9
“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.
“ஒரு எறும்புப் புற்று என்பது பல்லாயிரம் எறும்புகளின் தூல வடிவம். அவ்எறும்புகளின் ஊடாக, கோடானு கோடி வருடங்களாக இயற்கை உருவாக்கிய அமைப்பு அது. இலக்கியப் படைப்பும் அப்படித்தான்.” (அதே)
அதாவது, மேற்படி கூற்றின் பிரகாரம் பார்ப்போமானால், எறும்பு புற்று கட்டுவதும், குரங்கு மாம்பழம் சாப்பிடுவதும், புதுமைபித்தன் கபாடபுரம் எழுதுவதும் - கோடானு கோடி வருடங்களின் சமாச்சாரங்கள் - அதாவது ஆழ்மன விளையாட்டுகள் என்றாகிறது. வெறும், எறும்புகளுக்கே, கோடானு கோடி வருடங்கள் என்றால், கபாடபுரம் எழுதிய, புதுமைபித்தனின் ஆழ்மனம் கூட,அதாவது அதை விட,கோடானு கோடி வருடங்களில் இருந்தே, அதாவது குரங்கு மனிதனாய் ஆன காலத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ,‘நம்மவர்களுக்கு, குரங்குகளில் முதல் குரங்கும் தமிழ் குரங்குதான் என்று கூறினாலே பிடிக்கும்’ என்று போகிற போக்கில் புதுமைபித்தன் குரங்குகளை இழுத்துக் கூறுவதும் இந்தக் குரங்கு சார்ந்த ‘ஆழ்மன’ விளையாட்டுகளின் கீற்றோ என்பதுவும் புரியவில்லை.
மொத்தத்தில், நாவலில் வரும் மரீனா – கிளிம் சார்ந்த ஆவி இறங்கல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எமது இலக்கியத்தில் வலுவாக முன்னெடுக்கப்படும் மரபுகள் - தொன்மங்கள் - ஆழ்மன சக்திகள் - நனவிலி மனம் - நனவிலி மொழி - இவற்றை எடுத்துக் கொண்டாலும் சரி - இவை ஆளாளுக்கு ஆங்காங்கே சற்று வித்தியாசப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே ஒலிக்கின்றது – அதிலும் 1916 இலிருந்து யுங்கின் மூலமாக, தெளிவாக.
CARL JUNG 1916 இலேயே, கூட்டு ஆழ்மனம் (COLLECTIVE UNCONCIOUSNESS) என்ற கருத்தாக்கத்தினை வெளியிட்டு விட்டார். அவரது கணிப்பில், மனித நடத்தைகளுக்கான அத்தனை வேர்களையும் இக்கூட்டு ஆழ்மனதில் கண்டு கொள்ளலாம் என்பதே அவரது நிலைப்பாடு ஆகின்றது.
ஜெயமோகன், மாதவன் தொடர்பான தனது நூலில், கூறுகின்றார்: “யுங்கின் விமர்சன மரபுகளாக, முழுமையாக இக்கட்டுரையை கொண்டு செல்ல விரும்பவில்லை” என்பார். (பக்கம்: 44:கரிப்பும் சிரிப்பும்) மேற்படி கூற்றில்,“முழுமையாக” என்ற சொற்பாவிப்பு எம்மைக் கவரக்கூடியதுதான்.
யுங்கின் விமர்சன மரபு இங்கே சம்மந்தப்படவில்லை என்று கூறுதல் வேறு. “முழுமையாக” சம்பந்தப்படவில்லை என்று கூறுதல் வேறொன்று. அதாவது, பகுதியாகத்தான் இங்கே சம்பந்தப்பட்டுள்ளது, அல்லது சம்பந்தப் படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் சுற்றி வளைத்துக் கூறுகிறார் போலும். இருந்தும், அவரின் பார்வைக் கோணத்தை நோக்கும் போது, அது, யுங்கின் பார்வையையே தனது அடித்தளமாகப் பிரதிபலித்திருப்பது விளங்கும்.
இந்திய சாதீய அடுக்குகளின், கோரிக்கை காரணமாக, வேண்டுமானால், யுங்கின் தத்துவத்தை சற்று நெளித்து, உருவத்தை மாற்றி இருக்கலாமே தவிர அடிப்படையில், இங்கே பெரிய ஒரு மாற்றத்தையும் கண்டதாய் இல்லை. மொத்தத்தில், ஜெயமோகன் போன்றோர் முன்னெடுக்கும் தத்துவத்தை பின்வருமாறு அடக்கி விடலாம்:
கூட்டு ஆழ்மனதால், படைப்பு மனமானது, தீர்மானிக்கப்படுகின்றது. கூட்டு ஆழ்மனமானது, மரபையும் தொன்மையையும் உள்ளடக்குகின்றது. படைப்பாளி, ‘ஆட்கொள்ளப்படும் போது’ மரபும் தொன்மமும் அவனில் தொழிற்பட, அவன் படைப்பு நிலையை எய்துகின்றான். கேள்வி, விடயம் இதுதான் எனில், இந்த மரபும் தொன்மையும் என்பது என்ன என்பதே.
