ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)- மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எழில் இனப் பெருக்கம்
முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.