கேள்வி: அடுத்து…?
பதில்: அடுத்து, பல ஓவியர்கள் பொறுத்து நாம் கதைக்கலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் கதைப்பதென்றால் இப்பேட்டி அதிகளவில் நீண்டு விடும்.
கேள்வி: அப்படியென்றால் ஒரு தலையாய ஓவியரை பற்றி கதைப்பதற்கு முன் உங்களுக்கு பிடித்தமான வேறு இரண்டொரு ஓவியர்களை பற்றி சுருக்கமாக கூறுவீர்களா?
பதில்: டேகாஸ், சிசிலி, பிசாரோ - இவர்களை பற்றி நான் கதைக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இவர்களை பற்றி நீளமாய் கதைக்காமல் நவின ஓவியர் என கருதப்படும் ஓவியர் பிக்காசோவை பற்றி கதைப்பது பயனுடையது என்று நினைக்கின்றேன்.
கேள்வி: பிக்காசோவை பற்றி கதைப்பதற்கு முன் மிக சுருக்கமாக, இரண்டொரு வரிகளில் டேகாசை பற்றி கூறுவீர்களா?
பதில்: டேகாஸ் பெலே நடன பெண்களை வரைவதில் பிரசித்தம் பெற்றவர். கிட்டத்தட்ட 1500 பெலே நடன பெண்களின் ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். ஆனால் அங்கே பெண்களின் உடலமைப்புகளை பற்றிய சித்திரத்தை விட கூடிய அளவில் தொனிப்பது அவர்கள் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டதின் ஆதிக்க முறைமையே. அவர் தீட்டியுள்ள ஓவியங்களில் பெண்களின் முகங்களிலும் மலர்ச்சி காணப்படவில்லை. அவர்கள் வெறுமனே ஆட்டுவிக்கப்படுவதாகத்தான் அவரது காட்சிப்படுத்தல்கள் காணக்கிட்டுகின்றன.
கேள்வி: அதாவது ஒரு கலைஞனாக அவரை கவர்ந்த விடயம் பெண்களை விட, பெண்களின் வாழ்க்கை – அதாவது அவர்களின் வாழும் முறைமை என்பதாகுமா?
பதில்: ஆம்… அவர்கள் உடலமைப்பை அவர் தனது ஓவியங்களில் அணுகியதை விட, பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு ஆனந்தம் அளிக்க கூடிய அவர்களது நடனத்தின் பின்னால் அவர்களின் துயருறும் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது என்பதே அவரை ஈர்த்த விடயமாக இருத்தல் கூடும்.
கேள்வி: அதாவது பிக்காசோ போன்று. 1905 இல் பிக்காசோ வரைந்த சர்க்கஸ் சாகசகாரர்களின் வாழ்க்கையை போன்றா?
பதில்: ஆம்… ஒரு மனிதன் தன் சக மனிதனுக்காக துயருறும் ஓர் அடியெடுப்பை நாம் இங்கே காணுகின்றோம்.
கேள்வி: பிக்காசோ பற்றி இன்னும் சற்று ஆழமாக கதைப்பதற்கு முன்னால் நீங்கள் கூறிய பெண்கள் சம்பந்தமான டேகாசின் அணுகுமுறை, பாரதியின் அணுகுமுறை போன்றதா? நீங்களே கூறியபடி கிட்டத்தட்ட 1500 நடன ஓவியங்களை ஓர் ஓவியன் வரைவானென்றால், அதிலும் கிட்டத்தட்ட தன் வாழ்வையும் தன் ஓவியத்தையும் இப்பெண்களின் நடன காட்சிப்படுத்தலில் கரைத்து விட்டான் என்றால் இவ்ஓவியனின் நாகரிகத்தை நாம் எப்படி வரையறுத்து கூறுவது?
பதில்: உண்மை. சமூகத்தின் மிக அடிதளத்தில் மனிதனின் பாதி உயிர் அடக்கப்படும் போது, மறுபாதி உயிர் எழ வேண்டும். அதற்கு முன்னோடியாக, உயர் நாகரீகம் படைத்த கலைஞன் செய்ய வேண்டிய செயற்பாடும் இதுவே என்றாகின்றது.
கேள்வி: வேலுப்பிள்ளையின் மலையக பெண்கள் குறித்த வரிகளை இதனுடன் ஒப்பு நோக்க முடியுமா?
