முன்னுரை
கல்வி அறிவின் கண் சிறந்து விளங்கும் பெண்பாற்புலவர்கள் அகப்பாடல்களில் மிகுதிபட பெண்மையின் மனஉணர்வினை எடுத்தியம்புவதில் ஆணிவேராகத் திகழ்ந்துள்ளனர் என்றால் மிகையாகாது. பெரும்பான்மை ஆண்களை விட பெண்களே அதிகஅளவில் பாதிப்படைவதுண்டு. ஆண்கள் தனது மனவுணர்வுகளை எளிதில் எடுத்துரைப்பது இல்லை. ஆனால் பெண்ணினமோ மனச்சுமை குறைய பிறரிடம் புலம்பி ஆறுதல் அடைவர். தன்னம்பிக்கை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் இளகும் பண்புள்ளம் பெண்ணினத்திற்கே உரியதாகும். சங்ககாலத்தில் தலைவி தலைவனது பிரிவை எண்ணி வருந்தும் தவிப்பினை ஒரு பெண்ணாக உள்ளுணர்ந்து புலவர்கள் பாடியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். குறிப்பாக, நற்றிணைப் பாடலைப் பாடிய பெண்பாற்புலவருள் சுமார் 21க்கு மேற்பட்டோர் தன்னிலை எண்ணிப் பாடிய பாங்கினை அறியலாம். அதாவது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் துயரினை வேறொரு பெண் அறிந்து தான் அடைந்த துயராகக் கருதி வெளிப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் நற்றிணைப் பாடல் வழிக் காண்போமா.
பொழுது கண்டு புலத்தல்
காலமாகிய பருவம் கண்டு தனிமையில் வருந்துதல் இருபாலாருக்கும் பொதுவான ஒன்றாகும். அக்காலத்தில் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வாராமையால் தலைவி தனிமையில் ஏங்கி வருந்துவாள். பொழுது (பிரிவு) கண்டு பொறுத்துக் கொள்ளாத தலைவி அவனை நினைத்து மனவேதனைக்கு ஆட்படுகின்றாள். தலைவனது நினைவில் உணவின்றி, உறக்கமின்றி துன்புறும் காட்சியினை நிறைய சங்கப்பாடல்கள் பதிவுசெய்துள்ளன. உதாரணமாக, வறண்ட பாலை நிலத்தில் பொருள்வயிற் பிரிந்தோனை எண்ணி புலம்பும் காட்சியை நல்வெள்ளியார் தன் மனஉணர்வோடு இயைத்து பின்வருமாறு பாடுகிறார்.
“சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல்அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்...
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை,
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்...” (நற்.7)
இப்பாடல்வழி மழை பெய்து பெருகிய வெள்ளநீரைக் கண்டால் தலைவன் விரைந்து அருள் புரிவான் எனத் தோழி ஆற்றுவிக்கின்றாள். அதாவது மழையால் சுனைகள் நிரம்பி, அருவிகள் ஆரவாரிக்கவும், காட்டாறு கரை புரள, இடியோடு மின்னல் முழங்கிட கானகமே அச்சத்துடன் காட்சியளித்தது. மழையின் வளமையால் தாவரங்கள் செழிப்படைந்து உயிரினங்களுக்கு மகிழ்வூட்டின. உதாரணமாக கானகத்தில் கிட்டிய வெண்ணெல்லை உண்ட யானைகள் மலைப்பக்கம் துன்பமின்றி துயின்றது. அதைப் போன்று தலைவி தான் விரும்பியவரைக் கண்டு இன்பம்அடைய தனிமையில் புலம்பும் உணர்வினை இப்பாடல் புலப்படுத்துகின்றது. அன்பின் பிணைப்பு உள்ளக் குமுறலாக இருந்தாலும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் தலைவியின் உள்ளுணர்வு இப்பாடலில் அருமையாக வெளிப்படுகிறது.
