முன்னுரை

 “வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.  இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது.  கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல்,  விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது.   மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும்  பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல.  ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது.  இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உவமை நடை

    செய்யுளுக்கு அணி சேர்ப்பதே உவமை.  தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டு விளக்குவது.

    “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்“  என்பது பேராசிரியர் தரும் விளக்கம்.        (தொல்.பொரு.ப.57)

    சிறுபெண்ணான ஆண்டாள் மழை எங்ஙனம் பொழிய வேண்டும் என்ற அறிவியல் கோட்பாட்டினை, ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு  அழகாக  நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.  கடல் நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. அங்கு குளிர்ந்த காற்றுப்பட்டவுடன்  அது மழையாகப் பொழிகின்றது.  இந்த அறிவியல் உண்மைக்கு அழகானதொரு அறிமுகத்தொடு விளக்கவுரை தருகிறார்.  அதாவது,

    ”ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
      ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
      பாழியந் தோளுடைய பற்பநா பன்கையில்
      ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
     தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
     வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
      மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்“            (திருப்.4)  

மேகமானது கருத்திறுக்கவேண்டும்.  மழைபொழிவதற்கு முன் வானில் இடி இடிக்க வேண்டும்.  மின்னல் வெட்ட வேண்டும் பின் மழை பொழிய வேண்டும். இதை எங்ஙனம்  மழை தேவனிடம் அறிவுறுத்துகிறாள் ஆண்டாள் என்பதைக் காணலாம்.  மழை பொழிவதற்கு முன் மேகமானது கருமை கொண்டிருக்க வேண்டும் எப்படியெனில் ஊழிக்காலத்தில் தோன்றும் இறைவனின்  நிறம் போல கருத்தும்  திருமாலின் கையிலுள்ள சக்கரம் போல் மின்னியும், மற்றொரு கையிலுள்ள சங்கு போல் இடி முழக்கமிட்டுப் போர்க்களத்தில் திருமாலின் கையிலுள்ள சார்ங்கம் என்ற அம்பு போல சரமழையும் பொழியவேண்டும். அதுவும் மிகையும்படாது குறையும்படாது மக்கள் உலகினில் வாழ்வதற்கு மழை பொழிய வேண்டும். நாங்களும் மார்கழியில் நீராடி மகிழ்வோம் என்கிறார்.

    “இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே பார்க்கப்பட வேண்டும் என்பது அழகியல் திறனாய்வின் அடிப்படையாகும்”(Aesthetic Criticism)                         ( திறனாய்வுக்கலை, தி.சு.நடராசன், ப31)
    
“கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் புப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?“    (திருப்.22)

இப்பாசுரத்தில்,  திருமாலின் கண்கள் கிங்கிணி வாயைப் போன்ற தாமரை மலர்போலே  எங்கள் மேல் சிறிது சிறிதாக விழாதோ என்று  திருமாலின் கண்களை கிங்கிணி வாய் போன்ற தாமரை மலரினுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறாள் ஆண்டாள்.

    “கதிர் மதியம் போல் முகத்தான்”            (திருப்.1)

    ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் .இரண்டும்கொண்டு ”            (திருப்.22)

இப்பாசுரங்களில், திருமாலின் திருமுகத்தினை சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறாள் ஆண்டாள்.   இறைவனின் திருமுகம் தமது அடியவர்களுக்கு மதி போன்று குளிர்ச்சியாகவும் தீயவர்களுக்கு கதிர் போன்று வெப்பத்தையும் தரவல்லது என்கிறார். பொதுவாக ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது உலக இயல்பு.  ஆனால் இங்கு ஆண்டாள் இருவேறுபட்ட தன்மை வாய்ந்தவற்றை ஒன்றனுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

