- எழுத்தாளர் என்.செல்வராஜா -
'நூலகர் திருமதி ரூபவதி நடராஜா' என்னும் அக்டோபர் 2022 'தாய்வீடு' பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் எழுத்தாளர் என்.செல்வராஜா பின்வருமாறு கூறுகின்றார்:
'இந்நிலையில் யாழ்ப்பாண நூலகம் 1981 மே மாதம் 31ம் திகதி பின்னிரவில் அரச கூலிப்படையினரால் தீ வைக்கப்பட்டது. 97 ஆயிரம் புத்தகங்களும் தளபாடங்களும் ஒரு சில மணி நேரத்தில் எரிந்து தணியக் கூடியவையா என்ன? மே 31 பின்னிரவில் தொடங்கி, ஜூன் மாதம் 1ம் திகதியும் சுற்றாடலில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கை துப்பாக்கி முனையில் பிறப்பித்து விட்டு, தீயணைப்புப் படையினரையும் நுழையவிடாது ஒட்டுமொத்த நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டே அந்தக் கயவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றார்கள்.'
அண்மைக்காலமாக மே 31 நூலகம் எரிக்கப்பட்டதாக எவ்வித ஆதாரங்களுமற்றுக் குற்றஞ்சாட்டி வந்த என்.செல்வராஜா அவர்கள் தற்போது மே 31 எரித்த பின் ஜூன் 1ந்திகதியும் நூலகத்தை எரித்தார்கள் என்று தன் நிலைப்பாட்டில் சிறிது மாற்றமடைந்துள்ளதைக் காண முடிகின்றது. ஏன் என்.செல்வராஜா தொடர்ந்தும் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 என்று கூறி வருகின்றார் என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் தொகுத்த நூலகம் பற்றிய ஆவண நூலில் பலரும் நூலகம் எரிக்கப்பட்டது ஜூன் 1 இரவு என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இவர் எதற்காக எவ்வித ஆதாரங்களையும் காட்டாமல் இவ்வித, கூறி வருகின்றார் என்பது தெரியவில்லை.
- முன்னாள் யாழ் மாநகரசபை ஆணையாளர்
சீ.வீ.கே.சிவஞானம் -
இத்தருணத்தில் முன்னாள் யாழ் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் 21இல் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறியிருப்பதும் அவதானிக்கத்தக்கது:
'இப்பொழுது உண்மைத் தரவுகள் திட்டமிட்டு திரிவுபடுத்தப் படுவது கவலை யளிப்பதும் எரிச்சலூட்டுவதுமாக உள்ளது. நூலகம் எரிக்கப்பட்ட நாளை ஒரு விவாதப் பொருளாக்கி பட்டிமன்றம் நடாத்தும் நிலைக்கு ஒரு சிலர் உள்ளாக்கியுள்ளனர். யாழ்ப்பாண பொது நூலகம் பற்றி எழுதும் அநேகமானோர் அது எரிக்கப்பட்டது 1981 ஜுன் முதலாம் திகதி இராப்பொழுது என்று எழுதும்போது, ஒரு சிலர் இல்லை 1981 மே மாதம் முப்பத்தொராம் திகதி என எழுதி இளைய சந்ததியினரிடையே குழுப்பத்தை உண்டாக்க முயல்கின்றனர்.'
மேற்படி கட்டுரையில் நூலகர் திருமதி ரூபவதி நடராஜாவைப் பற்றி விதந்து எழுதியுள்ள செல்வராஜா அவர்கள் ரூபவதி நடராஜா எழுதிய முக்கிய ஆவண நூலான யாழ் நூலகம் பற்றிய நூலில் நூலகம் எரிக்கப்பட்டது ஜூன் 1 என்று தெளிவாகக் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டி அது ஏன் தன் நோக்கில் தவறு என்றும் விளக்கியிருந்திருக்கலாம்.