- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -
எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது. கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள் அவை.
இலக்கு இதழின் நோக்கம்:
'தாரக மந்திரம்: யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ' என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்த இதழ் தேவகாந்தனின் 'இலக்கு'. 'இலக்கு'மலர்களைப்பற்றி அதன் முதலாம் ஆண்டு மலராக வெளியான ஐந்தாவது இதழில் அம்மலர்களைப்பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், ஆசிரியத்தலையங்கம் ஆகியவற்றிலிருந்து அதன் நோக்கத்தை அறிவது பொருத்தமானதும், சரியானதுமாகும். மேற்படி இலக்கு ஆண்டு மலரில் கூறப்பட்டிருக்கும் முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:
'வாழ்க்கை அடித்துப் போகும் இந்த வசீகர வேகத்தில் மொழி, கலாச்சாரம் பற்றியெல்லாம் ஆகக் குறைந்தளவு கரிசனம் கூட காட்டப்படவில்லையென்பது நன்னிமித்தமல்ல. தமிழர்தம் இப்பண்பாட்டு நெருக்கடியை நாம் கருத்தில்கொண்டு காரியம் ஆற்றியே தீர வேண்டும்...... 'இலக்கு , இலக்கியரீதியாகப் பார்க்கப்போனால் ,ஒரு சகாப்தத்தின் மையக் கருதுகோளை - கருதுகோள்களை முன்னிறுத்திச் செலுத்தப்படும் பயணம் மட்டுமே. அறுதிநிலையென்று இலக்கியத்தின் இலக்காக இதுவரை எதுவும் இருந்ததில்லை........கால தேவையினையும் அடுத்த காலகட்டத்தின் தேவையினையும் உணர்ந்து கதையும் கவிதையும் கட்டுரையும் செய்யப்படல் வேண்டும். இதில் பிரக்ஞை பூர்வமான முயற்சி இலக்கு காலாண்டிதழிக்கு உண்டு...... நம்மில் பாதிப்பேரை பால்ரீதியாகவும், அதனிலும் பெரிய பங்கை ஜாதி ரீதியாகவும் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது இருபதாம் நூற்றாண்டின் இந்த இறுதித் தசாப்தத்தில் மானுட கேவலம்... இந்த யுத்த சன்னத்த சேதியை ஓங்கி ஒலிக்க பெண்ணியமும், தலித்தியமும் இலக்கிய வாகனங்களாக வீறு கொண்டுள்ளன.. கூறப்பட்டுள்ளது: "'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்பது பாரளாவிய தமிழ்ச் சமுதாயத்தின் மனிதநேயக் குரலாக ஒலிக்க வேண்டும் - ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எமது பேராசை. அது சுட்டியே இவ்வரியினை எமது தாரக மந்திரமாகக் கொண்டிருக்கின்றோம்.... மேற்கத்திய நாகரிக வெள்ளத்தில் திக்குமுக்காடி தம் பண்பாட்டு வேர் தேடும் எம்மவர்க்கு இந்த புறநானூற்று வரி திசை காட்டும் பேரொளியானால் எமக்கு பேருவகை."" (ஆண்டுமலரில் வெளியான'எண்ணத்தை எழுதுகிறேமன்' ஆசிரியத்தலையங்கத்திலிருந்து)
தி.ஜா மலரில் (இதழ் 6) அது பற்றிய ஆசிரியக் குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "இந்த நினைவு மலரில் இலக்கு ஆணித்தரமாக ஒரு கருத்தை முன் வைக்கிறது. கலைத்துவம் இலக்கியத்தின் உடல். சித்தாந்தம் அதன் உயிர். உயிர்ப்புள்ள இலக்கியத்துக்கு ஒன்றின்றி ஒன்றில்லை. இவற்றின் கலப்பு விகிதம் கலைஞனைப் பொறுத்த சங்கதி"
இவற்றிலிருந்து இலக்கு காலாண்டிதழின் நோக்கம், செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. கலைத்துவம் மிக்க இலக்கியப் படைப்புகள் அவற்றுக்கென்று சித்தாந்தம் இல்லையெனில் உயிரற்றவை. இதுதான் இலக்கின் நிலைப்பாடு.
