- எழுத்தாளர் – ஊடகவியலாளர் - சமூகச்செயற்பாட்டாளர் முருகபூபதிக்கு ஜுலை 13 இல் அகவை எழுபது! அதனையொட்டி வெளியாகும் கட்டுரையிது. முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகள் இணைய இதழும், வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். பதிவுகள் இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் அவருக்கு இத்தருணத்தில் நன்றியினையும் பதிவுகள் தெரிவித்துக்கொள்கின்றது. - பதிவுகள்.காம் -
இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் , 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13 ஆம் திகதி, காலைப்பொழுதில் நுரை தள்ளி கரை நனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்த அந்தத் தொடர்குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில் ஒரு ஆண்குழந்தை வெளியுலகை எட்டிப்பார்த்தது, தாயின் கர்ப்பத்தின் சூடு தணிந்து கடற்காற்றின் குளிர்மை தழுவியதால் 'வீல், வீல்' என்று அலறுகிறது. அதன் அழுகுரலோடு அருகே அமைந்த கோயில்களிலிருந்தும் புனித செபஸ்தியார் தேவாலயத்திலிருந்தும் மணியோசை கேட்கிறது. அந்தக்குழந்தையைப் பெற்ற தாயின் தந்தையான தாத்தா, பேரன் பிறந்துவிட்டான் என்பதை பறைசாற்ற, வீட்டின் கூரையில் ஏறித் தட்டும் அதிசயமும் நடக்கிறது. அது அவரது குடும்பப்பின்னணியின் மரபார்ந்த பண்பாட்டுக்கோலம். அந்த ஒலி அயல்வீடுகளுக்கும் கேட்கிறது. அன்று அந்த வீட்டில் பிறந்த குழந்தையின் குரல் பின்னாளில் உலகெங்கும் கேட்கும் என்றோ, அதன் தாத்தா கூரையைத்தட்டி எழுப்பிய பேரோசை போன்று தாயகம் கடந்தும் செல்லும் என்றோ, அந்தத் தாத்தா உட்பட அதனது பெற்றோரும் உற்றார் உறவினரும் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்கள்!
ஆனால், அதுதான் 70 வயதை அக்குழந்தை அண்மிக்கும்போது சாத்தியமானது என்பதை கடந்த 09 ஆம் திகதி சமகால கொரோனோ நெருக்கடிக்கு மத்தியில் நடந்த இணையவெளி காணொளி அரங்கின் ஊடாக நாம் அறிந்தபோது, அக்காட்சியை காண்பதற்கு இன்று இலக்கிய ஆளுமையாக வளர்ந்துள்ள அன்றைய அக்குழந்தையின் பெற்றோரோ, தாத்தா – பாட்டியோ இந்த உலகில் இல்லை.
ஆனால், அவர்களையும் நினைவுகூர்ந்து, அவர்களால் புடமிட்டு வளர்க்கப்பட்ட ஒரு சாதாரண மனிதன் தான் அவர் என்று அவரே தனது வாக்குமூலமாக கூறியபோது, அவர் குறித்து மேலும் தேடலில் ஈடுபட்டதனால் விளைந்த பதிவுதான் இது.
இத்தனைக்கும் அவரை நான் இதுவரையில் நேரில் சந்தித்ததில்லை. அவர் எழுதிய பதிவுகள், படைப்புகள் ஊடாகவே அவரை அறிந்தேன். அவரது 70 வயது அகவையின்போது, முருகபூபதி என்ற எழுத்தாளரை, ஊடகவியலாளரை, சமூகச்செயற்பாட்டாளரைப் பற்றி நான் பெற்ற தேடலிலிருந்து இந்தப் பதிவை எழுதத் தொடங்குகின்றேன்.
