பகுதி இரண்டு!
5
போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா தனது அதிசக்தி வாய்ந்த அணு ஏவுகணையான Minutemanஐ 6ம் திகதி ஏவி சோதனை செய்யப் போவதாக அதிரடியாக அறிவித்தது. இதனை உக்ரைன் போரின் ஐந்தாம் சுற்றாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். அதாவது, ஒவ்வொரு சுற்றிலும், போரின் உக்கிரத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்துவது, போரின் பங்கு பற்றுனர்களால், மேற்கொள்ளப்பட்ட பிரஞ்ஞை அற்ற, ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடாயிற்று.
ஏற்கனவே சில Minuteman சோதனைகள் தோல்வியுற்றிருந்த நிலையில் (இடையூறுகளினால்?) இப்போதைய இந்த அறிவிப்பு, அமெரிக்கா தனது கடைசி அஸ்திரத்தை பிரயோகிப்பதற்கு சமனாகியது. அல்லது இது இனி, இப்போர் தொடர்பில், ரஷ்யா பதிலுக்கு எடுக்க கூடிய புதிய நடைமுறைகளை ‘நாடிபிடிக்;க’ உதவகூடும் என்ற வகையில் இக்கடைசி அஸ்த்திர பிரயோகம் முக்கியப்பட்டு போனது. இதன்படி, பார்குமிடத்து, Minuteman சோதனைகளுக்கு எதிராக ரஷ்யா எத்தகைய எதிர் நடவடிக்;கைகளை எடுப்பதில் ஈடுபட்டிருக்கும் என்பது தெளிவானது. ரஷ்;யா மேற்கொண்டிருக்கக்கூடிய, இவ் எதிர் நடவடிக்கை காரணமாகவோ, என்னவோ, திடீரென, அமெரிக்கா, தனது மேற்படி ஏவுகணை சோதனையை ‘தள்ளி வைத்து விட்டதாக’ அறிவித்தது. இதற்கு, அதனால் கூறப்பட்ட சமாதானம் ‘பிரச்சினையை இன்னமும் நாங்கள் தீவிரப்படுத்த விரும்பவில்;லை’ என்ற பொத்தாம் பொது சமாளிப்பு ஒன்றே ஆகும். இவை அனைத்தும் நடந்தேறிய இதே சூழலில்தான் உக்ரைன், ரஷ்யாவிடம் அடிமேல் அடிவாங்கி சின்னாப்பின்;னம் பட்டுக்கொண்டிருந்தது.
சுமார் முப்பது லட்சம் மக்கள் (ஐநா அறிக்கையின் படி) தமது சொந்த இருப்பிடங்களை விட்டு, பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக ஓடி சேர்ந்தும், உலகிலேயே மிக பெரிய விமானம் என்று பெயரெடுத்த MRIYA விமானத்தை ரஷ்ய படைகள் நிர்மூலமாக்கி விட்டன என்றும், மிக பெரிய மிக முக்கிய விமான தளமான Gostomel விமான தளத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றிக் கொண்டன என்றும் செர்னோபில்லின் கைப்பற்றலைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் ஐரோப்பாவிலேயே மிக பெரிதானது என்று பெயரெடுத்த ZAPORIZHZHIA அணுஉலையை அடுத்ததாய் கைப்பற்றிக் கொண்டதென்றும் செய்திகள் வெளியாகின. உக்ரைனின் நாலில் ஒரு பங்கு மின்சக்தியை, மேற்படி அணு உலையே உக்ரைனுக்கு வழங்கியதாக வேறு கூறப்பட்டது, விடயங்களின் மொத்த பெறுமானத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இது போக, உக்ரைன் வான் படையின் 75 சத வீதத்தை ரஷ்ய படைகள் அழித்துவிட்டதாக வேறு கூறப்பட்டது.