பதில்: தெரியவில்லை. ஆனால் இதே மனப்பாங்குடன் - அதாவது இவ்ஓவியனின் தூரிகை அசைந்த அதே மனப்பாங்குடன் திரு.வேலுப்பிள்ளை அவர்களின் பேனையும் அசைந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.
கேள்வி: அடுத்த ஓவியர்களாக யாரை குறிப்பிடுவீர்கள்?
பதில்: சிசிலியையும் பிசாரோவையும் குறிப்பிடலாம். அவர்களிடத்தே வான்கோ என்ற மனிதன் தோன்றுதற்கான முதல் அடிகளை நான் இனங்காணுகின்றேன். ஆனால் அவை முதல் அடிகள் மாத்திரமே. அதனை பூரணத்துவப்படுத்தும் ஆற்றலும் வரலாற்று அர்ப்பணிப்பும் வான்கோவை சார்ந்தது.
கேள்வி: இந்த ஒரு பின்புலத்தில் இருந்து, அதாவது பெண்களின் வாழ்வை இவ்வளவு முழு அனுதாபத்துடன் சீர்தூக்கி பார்க்கும் ஒரு நாகரீக பரப்பில் இருந்து பிக்காசோவின் நவீன ஓவியங்கள் எப்படி தோன்றுகின்றது.
பதில்: பிக்காசோ ஒரு 92 வருடங்கள் வாழ்ந்த மாபெரும் கலைஞனாகவே கொள்வேன் நான். இன்னும் சரியாக கூறினால் மாபெரும் கலைஞனாக தோற்றம் கண்டவன். ஆனால் அவன் தனது குறிப்பிட்ட காலங்களில் மேற்படி நாகரிக ஓட்டத்திலிருந்து தனக்கான வாழ்க்கை முறைகளை தேர்ந்துகொண்ட ஒரு கலைஞன். இதன் காரணத்தால், மேற்கூறிய ஓவியர்களின் நாகரிக ஓட்டத்திலிருந்து வித்தியாசப்பட்டு, விடுபட்டு விதிவிலக்கான அல்லது வித்தியாசமான ஓவியங்களை தீட்ட முற்பட்டவன்.
- ஓவியம் Science and Charity (1897) -
கேள்வி: தனது 15வது வயதில் அவன் வரைந்த ஓவியம் Science and Charity (1897) பிரமாண்டமானது?
பதில்: ஆம்…ஓர் பதினைந்து வயது, சிறுவனா இதை கீறினான் என்று பிரமிப்ப10ட்டுவது. அவனது ஆரம்ப கால ஓவியங்கள் குறிப்பாக 1904 அல்லது 1905 வரையிலான ஓவியங்கள் மனித துயரை ஆழமாக எடுத்தியம்புவனதாம்.
கேள்வி: இவற்றையா அவரது நீல நிற பகுதி ,Blue Period, என்று வரையறை செய்கின்றார்கள்?
பதில்: இந்த வரையறைகள் எல்லாம் ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு கொண்டவைதாம், என்றே நான் கருதுகின்றேன். மனித துயரை காட்சிப்படுத்த அவர் இந்த காலக்கட்டங்களில் நீல நிறத்தை தலையானதாக தேர்ந்தெடுத்திருந்தாலும் அதே காலப்பகுதியில் மனித துயரை காட்சிப்படுத்த அவர் ஏனைய நிறங்களையும் பாவிக்காமல் இல்லை.
- பிக்காசோவின் நீல நிறக்காலகட்ட பிரசித்தி பெற்ற ஓவியம். முதிய கிட்டாரிஸ்ட். -
கேள்வி: அதாவது இவ்வகைப்படுத்தல் வேறொரு அடிப்படையில் அமைதல் வேண்டும் என கருதுகின்றீர்களா?
பதில்: ஓவிய விமர்சகர்கள் தங்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் ஓவியனின், ஓவியங்களை வகைப்படுத்தி கொள்ளலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை இவ்வகைப்படுத்தலில் நிறங்கள் முக்கியமானதல்ல. வாழ்க்கையே முக்கியமானது.
கேள்வி: வாழ்க்கை நிறங்களை பிரதிபலித்து நிற்காதா?