அதற்கு முன்னர் என்னைப்பற்றிய சுருக்கமான அறிமுகம். கிழக்கிலங்கையைச்சேர்ந்த எனது பெயர் கிறிஸ்ரி நல்லரெத்தினம். எனது மாமனார் இலங்கையில் பிரபலமான ஓவியர் - கேலிச்சித்திரக்காரர். அவரது பெயர் செளந்தரராஜன். “ செள “ என்ற பெயரில் ஓவியங்களும் கேலிச்சித்திரங்களும் வரைந்தவர். ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகள் எஸ்.பொ. மஹாகவி உருத்திரமூர்த்தி முதலானவர்களின் படைப்புகளுக்கும் கொழும்பில் இளம்பிறை அச்சகத்திலிருந்து வெளியான எம். ஏ. ரஃமானின் அரசு வெளியீடுகளிலும் ஓவியம் வரைந்தவர்.
அவரது வழித்தோன்றலான நானும் ஓவியத்துறையிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடுகின்றேன். தற்பொழுது அவுஸ்திரேலியா மெல்பனில் வதிகின்றேன்.
இம்மாதம் தனது 70 வயது அகவையை அமைதியாக கொண்டாடும் முருகபூபதி பற்றி இங்கே நான் பெற்ற எண்ணப்பதிவுகளை அவரது பல வாக்குமூலங்களிலிருந்தே எழுதுகின்றேன்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அந்தக் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் ஒப்புவித்தாள் தாய். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்துவிட்டு அவரை மெதுவாக மீண்டும் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார். அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவர் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அவர் பிறந்த நீர்கொழும்பூரில் 1954 ஆம் ஆண்டு அவரது வீட்டருகே விஜயதசமி தினமன்று இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து இணைத்துக் கொள்ளப்பட்டார்! அவரது சேர்விலக்கம் : 1. இது அவரது முதலாம் ' முதல் ' !
வருடங்கள் உருண்டோடின .......
1975 ஆம் ஆண்டு இந்த இலக்கிய குழந்தையின் இருபத்தியொராவது பிறந்த நாள் பரிசாக அவர் எழுதிய 'கனவுகள் ஆயிரம்' எனும் முதல் சிறுகதை மல்லிகை இதழில் வெளிவந்தது. அவர் பிறந்த நெய்தல் மண்ணின் வாழ்வை சித்திரிக்கும் கதை இது. அவர் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அக்கதையை ஆயிரம் தடவைக்கு மேல் படித்ததாய் பின்னாளில் சொன்னார். இந்த முதல் சிறுகதையை உள்ளடக்கிய ' சுமையின் பங்காளிகள்' எனும் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு 1976 இல் இலங்கை தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
ஆம், இது அவரது இரண்டாம் 'முதல்'!
இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று அவர். அவரது சிறுகதைகளை முதலில் கண்டுகொள்ளாத வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் 1976 ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு தேசிய சாகித்திய விருது கிடைத்ததும் அவரது படத்துடன் செய்திகளை வெளியிட்டு தமக்கு கெளரவம் தேடிக்கொண்டன.
தனது முதல் சிறுகதையின் படைத்தலை இப்படி விவரிக்கிறார் :
"மல்லிகை ஆசிரியர் 1970-1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் கொழும்புக்கு வரும்பொழுது நீர்கொழும்பிலிருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக வருவார். அச்சமயங்களில் ஏற்கனவே இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர், மற்றும் செல்வரத்தினம், தருமலிங்கம், சந்திரமோகன், பவாணிராஜா, நிலாம் உட்பட பலர் அவரைச்சந்தித்து கலந்துரையாடுவார்கள்.