6
விடயங்களின் மும்முரம் இவ்வாறு இருக்கையில், இப்போரானது உலக ஆதிக்க சக்திகளின் ஒழுங்கு வரிசையை மாற்றியமைத்து உலகத்தின் முகத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என கருதப்பட்டது. மறுபுறத்தில், இப்போர், இந்தியா முதல் இஸ்ரேல் வரையிலான “சிறப்பு” நாடுகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் போரானது. உதாரணமாக, போரின் ஆரம்ப தினங்களிலேயே, ஜெயசங்கரை தொடர்பு கொண்ட பிளிங்கன் (25.02.2022) ரஷ்யாபடையெடுப்புகளுக்கு எதிராக ‘நாம்’ அனைவரும் ஒன்று திரண்ட கண்டனத்தை, ஒரே குரலில் எழுப்பியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இக் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது. இதனை அவதானித்த, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஆயுதங்கள் தொடர்பில், இந்தியா மேல் பொருளாதார தடையை கட்டவிழ்த்து விடும் நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா கையில் எடுக்க கூடும் என்ற பயமுறுத்தலை முன்வைத்தது. இருந்தும் அதுவும், இந்தியாவின் “அசமந்த” நிலையை அசைத்ததாக தெரியவில்லை.
இதேவேளை இலங்கை, தாய்வான் போன்ற சிறு நாடுகளின் நிலைமையோ இன்னும், படும் மோசமானது. இதுவரை வல்லரசுகளின் ஊக்குவிப்பால், பிரதேச வல்லரசுகளை, சவாலுக்குட்படுத்தி தம் வாழ்நாளை சிறப்புற ஓட்டிக் கொள்ளலாம் என்றிருந்த இச்சிறிய நாடுகளின் நிலைமைகள் இப்போரால் மேலும் மோசமாகி விட்டது. அதாவது, வல்லரசுகள்-பிரதேச வல்லரசுகள் முரண்பாட்டில் குளிர்காய முற்பட்டிருந்த இச்சிறிய நாடுகளின் அரசுகள் நாளைய கேள்வி தொடர்பில் இன்று ஆழமாய் சிந்திக்க தலைப்படுத்தப்பட்டன. வல்லரசுகளின் ஊக்கமருந்தை இனியும் தொடர்ந்து அருந்துவது என்பது, ஆப்கானிஸ்தான்-ஈராக்-லிபியா-துருக்கி-சிரியா போன்ற நாடுகளின் அண்மைக்கால அனுபவங்களுக்கு மேலும் பன்மடங்கு வலு சேர்க்கும் விதத்தில் இவ் அண்மித்த ரஷ்ய-உக்ரைன் போர் உருவாகி வருவது, இந்நாடுகளுக்கு, பேரதிர்ச்சியை உண்டு பண்ணும் சங்கதியாகி விட்டது.
7
இப்பின்னணியிலேயே ஸெலன்ஸ்கி, ‘நேட்டோவில் எம்மையும் அங்கத்தினராக இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று அடிக்கொருதரம்; போடும் மன்றாட்டக் கதறல் இன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இங்கே விடுபட்டு போன, நான்கு சொற்கள் என்றால் அவை, ‘எனக்கு முன்னரே தந்த வாக்குறுதி பிரகாரம்’ என்பதுவே (ஆனால், மிக அண்மித்த செய்தியின் படி, போர்த் தொடங்கி 20 ம் நாள் ஸெலன்ஸ்கி, இறுதியாக, வாங்கும் அடியெல்லாம் வாங்கி முடித்தப்பின்னர் இன்று தான் நேட்டோவில் இணையப்போவதில்லை என்றும், நேட்டோவும் உக்ரைனை இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் தனது ‘புதிய கண்டுபிடிப்பை’ அறிவித்துள்ளார்). இதனை ஏன் இவர் இவ்வளவு கால தாமதம் சென்று செய்கின்றார் என்ற கேள்வி வல்லரசுகளின் உள் தந்திரங்களை பறைசாற்றுவதாக இருக்கின்றது என்பது வேறு விடயம். ஆனால், தனது மன்றாட்டம், ஒரு சிறிதும் சாத்தியப்படாத சூழ்நிலையில் உக்ரைனின் வான் பரப்பில் ‘No Fly Zone’ ஒன்றையாவது ஏற்படுத்தி விடுங்கள் அல்லது எங்களுக்கு விமானங்களையாவது தந்துதவுங்கள் அல்லது எமது அணுஉலைகளையாவது காப்பாற்றி தாருங்கள் என்ற அவரது அண்மைக்கால மன்றாடல்களும் அணு உலை வெடித்தால் அது முழு ஐரோப்பாவையுமே அழித்து விடும் என்ற அவரது பயமுறுத்தல்களும் கூட, செவிடன் காதில் ஊதிய இன்னுமொரு சங்கின் கதையானது.
