- எழுத்தாளரும், 'அமுதசுரபி' சஞ்சிகையின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றி எழுதிய கட்டுரையிது. இதன் பயன் கருதி இதனை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. சிற்பி பாலசுப்பிரமணியம், ம. ராஜேந்திரன், மாலன் போன்றோரோடு நானும் அந்த விழாவில் கலந்துகொண்டு இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் குறித்துப் பேசினேன். விருதைப் பெற்றுக்கொண்டு விழா நிறைவடையும் வரையில் (மாலை 6 முதல் இரவு 8 மணி வரை) இ.பா. மேடையில் வீற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. (வயது 91.) இ.பா.வின் மிக முக்கியமான கருத்துச் செறிவு நிறைந்த ஏற்புரையை அவரது மாப்பிள்ளை ராமநாதன் தங்குதடையற்ற குரலில் பிசிறில்லாமல் வாசித்தார். விழாவுக்கு இ.பா.வின் புதல்வி திருமதி பத்மாவும் வந்திருந்தார். அரங்கம் சென்னையின் முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வு செய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பொருட்டு அவர் நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்ததுதான் ஆச்சரியம். இ.பா.வின் நாடகங்கள் மேடையேறும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். கே.ஏ. குணசேகரன், ராஜு, அ.ராமசாமி உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களை இயக்கியிருக்கிறார்கள். வசனம் இ.பா.வின் அதே வசனம்தான். ஆனால் இயக்குநரின் கண்ணோட்டத்தில் அதே வசனங்களால் ஆன அதே நாடகம் வேறு வேறு பரிமாணங்களைப் பெறுவதுதான் வியப்பு. நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரியபுராணத்தில் இல்லாத வேதியர் பாத்திரத்தைப் புகுத்தினார். அதுபோலவே நந்தன் கதையில் இ.பா. புகுத்திய புதிய பாத்திரம் அபிராமி என்ற நடனமணி. இ.பா.வின் நந்தன் கதை மேடையேறும்போது அதில் நடிக்க நடனம் தெரிந்த ஒரு நாடக நடிகை தேவைப்படுவார். ஒருமுறை நந்தன் கதை நாடகத்தில் அபிராமி பாத்திரமேற்று நடித்தவர் நடனமும் அறிந்தவரும் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் புதல்வியும் குமுதம் ப்ரியா கல்யாணராமனின் மனைவியுமான சகோதரி ராஜசியாமளா.
என் முனைவர் பட்ட நெறியாளரான பேராசிரியர் அ. ராமசாமி அவர்களும் இ.பா.வுக்குப் பரிசளிக்கும் விழாவுக்கு திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. புதுவைப் பல்கலையில் இ.பா.வும் அவரும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.
உரையாடல்தான் இ.பா.வின் தனித்தன்மை. சிறுகதைகளிலும் நாவல்களிலும் கூர்மையான உரையாடல்களைப் படைத்தவர் இ.பா. அதனால்தான் பின்னாளில் அவர் உரையாடல்களாலேயே ஆன நாடகத் துறையில் ஈடுபட்டபோது பெருவெற்றி பெற முடிந்தது.
சி.சு.செல்லப்பா `முறைப்பெண்` என்ற நாடகம் எழுதினார். பி.எஸ். ராமையா `தேரோட்டி மகன்` எழுதினார். கு. அழகிரிசாமி `கவிச்சக்கரவர்த்தி` எனக் கம்பர் கதையை நாடகமாக்கினார். தி.ஜானகிராமனின் `நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார்` ஆகிய இரு நாடகங்களும் புகழ்பெற்றவை. ஆர். சூடாமணி `இருவர் கண்டனர்` என்ற நாடகம் எழுதினார். ஜெயகாந்தனும் நாடகம் எழுதியுள்ளார். இப்படி இன்னும் பல முக்கியமான எழுத்தாளர்கள் நாடகங்கள் எழுதியுள்ளார்கள். என்றாலும் இந்த முதல்நிலை எழுத்தாளர்கள் எல்லாம் நாடகத் துறையில் அதிகம் ஈடுபட்டவர்கள் அல்ல. புதினம், சிறுகதை இவற்றோடு நிறைவடைந்தவர்கள். ஆனால் இ.பா. நாடகத் துறையில் ஈடுபட்டுப் பதினைந்துக்கும் மேற்பட்ட முக்கியமான நாடகங்களைப் படைத்து அகில இந்திய அளவில் பேசப்படுபவரானார். அவரது நாடகங்கள் பல இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வட இந்திய மேடைகளில் நடிக்கப் பட்டவை.