புணர்ச்சி நீங்கியமை கண்டு புலத்தல்
பகற்குறியின்கண் தலைவன் தலைவியைச் சந்தித்து நீங்குவது வழக்கமாகும். எவரும் அறியா வண்ணம் புணர்ந்து நீங்கி பிரியும் கிழவோனை எண்ணி கிழத்தி வருந்திப் புலம்புவதுண்டு. அங்ஙனம் துயரும் தலைவியின் மனவேதனை அறிந்து தோழி தலைவனைப் பிரியாவண்ணம் தடுத்து செலவழுங்குவாள். தலைவியின் அருமைகளையும், அவள் படும் துன்பத்தினையும் எடுத்துக் கூறி வரைந்து கொள்ளத் தூண்டுவாள். இக்கருத்தினை நற்றிணையில்,
“இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின். இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!” (நற். 19)
என்று நக்கண்ணையார் பாடுகிறார். இங்கு தலைவன் புணர்ந்து நீங்கி பாகனோடு, தேரேறி ஊருக்குச் செல்லும் காட்சியினைத் தலைவி கண்டால் உயிர் வாழ மாட்டாள் என்று தோழி செலவுஅழுங்குவிக்கிறாள். உடல்வலிமை குன்றி உயிர் துறப்பு ஏற்படும் நிலை தலைவி அடையக்கூடும் என்பதை மறைமுகமாக தோழி எடுத்தியம்புகிறாள்.
மற்றொரு பாடலில் தலைவி, தலைனுடன் சேர்ந்த பொழுது அழகு மிகுந்தும், பிரிந்த காலத்து பசப்பு தோன்றி மேனிநலம் சிதைவுற்றது. காரணம் காமநோய் வெளிப்படும் வண்ணம் வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகும் தலைவனது நினைவில் ஏங்கி தவிக்கும் தனிமையே எனலாம். இக்கூற்றை,
“புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை......” (நற். 304)
என்ற பாடல் வழி சுட்டுகின்றது. இங்கு பிரிவினால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படும் என்பது உறுதி. அவனது நினைத்து ஏங்கும் ஆதங்கம் மீண்டு வருகையால் மகிழலாம் என்ற துடிப்பும் பெண்மை விரும்புகின்றது. வாய்விட்டு தனது உணர்ச்சிகளைக் கூறாது உடல்மொழி வாயிலாக பெண்கள் வெளிப்படுத்துவது கருத்து பரிமாற்றத்தின் வெளிப்பாடாகும்.
மேனி மாறுபாடு
மனஅழுத்தம் காரணமாக உடல்வேறுபாடுகள் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும். இருபாலாரும் மனவேதனைக்கு ஆட்படுகையில் உடல் இளைத்தல், சருமங்கள் நிறமாறுதல் போன்ற நோய்தாக்கங்கள் ஏற்படுவதுண்டு. பண்டைய காலத்தில் தலைவனால் இன்பந் துய்க்கப் பெற்ற தலைவி நீண்டநாள் பிரிந்தமையால் வாடுகிறாள். அவளது மாற்றம் கண்ட தாய் மகளுக்கு வெறியாட்டு நிகழ்த்த முற்படுகிறாள். இதனை “முருகயர்தல்” என்று சங்கஇலக்கியம் குறிப்பிடுகின்றது. குறிசொல்லும் முதுவாய் பெண்டீரிடம் தனது மகளின் அழகு மீண்டும் சிறக்க இவ்வெறியாட்டுவிழாவனது நடத்துப்பெறுவதுண்டு. கையில் வேலுடன் ஆடுகளை அறுத்து ஊர்தோறும் விழாவாகக் கொண்டாடுவர். காமநோய் மிகுதியால் ஏற்பட்ட உடல்மாறுபாடு என்றும் மாறாது என்பதை நல்வெள்ளியார் தமது பாடலில் அழகாகப் பாடியுள்ளார்.
“ ............வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
அன்னை அயரும் முருகு நின்
பொன்நேர் பசலைக்கு உதவாமாறே?” (நற். 47)
இங்கு பசலை மறையாமல் ஏற்பட்டதற்குக் காரணம் தலைவனே , வேலன் அல்ல என்பதை தாய் அறியவில்லை. மறியறுத்து வெறியாட்டு நிகழ்த்துவதால் நோய்க்கு மருந்தாகாது எனத் தோழி அறிந்து சிறைப்புறமாக உள்ள தலைவனுக்கு வெறியாட்டு குறித்து உணர்த்துகின்றாள். ஆகையால் விரைந்து திருமணம் செய்தால் தலைவியின் அழகுநலன் பாதுகாக்கப்படும் என்பது திண்ணம். இதே கருத்தினை,
“ மறிக்குர லறுத்துத் தினைப் பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்கு மருந் தாகாது.” 1 (குறுந்.263)
என்ற குறுந்தொகைப் பாடல் வழி மொழிகின்றது.