    “ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம்.  அன்றாடம் நூற்றுக்கணக்கான பொருள்களை நம் போன்றவர்கள் காண்கிறோம்.  ஆனால் இப்பொருள்களினிடையே காணப்பெறும் ஒப்புமை உண்மை நமக்கு விளங்குவதில்லை.  இன்னும் பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை மனத்திற்படுகிறதே தவிர, ஆழ்ந்துள்ள ஒப்புமை நம் கவனத்தை ஈர்ப்பதில்லை.  தொடர்பற்ற பொருள்களிடையே கூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கிறான்.  நம்மையும் காணுமாறு சொல்கிறான்.  நாம் கண்டும் காணாத பொருள்களை விளக்க உதவுவதுடன், அடிக்கடி காணும் பொருள்களின் தனிச்சிறப்பை விளங்கிக்கொள்ளவும் உவமையை புலவன் கையாள்கிறான். ஆகவேதான் அவனுடைய புலமைச் சிறப்பு இதன் மூலம் வெளிப்படுகிறது என்று சொல்கிறோம்“ என்கிறார் பேரா.அ.ச. ஞானசம்பந்தன். (அ.ச.ஞானசம்பந்தன், இன்றும் இனியும், ப.30)

உருவக நடை

        “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
          ஒன்றென மாட்டின் அஃது  உருவகமாகும்“    (தொல்.நூ.1022)

 உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.

        “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்”        (திருப்.3)

இப்பாசுரத்தில், வள்ளல் போன்ற பசுக்கள் அதாவது, பாலினைக் கரவாகு மடியின் கீழ் வைத்த குடத்தில் பாலினைச் சொரிந்து நிரப்பும் பசுக்களை  “வள்ளல் பெரும்பசுக்கள்“ என்கிறார் ஆண்டாள்.

    
“கார் மேனி செங்கண்“        (திருப்.1)

இப்பாசுரத்தில், திருமால் கார் மேகம் போன்ற நிறத்தை உடையவன், சிவந்தநிறம் கொண்ட கண்களையுடையவன் என்பதைக் குறிப்பிடுவதற்காக “கார்மேனி“, “செங்கண்“ உருவகநடையைப் பயன்படுத்துகிறார் ஆண்டாள்.

    “செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்“            (திருப்.14)

இப்பாசுரத்தில்,  திருமால் போயிலுக்குச் செல்லும் தவமுனிவர்கள் காவிநிறமுடைய உடையையும் வெண்மையான பற்களையும் கொண்டுள்ளனர் என்பதை விளக்கும் பொருட்டு “செங்கல்“ “வெண்பல்“ என்று உருவகப்படுத்துகிறார்.

    “பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரை கையால் சீரார் வளையொலிப்ப”            (திருப்.18)

இப்பாசுரத்தில்  ஆண்டாள்,  நப்பின்னைப்பிராட்டியைக் குறிப்பிடும்போது, செந்தாமரை போன்ற கைகளையுடையவள் என்பதை  “செந்தாமரை கை“ என்று விளிக்கிறாள் ஆண்டாள்.    பந்தைப்போன்ற மென்மையான விரல்களை உடையவள் நப்பின்னை என்பதைக் குறிப்பதற்கு “பந்தார் விரலி“ என்றும் உருவகப்படுத்துகிறாள் ஆண்டாள்.

“உயர்ந்த கவிதைகளில் உவமைகளும் உருவகங்களும் புறத்தே நிற்பன அல்ல. அவையே கவிதையின் அகவுறுப்புகளாகி, கவிதையுடன் இரண்டறச் சேர்ந்து ஒன்றி நிற்கின்றன“. என்னும் கூற்றிற்கு இலக்கணமாக ஆண்டாளின் திருப்பாவைத் திகழ்கின்றது.  (க.கைலாசபதி & இ.முருகையன், கவிதைநயம், ப.32)

ஒலிக்குறிப்பு நடை

    பாவை நோன்பிற்காக உறங்கிக்கொண்டிருக்கும் தோழிகளை எழுப்புகிறாள் ஆண்டாள்.  பொதுவாக சத்தம் கேட்டாலே உறக்கம் கலைந்துவிடும்.  இதை மனதில் கொண்டு ஆண்டாள் ஆயர்பாடியில் எழுகின்ற சத்தங்களை அழகாக வகைப்படுத்துகிறாள்.  காலையில் நமக்கு விடியலை அறிவிப்பது பெரும்பாலும் பறவைகளாகத்தான் இருக்கும்.  அவ்வகையில் பறவைகளின் ஒலி! பெருமாள் கோயில்களில் எழுப்புகின்ற சங்கின் ஒலி!  முனிவர்களும் யோகிகளும் எழுப்புகின்ற “ஹரி  ஹரி“  என்ற நாம சங்கீர்த்தன ஒலி! இவையெல்லாம் உனக்கு கேட்கவில்லையா? அல்லது கேட்டுக்கொண்டு (அனுபவித்துக்கொண்டு) பக்தி பரவசநிலையில் எழுந்திராமல் இருக்கின்றாயோ? என்று தோழி ஒருத்தியிடம் கேட்கிறாள்  ஆண்டாள்.