வெளியான இலக்கு இதழ்களின் எண்ணிக்கை!
இலக்கு வெளிவந்த காலம்: ஆடி 1994 (முதல் இதழ்). இறுதி இதழ்: ஏப்ரில் 1998.
இலக்கு 1994.07 (1) - புதுமைப்பித்தன் மலர்
இலக்கு 1994.08-12 (2) - பாரதியார் மலர்
இலக்கு (3) - நா.பார்த்தசாரதி மலர்
இலக்கு 1995.08 (4) - டானியல் மலர்
இலக்கு 1995-1996 (5) - ஆண்டு மலர்
இலக்கு 1996.05 (6) - தி.ஜானகிராமன் மலர்
இலக்கு 1996.12 (7) - பேராசிரியர் க.கைலாசபதி மலர் 1
இலக்கு (8) - பேராசிரியர் க.கைலாசபதி மலர் 2
இலக்கு 1998.04 (9) - சிறப்பு மலர்
இலக்கு இதழின் பத்தாவது இதழ் எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி சிறப்பு மலராக வெளிவரவிருந்ததென்றும் , மலர் முற்றாகத் தயாரிக்கப்பட்டு, அச்சுக்குப் போகும் நிலையில் இருந்ததென்றும் எழுத்தாளர் தேவகாந்தனுடான உரையாடலொன்றின்போது தெரிவித்திருந்தார். ஆனால் அவ்விதம் வெளிவரவில்லை.
இலக்கு இதழில் வெளியான படைப்புகளும் அவற்றின் முக்கியத்துவமும்
எஸ்.பொ. நாரண துரைக்கண்ணன், நந்தி போன்ற எழுத்தாளர்களுடனான நேர் காணல்கள், கோ.கேசவன் (பாரதியார், பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய கட்டுரைகள்) , பெ.சு.மணியின் பாரதியாரின் சிறுகதைகள் பற்றிய முக்கியமான கட்டுரை, பேராசிரியரகளான கா.சிவத்தம்பி (எழுத்தாளர் விந்தனின் இலக்கிய இருப்பிடம் பற்றிய கட்டுரை), சி.சிவசேகரம் (அரசியலும், அழகியலும் கட்டுரை) , ஞானி (மார்க்சியமும், தலித் இலக்கியமும், மார்க்சியமும் இலக்கியமும் கட்டுரைகள்), நூல் விமர்சனங்கள் (லதா ராமகிருஷ்ணனின் டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் பற்றிய விமர்சனம் போன்ற கட்டுரைகள்), கவிதைகள், சிறுகதைகள், இலங்கைத் தமிழ் நாவல் பற்றிய கட்டுரைகள் (ஆசிரியரின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் தேவகாந்தன் என்பதை உணரமுடிகின்றது.), திகசி கட்டுரைகள், பேராசிரியர் நா.சுப்பிரமணியனின் கவிஞர் மஹாகவியின், எழுத்தாளர் டானியலின் படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அந்தனி ஜீவாவின் 'மலையகத் தமிழ் நாவல்கள் பற்றிய கட்டுரை ஆகிய கட்டுரைகள் இலக்கு இதழின் இலக்கியச் சிறப்பை எடுத்துக்கூறுகின்றன. இவற்றுடன் கவிதைகள், நூல் விமர்சனங்களும் இதழின் உள்ளடக்கத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அத்துடன் ஏனைய சிற்றிதழ்கள் பலவற்றின் விளம்பரங்களை இலக்கு பிரசுரித்து அவற்றை இலக்கு சஞ்சிகையின் வாசகர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரிய இலக்குவின் செயற்பாடு.