உலக பத்திரிக்கைகள் ஒன்றை குறித்தன: ‘மேற்படி ஸெலன்ஸ்கியின் கோரிக்;கைகள் வரவேற்கத்தக்கதே. பங்கரில், பதுங்கு குழிகளில் இருந்தவாறே இப்படியாக, இவர் மிக உறுதியாக விண்ணப்பங்களை அனுப்புவதும், விண்ணப்ப கடிதங்களில் கையொப்பமிடுவதும், ஆர்ப்பாட்டமான கரகோஷங்களுடன் உலகம் முழுவதும் பரவலாக காட்சிப்படுத்தப்பட்டு ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துக் கொண்டாலும், உக்ரைன் நேட்டோவில் இணைவதோ அன்றி ஐரோப்பிய யூனியனில் இணைவதோ சாத்தியப்பட்டதாக காணப்படவில்லை என இவ்வூடகங்கள், ஒட்டு மொத்தமாக அபிப்ராயம் தெரிவித்து விட்டன. அதாவது, மூர்க்கம் கொண்டு அலையும் கரடியின் முன்னால் இவ்விண்ணப்பங்கள் அர்த்தமற்று போனதாகவே நிரூபணமாகியுள்ளது. இதனை பொறுக்காத, சிரிப்பு நடிகர், புட்டினை இன்று மீள பேச்சுக்கு அழைப்பதும், அது தொடர்பில் சவால்களை விடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.
8
நான்கு நாடுகள் ஒன்றிணைந்து செய்துக் கொண்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை உக்ரைன் ஒருதலைபட்சமாக கிழித்தெறிந்தது, உண்மையில் ரஷ்யாவுக்கு சாதகமாகி போன ஒரு விடயம் எனலாம். (எமது, கிழக்கு முனைய ஒப்பந்தம் போல!). செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஒருதலைபட்சமாக சிறிய நாடுகள் கிழித்தெறிவது, இன்றைய உலக நடைமுறையை காட்டும் ஒன்றாகவே இருக்கின்றது.
உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் கூட கிழக்கு முனைய ஒப்பந்தம் கிழித்தெறியப்படுதலும், 13வது திருத்த சட்டம் புறக்கணிக்கப்படுதலும், உக்ரைன் ஒப்பந்தங்களோடு இணைத்துப் பார்க்கத்தக்கதுதான். வேறு வார்த்தையில் கூறினால் வல்லரசுகளின் நேரடி அல்லது மறைமுக ஊக்குவிப்பால், தாம் செய்தக் கொண்;ட கடந்த கால ஒப்பந்தங்களை, ஒருதலைபட்சமாக கிழித்தெறிய தூண்டுவிக்கப்படும் இந்நாடுகளின் நிலைமை, இன்று, புதிய ஒரு கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.
அதாவது, வல்லரசுகளை நம்பி, பிரதேச வல்லரசுகளை பகைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் அல்லது வல்லரசுகள் - பிரதேச வல்லரசுகள் இடையே உருவாகக்கூடிய முரண்களில் குளிர்காய முற்படும் வேலைத்திட்டங்கள், இனியும் எந்தளவில் வலுமிக்கதாக இருக்கும் என்பது ரஷ்யா -உக்ரைன் போர் தெளிவுற, முன்கொணர்ந்துள்ள, ஓர் ஆழமான கேள்வியாகின்றது.
9
‘போரில் முதல் பலிகடா உண்மைத்தான்’ என்ற கூற்றினை மேற்கோள் காட்டி, தன் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பிலான கட்டுரையை ஆரம்பித்திருக்கும் சதீஸ் கிருஸ்ணபிள்ளை (06.03.2022:வீரகேசரி) இன்று போர் தொடர்பிலான ‘பசப்புரைகள்’ எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பது தொடர்பில் எழுதியுள்ளார். ரஷ்யா படையெடுப்பை போர் வெறியாகவும் இதற்கு எதிராக கிளர்ந்தெழும் உக்ரேனிய மக்களின் எதிர்ப்பை தேசப்பற்றில் திளைத்த வீர உணர்வாகவும் சித்தரிப்பதில் ஸெலன்ஸ்கி வெற்றிக் கண்டுள்ளார்’ என கூறும் அவர் ‘இதற்கு மேலைத்தேய ஊடகங்கள் சிறப்பாக களமமைத்து கொடுக்கின்றன’ என்பார்.
