மலையகத் தலைவர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் எனும் சி.வி.வேலுப்பிள்ளையின் நூல். - சு.முரளிதரன் -
மிகப்பெரும் வியப்பையையும் விந்தையையும் ஏற்படுத்தும் விதமாகவும் மலையகத்தில் வேர் விட்டு வளரும் சிவியியலுக்கு (சி.வி. வேலுப்பிள்ளை) ஆழ்ந்த கனதியை ஏற்படுத்தம் விதமாகவும் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' எனும் சி.வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகளை தாங்கிய நூல் சென்னை தாய் வெளியீடாக திரு மு. நித்தியானந்தன் மற்றும் திரு எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் பெரும் முயற்சியினால் வாசகர் கைகளுக்குக் கிட்டியுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட இந்த நூலுக்குள் நுழையும் மலையகம் குறித்ததேடல் முயற்சியில் மலையக வரலாற்றின் விட்டுப்போன பக்கங்களை தேடுபவர்களும் அல்லது இதுவரைக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சிந்திப்பவர்களும் தமக்குள் தாமே சிலிர்த்துப் போகும் வண்ணம் மலையகம் சார்ந்த ஆளுமைகளைத் தனது சொல்லோவியங்களால் தகவல்களாலும் முன் அனுமானங்களாலும் நாம் காணாத ஒரு மலையக வரலாற்றை சி.வி படைத்துள்ளார் எனலாம்.