பதில்: நிற்கும், சில வேளைகளில். ஆனால் எப்போதும் அல்ல. உதாரணமாக, வான்கோவின் Potato Eaters. ஐ எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம், விதைகளை வீசியெறியும் அல்லது விதைக்கும் விவசாயியை ஓவியத்தில் காண முடிவதில்லை. (The Sower). சூரியன் அங்கே, அவனது ஆற்றலை, அவனது உருவாக்கத்தை, அவனது படைப்புத் திறனை உக்கிரமாக வெளிப்படுத்தும் வண்ணம் சுடர்விடுகின்றது. அற்புதமான, கண்ணை எரிக்கும் மஞ்சள் நிறம் அப்படியே அப்பித் தீட்டப்பட்டு, பார்ப்பவரின் இதயங்களை உறுத்தி எடுத்து விடுகின்றது. ஆனால் அதே நேரம் Potato Eaters இல் தேர்ந்தெடுக்கப்பட்டதா என்றால் இல்லை.
கேள்வி: ஆகவே நிறங்கள் ஒரு விடயப்பொருளுக்கு அடிப்படையாகும் என்பதனை மறுக்கின்றீர்கள்?
பதில்: அப்படியயில்லை. அந்தந்த ஓவியன், அந்தந்த விடயப்பொருள் குறித்து, அந்தந்த நிறங்களை தேர்ந்து கொள்ளலாம். அவை காலத்துக்கு காலம், கணத்துக்கு கணம் ஓவியனின் மன வெளிப்பாட்டிற்கேற்ப வித்தியாசமுறலாம். இவை தொடர்பில் முடிந்த முடிபு இல்லை. பிக்காசோ நீல நிறத்தை, ஒரு காலகட்டத்தில் பல படங்களில் தேர்ந்திருக்கலாம். அது பிக்காசோவை பொறுத்து. வான்கோவில் அப்படியொன்றையும் நீங்கள் வகைப்படுத்த முடியாமலும் போகலாம். அவனது விவசாயியின் துயர், Potato Eaters இன் துயர் போன்றே உண்மையானது என்றாலும், பிரகாசமான பற்றியெறியும், சூரியனின் வெளிப்பாட்டை நீங்கள் Potato Eaters இல் காண முடியாது. இரண்டும் வேறு வேறு.
கேள்வி: நீங்கள் வான்கோவின் சூரியனை பற்றி கதைத்ததால் கேட்கிறேன். பிக்காசோ கூறுவார்: “சூரியனை வெறும் வெற்றுருண்டையாக மாற்றிய ஓவியர்களும் உண்டு. வெறும் வெற்றுருண்டையை சூரியனாக மாற்றிய மாபெரும் கலைஞர்களும் உண்டு” என. இது குறித்து யாது கூறுவீர்கள்?
பதில்: இது ஒரு ஆழமான கேள்வி. பிக்காசோ வான்கோவின் சூரியனை பார்த்ததால் இது நேர்ந்ததா என்பதும் தெரியவில்லை. Turner இன் சூரியனும் குறைந்ததல்ல. ஆனால் வான்கோவின் சூரியன் பிரமாண்டமானது. சிந்தையை கிளறுவது. “பிரம்ம தேவன் கலையிங்கு நீரே” என்றும் கூறுவது. அதாவது “உள்ள”சூரியனை விட இவர்கள் ஆக்கும் சூரியன் உக்கிர பதில்கள் கொண்டது.
கேள்வி: அதாவது கலையின் “பரிமளிக்கும்” அம்சம் இங்கும் வந்து சேர்ந்து விடுகின்றதா? இதனையா பிக்காசோ குறிக்கின்றார்?
பதில்: இருக்கலாம். ஆனால் எதனை, எவ் அம்சத்தை எப்படியாக பரிமளிக்க போகின்றீர்கள் என்பதே கேள்வி. விடயப் பொருள்களின் தேர்வும் - பரிமளிக்கும் விதமும் - இங்கே வித்தியாசப்படலாம் - ஓவியனுக்கு ஓவியன்.
கேள்வி: பிக்காசோ கூறுகின்றார்: “கலை என்பது ஒரு பொய். ஆனால் அது வாழ்வின் உண்மைகளை உணர வைத்து விடுகின்றது” என. இது இங்கே சம்பந்தமுறுகிறதா?
பதில்: இதுவும் சம்பந்தப்படலாம். ஆனால் விடயப் பொருள்களின் தேர்வு - இதுவே நான் வித்தியாசங்களை காணும் புள்ளியாகின்றது.