02 மார்ச் 2019 இல் சென்னையில் உரையாற்றிய ஜெயமோகன், மேற்படி விடயத்தைத் தொடத் தவறவில்லை. அரங்கு நிறைந்திருந்த இக் கூட்டத்தில், ஜெயமோகன், கார்ல் யுங் பற்றி குறிப்பிடாவிட்டாலும், மரபு-தொன்மம் பற்றி தனது பரப்புரைகளை விலாவாரியாக முன்வைக்கத் தவறவில்லை. குருதி மரபு (இனத்துடன் அடங்கியது), பண்பாட்டு மரபு (பல்வேறு இனங்களை உள்ளடக்குவது) என்பதையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியவர் இப்படியான ‘மரபை’ அல்லது ‘தொன்மத்தை’ வரையறை செய்யும் க~;டத்தில் இருந்து தன்னை மிகுந்த சாமர்த்தியமாக விடுவித்துக் கொண்டார்: ‘அது அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே’ என்ற அளவில். இருந்தும், இப்படி அனைவருக்கும் தெரிந்த ‘மரபு’ அல்லது ‘தொன்மம்’ தொடர்பில் அவர், அரங்கிடம் எழுப்பிய வினா: “உங்களில் எத்தனை பேர் வடம் பிடித்து தேர் இழுத்திருக்கின்றீர்கள் என்பதே”. ((YOUTUBE 17.04.2020:ஜெயமோகன் உரை).
இவ் உரை தொடர்பில், தன் முகப்பதிவை இட்டுள்ள அன்பர் திரு.பு.செல்வம் என்பார் பின்வருமாறு தன் அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளார்: “குருதி சுற்ற மரபு ஃ பண்பாட்டு மரபு என்ற இரு தளங்களில் வழிப்பயணத்தை தொடங்கிய உரை எங்கெங்கோ சென்று (இறுதியில்) கோயில் வடத்தை எத்தனை பேர் தொட்டுப்பார்த்திருக்கின்றீர்கள் என்ற கேள்வியை இழுத்து பண்பாட்டின் தொடர்ச்சியை சுட்டினார்… வடத்தை தொடுவதற்கு மட்டுமல்ல கோயிலின் உள்ளே செல்லவே எத்தனை பேருக்கு உரிமை மறுக்கப்பட்டது என்ற பண்பாட்டுத் தொடர்ச்சியை ஜெயமோகன் உரையின் போது தொடவே இல்லை.” (கிளிம், வரலாற்றின் ஒரு முகத்தில் மாத்திரம் விளிக்க விருப்பம் கொண்டாற் போல்) சிந்திக்கத்தக்கதுதான்!
இது ஒரு புறமாய் இருக்க, வழமையாய் மரபை தனது அடித்தளங்களாக, சிபாரிசு செய்யும், ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் ‘பொது புத்தி அணுகுமுறையை’ நிர்மூலமாக்கும் ஆர்வத்தில், தன்னிலை மறந்து பின்வருமாறு கூறுகின்றார்;: “இன்று அமைப்பும் விழுமியங்களும் சரிவை அடைந்து விட்டன என்று சுந்தர ராமசாமி கூறுகின்றார். அதாவது அவை நேற்று சிறந்த நிலையில்… இருந்தன என்று… நம்புகிறார்…” (பக்கம்:123:நவீனத்துவத்தின் முகங்கள்)தொடர்ந்தும் கூறுவார்:
“பழம் பொற்காலம் என்ற கனவினை… சுந்தர ராமசாமி நம்பக்கூடாதல்லவா?"
“வரலாற்றை ஐம்பது வருடம் பின்நோக்கி நகர்த்தினால் நாம் காண்பது என்ன? மக்கள் தொகையில் முக்காற் பங்கை அடிமைகளாக வைத்து சுரண்டிய ஒரு நில பிரபுத்துவ சமூக முறை…”
“பெண்களை பண்ணை விலங்குகள் போல் நடத்திய குடும்ப அமைப்பு…”
“ஜமீன்தார்கள் வன மிருகங்களை போல சூறையாடி உலவிய ஒரு காலம்…” (காலக்கட்டம்)
“சங்க காலத்தின் சாதி முறைமை…சுரண்டல் முறைமை… சோழர் காலத்து ஆதிக்க வன்முறை…” (பக்கங்கள்: 124, 125:நவீனத்துவத்தின் முகங்கள்).
அதாவது, வரலாற்றை ஓர் ஐம்பது வருட காலம் பின்நோக்கி நகர்த்தினால் அவர் தான் காண்பதைத்தான் இப்படி பட்டியலிட்டுள்ளார்.
கேள்வி இதுதான்: இந்த ஐம்பது வருட பின்நோக்கிய காட்சிக்கும் மரபுக்கும் தொடர்பில்லையா அல்லது குறைந்தபட்சம் சம்பந்தம் இல்லையா என்பதே ஆகும். படைப்பின்-படைப்பு மனதின் தேவைப்பாடுகளை பற்றிக் கூற வரும் ஜெயமோகன், மேற்படி உரையின் போது (மேலது) “விடயத்தை”ப் பின்வருமாறு விளக்கினார்: “இன்றைய நிலைமையில் கார் ஓட வேண்டும். ஆனால் தேர் அங்கே நிற்க வேண்டும்” என.(கோயிலில்) பிரச்சினை இல்லை. தேர் நிற்கலாம் தான். ஆனால் தேருக்குப் பின்னால் எவை எவை கூட நிற்கின்றன-நிற்க முனைகின்றன அவற்றைத் தீர்மானித்தது யார் - எவர்? எந்த நலன்? அவற்றின் வேர்கள் யாவை – மரபு எது - என்பதே கேள்வியாகின்றது, இங்கு.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.