யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதி வருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார். இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளானவர். கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் - ஊடகவியலாளர் - பதிப்பாளர் - இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர். கலை , இலக்கிய நண்பர்களின் விசுவாசத்திற்குமுரியவர். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானதற்கு இக்காரணங்களே போதும் கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக எனக்கு அறிமுகமானது 2008 இல்தான்.
முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில், மறைந்த செம்பியன் செல்வனைப் பற்றி கருணாகரன் எழுதியிருந்த கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தமான அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள் லண்டனுக்கு தொலைபேசி தொடர்பெடுத்து முல்லை அமுதனிடம் விசாரித்தேன். கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009 இல் நான் வதியும் மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் இலக்கியப்பூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன், தமிழகம் திரும்பியதும் எழுதிய புல்வெளிதேசம் நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.
2009 மே மாதம் வன்னியுத்தம் பேரவலத்துடன் முடிவுக்கு வந்தவுடன் கருணாகரன் என்னவானார்..? என்ற கவலையுடன் ஆழ்ந்து யோசித்தேன். ஜெயமோகனுடன் தொடர்புகொண்டு கருணாகரனைப்பற்றி அறிவதற்கு தொலைபேசி இலக்கம் பெற்றேன். அச்சமயம் வவுனியாவில் நின்ற அவரை ஒருவாறு தொலைபேசியில் பிடித்துவிட்டேன். பின்னர் 2010 இறுதியில் இலங்கை சென்று கருணாகரனை யாழ். பல்கலைக்கழக வாயிலில் சந்தித்தேன். அங்கே கைலாசபதி நினைவு மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலக்கிய நண்பர்கள் எம். ஶ்ரீபதி, பேராசிரியர்கள் சிவச்சந்திரன், துணைவேந்தர் என். சண்முகலிங்கன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இவர்களை அன்று சந்தித்தேன்.
அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், யாழ். பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் கருத்தரங்கிற்கு நானும் வரவிருப்பதாக கருணாகரனுக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். அச்சமயம் போரின் வலிசுமந்தவராக சுன்னாகத்தில் தமது குடும்பத்தவருடன் ஒரு வீட்டில் அகதிக் கோலத்தில் அவர் இருந்திருக்கிறார். நீர்வேலியில் மதுவன் என்ற கிராமத்தில் வசித்த மல்லிகை இதழின் அச்சுக்கோப்பாளர் சந்திரசேகரம் அண்ணரையும், உடல் நலக் குறைவோடிருந்த எழுத்தாளர் சி. சுதந்திர ராஜாவையும் நான் பார்க்கவேண்டும் என விரும்பியதும், அழைத்துச்சென்றார். வன்னி பெருநிலப்பரப்பில் போர் ஏற்படுத்திய வடுக்களை காணவேண்டும் எனக்கேட்டதும், அங்கும் அழைத்துச்சென்றார். இரணைமடுக்குளம் முதல் கிளிநொச்சியில் உருவாகிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் வரையில் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச்சென்றார். அந்த முதல் சந்திப்பிலேயே இவ்வாறு தனது நேரத்தையும் விரையம் செய்து என்னோடு அலைந்த கருணாகரனைவிட வயதால் நான் மூத்தவன் என்பதனால், அன்று முதல் “ அண்ணாச்சி “ என்றே என்னை விளிப்பதும் அவரது வழக்கமாகியது. மல்லிகை சந்திரசேகரம் அண்ணருடன் என்னை நிற்கவைத்து கருணாகரன் எடுத்த ஒளிப்படம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்தது. அவ்வேளையில் மல்லிகை, கொழும்பு - ஶ்ரீகதிரேசன் வீதியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது.
கருணாகரன் எழுதிய செம்பியன் செல்வன் பற்றிய கட்டுரையிலிருந்து தொடர்ச்சியாக அவரது சமூக ஆய்வுகள் – இலக்கியப் பிரதிகள் - பத்தி எழுத்துக்கள் - கவிதைகள் - தமிழக இதழ்களில் வெளியான அவரது இலக்கியக் கடிதங்கள் உட்பட அவர் சம்பந்தப்பட்ட பிரதிகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருகின்றேன். பதினான்கு சிறுகதைகளைக் கொண்ட அவரது வேட்டைத் தோப்பு நூலில் 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் 14 ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கில் போர் உக்கிரமாக நடந்த காலப்பகுதியில்தான் அவை எழுதப்பட்டன என்பது தெளிவு. ஒரு பொழுதுக்கு காத்திருத்தல் - ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் - பலியாடு - எதுவுமல்ல எதுவும் – ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் , நெருப்பின் உதிரம் , இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் , படுவான்கரைக் குறிப்புகள், நினைவின் இறுதி நாள் , உலகின் முதல் ரகசியம், கடவுள் என்பது துரோகியாயிருத்தல் , இரவின் தூரம் , மௌனத்தின் மீது வேறொருவன் முதலான கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டு கவிஞராகவே நன்கு அறியப்பட்ட கருணாகரன், வேட்டைத்தோப்பு மூலம் தன்னை சிறந்த சிறுகதைப் படைப்பாளியாகவும் அழுத்தமாக அடையாளம் காண்பித்திருக்கிறார். அவருடைய கவிதைகள் சிங்களம் - ஆங்கிலம் - மலையாளம் - கன்னடம் - பிரெஞ்சு மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதுபோன்று அவரது சிறுகதைகளும் பிறமொழிகளில் பெயர்க்கப்படவேண்டியது என்பதே எனது வாசிப்பு அனுபவம் கூறும் செய்தி. சில கதைகளை எந்த ஒரு வரியையும் நீக்காமல் தனித்தனி வரியாக பதிவுசெய்தால் ஒரு நெடுங்கவிதையை அங்கு காணமுடியும். அவர் இயல்பிலேயே ஒரு கவிஞர்தான் என்பதையே அவை நிரூபிக்கின்றன.
ஈழ அரசியலையும் அது எம்மக்களுக்கு திணித்த ஆயுதப்போராட்டத்தையும் அதன்விளைவில் விடிவே தோன்றாமல் அவலமே எஞ்சிய கொடும் துயரத்தையும் கருணாகரனின் கதைகள் பேசுகின்றன. கருணாகரன் மூலமே எனது சொல்ல மறந்த கதைகள், சொல்லத்தவறிய கதைகள் ஆகிய நூல்களும் வெளிவந்தன. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்திருக்கும் கருணாகரனுக்கு, இனிவரும் ஆண்டு மணிவிழாக்காலமாகும். வாழ்த்துக்கள்.
முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.