உண்மையில், மேலைத்தேய ஊடகங்கள் என வரையறுக்கப்படும் ஊடகங்கள் என்று அல்லாமல், எமது புலம்பெயர் ஊடகங்களின் ஓர் பிரிவும், உண்;மையை தேடும் பிரயாசைகளை உள்ளடக்காமல், மேற்படி மேலைத்தேய நாடுகளின் ‘இடுக்கி பிடிகளுக்குள்’ சிக்கி அதே ஊடக பாணியை கையாண்டு வருவது வருந்தத்தக்கதே. தம்மை போலவே உக்ரைனில் துன்;புறும் சிறுபான்மை இனங்கள் குறித்த வேதனைகளை கண்கொள்ளாது, இவ் ஊடகங்கள் மேற்கின் பாடலை கிளிபிள்ளைகள் போல் பாட முன்வருவது அவதானிக்கத்தக்கது. இவ் ஒருதலைபட்சமான ஊடக பரப்புரையை விட்டு இவர்கள் இனியும் உண்மையை நாடி செல்வார்களா என்பது கேள்விக்குறியே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ரஷ்யா -உக்ரைன் போர் என்பது, இன்று அரசுகளை மாத்திரமல்லாமல், ஊடகங்களின் சாயங்களை சேர்த்தே வெளுப்பதாக உள்ளது.
இருந்தும், மேற்குலக ஊடகத்தின் பக்கசார்புடைய ஊடக செயல்பாடு எவ்விதமாய் உண்மைகளை மறைத்து நகர்கின்றது அல்லது கருத்துக்களை கட்டவிழ்த்து, கருத்துருவாக்கிகளாக செயலாற்றுகின்றன என்பதனையும், மேற்படி போரே, துல்லியமாக இன்று மக்கள் முன் நிறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு நேரெதிரான, உண்மையை நாடும், நேர்மையான ஆய்வுகளும் இல்லாமல் இல்லை. உதாரணமாக பேராசிரியர் கணேசலிங்கம் உக்ரைன் போர்த் தொடர்பில் பின்வருமாறு எழுதுவது அவதானிக்கத்தக்கது : ‘ரஷ்யாவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் எதிராகப் பிரசாரப்போரை மேற்குலகம் கட்டமைத்து வருகிறது. புட்டினை ஹிட்லருக்கு சமமானவர்களாகவும் ரஷ்யாவின் போர் சர்வாதிகாரத்திற்கான போர், எனவும் பிரசாரப்படுத்தி வருகிறது. உக்ரைன் படைகளையும் அந்நாட்டு ஜனாதிபதி ஸெலன்ஸ்கியையும் தியாகத்தினது உச்சமாகவும் வீரமும் தலைமையும் கொண்டவர்களாக காட்டப்படுகின்றன. ஆனால் இந்த போரே தலைமையின் பலவீனத்தாலும் அத்தலைமை மேற்குலகத்தோடான அடிவருடித்தனத்தின் விளைவாகவுமே ஏற்பட்டதென்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது.’
10
உக்ரைன்-ரஷ்ய போர் சடுதியாக தோன்றிய ஒன்றாக, மேற்குலக ஊடகங்களால் இன்று சித்திரிக்கப்பட்டாலும் அதற்கான நிகழ்தகவுகள் மிக குறைவான பட்சத்திலேயே காணக்கிட்டுகின்றது, என்பதே உண்மையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வருடக்கணக்கில் நடைபெற்ற நுணுக்கமான திட்டமிடல்கள், நகர்வுகள் என்பன மேற்குறிப்பிட்ட போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது எனலாம். இவ் உண்மைகள் ஸெலன்ஸ்கியின், அண்மைக்கால அறிவிப்புகளுக்கூடாகவே, தலைகாட்ட செய்கிறது.