வாழ்வியல் உண்மை
வாழ்க்கை என்பது பல்வேறு கோணங்கள் நிரம்பிய ஒன்றாகும். பொருள் இல்லார்க்கு இ்வ்வுலகமே இல்லை என்பதை உணர்ந்தே தான் வினையே ஆடவர்க்கு உயிர் என்றனர். பொருள் தேடல் வாழ்க்கைக்குச் சிறந்தது என்பதை உணர்ந்து ஆண்களும் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றனர். இருப்பினும் கூடி வாழ்தலே உன்னதமான பேரின்பம் என்ற வாழ்வியல் உண்மைகளை காமக்கணிப் பசலையார் தமது பாடலில் பின்வருமாறு உணர்த்துகிறார். அவைதாம்,
“ ...........பூங்கண் இருங்குயில்
“கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர்! என
கையறத் துறப்போர்க் கழவறு போல....
இன்னாது ஆகிய காலை பொருள் வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?” (நற். 243)
இப்பாடல் வழி சூதாட்டக்கருவி போல வாழ்க்கையில் பொருள் நிலையில்லாதது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார். அன்புள்ளம் கொண்ட காதலர் பிரியாது புணர்ந்து இன்புற வாழ்தலே நலம் பயக்கும் என்பதை குயிலின் குரலோசையோடு உவமித்து எடுத்துரைப்பர். இங்கு இளவேனில் பொழுதில் காதலர் இணைந்து வாழ்தலே சிறந்த அறமாகும் என்பது வெளிப்படை. இதே கருத்தினை,
“புணர்ந்தீர் புணர்மினோ” என்ன இணர்மிசைச்
செங்கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று.............” (நற். 224)
என்று பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பெண்ணின் மனவேதனையை உள்ளுணர்ந்து வெளிப்படுத்தி உள்ளார்.
இற்செறிப்பு
தலைவியை அவளது தாய் இல்லத்தில் கட்டுப்படுத்தி வைப்பதே இற்செறிப்பாகும். அச்சமயத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்க முடியாது. தோழி தலைவனிடம் சூழ்நிலையைக் கூறி வரைந்து கொள்ளத் தூண்டுவாள். ஔவையார் பாடலில் ஒரு தலைவி தாயால் இற்செறிக்கப்பட்டு எதிராக கலகக்குரல் எழுப்பிய செயலைப் பின்வருமாறு அறியலாம்.
“.....தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அருங் கடி அயர்ந்தனள் காப்பே ......
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ! முதிர்கம் யாமே” (நற். 295)
என்பதில் நாட்பட்ட கள் வீணாகி அழிவதைப் போன்று தலைவி இல்லத்தின் கண் இருந்து முதிர்ந்து மடிவாள் என்று தலைவனுக்குத் தோழி அறிவுறுத்துகின்றாள். நொதுமலர் வரைவிற்கு உடன்படாமல் தலைவனை வரைதல் வேண்டி தோழி வற்புறுத்துகின்றாள். தாயின் அறியா தன்மைக்கு எதிராக மகளது கலகக்குரல் ஓங்கி நிற்கும் புதுமை இப்பாடலில் அறியமுடிகின்றது.
பிரிவின் உச்சநிலை
காமம் மிகுந்து முளை விட்டு மரமாக வளர்வதற்குள் தலைன் தலைவியை மணம் முடித்தல் சிறப்பாகும். முதற்பொருளாகிய பொழுது கண்டு தலைவி தனித்து வாடுவதுண்டு. மழைபொழியும் கார்காலம் இயற்கை வளத்தினைச் செழிப்புறச் செய்வதால் அதைக் கண்டு தலைவியின் துன்பநிலை இன்னும் மிகுதிபடுகின்றது. இச்சூழலில் தலைவியின் துயரைப் போக்குதல் தலைவனது கடமை ஆகும். ஔவையார் பாடலில் வினை முற்றி மீண்ட தலைமகன் தேரை விரைந்து செலுத்திவரும் காட்சி இதோ,
“ பெயல் தொடங்கினவே பெய்ய வானம்
நிழல் திகழ சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்...” (நற். 371)
இங்கு மழைப்பொழிவு கண்டு ஆற்றாது தலைவி அழத்தொடங்குகின்றாள். கைவளை நெகிழ்தலோடு மாலைக்காலத்தில் கோவலரின் குரலோசை தனிமைத் துயரை மேலும் வதைக்கின்றது. இனிய இல்லற வாழ்க்கை அமையப் பொறுமையோடு காத்தல் நற்பலன் கிட்டும் என்பர். இருப்பினும் தலைவி ஆற்றாது ஈருடல் ஓருயிராய் இன்பம் காண விழைதல் உச்சத்தின் வெளிப்பாடாகும்.