இச்சந்திப்புகள் பெரும்பாலும் நீர்கொழும்பு கடற்கரையில் இடம்பெறும். நானும் ஆர்வமுடன் கலந்துகொண்டு உரையாடுவேன். மல்லிகை ஜீவாவுடன் விவாதிப்பேன். அச்சமயம் ஜெயகாந்தனைப்பற்றி அவர் காரசாரமான விமர்சனக்கட்டுரைத்தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அத்தொடர் எமது கலந்துரையாடலில் விவாதப்பொருளாகும். எனது கருத்துக்களை கூர்ந்து அவதானித்த ஜீவா ஒருநாள், “ நிறைய விவாதிக்கிறீர். நீரும் எழுதலாமே” என்றார். அவர் தந்த உற்சாகத்தில் கனவு என்ற சிறுகதையை எழுதினேன். அச்சிறுகதை நீர்கொழும்பு பிரதேசத்தில் கடற்தொழிலை நம்பி வாழும் மக்களைப் பற்றியது. அதனை, செல்வரத்தினம் (இவர் தற்போது பிரான்ஸில் இணையத்தளம் நடத்துகிறார்) நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரிடமும் காண்பித்தேன. அதற்கு முன்னர் எமது பிரதேச மக்களின் பேச்சு மொழி வழக்கில் எவரும் படைப்பிலக்கியம் படைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட கனவு கதை மீனவ மாந்தரின் கனவுகளின் சித்திரிப்பாக அமைந்திருந்தமையால் 'அதனை எதற்கு அனுப்பவிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'மல்லிகைக்கு' எனச்சொல்லிவிட்டு தபாலில் அனுப்பினேன். கனவுகள் ஆயிரம் எனத்தலைப்பிட்டு ஜீவா அதனை மல்லிகை ஜூலை இதழில் பிரசுரித்தார்."
இவ் வெற்றிகள் சாதாரணமாய் அவரது மடியில் வந்து விழவில்லை. உழைப்பு... உழைப்பு.... உழைப்பு! வெற்றியின் இரகசியம் என்ன என்ற கேள்விக்கு அவர் சொன்ன விடை : “ ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் என்றைக்குமே தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமாைனது. அதுதான் அடிப்படை! அந்த 'முதல்' புது நூற்றாண்டிலும் தொடர்ந்தது ! 2001 இல் அவர் எழுதிய 'பறவைகள்' எனும் முதல் நாவலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்று கெளரவிக்கப்பட்டார்.
நாவலைப்பற்றி ஒரு விமர்சகர் இப்படிச் சொல்கிறார் :
"உறவுகளிடையே உள்ள ஆத்மார்த்தமான பந்தத்தையும் உறவுகளின் சிக்கல்களையும் இந்த நாவல் அழகுற காட்சிப்படுத்தியுள்ளது. இனப்போராட்டம், யுத்தம், அதனால் இடப்பெயர்வு, வர்க்க அரசியல், ஜாதி மற்றும் தீண்டாமை போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் இலங்கை தமிழ் மக்களின் இரண்டு சகாப்தத்திற்கு முந்தைய வாழ்வை படம்பிடிக்கிறது நாவல். நீர்கொழும்பை மையமாக வைத்து இயங்கும் இந்த நாவல், நம்மை நீர்கொழும்பில் ஒவ்வொரு வீதியிலும், கடற்கரையிலும், அங்குள்ள கோவில்களிலும் ஒரு மெய்யான தரிசனத்தைத் தருகிறது."
இது அவரது மூன்றாம் 'முதல்'!
இவர் 'முதல்' தரிசனத்தை பீடத்தில் வைத்துவிட்டு இந்த இலக்திய ஆளுமை நடந்து வந்த பாதையை சிறிது பார்ப்போமா?
வாயில் வெள்ளிக்கரண்டியுடனும் கையில் தங்கத் தட்டுடனும் பிறந்தவரல்லவா இவர். தான் கடந்து வந்த முள் பாதையை இப்படி ஒரு பேட்டியில் நனவிடை தோய்கிறார்:
"எனது அப்பா நான் பிறந்து சில வருடங்களில் எனது பெயரில் முருகன் லொட்ஜ் என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான வீதி பஸாரில் தொடங்கினார். அப்பா ஒரு பரோபகாரி. இரக்க சிந்தனையுள்ளவர். பசி என்று வந்தவர்களுக்கெல்லாம் பசிபோக்கியவர். அதனால் சற்று பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டவர். கடன் தொல்லைக்கும் ஆளானவர். சிறிது காலத்தில் அந்த சைவஹோடட் ல் நட்டத்தினால் மூடப்பட்டது. வீடு வறுமையில் வாடியது. அப்பா வேலை தேடி அலைந்தார்.