அவரது அண்மைக்கால கூற்றுக்களான, உக்ரைன் அணுவாயுதங்களை நோக்கி செல்லும் அல்லது உக்ரைனில் வெடிக்க கூடிய உயிரியல் அல்லது அணு வெடிப்பு முழு ஐரோப்பாவையும் அழித்து விடக் கூடியது போன்ற அறிவிப்புகள் முக்கியம் வாய்ந்த அறிவிப்புகளாகும். இருந்தும், இவ்வறிவிப்புகளை தொடர்ந்து, ரஷ்ய படைகள் உக்ரைனின் செர்னோhபில் அணு உலையையும் வேறு சில அணு உலைகளையும் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்திய அதே நேரம், உக்ரைனின் இரசாயன-உயிரியல் ஆய்வுக்கூடங்களையும் சுற்றி வளைப்பதில் கவனம் செலுத்தினர்.
ஓர் அறிக்கையின் பிரகாரம், உக்ரைனில், 30 உயிரியல் ஆய்வு கூடங்கள் உண்டு எனவும் தெரிய வருகின்றது. சில வருடங்களின் முன் உக்ரைனில் உயிரியல் ஆய்வு கூடங்களே இல்லை என வாதிட்ட அமெரிக்கா கூட, அண்மையில், 26 உயிரியல் ஆய்வு கூடங்கள் உக்ரைனில் இருப்பதாக ஏற்றுக் கொண்டுள்ளது குறிக்கத்தக்கது. ஆனால், அவை அனைத்தும் உக்ரைனுக்கு சொந்தமானவை எனவும் தனக்கும் அதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை எனவும் அமெரிக்கா கூறி நிற்கின்றது. ( பார்க்க: விக்டோரியா நியூலன்டின் காங்கிரஸ்கான உரை) இதேவேளை, சீனா அமெரிக்காவுக்கு உலகளாவியி ரீதியில் 30 நாடுகளில், கிட்டத்தட்ட 336 உயிரியல் ஆய்வுக் கூடங்கள் உள்ளன என்று அறிவித்தது. இதன் உண்மை நிலையினை ஆராயவும் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் இவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்யவும் ஓர் கண்கானிப்பு அமைப்பு முறை தேவை எனவும் அது வலியுறுத்தி கூறி நிற்கின்றது. இதேவேளை, ரஷ்யா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், உக்ரைனின் உயிரியல் ஆய்வு கூடங்கள் சம்பந்தமாக ஒரு அவசர கூட்டத்தை 10.03.2022 அன்று கூட்டி, ஐக்கிய நாடுகளின் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பிலான சாசனத்தை முழுமையாக அமுல்படுத்த கோரி நின்றது.
அதாவது, முழு ஐரோப்பாவும் ஆபத்தில் விழக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என்ற ஸெலன்ஸ்கியின் அச்சுறுத்தலான, அறிவிப்பில் இவ் உண்மைகள் யாவும், ஏதோ ஒரு வகையில் உள்ளடங்குவதாக நாம் கொள்ள இடமுண்டு. இன்று, செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட கொரோனாவை விட, அதி அபாயகரமான நச்சு பொருட்களும் நச்சு கிருமிகளும் இவ் ஆய்வு கூடங்களில் உருவாக்கப்பட்டு மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்பது இவ் அறிக்கைகளுக்கூடாக இன்று வெளிப்படும் உண்மையாக உள்ளது.
உக்ரைனில் காணப்படும் இவ் உயிரியல் ஆய்வு கூடங்கள் போக, 2014ம் ஆண்டு முதற் கொண்டு இன்றுவரை (கிட்டத்தட்ட 8 வருடங்கள்) அமெரிக்கா உக்ரைனுக்கு 2.7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகளை செய்து வந்துள்ளது என்ற விடயமும் இன்று உலகத்தை அதிர செய்வதாய் உள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் அமெரிக்கா உக்ரைனுக்கு செய்த ஆயுத உதவியின் மொத்த பெறுமானம் 650 மில்லியன் டொலர் என அமெரிக்க புள்ளிவிபரங்களே இன்று கூறுவதாய் உள்ளன.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.