கேள்வி: இவ்வகையில், பிக்காசோவின் வாழ்க்கை நோக்கு, கால முதிர்ச்சியோடு வேறுபட தொடங்கியது என்று கருதுகின்றீர்களா?
பதில்: நிச்சயமாய். 1906 இல் அவர் தான் பிறந்த இடத்தை விட்டு (Spain), பரிஸ் செல்கிறார். தொடர்ந்து அவரது ஓவிய அணுகுமுறையில் பல மாற்றங்கள் நிகழ்வதை நாம் காண்கின்றோம்.
கேள்வி: எவ்வகையான மாற்றங்கள் நிகழுவதாய் எண்ணுகின்றீர்கள்?
பதில்: இருவகையான மாற்றங்கள் ஒரு ஓவியனை அசைத்தல் கூடும். எண்ணற்ற செல்வம் தன்னை நோக்கி வரும் போது, ஒரு ஒவியன் தன் ஓவியத்தின் கருப்பொருளை அச்செல்வத்துக்காக மட்டுப்படுத்திக் கொள்வது இயல்பான ஒன்றே. அதனை தொடர்ந்து அவனது வாழ்க்கை வசதிகள், வாழ்க்கை எண்ணங்கள், வாழ்க்கை மதிப்பீடுகள் - இவையும் வித்தியாசப்படலாம். இனியும் அவன், தனது நீல நிற வகைப்பட்ட ஓவியங்களை வரைந்து கொண்டிருக்க போவதில்லை. Blind man's Supper என்ற விடயப்பொருள் அவனுக்கு தற்போது அந்நியப்பட்ட ஒன்றாகவே இருக்க கூடும். அவன் ஏன் சர்க்கஸ் சாகச வீரர்களின் துயருற்ற வாழ்க்கையை தேடி போக வேண்டும். மேலும் இதற்கான நேரம் கூட அவனில் காணக்கிட்டாத ஒன்றாக அமைந்து போகலாம்.
கேள்வி: அதாவது வான்கோ தனது அணுகுமுறையை வித்தியாசமாக்கி, துயருற்ற மக்களை நாடி, தேடி சென்றானோ – தன் பார்வையை எப்படி எப்படியாக வளர்த்துக் கொண்டானோ என்பதிலிருந்து பிக்காசோவின் பார்வை வித்தியாசப்பட்டது என்கின்றீர்களா?
பதில்: நிச்சயமாய்.
கேள்வி: நீங்கள் கூற வரும் இரண்டாவது அம்சம் யாது?
பதில்: இந்த அந்நியப்படுத்துதல்களினாலும், அதாவது வேறொரு உலகத்தில் தன் வாழ்வை பதிவு செய்து கொள்வதனால், ஓவியனின் சுவை அரும்புகளும் திரிபடைந்து போவதாய் இருக்கலாம். அல்லது வித்தியாசப்பட்டு போகின்றன. அவனது ருசி தனியானதாகின்றது. ஒருவேளை, ஒரு வசதிக்காக, விகாரமடைகின்றது என்று வேண்டுமானால் குறித்துக் கொள்ளலாம்.
கேள்வி: அதாவது தான் நடந்து வந்திருக்க கூடிய ஒரு பாரம்பரியத்தில் இருந்து இவன் விடுபடுகின்றானா? இல்லை அந்நியமுறுகின்றானா?
பதில்: இரண்டுமே. ஏனெனில் மொனேயும், வான்கோவும் முன்னெடுத்த ஓவிய பாரம்பரியம் பிக்காசோவின் நவீன ஓவியங்கள் என அழைக்கப்படும் ஓவிய பாரம்பரியத்தில் முடிவுறுமானால் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வீர்கள் என்பது தெரியவில்லை.
கேள்வி: உங்களது ஆசான் டொனால்ட் ராமநாயக்கா அல்லது ரிச்சர்ட் டி கெப்ரியல் நவீன ஓவியம் குறித்து – முக்கியமாக பிக்காசோவின் ஓவியங்கள் குறித்து என்ன எண்ணினார்கள்? இது குறித்து அவர்களுடன் நீங்கள் கதைத்துள்ளீர்களா?