பிறிதொரு பாடலில் தலைவனைப் பிரிந்து தான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் கண்டு தலைவி உள்ளத்தால் நடுங்குவதை,
“ அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும் பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்...” (நற். 381)
என்ற பாடலடி சித்திரிக்கின்றது. இங்கு பெண்மையின் நெஞ்சம் வாழ்விற்கும், காமத்திற்கும் இடையே போராடும் உச்சகட்ட வெளிப்பாட்டினை சித்திரிக்கின்றது.
கனவுநிலை- நனவிலி மனம்
மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் நனவிலி மனம் என்கிறோம். உள்மனத்தில் இருக்கும் ஆசையின் தாக்கம் அடக்கமுடியாமல் கனவாக வெளிப்படும். அந்த வகையில் பொருள் காரணமாகப் பிரிந்தோனை எண்ணி தலைவி மனம் தவிக்கின்றது. தனது இச்சைகளை மறைத்து வைக்க முடியாமையால் கனவுகாண்கிறாள். உணா்ச்சிகளை எடுத்துரைப்பது பெண்மைக்கு அழகன்று. இருப்பினும் தன் கருத்தினைத் தலைவன் அறிந்து தன்னோடு இணைய பெண்ணுள்ளம் ஆசைகொள்கின்றது. இக்கூற்றினை.
“நெல்லி அம் புளிச் சுகை் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே- தோழி!...” (நற்.87)
என்ற பாடலடியில் வௌவால் பழுமரம் தேடி கனவொடு மயங்கி உறைவதைப் போல தலைவி பகலில் தலைவனோடு கூடி இன்புறுவதாகக் கனவு காண்கிறாள். நனவில் தலைவனோடு முயங்கி பெற இயலாத இன்பத்தைக் கனவில் கண்டு ஆறுதல் அடைகின்றாள். புணர்ச்சி இன்பம் கனவாய் முடிவடைவதால் மனம் நனவுநிலைத் தேடி அலைவது ஆழ்மன உணர்ச்சியின் எதார்த்தமாகும். இதே கருத்தினை வள்ளுவர்,
“துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.” 2 (குறள். 1218)
என்பர். கலவி விட்டு மறையும் போது நெஞ்சம் கடுமையாகப் பாதிப்படைந்து கனவிலாவது இன்பமடையத் துடிக்கின்றது. இதுவும் ஓர் ஆழ்மன உளவியல் எனலாம்.
முடிவுரை
இங்ஙனம், பெண்கள் தன் வேட்கையை வெளிப்படையாக உணர்த்துவது என்பது இயலாத ஒன்றாகும். இருப்பினும் ஆழ்மனத்தில் தோன்றிய விருப்பங்களை நிறைவேற்ற பெண்ணுள்ளம் போராடுகின்றது. இல்லறத்தின் அருமை கருதி , ஆசைகள் கட்டுப்பட்டு முடக்கப்படுகின்றன. சில வேளையில் உள்ளுணர்ச்சியின் வேகம் அதிகரிக்க, காலமாற்றமும் தன்னிலை மறந்து புலம்பி வருந்துகின்றது பெண்மை. தலைவனை எண்ணி உள்ளம் ஏமாறி பெருந்தவிப்பு ஏற்படக்கூடும் என்பதைப் பெண்பாற் புலவரின் பாடல் வழிமொழிகின்றது. இருமனங்கள் இணைந்தால்தான் இல்லறம், பொருள், இன்பத்தோடு நிலைத்து தழைக்கும் என்ற உண்மை நற்றிணைப் பாடல் நிறுவுகின்றது. ஆணினத்திற்கு நிகராக பெண்மை தனது மனஆளுமையை சித்திரிப்பது சிறந்த பெண்சாதனையாளர் என்ற நற்பேறு புலவருக்கு அளிப்பதில் தவறில்லை.
துணைநூற்பட்டியல்
1. முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியன் (உ.ஆ), நற்றிணை மூலமும் உரையும் - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை- 98. மூன்றாம் பதிப்பு- 2007.
2. பொ. வே. சோம சுந்தரனார், (உ.ஆ) குறுந்தொகை- திருநெல்வேலி தென்னிந்திய சை சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை- 2007.
3. மகேஸ்வரி, திருக்குறள் மூலமும், தெளிவுரையும் - மகேஸ்வரி ஆப்செட் காலண்டர்ஸ், சிவகாசி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.