ரொறன்ரோ தமிழ்ச் சங்க ஒளிப்பேழைகள்!
கனடாக் கலை,இலக்கிய வளர்ச்சிக்கு ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் பணி முக்கியத்துவம் மிக்கது. இதுவரை தொடர்ச்சியாக இச்சங்கம் நடாத்திய கலை, இலக்கிய நிகழ்வுகளின் ஒளிப்பேழைகளைப் பின்வரும் இணைப்பில் நீங்கள் கண்டு, கேட்டு களிக்கலாம்.
http://torontotamilsangam.ca/videos
http://torontotamilsangam.ca இணையத்தளத்தில் ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் பற்றிய அறிமுகப் பக்கம் சங்கம் பற்றிய தகவல்களை, அதன் நோக்கங்களை, இயங்குநிலைகளைப்பற்றி விபரிக்கின்றது. அதனைச் சங்கம் பற்றிய அறிமுகத்துக்காக இங்கு தருகின்றோம்.
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நோக்குகளும் இயங்குநிலைகளும்
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் என்பது அரசியல், சமயம் மற்றும் பிரதேசம் ஆகிய சார்புகள் அற்றதும், இலாபநோக்கம் அற்றதுமான சமூக நிறுவனமாகும். இது தமிழியல் சார்ந்த பல்வேறு பொருண்மைகளை அணுகுவதற்கும், ஆராய்வதற்கும், அறிவதற்கும், பகிர்வதற்கும், உரையாடுவதற்குமான ஒரு ஆரோக்கியமான தளத்தை வழங்கிச் செயற்படுகின்றது. இதன் செயற்பாடுகள் பின்வரும் நோக்கங்களை மையமாகக் கொண்டவை.
1. தமிழ் இலக்கிய, இலக்கண ஆக்கங்களையும், தமிழரின் படைப்புகளான பிறமொழிசார் இலக்கியங்களையும் திறனாய்வுக்கு உட்படுத்தல்.
2. ஆய்வுரைகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்ளும் படைப்பாளிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பல்வேறு பட்ட கோட்பாடுகளையும், கருத்துக்களையும், நோக்கங்களயும் சார்ந்திருந்தாலும், அவற்றைக் கனம் பண்ணும் அதேவேளை அவற்றின் யாதொரு பக்கமும் சாராதிருந்து படைப்புகளையும், படைப்பாளிகளையும் அணுகுவதற்கும், அறிவதற்கும், ஆராய்வதற்கும், விமர்சிப்பதற்குமான தளம் வழங்கல்.
3. இந்த வகையில் தமிழ் இலக்கியங்களை பழந்தமிழ் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், மற்றும் நவீன இலக்கியங்கள் ஆகிய மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி அவற்றை ஆராய்வதற்கும், விமர்சிப்பதற்கும் சம இடம் அளித்தல்.
4. தமிழரின் கலைகள், மெய்யியற் சிந்தனைகள், வாழ்வியல் முறைகள், பழக்கவழக்கங்கள் முதலான பண்பாட்டுக்கூறுகள் தொடர்பான பொருண்மைகளில் ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தல்.
5. தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் மத்தியில் காணப்படும் ஆளுமையம்சங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கும், வளப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பளித்தல்
6. வளரும் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆற்றல்களையும், ஆக்கத்திறமைகளையும் இனங்கண்டு அறிமுகப்படுத்தல்; அவற்றின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும், பக்குவத்துக்கும், பக்கத் துணையாகவும் உந்து சக்தியாகவும் இருத்தல்; அவை மனிதநேயம் மற்றும் சமூகநோக்கு ஆகிய உயரிய தமிழ் மரபு மையப்படுத்தியனவாக அமையும் வகையில் அவர்களை ஆற்றுப்படுத்தல்.
7. ஆய்வுரைகளும் கலந்துரையாடல்களும் உண்மைகாணல் என்பதான உயரிய குறிக்கோளை முன்வைத்தே நடாத்தப்படுவன. இவ்வகையில் ஆக்கபூர்வமான விமர்சன மரபைப் பேணும் அதேவெளை குறுகிய குழு மனப்பாங்கு, கொச்சைப்படுத்தல், தனிநபர் புகழ்ச்சி, சுயவிளம்பரம், நபர் அல்லது கோட்பாடு சார்ந்த கண்மூடித்தனமான எதிர்ப்பு அல்லது ஆதரவு போன்ற இலக்கியத்தையும், படைப்பாளிகளையும், அவற்றின் விழுமியங்களையும் கொச்சைப்படுத்தும் இழிவான அறஞ்சாரா நடைமுறைகள் சங்கத்தின் செயற்பாடுகளிலும் ஆய்வரங்குகளிலும் தவிர்த்து ஒதுக்கப்படும்.
8. குரோதத்தை, அகந்தையை, காழ்ப்புணர்வை, இசங்களின் சார்பை விட்டொழித்ததாகவும், அன்பு, பாசம், மனிதநேயம், சமுதாய உணர்வு என்னும் மகத்தான பண்புகளைக் கட்டியெழுப்புவதாகவும் உள்ள ஆக்கபூர்வமான விமர்சன மரபைப் பேணலும், வளர்த்தலும்.
9. ஆய்வுரை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் ’ஒலி-ஒளி’ப்பதிவுகளாக ஆவணப்படுத்தப்பட்டு, மின்வலைத்தளங்களிலும், www.torontotamilsangam.org. என்னும் எமது இணையத்தளத்திலும் பகிரப்படுகின்றபோதிலும், தரத்தையும், நேரத்தையும், கட்டுப்பாட்டுடன் பேணும் நோக்கில் ஆய்வுப்பொருண்மைகளைக் கட்டுரைகளாக எழுத்துவடிவில் சமர்ப்பிக்குமாறு ஆய்வாளர்கள் உக்குவிக்கப்படுகின்றனர்.
http://torontotamilsangam.ca/about