    “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
     உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
     மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் கேட்டிலையோ?        (திருப்.6)

மீண்டும் எழாமல் இருக்கின்ற பெண்களைப் பார்த்து, ஆனைச்சாத்தன் என்றொரு வகைப்பறவை எழுப்புகின்ற கீச்சொலி கேட்கவில்லையா? என்கிறாள்.  மேலும், ஆயர்குலப்பெண்கள் அதிகாலையில் எழுந்து தயிர் கடைகின்ற அந்த மத்தின் ஒலி  கேட்கவில்லையா? அதோடு அவர்கள் தயிர்கடையும்போது தயிர்ஒலி மட்டுமா கேட்கின்றது அவர்கள் அணிந்திருக்கக்கூடிய அணிகல்னகளும் கலகலவென்று எழுப்புகின்ற ஒலி கேட்கவில்லையா? என்கிறாள் ஆண்டாள்.

    அதிகாலையில் ஆயர்பாடியில் எழும்பும் ஒலிகைளை நமக்குக் காலைக் காட்சிகள் வழியே புலப்படுத்துகிறாள் ஆண்டாள்.

    ”கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
     காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
     ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?            (திருப்.7)

வழக்காற்றுநடை

    பாவை நோன்பிற்காக தோழிகளை அழைக்கின்றாள் ஆண்டாள்.  ஒரு தோழியின் வீட்டு வாசலில் சென்று அழைக்கும்போது எவ்வித பதிலும் இல்லை.  உடனே உரிமையாக அத்தோழியின் அம்மாவிடமே கேட்கிறாள். மாமி உங்கள் பிள்ளையை எழுப்புங்கள் என்கிறாள்.!  மேலும் மாமி என்றழைத்ததால் உறவுப் பெண்ணாகிவிட்டாள்.  எனவே கேலியோடு, அப்பெண் பதில் பேசாததால் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ? என்றெல்லாம் கேட்கிறாள் ஆண்டாள்.  எதற்கும் பதில் இல்லாததால், மாமியிடமே உன் மகள் ஏதேனும் மந்திரவயப்பட்டாளோ என்ற ஒரு பய உணர்வையும் உண்டாக்குகின்றாள்.  இனி ஆண்டாள் எழுப்பத் தேவையில்லை பயத்தில் தாயே தன் மகளை எழுப்பிவிடுவாள்.

    ”மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
     ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
     ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?             (திருப்.9)

என்கிறாள்.

சொல்லாட்சி

    “மொழியின் இன்றியமையாத கூறு சொல்லாகும். சொற்களே உலகிலுள்ள பொருள்களையும் மனித எண்ணங்களையும் விரிக்க உதவுகின்றன.  “சூழ்நிலைகளின் தன்மையையும் உணர்ச்சி ஆழ்மையையும் உருவாக்கக் கவிஞன் சொற்களைக் கூர்மையாகவும் தெளிவாகவும் பயன்படுத்துவான்.  சொல்லை ஆய்ந்து பயன்படுத்துவதே சொல்லாட்சி என்பதாம்“ என்பார் இரா. வ.கமலக்கண்ணன்.  (இரா.வ.கமலக்கண்ணன், உலகப் பெருங்கவிஞர் கம்பன். ப.313)

    தோழிகளோடு நந்தகோபனுடைய கோயில்வாசலைச் சென்றடைகின்றாள் ஆண்டாள்.  அங்கு கண்ணனை எழுப்புவதற்காக சென்ற ஆண்டாளை வாயிற்காப்போன் தடுக்கிறான்.  பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது முன் அனுமதிபெற்றுச் செல்வதுதானே முறை என்று கூறி கண்ணனைச் சென்று பார்க்கவிடாமல் வாயிற்காப்போன் தடுக்கிறான்.  அதற்கு ஆண்டாள்,