இ.பா.வின் சிறுகதைகளில் இறுதித் திருப்பங்கள் கூடப் பெரும்பாலும் உரையாடல்களாலேயே அமைபவை. சம்பவங்களால் அல்ல. இ.பா. நகர எழுத்தாளர். பெரிதும் தில்லிதான் அவரது நிலைக்களன். அவரது தொடக்க காலப் புதினமான காலவெள்ளத்தில் கும்பகோணத்தைப் பார்க்கலாம். ஒரு சில சிறுகதைகளிலும் கும்பகோணம் வந்து செல்லும். மற்றபடி பெரும்பாலான புதினங்களிலும் சிறுகதைகளிலும் தென்படுவது நகரம் தான். நகர வாழ்வில் மத்தியதர வர்க்கத்து மனிதர்கள் அனுபவிக்கும் உளவியல் சார்ந்த சிக்கல்களைத் துல்லியமாகப் பேசுபவை அவரது படைப்புகள். இன்றைய நவீன வாழ்வின் சிடுக்குகள் அனைத்தையும் அவர் படைப்புகள் கண்ணாடிபோல் பிரதிபலிக்கின்றன.
தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் அரசியலை எழுதியவர் என்று அவரைச் சொல்லலாம். `தந்திர பூமி, சுதந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள்` உள்ளிட்ட பல புதினங்கள் அரசியல் களத்தைக் கொண்டவை. தைரியமான எழுத்து இ.பா.வுடையது. அரசியல் சார்ந்த தம் புதினங்களில் மிகத் தீவிரமான சமகால அரசியல் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். அவரது தொடக்க கால நாவலான `தந்திரபூமி`, அவரின் நெருங்கிய நண்பரான நா. பார்த்தசாரதியின் தீபம் மாத இதழில்தான் தொடராக வெளியாயிற்று. அந்த நாவலுக்கான தலைப்பே நா.பா. வைத்ததுதான். (தி. ஜானகிராமன் கல்கியில் எழுதிய `அன்பே ஆரமுதே` என்ற நாவலுக்கும் தலைப்பு வைத்தவர் நா.பா. தான்.) இ.பா.வின் தந்திர பூமி நாவலில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி ஒரு பாத்திரமாக வருகிறார்.
நாவல் சிறுகதை நாடகம், கட்டுரை என நான்கு துறைகளில் முத்திரை பதித்தவர் இ.பா.. சாகித்ய அகாதமி பரிசு, சரஸ்வதி சம்மான் பரிசு என இரு அகில இந்திய விருதுகளையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர். பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். இந்திய அரசு `பத்மஸ்ரீ` விருது கொடுத்து இவரை கெளரவித்துள்ளது. முறையாகத் தமிழ் படித்தவர். பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கசடறக் கற்றவர். `தமிழிலக்கியத்தில் வைணவம்` என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அதே நேரம் ஆங்கில இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய தி. ஜானகிராமனிடம் பள்ளிப் பருவத்தில் கல்வி பயின்றிருக்கிறார். (தி.ஜா.வின் மாணவர் இந்திரா பார்த்தசாரதி என்ற செய்தியைப் போல், இந்திரா பார்த்தசாரதியின் மாணவர் ஆதவன் என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது.) போலந்து நாட்டில் வார்சா பல்கலைக் கழகத்திலும் பின்னர் புதுச்சேரி பல்கலைக் கழக நாடகத் துறையிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தொண்ணூற்றியொன்று வயதான இவர், தம் படைப்புகளைக் கணிப்பொறியில் அச்சுக்கோத்து மின்னஞ்சலில் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார். பதினேழுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஆறுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்கள், எண்ணற்ற கட்டுரைகள் என இவர் படைத்த எழுத்துகள் ஏராளம். இந்து முஸ்லிம் நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய `அற்றது பற்றெனில்` என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. அந்தச் சிறுகதை விக்கிரமன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்த கதை. அமுதசுரபியில் இப்போதும் இவர் மாதந்தோறும் எழுதி வருகிறார். `இந்திரா பார்த்தசாரதி பக்கங்கள்` என்ற தலைப்பில் இவரது எழுத்துகளை அமுதசுரபி மிகுந்த பெருமையுடன் வெளியிட்டுவருகிறது. மாபெரும் அகில இந்திய அங்கீகாரத்தை அவர் பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் அமுதசுரபி மாத இதழ் அவருக்குத் தன் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.
நன்றி: எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணனின் முகநூற் பக்கம்.