எங்கள் வீடும் வறுமைக்கோட்டில் இருந்தமையால், அதிகாலையே எனது அம்மா எழுந்து தோசை, இடியப்பம் தயாரித்து சட்ணி – சம்பலும் வைத்த கடகங்களுடன் பாட்டியையும் அக்காவையும் என்னையும் அனுப்பிவைப்பார். அந்த நெடிய கடற்கரையில் வந்து குவியும் கடற்றொழிலாளர்களின் காலைப்பசி போக்குவதற்காக ஏழு – எட்டு வயதில் அந்தத்தொழில் செய்துவிட்டு வந்துதான் பாடசாலைக்குச்சென்று வந்தேன்.
ஒரு தடவை கொப்பி புத்தகங்கள் வாங்குவதற்கு தவித்தபொழுது, அருகிலிருந்த செபஸ்தியார் தேவாலயத்தின் முன்றலில் எனது பாட்டி எனக்காக கடலை விற்றார்கள். நானும் அவர்களுடன் சென்று அதிகாலை ஒருமணிவரையில் அந்த தேவாலய முன்றலில் அமர்ந்தேன். எனக்கு பாடப்புத்தகம் வாங்குவதற்காகத்தான் பாட்டி கடலை அவித்தார்கள், விற்க வந்தார்கள் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவர்களது மடியில் நான் உறங்கிவிட்டேன். கடலை வியாபாரம் முடிந்து பாட்டி என்னை தட்டி எழுப்பி சொன்னார்கள், 'தம்பி உனக்கு புத்தகம் வாங்க காசு கிடைத்துவிட்டது'. எப்படி? என்று கேட்டேன். 'கடலை வித்தோமில்லையா' என்றார்கள் புன்முறுவலுடன் நான் பாட்டியை கட்டி அணைத்துக்கொண்டேன்!
இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுள்ளது. அதாவது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. எனக்கு பாடப்புத்தகம் வாங்க கையில் பணமில்லாதிருந்தது ஒரு பிரச்சினைதான். அதற்கான எளிமையான தீர்வு எனது அருமைப் பாட்டியிடமிருந்திருக்கிறது. அவர்கள் பாடசாலை சென்று படித்தவர் இல்லை. வெறும் கைநாட்டுத்தான். ஆனால், தனது பேரன் படிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். தீர்வுக்காக அழுது புலம்பிக்கொண்டிருக்கவில்லை. இயங்கினார்கள்! இந்த எளிய உண்மையை நான் காலம்கடந்து புரிந்துகொள்கின்றேன். இதுவே நான் அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்ததும் நம் தாய் நாட்டில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி செய்யும் வேட்கையுடன் நண்பர்களுடன் இணைந்து 'இலங்கை மாணவர் கல்வி நிதியம்' எனும் அமைப்பை 1988 இல் நிறுவ வித்திட்டது.
இத்தனை அல்லல்களுக்கிடையில் படித்து புலமைப்பரிசில் பெற்று, யாழ் மண்ணுக்கு சென்றாலும் வீட்டின் மீதான நேசத்தால், எங்கள் ஊரின் பாசத்தால் ஓடிவந்துவிட்டேன்."
