துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - குரு அரவிந்தன் -
‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். பேச்சு வார்த்தை மூலம் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு துருக்கி நாடு இரண்டு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ரஸ்யா - உக்ரையின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் துருக்கி நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வெளிவிவகார அமைச்சரான டெம்ரோ குலீபாவும், ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவும் துருக்கிக்கு வருகை தந்திருந்தனர். ஏற்கனவே பெலாரஸில் இரண்டு தடவைகள் இரண்டு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், எந்த முடிவையும் எட்டவில்லை. அதே போலத்தான் இம்முறையும் எந்த முடிவுக்கும் இருதரப்பினரும் வரவில்லை. 'பட்டால்தான் தெரியும்' என்பதுபோல, இரண்டு தரப்பினரும் பட்டுத் தெளிவதற்காகக் காத்திருப்பது போலத் தெரிகின்றது.
உக்ரைன் ரஸ்ய யுத்தம் 15 வது நாளைக் கடந்த நிலையில் ஆங்காங்கே ரஸ்ய படைகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. மரியுபோலில் உள்ள சிறுவர் வைத்திய சாலை ஒன்றும் தாக்கப்பட்டது. உக்ரைன் மக்களை உளரீதியாகக் களைப்படைய வைப்பதே ரஸ்யாவின் முதல் நோக்கமாகும். அதற்காக விமானத் தாக்குதல்கள், குறிப்பாகக் குடியிருப்புகள் மீது அதிகமாக நடைபெறுகின்றன. காலம் கனியும்போது சுற்றிப்பிடிப்பதுதான் அதன் நோக்கம். அதுவரை உலக நாடுகளின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது ரஸ்யா. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் போவதாகவும் அறிவித்திருப்பதால், இதைச் சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. காரணம் அனேகமான ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவில் இருந்துதான் ஒரு பகுதி எண்ணெய்யைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40 வீதமான எண்ணெய்யை ரஸ்யாவிடம் இருந்தே பெறுகின்றன. எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தடுத்தால், ஜெர்மனிக்கான எரிவாயுவைத் தடை செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்திருக்கின்றது. இதனால் எதிர்பாராமல் கச்சா எண்ணெய் விலை 130 டொலரால் விலை உயர்ந்தது. உக்ரைன் ரஸ்யா பிரச்சனை காரணமாக, மேற்கு நாடுகளில் புகழ்பெற்ற உணவகங்களான மக்டொனால்ஸ், ஸ்ராபக்ஸ், கொக்காகோலா போன்றவை தங்கள் சேவையை ரஸ்யாவில் நிறுத்தி வைத்திருக்கின்றன.