    ”மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
     துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
     வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
     நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்”            (திருப்.16)

என்கிறாள்.  மேலும் ஆண்டாள் கண்ணன் நேற்றே எங்களுக்கு வாக்கு கொடுத்தான். எப்படியெனில், நாளை இங்கு வாருங்கள் பறை தருகிறேன் என்று அதனால் நாங்கள் அனைவரும் தூய்மையாக வந்துள்ளோம்.முதன்முதலாக கண்ணனைப் பார்க்க வந்துள்ளோம்.  தயவுசெய்து தடுக்காதீர்கள்! தங்களது வாயால் “மாட்டேன்“ என்று கூறாதீர்கள் என்று வாயிற்காப்போனிடம் பரிந்து கூறுகிறாள் ஆண்டாள்.   மேலும் கதவுகள் மூடியிருக்கும் காட்சி ஆண்டாளுக்கு இருகதவுகள் ஒன்றோடொன்று நேசம் கொண்டு பிணைந்துள்ளது போல் உள்ளதாம்.  அதனால் கதவுகளின் நேசத்தை நீக்கினால்தான் ஆண்டாளின் நேயத்தை கண்ணனிடம் தெரிவிக்க முடியும்.  எனவே,
மரக்கதவம், மணிக்கதவம் என்பதெல்லாம் போய், “நேயநிலைக்கதவம்“ என்ற புதிய சொல்லாடலைப்  பயன்படுத்துகிறாள் ஆண்டாள்.

“ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
     புங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப”    (திருப்.3)

இப்பாசுரத்தில்,  புள்ளிகள் நிறைந்த வண்டினைக் குறிப்பதற்கு “ பொறிவண்டு“ என்ற  சொல்லாட்சியைப் பய்படுத்துகிறாள் ஆண்டாள்.

உரையாடல்நடை
    
                இப்பாசுரம் ஓர் அழகிய உரையாடல் நடையைக் கொண்டது.  எழுப்பும் தோழிக்கும்  எழுப்பப்படும் தோழிக்குமான இயல்பானதொரு உரையாடல்தன்மையைக் காணலாம்.  பொதுவாக உறக்கத்தில் நம்மை யாராவது எழுப்பிக்கொண்டேயிருந்தால், சும்மா தொணதொணக்காதே என்போம்.  மேலும், எல்லோரும் வந்துவிட்டார்களா?  முதலில் அவர்கள் வரட்டும் பின் நான் வருகிறேன் என்போம்.  இந்த எதார்த்தத்தை ஆண்டாள் தமது பாசுத்தில் அப்படியே பதிவுசெய்கிறாள்.

    ”எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
     சில்லெனன்று அழையேன்மின்! நங்கைமீர் போதருகின்றேன்
     வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
     வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
     ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
     எல்லோரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்”    (திருப்.15)

பாவை நோன்பிற்காக ஒரு தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள்.  அதற்கு அவள் சும்மா கூவிக்கொண்டே இருக்காதீர்கள்.  இதோ! வருகிறேன் என்கிறாள்.  அதற்கு மற்ற தோழிகள் எல்லாம் உன்னுடைய வார்த்தை ஜாலம் எங்களுக்குத் தெரியும்.  சாமர்த்தியசாலி நீ என்கிறார்கள்.  உடன் அவளும் , நானே சாமர்த்தியசாலியாக இருந்துவிட்டுப்போகிறேன்.  மற்றவர்கள் எல்லோரும் வந்துவி்ட்டார்களா? என்கிறாள்.  அதற்கு அவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள் நீ வேண்டுமென்றால் வந்து எண்ணிக்கொள் என்கிறார்கள்.  நடைமுறையில் பெண்களிடம் காணப்படும் இயல்பான பேச்சுவழக்கினை அழகிய நாடகப்பாங்கில் பதிவு செய்துள்ளார் ஆண்டாள்.