பதில்: இருவருக்குமே இந்நவீன ஓவியங்கள் சம்பந்தமாக ஒரு ஒட்டாத பார்வையே இருந்தது. ஆனால் இருவருமே இந்நீல நிற காலப்பகுதி என கூறப்படும் ஓவியங்களை பெருமளவு வரவேற்றார்கள். முக்கியமாக ரிச்சர்ட் டி கெப்ரியல் பிக்காசோவின் Family of Acrobats with Monkey (1905) ஓவியத்தை பெரிதும் சிலாகித்து என்னுடன் கதைத்துள்ளார். ‘அவ் ஓவியத்தில் வெளிப்படும் சர்க்கஸ் சாகச வீரர்களின் வாழ்வு எவ்வளவு துயருற்றது என்பதை பிரதிபலிக்கின்றது’ என அவர் குறிப்பிடுவார்.
கேள்வி: “கியூபிசம் என்பது உங்கள் கைகளில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் அளவில் ஒரு பதார்த்தமோ பண்டமோ அல்ல. அது கிட்டத்தட்ட ஒரு வாசனைதிரவியம் போன்றது. உங்களின் நேரெதிரே, உங்களின் பின்னால், உங்களின் பக்கவாட்டில்… அதன் நறுமணம் எல்லா திசைகளிலும்… ஆனால் அந்நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்பதனை நீங்கள் சரியாக கணித்துக் கொள்ள முடியாது” என கியூபிசத்திற்கு பிக்காசோ ஒரு வரையறை கொடுத்துள்ளார்.
பதில்: இருக்கலாம். ஆனால் இந்நறுமணத்தை எங்கே கொண்டுபோய் வைப்பது. ஓவியங்கள் கட்டுரைகளாக இருக்க முடியாது – உட்கார்ந்து பொருளை தேட. அங்கே இயல்பாக அறிவு தளங்கள் பிரகாசிக்க செய்யும். ஆனால் இவை ஒரு ஓவிய வெளிப்பாடாக இருத்தல் வேண்டும். இதனை விடுத்து உட்கார்ந்து, பொருளை தேடிக் கொண்டிருப்பீர்களானால் சற்று பிரச்சினையாகவே இருக்க கூடும். இங்கேயே வாழ்க்கை வித்தியாசப்படும். எல்லைக்கோடும் தோன்றுகின்றது. வான்கோ, Potato Eaters ஐ தேடி ஓட, பிக்காசோ, நறுமணத்தை தேடி ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. இருவரினதும் வாழ்க்கை தர்மங்களும் - நியாயப்பாடுகளும் அப்படி வேறுபட்டவையாக இருந்தால், என்ன செய்வது?
கேள்வி: அதாவது வாழ்க்கை வித்தியாசங்களினால் எப்படி எப்படியோ கிளைத்திருந்த ஒரு ஓவிய பாரம்பரியம், மனிதனை மறந்து, எல்லா திக்குகளிலும் வீசும் நறுமணம் எங்கிருந்து என்ற புதிரை உள்ளடக்கி திரிந்து போகின்றது என்கின்றீர்களா?
பதில்: இதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மொனேயும் Turner உம் கொன்ஸ்டேபிலும், வான்கோவும் டேகாசும் முன்னெடுத்த ஓவிய பாரம்பரியத்தின் முன் கியூபிசத்தை நீங்கள் நிறுத்தி நறுமணம் எங்கிருந்து வருகின்றது, என ஒரு தேடலை நீங்கள் செய்து கொள்வீர்களானால் அது உங்களை பொறுத்தது. ஆனால் இந்த பாரம்பரியங்களின் வித்தியாசங்களை நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அனைத்துமே ஓவியங்கள் என்ற பொதுமைப்பாட்டுக்கு நீங்கள் வர முடியாது. அதுமட்டுமல்ல – உங்கள் வாழ்வின் தர்மங்கள் போகட்டும் - உங்கள் பிள்ளைகள் எங்கே போவார்கள்? அவர்களுக்கு நீங்கள் எதனை விட்டு விட்டு போக போகின்றீர்கள்? எந்த பாரம்பரியத்தை அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர போகின்றீர்கள்? வான்கொவிடமிருந்தா பிக்காசோவிடமிருந்தா? அது அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்த போகின்றது - இவை எல்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளே.
