அத்தியாயம் பத்து - ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?
எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.
"என்ன கண்ணா யோசனை?"
எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.
"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"
"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."
"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில் பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."
"அப்போ, இந்த முறுவல், உடம்பு இவற்றிலெல்லாம் உனக்குப் பிடிப்பேயில்லையா கண்ணா?" இவ்விதம் பொய்க்கோபத்துடன் கேட்டுவிட்டு நகைத்தாள் மனோரஞ்சிதம்.
"கண்ணம்மா, உன் உடலழகு வேறு. உளத்தினழகு வேறு. ஆனால்.."
"ஆனால் .. என்ன கண்ணா?"
'கண்ணம்மா, உடலழகு நிலையற்றது. ஆனால் உளத்தினழகோ இருக்கும் வரையில் நிரந்தரமானது."
"உண்மைதான் கண்ணா, சரியாகத்தான் சொன்னாய். "
"உடலழகு பற்றிய மயக்கம் ஒரு காலகட்டம் வரைக்கும்தான். ஆனால் உளத்தினழகோ அதனை மீறியது. இருப்புக்கு அர்த்தம் , நிறைவு தருவதே இந்த உள்ளத்தினழகுதான் கண்ணம்மா. உனக்கு அந்த அழகு தேவைக்கு அதிகமாகவே உண்டடி."
"போதும் கண்ணா, அது சரி இருந்தாற்போலுனக்கு எதற்காக இந்தக் கட்டடக்காடு பற்றிய விசாரம்?"
"வழக்கம்போல் நீ வருவதற்கு முன் சிறிது நேரம் ஆதி மனிதனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். எனக்கு அவனை நினைத்தால் ஒருவிதத்தில் ஒரே பொறாமையாகவுள்ளது. அவனுடனான உரையாடல்தான் கட்டடக்காடு பற்றிய விசாரத்தைத் தோற்றி விட்டது கண்ணம்மா"
"அப்படியேன் உனக்கு ஆதியின் மேல் அவ்வளவு பொறாமை கண்ணா?"
'அதுவா.. அதற்குக் காரணமே அவனது இயற்கையுடனான இருப்புத்தான். அதுதான் முக்கிய காரணம். அவன் வாழ்ந்த காலத்தில் நகரங்கள் இல்லை. கட்டடக்காடுகள் இல்லை. தூய்மை மிகுந்த இயற்கையுடன் அவனது இருப்பு அமைந்திருந்தது கண்ணம்மா. அதுதான் முக்கிய காரணம் கண்ணம்மா. அதுதான் முக்கிய காரணம்."
" கண்ணா நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அப்படித்தான் தோன்றினாலும் மறுபுறத்தில் சரியில்லையே.."
"ஓரு புறத்தில் சரி. மறுபுறத்தில் சரியில்லையா? என்ன புதிர் போடுகிறாய் கண்ணம்மா? நம்ம வடிவேலு நகைச்சுவை போலல்லவா இருக்கிறது உன் வார்த்தைப் பிரயோகம். சரி, ஆனால் சரியில்லை."
இவ்விதம் கூறிவிட்டு இலேசாகச் சிரிக்கின்றேன். ஆனால் அச்சிரிப்பை அலட்சியம் செய்தவளாக மனோரஞ்சிதம் கூறினாள்:
"கண்ணா, நீ பொறாமைப்படும் ஆதி மனிதன் இயற்கையுடன் வாழ்ந்தாலும், அவன் குகைகளில் வாழ்ந்த தாய் வழிக் குழுச்சமுதாயச் சூழலில் வாழ்ந்தவன். இன்றுள்ள மனிதருடன் ஒப்பிடுகையில் அறிவியலில் அரிச்சுவடியாகவிருந்தவன்."
"இருந்தாலென்ன கண்ணம்மா, அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டுமே. இயற்கையை மாசு படுத்தி, போர்கள் நிறைந்த உலகத்தில் வாழும் இன்றுள்ள மாந்தருடன் ஒப்பிடுகையில் ஆது மானுடர் எவ்வளவோ மேலென்றுதான் தோன்றுகின்றது. எதிர்பார்ப்புகள் குறைந்த இயற்கையுடன் அரவணைத்த வாழ்க்கை. நல்லதுதானே கண்ணம்மா?"
"கண்ணா, மானுடரின் முக்கிய அம்சமே ஆறாவது அறிவுதான். பகுதறியும் ஆறாவது அறிவுதான் மானுடரை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துவது. அந்த ஆறாவது அறிவு இன்றுள்ள மானுடரில் பல நூறு மடங்கி அபிவிருத்தியடைந்துள்ளது. நீ பொறாமைப்படும் ஆதிமானுடர் ஒரு விதத்தில் மிருகங்களைப்போல் வாழ்ந்தவர்கள். நான் அவர்களைப்பார்த்துப் பரிதாப்படுகின்றேன் கண்ணா."
இவ்விதம் கூறிவிட்டு மனோரஞ்சிதமே தொடர்ந்தாள்:
'கண்ணா, ஆதிமனிதர் காலத்து இயற்கை மாசற்ற நிலையில் இருந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது அறியாமை. அறிவு வளர வளரத்தானே தொழில் நுட்பமும் வளர்ந்தது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சிதானே மனித சமுதாயத்தின் வளர்ச்சி. ஆனால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நேர்மறை விளைவுகளுடன் பல எதிர்மறை விளைவுகளயும் கூடவே கொண்டு வந்தது. அதுதான் இன்றுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் கண்ணா"
நான் என் மனோரஞ்சிதத்தின் தெளிந்த நீரோடைபோன்ற , சிக்கல்களற்ற தர்க்கத்தில் , ஞானச்செழிப்பில் ஒரு கணம் என்னை மறந்திருந்தேன்.