கற்பனை நடை

    ஆண்டாளின் கற்பனாசக்திக்கு அளவேயில்லை. சிறு பெண்ணான ஆண்டாள், காட்டில் வாழும் சிங்கத்தை உருவகப்படுத்துவது  நம்மை வியப்படையச்செய்கின்றது.  மழைக்காலத்தில் குகையில் உறங்கிக்கிடந்து கண்விழித்து சிலிர்த்து நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நடந்து வரும் சிங்கத்தை அப்படியே நம் மனத்திரையில் காட்சிப்படுத்துகிறாள் ஆண்டாள்.

    ”மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
     வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்நது முழங்கிப் புறப்பட்டு”            (திருப்.23)

என்பதில், ஆயர்குலப்பெண்கள் கண்ணனிடம் பறை வேண்டிச் செல்கின்றனர்.  அப்பொழுது கண்ணன் உடனே எழுந்து வந்துவிடக்கூடாது.  கண்ணனது வரவு எப்படி இருக்க வேண்டும் என்று வருணிக்கிறாள் ஆண்டாள். அதாவது    
 மழைக்காலத்தில் குகையில் படுத்துறங்கும் சீரிய சிங்கம் உறக்கம் களைந்து விழித்தெழுந்து தீப்பொறி பறக்க நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்துவிட்டு பிடரி மயிரினை சிலிர்த்து மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படுவதுபோல் கண்ணனும் தம்முடைய உறக்கத்திலிருந்து எழுந்து சிங்கம் போல் கம்பீரமாக நடைபயின்று கோப்புடைய சீரிய சிம்மானத்தில் அமர்ந்து  தம்மை நாடி வந்த ஆயர்குலப்பெண்களிடம் அவர்கள் வந்த காரியத்தை ஆராய்ந்தறிந்து அவர்களுக்குப் பறை தந்து அருள் பாலிக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

    ”சொற்களைக் கேட்கும்போது அச்சொல்  செவி என்னும் பொறிவழிச் சென்று பொருளை உணர்த்தி அப்பொருளுடன் தொடர்புடைய உணர்ச்சியையும் நமக்கு ஊட்டுகிறது.  சொற்கள் ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொணர்ந்து, அந்தச் சம்பவத்தைச் சுற்றிக் கற்பனையில் பின்னி, அப்பின்னலின் மூலம் உணர்ச்சியை உண்டாக்குகின்றன.

                    (அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக்கலை, ப.177)

வர்ணனைநடை

    “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து
    ஆம்பல் வாய் கூவினகாண்“         (திருப்.14)

இப்பாசுரத்தில்,  அதிகாலைப்பொழுதில் மலர்கின்ற செங்கழுநீர் மலர்கள் வாய் நெகிழ்ந்து மலர்ந்தன.  அதேசமயம் மாலையில் மலர்ந்து காலையில் சுருங்கும் ஆம்பல் கரு நெய்தல் மலர்கள் காலைப்பொழுதில் கூம்பின.  உன் வீட்டுத் தடாகத்தில்  மலர்ந்திருக்கும் செங்கழுநீர் மலர்களே விடிகாலைப் பொழுதுக்குச் சாட்சி என்கிறாள் ஆண்டாள்.

     “ஆண்டாளும்  மற்ற தோழிகளும்  ஒருத்தியைப்  பாவை நோன்பிற்கு எழுப்புகிறார்கள். அப்பெண்ணை அழைக்கச் செல்லும்போது செங்கழுநீர் மலர்கள் மலர்வது போல் மலர்ந்த முகத்தோடு   செல்கிறார்கள். அப்பெண் எழுந்து வராமல் இருப்பதைப் பார்த்து ஆண்டாளும் தோழிகளும் ஆம்பல் போல  முகம் வாடிவிட்டார்கள் என்கிறார் உரையாசிரியர் பெரியவாச்சான்பிள்ளை.”.  