கேள்வி: கார்ல்மார்கஸ் கூறுவார்: “முதலாளித்துவம் தனக்கு ஏற்ற வடிவத்தில் மனிதனை செதுக்கி கொள்கின்றது” என. இதே போன்று மார்க்சிம் கார்க்கியும் கூறுவார்: 'மனித நாகரிகத்தின் வரலாறு தனிமனித பாத்திரத்தால் முற்றாய் சிதைந்து விட்டது' என. அதாவது தனிமனித பாத்திரம் துரதிர்ஸ்ட வசமாய் ஆக்கபூர்வமானதல்ல”. இப்படியா பிக்காசோவை நீங்கள் பார்க்கின்றீர்கள்?
பதில்: இருக்கலாம். ஆனால், விடயம் எப்படிப்பட்ட ஓரு மலை முகட்டின் உச்சியில் நின்று கலைஞன் நறுமணத்தை தேடி எந்த அளவில் சிதைந்து போனான் என்பதே. நான் கார்ல்மார்க்சையோ அல்லது மார்க்சிம் கார்க்கியையோ பெருமளவில் கற்கவில்லை. எனவே இது பொறுத்து கூறமுடியாது. ஆனால் வாழ்க்கை திரிபுகள் மனிதனை எங்கெங்கு கொண்டு போய் நிறுத்தக்கூடியது என்பது பொதுவில் அனைவரும் அறிந்த ஒன்றே. உங்கள் வாழ்க்கைமுறை வித்தியாசப்பட்டு போனால், உங்களது தூரிகையின் அசைவும் வித்தியாசப்பட்டே இருக்கும். இதனை வான்கோ, பாரதி போன்றோரின் வாழ்க்கை முறை மிக கறாராக எடுத்துக் கூறுகின்றது. செல்வத்தை தேடி நீங்கள் ஓடலாம். அல்லது விவசாயியை தேடி நீங்கள் ஓடலாம். தேர்வு உங்களை பொறுத்தது. ஆனால் அதற்கேற்ப உங்களின் தூரிகையின் அசைவும் நிச்சயமானதாகும்.
கேள்வி: “படைப்பாற்றலின் முதலான எதிரி அறிவுதான்” என்றும் “உலகம் எந்தவொரு பொருளுமற்றது” என்றும் “அப்படியானால் எனது ஓவியங்கள் மட்டும் அவற்றை உள்ளடக்கி கொள்ள என்ன நிர்பந்தம் இங்கே” என பிக்காசோ கூறுவார். இது பொறுத்து யாது நினைக்கின்றீர்கள்?
பதில்: அதுவேதான் நான் கூற விரும்புவது. அதாவது பொருளற்ற வாழ்க்கை என்பது ஒரு குறித்த வாழ்க்கையை நீங்கள் தேர்ந்துக் கொள்ளும் போது ஏற்படும் சிந்தனை முறைமை. இதன் அடியாய் பிறக்கும் ஓவியமும் பொருளற்றதாகவே இருந்து விடும்.
கேள்வி: ஆனால் பிக்காசோ இதனுடன் நிறுத்தாமல் மனிதனின் தர்க்க புத்தியையும் ஓவியத்தில் நிராகரிக்கின்றாரே?
பதில்: நிராகரித்துதான் ஆக வேண்டும். அல்லது வான்கோவின் தர்க்க புத்தியை எங்கே கொண்டுபோய் வைப்பது. அதாவது Potato Eaters இல் தர்க்கத்திற்கான நியாயபாட்டை அல்லது தர்க்கத்துக்கான தேவையை தேடி பேரோசை எழுப்பும் வான்கோவின் தர்க்க புத்தி பிக்காசோவால் நிராகரிக்கப்படுவது இயல்பானதுதான்.
கேள்வி: பிக்காசோவின் பின்வரும் கூற்றும் இருக்கின்றது. “ஓவியன் என்பவனை நீங்கள் யார் என கருதகின்றீர்கள்? அவனோ ஓர் அரசியல் இருப்பு… அவனை சுற்றி என்ன நடக்கின்றது என்பதனை நிரந்தரமாய் அறிந்த ஒரு மனிதன் அவன். ஓவியன்.. அது ஒரு போர்கருவியாகும்” என.
பதில்: இதனை எக்காலப்பகுதியில் பிக்காசோ கூறினார் என்பது தெரியவில்லை. ஆனால், இக்கூற்று விடயங்களை சுலபமாக்குகின்றது. ஓவியன் ஓர் போர்க்கருவி என்றால் - எதற்கு எதிராக, யாருடைய என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இதனால்தான் கூறினேன். இது ஆற்றப்பட்ட காலப்பகுதி முக்கியமானது என. முக்கியமாக பிக்காசோவை புரிந்து கொள்வது என்பது தொடர்பில் மாத்திரமல்லாமல், ஓவியங்களை பொதுவில் புரிந்து கொள்வதில். முக்கியமாக வாழ்வு ஓவியத்தில் செலுத்தக்கூடிய ஆழமான தாக்கம் என்பது தொடர்பில்.