அதனைப் பார்த்து அவள் தனக்கேயுரிய மந்தகாசப் புன்னகையுடன் கேட்டாள்:
"என்ன கண்ணா, அப்படியே பிரமித்துப் போய் விட்டாய்."
"கண்ணம்மா, உன் தர்க்கம் என்னைக் கட்டிப்போட்டு விட்டதடி. உன் சிந்தனையின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறதடி. எப்படி உன்னால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதடி. அதுதான் என் பிரமிப்புக்குக் காரணமடி என் செல்லம்மா."
நானே தொடர்ந்தேன்:
"அதுசரி கண்ணம்மா, மனிதரின் இன்றைய ஞானத்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். அப்படியென்றால் நவகாலப்பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வு?'
"கண்ணா, தீர்வு அதிமானுடரின் வரவிலுள்ளது. இன்று நாம் வாழும் இந்நிலவுலகை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றோம். இது மாற வேண்டுமானால் நம் சிந்தனையில் பரிணாம வளர்ச்சி ஏற்பட வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்கச் செயற்படும் அதே சமயம் சிந்தனை வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளையும், விழிப்புணர்வையும் அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். சென்றால்..."
"சென்றால்.. மேலே கூறு கண்ணம்மா. சென்றால் என்ன... கண்ணம்மா."
'கண்ணா, நாம் வாழும் இவ்வுலகில் வாழும் மானுடர்கள் மட்டுமே முக்கியமானவர்கள் அல்லர். 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்' என்றான் ஒரு கவிஞன் அன்று. பண்டைத்தமிழ்க் கவிஞன் அவன். கண்ணா, அவன் கூறும் 'யாவரும்' மனிதரை மட்டும் குறிப்பதாக நான் கருதவில்லை. இந்நிலவுலகில் வசிக்கும் அனைத்து வகை உயிர்களையும் குறிப்பதாகவே நான் கருதுகின்றேன். இவ்வுலகின் நிம்மதிக்கு, தூய்மைக்கு முதலில் நாம் உருவாக்கும் கட்டடக்காடுகளை நிறுத்த வேண்டும். கட்டடக்காடு என்னும் பெயரில் நிஜ மரங்களை அழித்துக்கொண்டிருக்கின்றோம். என் புவிக்குடும்பத்து உறவுகளை, பறக்கும் , ஊரும், நீந்தும் உறவுகளை எம் நலன்களுக்காகக் கொன்ரூ குவித்துக்கொண்டேயிருக்கின்றோம். இதனை நாம் முதலில் நிறத்த வேண்டும். அதற்குத்தான் அதிமானுடரின் வருகை முக்கியம் கண்ணா."
'கண்ணம்மா, உன் கூற்று எனக்கு என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகள் சிலவற்றை நினைவூட்டுகிறதடி."
"என்ன வரிகள் கண்ணா?"
"பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்.
மண்மீ துள்ள , மக்கள், பறவைகள்;
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்..."
பாரதியாரின் இக்கவிதை வரிகளைக் கேட்டதும் மனோரஞ்சிதம் ஓடி வந்து என்னை வாரியணைத்துக் கொண்டாள். அத்துடன் "அற்புதமான கவிதை வரிகள் கண்ணா" என்று கூறியவாறே ஒரு தடவை என் இடது கன்னத்தில் பலமாக முத்தமிட்டாள். என் மனோரஞ்சிதத்துக்கு இன்பம் அளவு மீறி விட்டால் இப்படி நடந்து கொள்வதொன்றும் புதியதல்ல. அவள் அணைப்பும் , இதழ்களின் மென்முத்தமும் தந்த உன்மத்தத்தில் நான் கூறினேன்:
"கண்ணம்மா, ஆதி மானுடரின் வாழ்க்கையில் அழகிருந்தது. இனிமையிருந்தது. கூடவே அறியாமையுமிருந்தது. நவ மனிதரின் வாழ்க்கையில் அறிவு மயக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலை மாறவேண்டுமானால் அதிமானுடரின் அறிவுத் தெளிவின் அவசியம் முக்கியம். அதிமானுடர் பற்றி நம்மூர் எழுத்தாளர் மு.தளையசிங்கமும் தன் தர்க்கத்துக்குரிய வகையில் பிரபஞ்ச யதார்த்தவாதம் பேசினார். கவிஞர் நுஃமானும் அதிமானுடர் பற்றி தன் கோணத்தில் சிந்தித்தார். மேனாட்டு எழுத்தாளர்கள் பலரும் அவ்வப்போது சிந்தித்திருக்கின்றார்கள். எழுதியிருக்கின்றார்கள். ஒரு விதத்தில் இற்றைய மானுடரின் பிரச்சினைகளுக்கான தீர்வு அதிமானுடரின் வருகையில்தான் தங்கியுள்ளதாகத் தோன்றுகின்றது."
அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?
'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.
செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.
மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.
இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?
ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.
அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?
விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!
ஆ....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!
எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.