நேற்று இரவு 7.30 காட்சியாகப் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் சென்று TIFF திரையரங்கில் பார்த்தேன். சென்றவாரம் 'டிக்கற்' எடுத்திருந்தேன். மூன்றாவது வரிசையில்தான் இடம் கிடைத்திருந்தது. இன்று காட்சி 'ஹவுஸ் ஃபுல்'. எல்லோருக்கும் நன்கு பிடித்திருந்தது. மகள்மார் இருவரும் PS 2 பார்ப்பதற்கு இப்பொழுதே ஆர்வமாகவிருக்கின்றார்கள். படம் பார்க்க முன் வந்தியத்தேவன் வேடத்திற்கு கார்த்தி எவ்விதம் பொருந்துவார் என்பதில் சந்தேகமிருந்தது. படம் பார்த்த பின்னர் என் முடிவை மாற்றிக்கொள்ளும் வகையில் கார்த்தியை வந்தியத்தேவனாக மாற்றுவதில் இயக்குநர் மணிரத்தினம் வெற்றியடைந்திருக்கின்றார் என்றே கூறுவேன்.
குந்தவை - த்ரிஷா, நந்தினி - ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலன் - விக்ரம், அருண்மொழிவர்மன் - ஜெயம் ரவி, ஆழ்வார்க்கடியான் - ஜெயராம், வானதி - சோபிதா துலிபாலா , பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார், சின்னப் பழுவேட்டரையர் - பார்த்திபன் என எல்லோரும் சிறப்பாக , பாத்திரங்களின் ஆளுமையினை உள்வாங்கி நடித்திருக்கின்றார்கள். இனி குந்தவையென்றால் த்ரிஷா, நந்தினி என்றால் ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலன் என்றால் விக்ரம், வந்தியத்தேவனென்றால் கார்த்தி போன்றோர்தாம் நினைவுக்கு வருவார்கள். இவர்களில் பாத்திரமாக மாறி விட்டதில் முதலிடத்திலிருப்பவர் நடிகர் ஜெயராம். நடிகர் ஜெயராம் என்றே அடையாளம் காண முடியாத வகையில் ஆழ்வார்க்கடியானாக நடித்திருக்கின்றார்.
கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிப்பதுவோர் அனுபவம். திரையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனைப் பார்ப்பது இன்னுமோர் அனுபவம். ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, இசை எல்லாமே படத்துக்கு ஒத்துழைத்திருக்கின்றன. பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதுவது மிகவும் இலகுவானதாகவிருந்திருக்கும்.
சுமார் மூன்று மணி திரைப்படத்தை நேரம் போவது தெரியாமல், கதையில் தொய்வில்லாமல் பார்க்க வைத்திருக்கின்றார்கள். நிச்சயம் திரையில் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று 'பொன்னியின் செல்வன் - பாகம் ஒன்று'.
TIFF (Toronto International Film Festival) திரையரங்கில் முதல் முறையாகத் திரைப்படம் பார்த்தேன். ஒலி, ஒளி எல்லாமே நன்கு அமைந்திருக்கும் திரையரங்கு என்று கூறலாம்.
முகநூல் எதிர்வினைகள்
Rajes Bala
Good review as not in to politics. Thank you
Ranjan Patkunam
ஜெயசித்திராவும் நடித்திருந்தார் !!
Giritharan Navaratnam
Ranjan Patkunam பிரபு, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றார்கள்.
Anthonymuthu Sinnapitchai
கடந்த 40 வருடங்களாக நானோ, எனது குடும்பத்தினரோ தியேட்டரில் படம் பார்த்து இல்லை. 2012ல் தமிழகத்தில் கரூரில் சிவாஜி படம் குடும்பத்தின் சகிதம் பார்த்ததேவே இறுதி யானதாகும். இந்த வாரத்தில் பேத்தி படிக்கும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்புடன் அழைத்து சென்று பார்த்துள்ளதும் வரும் சனிக்கிழமை 40 வருடங்களுக்கு பின்னர் குடும்பத்தினர் சகிதம் ஊர் தியேட்டரில் பார்ப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். எமது ஊரில் தமிழ் படங்கள் வெளியிட 1978ல் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மூலம் நானே நடவடிக்கை எடுக்கப்பட்டதும், திருமணத்திற்கு பிறகு நாம் ஊர் தியேட்டரில் படம் பார்த்து இல்லை. இவ்வாரம் பார்ப்போம்
Sathiaseelan Ponnuthurai
இனிமேல் புதிதாக பிறக்கும் தமது குழந்தைகளுக்கு "பொன்னியின் செல்வன்" கதாபாத்திரஙகளின் பெயர்களை சூட்டுவார்கள் என்று நம்பலாமா கிரி!
Giritharan Navaratnam
Sathiaseelan Ponnuthurai நிச்சயம் எதிர்பார்க்கலாம். இன்றைய தலைமுறையும் மிகுந்த ஆர்வத்துடன், தேடலுடன் பார்க்கும் திரைப்படமாகப் பொன்னியின் செல்வன் இருப்பதால் நிச்சயம் இதனை எதிர்பார்க்கலாம்.
Yogananthan Kanakasooriyam
அருமை
Jeya Pathmananthan
நல்ல விமர்சனம் எந்த அரசியல் பார்வையும் இல்லாமல் நன்றி பதிவுக்கு
Devaki Sivananth
Great article.
பொன்னியின் செல்வன் ஓவியர் வேதாவின் ஓவியங்களுடன்..
பொன்னியின் செல்வன் நாவல் அண்மையில் (2014) ஓவியர் வேதாவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானபோது ,ஏற்கனவே என் பால்யகாலத்தில் நான் 'பைண்டு'செய்து வைத்திருந்த பொன்னியின் செல்வனை இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இழந்து விட்டிருந்ததால் கல்கி இதழை அத்தொடர் முடியும் வரையில் வாங்கினேன். தொடர் முடிந்ததும் அத்தியாயங்களைச் சேகரித்து ஐந்து பாகங்களையும் என் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். இத்தொடருக்கு ஓவியங்கள் வரைந்திருந்த ஓவியர் வேதாவின் ஓவியங்களை வண்ணத்தில் கல்கி நிறுவனம் பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் வெளியான ஓவியர் வேதாவின் ஓவியங்கள் சில.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.