இயல்புநடை

    “மூடநெய் பெய்து முழங்கை வழிவார
     கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”        (திருப்.27)

    இப்பாசுரத்தில், பாவை நோன்பிற்குத் தோழிகளை அழைத்துச் சென்று, கண்ணனின் அருளைப்பெற்று பாவை நோன்பை வெற்றிகரமாக நிறைவு செய்கிறாள் ஆண்டாள்.  அச்சமயம் கண்ணன் அளித்த பரிசினை ஆயர்குலப்பெண்கள் அணிந்து   மகிழ்கிறார்கள்.  புத்தாடை ,  அணிகலன்கள் அணிந்து பின்னர் பால்சோற்றினை உண்கிறார்கள். அதுவும் எப்படி, சோற்றினை மூடும் அளவு நெய்யிட்டு உண்கிறார்கள்.  அப்படி உண்ணும்போது  நெய் முழங்கை வழியே வழிகின்றதாம்.   நாம் ஏதாவது பால், மோர்  தண்ணீர்  கையில் பருகும்போதுதான் முழங்கை வழியே வழியும். இங்கு பாற்சோறு சாப்பிடும்போதே வழிகின்றதாம். என்ன ஒரு அழகியல்!  முழங்கையில் பால் மட்டும் வழியவில்லை. மனதெல்லாம் அவர்களுக்குப் கண்ணன் மேல் கொண்ட பக்தியும் வழிகின்றது என்கிறாள் ஆண்டாள்.  மேலும்,  கூடியிருந்து சாப்பிடுவதாலும், கண்ணனின் அருள் கிட்டியதாலும் மனமும் வயிறும் குளிர்ந்து காணப்படுகின்றது என்கிறாள் ஆண்டாள்.  ”மனித அனுபவத்தையே மனிதனுக்கு எடுத்துச் சொன்னாலும் அழகான மொழியில், அழகான வடிவில் என்றென்றும் வாசித்தவனுடைய நெஞ்சவீட்டில் உலவித் திரியும்படி செய்யவல்ல ஆற்றல் கவிதைக்கு  வாய்த்திருப்பதால் அதை நாம் பாராட்டுகிறோம் “. என்ற பேராசிரியர் ஆ.முத்துசிவன் அவர்களின் கூற்று நினைவு கூரத்தக்கது.

நிறைவுரை

    அழகியல் திறனாய்வு வாயிலாக  இலக்கியத்தை அழகுடையது, அழகற்றது என்றும் சுவையுடையது, சுவையற்றது என்றும் உணரமுடிகின்றது.  இலக்கியப்டைப்பின் தனித்தபாணி, நாகரீகம், வடிவழகு ஆகியன குறித்து அறியமுடிகின்றது.  மனித வாழக்கை என்பது அதிக அளவிலான அழகியல் கூறுகளைக் கொண்டது. அவற்றுள்  பக்தி, வழிபாடு, நம்பிக்கை, மகிழ்வு, அன்பு, துயரம், பரிவு, நகைச்சுவை ஆகியன எவ்வாறு ஒரு படைப்பில் வெளிப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது.  அவ்வகையில் இக்கட்டுரை வாயிலாக  ஆண்டாள் பாவை நோன்பிற்காகத் தமது தோழிகளை அழைத்தல், விடியலை அறிவித்தல், இயற்கைப்பொழுதினை வருணித்தல், கண்ணனிடம் பறை வேண்டுதல்,  தோழிகளுடன் உரையாடுதல்,  கண்ணனின் சிறப்புகளை விளம்புதல் ஆகியவற்றிற்காக தமது பாசுரங்களில் கையாளப்படும்  உவமை, உருவகம், சொல்லாட்சி, கற்பனை, வருணனை, அவலம், இயல்பு போன்றவற்றில்   புலப்படும்  அழகியல் தன்மையை   உய்த்துணர முடிகின்றது.

துணை நின்ற நூல்கள்

    1.கமலக்கண்ணன், இரா.வ.    -    உலகப் பெருங்கவிஞர் கம்பன், மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை.
    2.கைலாசபதி,க.& இ.முருகையன்    கவிதைநயம், குமரன் புத்தக இல்லம், சென்னை.
    3.ஞானசம்பந்தன், அ.ச.        இன்றும் இனியும், பாரி நிலையம், சென்னை.
    4.ஞானசம்பந்தன், அ.ச.        இலக்கியக்கலை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    5.சொக்கலிங்கம்,ச.ந. (உ.ஆ.)    -    திருப்பாவை,  பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை,  சென்னை.
    6.நடராசன், தி.சு.            திறனாய்வுக்கலை, கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை.
    7.முத்துசிவன்,ஆ.            கவிதையும் வாழ்க்கையும், கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R