இவருக்கு இலங்கைத் தமிழ் சமூகம் என்றும் போலவே ஒரு முகவரி எழுதி முத்திரை குத்தி ஒரு சமூகப் பெட்டகத்தினுள் அடைக்க முயன்றது. சமூகம் போட்ட போர்வைகளை லாவகமாய் அகற்றி அவர் சொன்னது இது:
"அப்பாவின் பூர்வீகம் இந்தியா என்பதால் நான் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானதன் பின்னர், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு அன்பர், என்னை “இந்தியாக்காரன்”, ”வடக்கத்தியான்” என்று முகவரிதந்தார். நீர்கொழும்பிலிருந்தவன் என்ற காரணத்தினாலும் ”நீர்கொழும்பான்” என்றும் மற்றும் ஒரு முகவரி தந்தார்கள். ஆயினும் நான் நேசிக்கின்ற – என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து, ”மனிதன்” என்ற முகவரியைத் தந்திருக்கிறார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதுதான் எனது வாழ்வும் பணிகளும்!"
விவேகானந்தா வித்தியாலயம் அரசுடைமையான பின்னர் ஆறாம் தர புலமைப் பரிசுக்கான பரீட்சையில் சித்தியடைந்து நீர்கொழும்பில் தமிழ் மகா வித்தியாலயங்களோ மத்திய மகா வித்தியாலயங்களோ இல்லாத காரணத்தால் யாழ் நகர் ஸ்ரான்லி கல்லூரியில் சேர அனுமதி பெற்றார்.
தனது முதல் யாழ். விஜய நினைவுகளை இப்படி நினைவு கூருகிறார்:
"அப்பா என்னையும் என்னுடன் குறிப்பிட்ட பரீட்சையில் சித்தியடைந்த எனது தாய் மாமா மகன் முருகானந்தனையும் யாழ்ப்பாணம் அழைத்துச்சென்றார். அதுவரையில் நான் பனைமரத்தை படங்களில்தான் பார்த்திருந்தேன். சொந்த பந்தங்கள் இல்லாத அந்த ஊரில் கல்லூரி விடுதி வாழ்க்கை எனக்கு சிறையாகத்தான் இருந்தது. வீட்டுக்கவலையில் (Home sick) நாட்கள் மெதுவாக நகர்வதாகத் தெரிந்தது. நீர்கொழும்பில் உயர்தரப் பாடசாலையாக அல். ஹிலால் மகாவித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டதும், பெற்றவர்களிடம் கண்ணீருடன் மன்றாடி நீர்கொழும்புக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டோம். யாழ்ப்பாணத்திலிருந்த அந்த பால்யகாலத்தில்தான் எனக்கு சாதி அமைப்பு பற்றி தெரியவந்தது. ஆனால், பின்னாளில் 1970 இற்குப்பிறகு டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன், தெணியான் ஆகியோரின் படைப்புகளைப்படித்த பின்னர், சாதி அமைப்பு பற்றிய தெளிவு எனக்குள் பிறந்தது. அக்காலப்பகுதியில் நானும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். அப்பொழுது எழுத்தாளன் என்ற முகவரி கிடைத்தது."
1977 இல் வீரகேசரி நாளிதழில் தன்னை இணைத்துக் கொண்டான் இந்த "மனிதர்". முதலில் வீரகேசரி நீர்கொமும்பு பிரதேச நிருபராக செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தவர் , எப்படி இலக்கிய உலகுடன் சங்கமித்தார் என்பதை இப்படி விளக்குகிறார்:
"சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், இலக்கியக்கூட்டங்கள் தொடர்பாக செய்திகள் எழுதியிருந்தேன். இந்நாட்களில் மல்லிகை, பூரணி, புதுயுகம் சஞ்சிகைகளில் பல சிறுகதைகளையும் எழுதினேன். இது எனக்கு எழுத்துலகத்தில் காலூன்றி நிலைக்கலாம் எனும் தன்னம்பிக்கையை வளர்த்தது. வீரகேசரியில் ஒப்புநோக்காளன் பதவியும் அடுத்து எனது உழைப்பின் ஊதியமாய் துணை ஆசிரியர் பதவியும் என்னை வந்தடைந்தன. என்னை இனங்கண்டு வீரகேசரியில் என்னை ஆதரித்த ஆசிரியர் க. சிவப்பிரகாசத்தை என்றும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
