எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை.
எழுபதுகளில் எழுத்தாளர் மணியன் விகடனின் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார். அவரது தொடர்கதைகள் அக்காலகட்டத்தில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப்பெற்றிருந்தன. 'காதலித்தால் போதுமா' வில் தொடங்கி, நீரோடை, இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், தேன் சிந்தும் மலர், உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னைப் பாடச்சொன்னால் என்று விகடனில் தொடர்கதைகள் பலவற்றை எழுதினார் மணியன்.
அவரது அந்த நட்சத்திர மதிப்பே அவரை உலகமெங்கும் அனுப்பி 'இதயம் பேசுகிறது' பயணத்தொடரை விகடன் நிறுவனம் எழுத வைத்ததற்கு முக்கிய காரணம். அதுவே பின்னர் அவரை விகடனுக்குப் போட்டியாக 'இதயம் பேசுகிறது' சஞ்சிகையை ஆரம்பிக்க வைத்ததற்கும் முக்கிய காரணம். அவரது நாவல்களுக்கு ஒவியம் வரைந்தவர் ஓவியர் மாயா. அவரது இயற் பெயர் மகாதேவன்.
அண்மையில் எழுத்தாளர் மெரீனாவின் (எழுத்தாளர் பரணீதரனின் இன்னுமொரு புனைபெயர். கேலிச்சித்திரங்கள் வரைந்த ஓவியர் ஶ்ரீதரும் இவரே.) 'தனிக்குடித்தனம்' நாடகம் இணையத்தில் கிடைத்தது. அதற்கும் ஓவியங்கள் வரைந்திருந்தவர் ஓவியர் மாயாதான். 'தனிக்குடித்தனம்' நாடகத்துக்கு ஓவியர் மாயா வரைந்துள்ள ஓவியங்கள் சில இவை.
நன்றி: 'சூரியக்கதிர்' ஏப்ரில் 2012இல் வெளியான ஓவியர் மாயாவுடனான நேர்காணலை 'தமிழ் காமிக்ஸ் உலகம்' வலைப்பதிவு பிரசுரித்திருந்தது. அதிலிருந்து பெற்றுக்கொண்டோம்.