கேள்வி: அதாவது வாழ்க்கை வித்தியாசப்படும் போது ஓவியனின் கூற்றுகளும் வித்தியாசப்படும் என்கின்றீர்களா? அதாவது பிக்காசோ தனது நீல நிற காலப்பகுதியில் வரைந்த ஓவியங்களும் ஆற்றிய கூற்றுகளும் பின் நாட்களில் வித்தியாசப்பட்டு போகும் - அவரது மாறிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப என்கின்றீர்களா?
பதில்: நிச்சயமாய். அதுதான் ஆரம்பத்திலிருந்தே நான் கூற வருவது. வாழ்வு வித்தியாசப்பட ஓவியனின் ஓவியமும் வித்தியாசப்படும். அவன் தன் ஓவியங்களை, ஒரு விற்பனை சந்தைக்காக தோற்றுவிக்க முடிவு செய்யலாம். ஆனால் அந்த ஒரு ஓட்டத்தில் இயல்பாகவே அவனது சுவை அரும்புகளும் திரிபடைந்து போகலாம். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தோதாக அமைவதுதான். அதாவது ஓவியத்திற்கும் - சந்தைக்கும். பண்டைய ஓவியர்கள் - கோமகனின், கோமகள்களின் முகங்களை தீட்டிக் கொண்டு தங்கள் வர்ணங்களை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். புலவர்கள் பாரிகளின் தேர்களில் முல்லையை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கு பொன் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதனிடையேதான் க~;டப்படும் விவசாயியும் இருந்தான். கம்பனும் வந்து சேர்ந்தான். இந்த பின்னணியில் பிக்காசோவையும், வான்கோவையும் நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கோ ஆரம்பித்தவன் - அதாவது தனது 14 வயதில் எங்கோ ஆரம்பித்தவன் எப்படியாய் முடிந்தான் என.
கேள்வி: ஆனால் கலையின் கடமைகள் பொறுத்து பிக்காசோவின் கூற்று பின்வருமாறு இருக்கின்றதே: “கலை என்பது ஒவ்வொரு நாள் வாழ்விலும் உங்கள் ஆன்மாவில் படியும் தூசிகளை தட்டிக் கழுவும் ஒரு சாதனம்” என.
பதில்: இக்கூற்றும் எப்போது ஆற்றப்பட்டது என்பது ஒரு கேள்வி. மறுபுறமாய் பார்த்தால், யாருடைய வாழ்வு – யாருடைய தூசி என்பதே கேள்வி இங்கே.
கேள்வி: அதாவது கார்க்கி என்ற கலைஞனின் தேடல் கூட, “யாருடைய வாழ்வு – எத்தகைய தூசி” - என்பதில் கவனம் செலுத்தியதாக படுகின்றது.
பதில்: இருக்கலாம். ஆனால் அக்கேள்வி ஓவிய பரப்பெல்லையை தாண்டி செல்வதாக படுகின்றது.
கேள்வி: இறுதியாக, பிக்காசோவின் இறுதி ஓவியம் பொறுத்த கேள்வி. பல மாதங்கள் செலவிட்டு தனது முக தோற்றத்தை (Self Portrait) நுணுக்கமாக, தனது பாணியில் வரைந்து காட்டியுள்ளார் பிக்காசோ?
பதில்: ஆம். இறப்பின் அச்சத்தை அல்லது மரண ஓலத்தை வெளிப்படுத்துவது. இந்த ஓலம் நீண்டது. தனிமையானது. கொன்ஸ்டொபிள், மொனே, வான்கோ போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பாரம்பரியம் இப்படியாய் உருக்குலைந்து நிற்பது வருத்தத்தை தருவது தான்.
கேள்வி: நீங்கள் கூறிய வாழ்க்கையின் தர்க்கம் இதுவாகத்தான் இருக்க கூடுமா?
பதில்: தெரியவில்லை.
கேள்வி: இளைய தலைமுறை ஓவியர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய செய்தி யாது?
பதில்: “….. ….. ….. ….. ………….”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.