நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் பலர் கதைகளைச் சிறுகதையாக்க முயன்றனர். ஆங்கில இலக்கிய வாசிப்பு அவர்களைக் கதை கூறுதல் என்ற மேம்போக்கான மனநிலையிலிருந்து விடுவித்துப் படைப்பூக்க மனநிலைக்குக் கொண்டு செல்லவும் பரிசீலனை செய்யவும் விமர்சிக்கவும் தூண்டுகோலாக இருந்தது. கதை கூறும் முறை எந்தப் புள்ளியில் இலக்கியமாகப் பரிணமிக்கிறது என்ற தேடுதலும் கண்டடைதலும் பெரும் சவாலாக இருந்தது. 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று பிறகு அடையாளம் காணப்பட்ட அல்லது தங்களை அவ்வாறு எண்ணிக்கொண்ட தொடக்கக் கால எழுத்தாளர்கள் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாமல் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தனர்.
சமூகத்தில் நிகழும் அனைத்து விதமான நடைமுறைகளையும் உற்று நோக்கிக்கொண்டு, புதிய வரவுகளை வாசித்துக் கொண்டு, மரபிலிருந்து நவீனத்திற்கு மாற்றிக்கொண்டு என இலக்கியத்தை நோக்கி நகர்த்தி செல்ல படாதபாடுபட்டனர். பலர் அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பெற்றனர். சிலர் மொழியாலும் உள்ளடக்கச் சிறப்பாலும் புதுமையில் நீந்தி விளையாடினர். இவ்வாறு சீரிய இயக்கப் போக்கால் தனக்கான இலக்கியத்தையும் இலக்கிய வடிவத்தையும் பெற்றுக்கொண்டு சிறுகதை செம்மாந்து நின்றது. இந்தத் தொடக்கக் கால முயற்சிகளில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி.
இலக்கிய வரலாற்றில் ந.பிச்சமூர்த்தி தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படும் நிலையில் இவரின் சிறுகதை பங்களிப்புக் குறித்த கேள்வி எழுகிறது. இக்காலத்தில் வ. வே. சு. ஐயர் சிறுகதையின் வடிவ நேர்த்தியிலும் கதை கட்டமைப்பிலும் வெற்றி பெற்றுச் சிறுகதைக்குத் தந்தையாகி விட்டிருந்தார். ஆகையால் கதை என்பது இலக்கியமாக மாறி சிறுகதை என்ற வடிவத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் இவ்வடிவம் இன்றும் சோதனை முயற்சியிலேயே இருந்துவந்தது. அச்சோதனை முயற்சி இரண்டு போக்குகளைக் கொண்டதாக இருந்தது. புதுமைப்பித்தன் தனக்கென ஏற்படுத்திக் கொண்ட கதைக்களமும் கதை மொழியும் புதுமையானதாகவும் விமர்சனங்களையும் மரபு உடைப்பையும் ஏற்படுத்துவதாகவும் இருந்தன.
அதேவேளையில் மரபுக்கு இயைந்து அமுக்கமான குரலில் கதையை இலக்கியமாகும் முனைப்பில் பலர் ஈடுபட்டனர். அவர்களில் பி. எஸ். ராமையா, சி. சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி போன்றவர்கள் முக்கியமானவர்கள். நவீன போக்குகளைச் சிலர் வரவேற்றாலும் முழுமையாக மரபை உடைக்கும் புறந்தள்ளும் மனத்திட்பம் இவர்களிடம் இல்லை. மரபுக்கும் மாற்றத்துக்கான தேவை இவர்களின் மனதில் இயல்புகள் மறுப்புகள் என்று பல இயக்க நிலைகளில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். இவர்களின் முயற்சிகள் பிற்காலத்தில் நவீன சிறுகதை வடிவம் செம்மையடைய உரமாக இருந்தன என்பதில் மறுப்பில்லை. சிந்தனைப் போக்கை ஒட்டி அக்காலத்தில் க. நா. சு. அவர்களும் சி. சு. செல்லப்பா அவர்களும் பல கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இது ந. பிச்சமூர்த்தியின் காபூலி குழந்தைகள் சிறுகதையின் கதையையும் கட்டமைப்பையும் உற்று நோக்கும் சிறு முயற்சி.
இச்சிறுகதை தையற்காரனையும் அவனது வாழ்க்கையையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ளது. மரபான முறையில் எளிமையான தொடக்கம், தொடர்ந்து சென்று ஒரு உச்சத்தைத் தொடுதல், பிறகு வாசகனை அந்த உச்ச உணர்வில் இருந்து விடுவித்தலாக இக்கதையின் கட்டமைப்பு அமைந்துள்ளது.
கதாசிரியர் தனது நண்பனான தையற்காரனைச் சந்திக்கிறார். நண்பர்களுக்கு இடையே எளிமையான உரையாடல் என்றாலும் இங்கே 'கடவுள் பார்த்துக் கொள்வார்' என்ற சொற்கள் கவனம் பெறுகின்றன. பிறகு தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், பொருளாதார நெருக்கடி, ஆறு குழந்தைகளுக்குத் தகப்பன், கடைசி குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இருத்தல், கடைக்கு மூன்று மாதம் வாடகை பாக்கி என்று கதை நகர்ந்து செல்கிறது.