இக்காலங்களில் பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் சமகாலத்தில் இயங்கிவந்தேன். நிருபராக பத்திரிகையில் செய்தி மற்றும் செய்தி அறிக்கை எழுதுவது, நேர்காணல்களை பதிவுசெய்வது முதலான பணிகள் இருந்தன. துணை ஆசிரியராகியதும் ஏனைய நிருபர்கள் எழுதியவற்றை செம்மைப்படுத்துவது (Editing), தலைப்பிடுவது முதலான பணிகளில் ஈடுபட்டேன். வாசகருக்கும் சமுதாயத்திற்கும் எது முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செய்திகளை செம்மைப்படுத்துவது முதலான பணிகள். அதனால் பத்திரிகையாளன் பணி ஒருவகையில் Team work. படைப்பாளியின் நிலை அப்படியல்ல. அது ஆக்க இலக்கியம் சார்ந்தது. (Creative writing) அது ஒருவகையில் தவம். பாத்திரங்களை சிருஷ்டிப்பது. கதை சொல்லியாக படைப்பு மொழியை உருவாக்குவது. முழுமையாக தன்னிலை சார்ந்து இயங்குவது. படைப்பாளி சிறுகதையிலும் நாவலிலும் சிருஷ்டிக்கும் பாத்திரங்களிலெல்லாம் அவனே இருப்பான். பல்வேறு குணாதிசயங்களை இயல்புகளை வெளிப்படுத்துவான்.
அதேசமயம் ஒரு ஆபத்தும் இருக்கிறது. அதனை நான் உணர்ந்தேன். தொடர்ச்சியாக செய்திகளையே எழுதி செய்திகளை செம்மைப்படுத்திய காலப்பகுதியில், சிறுகதை எழுதியபொழுது, சில சந்தர்ப்பங்களில் நடைச்சித்திரமாகிவிட்டதையும் அவதானிக்க முடிந்தது. அதனால் மீண்டும் மீண்டும் படித்து திருத்தி எழுத நேர்ந்தது."
இது போல் எத்தனையோ நினைவுகள். தன் பத்திரிகை அனுபவங்களை சுவைபட 'சொல்ல மறந்த கதைகள்' எனும் நூலில் எழுதி வைத்தார். தானுண்டு தன் வேலையுண்டு என இவர் என்றும் துவண்டு போனவரல்லர். பல இலக்கிய ஆளுமைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு வேட்கையுடன் எழுதிக் கொண்டே இருந்தார். இவர் வேட்கைக்கு களம் அமைத்துக் கொடுத்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது இவருக்கு மற்றும் ஒரு தாய் வீடு.
இதை அவரே சொல்லக் கேட்போமே :
"இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கென நீண்ட வரலாறு இருக்கிறது. மூத்த படைப்பாளி, எனது இனிய நண்பர் இளங்கீரன் சங்கத்தின் வரலாறையே எழுதியவர். அதன் ஸ்தாபகர் தலாத்துஓயா கணேஷ் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சோமகாந்தன், சமீம், இளங்கீரன், நீர்வை பொன்னையன், டொமினிக்ஜீவா கவிஞர் முருகையன், காவலூர் ராஜதுரை மற்றும் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன். சர்வதேச செயலாளர் ராஜஸ்ரீகாந்தன் உட்பட சங்கத்தில் இணைந்திருந்த தெணியான், திக்குவல்லை கமால், சாந்தன், நுஃமான், மௌனகுரு, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மேமன் கவி உட்பட பலரும் எனது இனிய நண்பர்கள். அதிலிருந்து முன்னரே வெளியேறிய டானியல், ரகுநாதன், சில்லையூர் செல்வராசன் — நற்போக்கு இலக்கிய முகாம் என்று வீம்புக்கு ஏதோ அமைத்த எஸ்.பொ. அனைவரும் எனது நண்பர்கள்தான். இவர்களில் சிலர் இன்றில்லை. இவர்கள் பற்றியெல்லாம் தனித்தனிக்கட்டுரைகளும் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவர்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமாகத் திகழ்ந்தவர்கள். சித்தாந்த முரண்பாடுகளும், வழக்கமாக எமது எழுத்தாளர்களுக்குள்ள தன்முனைப்பு ஆணவமும் இருந்தபோதிலும் பொதுவாகவே அவர்கள் அனைவரும் பெறுமதியானவர்கள்.தேசிய ஒருமைப்பாடு மாநாடு , வெள்ளிவிழா கருத்தரங்கு, பாரதி நூற்றாண்டுவிழா, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், சிங்களப்பிரதேசங்களில் தமிழ் – முஸ்லிம் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகள் – கூட்டங்கள், மொழிபெயர்ப்பு பணிகள் கொழும்பில் மாதாந்தக் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் 1986 ஆம் ஆண்டில், நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய மாநாடு உட்பட யாவற்றிலும் சங்கத்துடன் இணைந்தே பயணித்தேன். வேலை தேடும் படலத்திலிருந்த 1975 – 1977 காலகட்டத்தில் சங்கத்தின் முழுநேர ஊழியராகவும் இருந்தேன். எனது பஸ் போக்குவரத்து செலவுக்கு சங்கம் மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தது.
எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் மூன்று நூல்களும் வெளியிட்டோம். பாரதி நூற்றாண்டு (1982-1983) காலத்தில் பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்க்கச்செய்து வெளியிட்டோம். அவ்வேளையில் கொழும்பில் இலங்கை எழுத்தாளர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் பாரதி நூல்களின் கண்காட்சியும் , நாடு தழுவிய ரீதியில் பாரதி விழாக்களையும் நடத்தி, தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், சிதம்பர ரகுநாதன், ராஜம்கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்தோம். யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலும் நூல் நிலைய மண்டபத்திலும் ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையிலும் கல்முனையிலும் அட்டாளைச்சேனையிலும் கண்டியிலும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்தப்பயணங்களில் தமிழக எழுத்தாளர்களுடன் இணைந்திருந்து வழிகாட்டியாகவும் இயங்கினேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வரும்வரையில் சங்கத்தின் கொழும்புக்கிளையின் செயலாளராகவும் இருந்தேன். ஆம், சுருக்கமாகச்சொன்னால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனது மற்றும் ஒரு தாய்வீடு."
இவ்வாறு தனது சத்தியவாக்கு மூலம் வழங்கியிருக்கும் இவர் இதுவரையில் 25 நூல்களை இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், ஆய்வு, சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம், பயண இலக்கியம் என இவர் எழுதிக்குவித்தவை பல. இந்த ஆண்டு இவரது 70 வயதை பிறப்பதை முன்னிட்டு யாழ். ஜீவநதி இவரது 15 கதைகளைக்கொண்ட கதைத் தொகுப்பின் கதை நூலையும் கொழும்பில் குமரன் புத்தக இல்லம் “நடந்தாய் வாழி களனி கங்கை “ என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளது. முருகபூபதி என்ற இலக்கிய ஆளுமை, பத்திரிகையாளர் , சமூகச்செயற்பாட்டாளர் குறித்து எழுதுவதற்கு மேலும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இக்கட்டுரைக்கு முகநூலில் வெளியான வாசகர் எதிர்வினைகள்:
Bharaneetharan Kalamany
kathai thokupin kathai published for his 70th birthday. happy birthday
Raveendran Nadesan
மிகச்சிறப்பு! வாழ்த்துகள்
Gv Venkatesan
அண்ணன்..... நீடூழி வாழ்க வாழ்க
Vel Nanthan
வாழும் எங்கள் மூத்த வழிகாட்டிக்கு பழகிட இனிய மனிதநேயருக்கு ஆவணப்படுத்துநர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Panchakalyani Sellathurai
Sure Anna, I have met him in 49th ilakiya santhipu vanni.very simple and nice person. Happy birthday to you uncle
Suriya Sritharan
மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
Ahamed Jinnahsherifudeen
இலங்கையில் உலக எழுத்தளர் மாநாடு உருவாகக் காரணமானவர்
Sinnathurai Thillainathan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Michael Collin
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ஐயா.
