந்தது. அந்நடைமுறைபற்றி நாவல் பேசுகிறது:
""பிரிட்டிஷார் குற்ற வழக்குகளைப் பிரிட்டிஷாரே விசாரிக்க வேண்டும், என்பது எழுதப்படாத சட்டமாக இருந்துவந்தது. பிரிட்டிஷார் மதத்தா ல் உயர்ந்தவர்கள். இந்தியர்கள் ஜாதியால் தாழ்ந்தவர்கள். உயர்ந்தோரின் வழக்குகளைத் தாழ்ந்தவர்கள் விசாரிக்க உரிமையில்லை , என்பதாக பிரிட்டிஷார்கள் தனக்குத் தானே எழுதப்படா சட்டம் வகுத்துக்கொண்டிருந்தார்கள். " (பக்கம் 31)
அந்நடைமுறை நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்தியரான சங்கரன் நாயருக்கு மேற்படி வழக்கினை விசாரிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அவரது நீதிபதி பின்ஹேயின் தீர்ப்புக்கான தடையுத்தரவைத் தலைமை நீதிபதி நீதிபதி ஆல்பர்ட் ஒயிட் ஏற்கவில்லை. அத்தடையுத்தரவு ஆங்கிலேயருக்கு எதிராக இருந்ததால் அவரால் அதனை ஏற்க முடியவில்லை. அதனாலேயே மேன்முறையீட்டினை விசாரிக்கும் சந்தர்ப்பம் நீதிபதி மில்லருக்குக் கிடைத்தது.
இவ்விதமான வரலாற்றுப் பின்னணியில் விரியும் நாவலை எவ்விதம் வாசகர்கள் புரிந்துகொள்கின்றார்கள்? அங்குதான் நாவலாசிரியரின் கற்பனைத்திறன் அல்லது படைப்புத்திறன் வெளிப்படுகின்றது. சாமியாரான சகஜானந்தா மற்றும் ராமையா ஆகியோரின் உரையாடல்களூடு மேற்படி வரலாற்றுச் சம்பவங்கள் பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றார் நாவலாசிரியர் அண்டனூர் சுரா. இப்பாத்திரங்களை எவ்விதம் நாவலாசிரியர் படைத்திருக்கின்றார் என்பது ஆய்வுக்குரியது. அதே சமயம் நாவலாசிரியரின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்துவது. சாமியாரான சகஜானந்தாவின் ரிஷி மூலம் முக்கியமானது. அவர் வ.உ.சியின் பிரசுரங்களை அச்சடிக்கும் அச்சகத்தில் பிழை, திருத்தம் செய்பவராகப் பணியாற்றியவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். ராமையாவோ அந்தகர். வித்தியாசமான பாத்திரங்கள். அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையால் அப்பிரதேசத்து மக்களின் பேச்சு மொழியில் அமைந்துள்ளது. இதனைச் சிறப்பாகவே அண்டனூர் நாவலில் கொண்டு வந்திருக்கின்றார். அது நாவலாசிரியரின் திறமையின் வெளிப்பாடு.
தாழ்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சாமியார் சகஜானந்தா, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தாசில்தார் பஞ்சமன் போன்ற பாத்திரங்கள் நாவலின் இன்னுமொரு பிரதான அம்சத்தை வெளிப்படுத்துகின்றது. அது வர்ண வேறுபாடுகளின் அடிப்படையில் மக்களின் தொழிற் பிரிவுகளை வைத்திருக்கும் இந்திய சமுதாய அமைப்பின் மீதான கடுமையான விமர்சனமாகும். நாவல் முழுவதும் தீண்டாமை பற்றிய விமர்சனம் ஒலிக்கின்றது. ஒரு காலகட்ட அந்தியரின் அடக்குமுறையினை, பாரபட்ச நீதியினை விமர்சிக்கும் நாவல் கூடவே இந்திய சமுக அமைப்பின் சீர்கேட்டினையும் கடுமையாக விமர்சிக்கின்றது. இவற்றைத் திட்டமிட்டுச் சிறப்பாகப் படைக்கப்பட்ட பாத்திரங்களூடு, பாவிக்கப்படும் உரையாடல்களுடு, நிகழ்வுகளூடு நாவலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார். இதனால் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்குள்ளும் ,இந்தியர்களின் வர்ணாசிர சமூக அடக்குமுறைகளுக்குள்ளும் சிக்கியிருந்த ஒரு காலகட்டத்துக்கே வாசகர்களை அழைத்து செல்கின்றார் நாவலாசிரியர் அண்டனூர் சுரா. அவ்வகையில் சிறந்ததொரு வரலாற்று நாவலொன்றினைத் தந்துள்ளார் நாவலாசிரியர் அண்டனூர் சுரா.
ஒட்டுமொத்தமாக நாவலை அணுகுகையில் இந்நாவல் முக்கியமான ஈரம்சங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றது. ஒன்று ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் மீதான அடக்குமுறை. விதேசிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் சுதேசிகளுக்கு நீதி கூட மறுக்கப்படுகின்றது. அமைதியாகக் கூடி எதிர்ப்புக்குரலெழுப்பிய இந்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீதி மறுக்கப்பட்டுச் சிறையில் வ.உ.சி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் அடைக்கப்படுகின்றனர். ஆங்கிலேயுரின் அடக்குமுறையினை விபரிக்கும் நாவல் சாதிபிரிவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய வர்ணாசிரம சமுதாய அமைப்பையும் கடுமையாக விமர்சிக்கின்றது. அத்துடன் விதேசிகளான ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்களுக்கிடையில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளும் நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நாவலின் பிரதான அம்சங்களாக இவையே அமைந்துள்ளன. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் நல்லதொரு வரலாற்று நாவலைப் படைத்துள்ளார் எழுத்தாளர் அண்டனூர் சுரா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.