பிறகு கடை முதலாளி செட்டியாரின் வருகை, வாடகை கேட்டு திட்டுதல், இவனின் பதில் என்று வாசகனைச் சற்றே உசுப்பினாலும் 'காசில்லாத உனக்கு மானம் இருக்க கூடாது' என்ற மன வெளிப்பாடுகளை நோக்கியே இட்டுச் செல்கின்றன. நவீனத்துவத்தின் சாயலைக் காபூலி பிச்சைக்காரிகளின் வருகையில் காணமுடிகிறது. அவர்களின் தோற்றமும் கை குழந்தைகளின் வறுமையும் வறுமையறியா சிரிப்பும் குழந்தைகளின் செயல்பாடுகளில் மனம் லயிக்கும் தையல்காரன் புதுமையின் உச்சங்களைத் தொடுகின்றன. இங்கே கதையின் போக்கு இலக்கியத்தின் தொடு புள்ளியைச் சென்றடைகிறது. அதன் உச்சமாகக் கண்ணாடி டீ டம்ளர் உடைவதும் பிச்சைக்காரிகளின் வருத்தமும் தையற்காரன் மனமாற்றத்தில் 'காலணா' எடுத்துக்கொடுப்பதும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளே.
இந்த உச்சத்தில் இருந்து கீழே இறங்க முயலும் ஆசிரியரின் முயற்சியாகக் கடைசி பகுதி அமைந்துள்ளது. இதனை வாசகனால் அனுமானித்துவிட கூடிய வகையிலேயே கதையின் போக்கு சென்று வாசகனை ஆசுவாசப்படுத்தி விடுகிறது. தையற்காரன் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவனுள் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலும் காபூலி குழந்தைகளின் நடத்தைகள் ஏற்படுத்திய மனமாற்றமும் தனது இடுப்பிலிருந்த தங்க காப்பு காணாமல் போனதும் சிறுகதையை மீண்டும் கதை தன்மைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. கதையின் முடிவு நவீனத்தை நழுவவிட்டு மரபில் ஒடுங்குகிறது.
கதை தொடங்கும்போது தையற்காரனின் வறுமைக்கு இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கதை ஆசிரியர் கூறுகிறார். ஆனால் அதற்குத் தையற்காரன் 'உனக்கு ஒரு கும்பிடு, உனது கடவுளுக்கு ஒரு கும்பிடு' என்று கிண்டல் செய்வதாக நகர்ந்து செல்கிறது கதை. இது கதை ஆசிரியரின் திட்டமிட்ட மன வெளிப்பாடாகக் கதையின் முடிவை ஒப்பிடும்போது வாசகனுக்குத் தெரிந்துவிடுகிறது. தையற்காரன் இறுதியில் தனது குழந்தை நன்றாக இருக்கிறது என்று மருத்துவர் சொன்னவுடன் தன்னிடம் இருக்கும் பணத்தை அவருக்குத் தருகிறான். ஆனால் அவர் வாசலில் இருக்கும் மேரியாத்தா கோவில் உண்டியலில் விருப்பமிருந்தால் போட்டு விட்டு போகலாம் என்று கூறுவதும் தனது மூன்று ரூபாயை அப்படியே போட்டு விட்டு வந்ததாகக் கதையை முடிக்கிறார். இங்கே எழுத்தாளரின் சிந்தனை எதை உணர்த்த விரும்புகிறது என்ற கேள்வி ஒவ்வொரு வாசகனுக்கும் எழுகிறது. 'ஊரார் குழந்தையைப் பாலூட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்ற மரபான சிந்தனைக்கு இங்கே வந்து சேர வேண்டி இருக்கிறது.
காபூலி குழந்தைகள் டீ டம்ளரை உடைத்தது என்றாலும் தையல்காரன் கோபப்படாமல் காலணா காசைக் கொடுக்கிறான். அதே நேரத்தில் அவனது உடல் நல மற்ற குழந்தைக்கு இலவச வைத்தியம் கிடைத்து குழந்தை நலமாக இருக்கிறது என்கிற இவ்வாறான நம்பிக்கைகள் இறைக் கொள்கையை நிலை நிறுத்தும் பழைய கதை மரபாகும். இங்கே கதையாசிரியர் கடவுளைப் பொதுமைப்படுத்தும் மனநிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மேரியாத்தா என்கிற ஒற்றைச் சொல் மேற்கத்திய வருகை, சமயம் பரப்புதல், மருத்துவ உதவி என்று பரந்த வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தி நிற்கிறது. இதனூடாக மதமாற்ற நிகழ்வுகளையும் எண்ணிப்பார்க்க இடமுண்டு.
எதார்த்த நிலையை நழுவ விட்ட கதையாக இறுதியில் அமைந்துவிடுகிறது. கதை ஆசிரியரின் இலட்சியவாத மனப்போக்கு கதையின் முடிவாக இருக்கிறது. தொடக்கக் காலங்களில் கதையின் மூக்கணாங்கயிறு கதை முடியும் வரை எழுத்தாளரின் கையிலேயே இருந்து விடுகிறது. அவரின் மன உணர்வுகளை, இலட்சிய வாதங்களை மரபின் நீட்சியாக வெளிப்படுத்தும் பாவையாகக் கதை மாந்தர்கள் உருமாறி விடும் அவலம் இந்தக் கதையிலும் பிசிரில்லாமல் நிகழ்ந்திருக்கிறது. இப்போது நவீனத்தின் உரையாடல்கள் வெற்று ஒலிகளாக மட்டுமே இருந்துவிட்டு கதையானது சுகமான வசதியான மரபு சட்டத்தில் தன்னை முறைபடுத்திக் கொள்கிறது. இந்த மனப்போக்கில் இருந்து பிச்சமூர்த்தியால் வெளிவர முடியவில்லை. நவீன சிறுகதைக்குப் பிறந்த குறைபிரசவமாகவே இருந்துவிடுகிறது. பிச்சமூர்த்தி அறிவு சார்ந்து விழிப்படைந்தாலும் தொன்மையான மன உணர்விலிருந்து அவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்பதே இக்கதையின் நிதர்சனம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.