Kurunathan Muthiah
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Arumugam Ratnavelone
Happy birthday to Poobathy.
Raveendran Nadesan
இனிய பிறந்ததின நல் வாழ்த்துகள்
Pramila Pradeepan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir
Balasingam Sugumar
மகிழ்வினிய வாழ்த்துகள்
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
Basheer Segu Dawood
அன்புடன் வாழ்த்துகள்
Luxmi Rajadurai
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முருகபூபதி
Shadagopan Ramiah
இனிய வாழ்த்துக்கள்
Kala Sriranjan
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Nagalingam Srisabesan
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Lingam Vaithlingam
வாழ்த்துக்கள்
Poobalasingham Sritharasingh
நல் வாழ்த்துக்கள்.
Sarawana Kumar
இனிய வாழ்த்துக்கள் சேர்
Nanthiny Xavier
வாழ்க!
Rajendram Thedchanamoorthy
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Yogananthan Kanakasooriyam
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
ஜவாத் மரைக்கார்
நண்பன் முருகபூபதிக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்து உரித்தாகட்டும்
மலையாழன் மலையகன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
கீரன் Keeran
Maheswaran Sinniah
வாழ்க பல்லாண்டு வளமாக நலமாக மகிழ்வாக! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Tharuman Tharmakulasingam
அன்பார்ந்த நல்வாழ்த்துகள்?
Tharmarajah Pooranes Akalankan
வாழ்த்துக்கள்
Thamayanthy Ks
மனம் நிறைந்த வாழ்த்துகள் பல்லாண்டுகள் வாழ்க
P A Jayakaran Arullingam
வாழ்க நலமுடன் நீடூழி.
Thambirajah Elangovan
வாழ்த்துகள்..!
Sivanesaselvan Arumugam
Congratulations
Ponniya Shanmuganathan
Congratulations
Rajalingam Velauthar
Happy Birthday. Best wishes.
Gnane Buwan Gnanendran
Greetings
Veerappillai Veerakumar
வாழ்க என்றும் பெருமையுடன்
Sivapragasam Kumarathas
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
Kuppilan Shanmugan
முருகபூபதிக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
Polikai Jeya
வாழ்த்துகிறேன்..அய்யா.
Parasuraman Sangar
இனிய வாழ்த்துக்கள்
Murugesu Natkunathayalan
Happy birthday
Puthumailolan Mahalingam
வாழ்த்துகள்
Raveendran Chelliah
Happy birthday wishes
Kanagasabai Krishnarajah
வாழ்த்துகள்..!
Karunaharamoorthy Ponniah
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். Happy birthday Comrade.
Murugesu Kanagalingam
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். .(அவரின் முதலாவது கதைத்தொகுதியான 'சுமையின் பங்காளிகள்' இன்னமும் என்னிடம் இருக்கிறது).
Gv Venkatesan
அண்ணன். .நீடூழி. ..வாழ்க வாழ்க.
Sivanesaselvan Arumugam
Wishing all the best
Tharmarajah Pooranes Akalankan
வாழ்க வளமுடன் நலமுடன் நிம்மதியுடன்
Khani Vumathi
என் வசம் உள்ள அண்ணன் முருகபூபதி அவர்களின் நூல். இந்த நூலையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Kulam Peter
வணக்கம் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாய் தமிழ் சொந்தமே ,,பல கொடிய சவால்களுக்குள் ,இவ் வாழ்க்கையை நகர்த்துவதே அதிஷ்ட்டம் ,,ஆகவே நிலையில்லாத வாழ்வை வளப்படுத்தி வாழ்வேதென்பது வரம் அன்புறவே .வாழ்க நீடுழிஅன்புடன் குலம்