இலக்கு வெளியாவதற்குச் சில வருடங்களின் முன்புதான் சோவியத் கூட்டமைப்பு உடைந்தது. மார்க்சியம் பற்றி, அதன் எதிர்காலம் பற்றியெல்லாம் உலகின் பல பாகங்களிலுமுள்ள மார்க்சியர்கள், ஏனையவர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. தலித் இலக்கியம் பற்றி, பின் நவீனத்துவம் பற்றி, பெண்ணியம் பற்றியெல்லாம் தமிழ் இலக்கியச் சூழலில தர்க்கங்கள் பல நிகழ்ந்தவாறிருந்தன. அத்தகைய சூழலில் வெளியான இலக்கு மார்க்சியத்தின் எதிர்காலம், தலித் இலக்கியம், பெண்ணியம் பற்றியெல்லாம் தன் கவனத்தைத் திருப்பி, அவ்விடயங்கள் சார்ந்த ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள் வெளியிட்டது. குறிப்பாக 'இலக்கு' சஞ்சிகையின் முதலாவது இதழில் அபிமானியின் 'நோக்காடு' சிறுகதைத்தொகுப்பு பற்றிய தனது விமர்சனத்தில் எழுத்தாளர் தேவகாந்தன் 'தலித் இலக்கியம்' பற்றி எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. தலித் இலக்கியம் படைப்போர் தலித்தாக இருக்க வேண்டுமா?, தலித்தாக இருந்தாலும் படைப்புகளில் விபரிக்கப்படும் தொழிலைச் செய்பவர்கள்தாம் அவ்விதப் படைப்புகளை எழுத வேண்டுமா, தலித் இலக்கியம் யதார்த்தவாதக் கோட்பாடுகளுக்குள் அடங்குகின்றதா?, ஆபிரிக்க இலக்கியத்துடன் தலித் இலக்கியம் அடிக்கடி ஒப்புநோக்கப்படுவது சரியான என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். இவற்றுக்கு அடுத்த இதழில் விமர்சகர் தி.க.சிவசங்கரன் தான் நம்பும் சித்தாந்தங்களுக்கு அமைய தெளிவாகப் பதிலளித்திருந்தார். எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் டானியலின் 'பஞ்சகோணங்கள்' நூல் விமர்சனமும் நன்றாக அமைந்திருந்தது. இலங்கையின் சமகாலச் சமூக, அரசியல் சூழலினை உள்வாங்கி, வர்க்கப்பிரச்சினை, வர்ணப்பிரச்சினை, ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை விடயங்களில் டானியலின் எண்ணோட்டங்களின் அடிப்படையில் நாவலை அணுகியிருந்தார். நல்லதோர் அணுகுமுறை. அவ்வணுகுமுறை நல்லதொரு கட்டுரையினைத் தந்திருக்கின்றது. ஞானி அவர்களின் கட்டுரை மார்க்சிய சிந்தாந்தை ஏற்றுக்கொண்ட அவரது சிந்தனை ருஷ்யாவில் நிலவிய கட்சிரீதியிலான அரசியலைக் கண்டிக்கின்றது.
இலக்கு சஞ்சிகையின் குறைபாடாக நான் கருதுவது: அதிகமான அளவில் கலை, இலக்கியத் தகவல்கள் , குறுங்கட்டுரைகள் மீள்பிரசுரங்களாக சஞ்சிகையின் இதழ்களில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாமென்று தோன்றியது. ஒரு சிலவற்றைப் பிரதான கட்டுரைகளிலொன்றாக எண்ணி வாசிக்கத்தொடங்குகையில் அவை ஏற்கனவே பிரசுரமானவற்றின் சிறிய பகுதிகளாக இருந்ததைக் கண்டு ஏமாற்றமே ஏற்பட்டது. உதாரணத்துச் சுந்தர ராமசாமியின் புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரையினைக் குறிப்பிடலாம். மணிக்கொடி சஞ்சிகையின் பொன்விழா மலரிலிருந்து பெறப்பட்ட கட்டுரையைக் குறிப்பிடலாம்.
இதழியல் வரலாற்றில் இலக்குவின் நிலை
இவ்விதமாகச் சமுதாயப் பிரக்ஞை மிக்க ஆக்கங்களை உள்ளடக்கிய 'இலக்கு' சஞ்சிகையின் படைப்புகள் மேலோட்டமானவையல்ல. ஆழ்ந்து சிந்திக்க வைக்கும், அறியாததை அறிய வைக்கும், அறிந்ததை மேலும் புரிய வைக்கும் ஆழமானவை. இப்படைப்புகள் இலக்குவின் வெற்றியை , அதன் இருப்பிடத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆக்கபூர்வமான பங்களிப்பைச் சிற்றிதழ்கள் வரலாற்றில் இலக்குவும் நல்கியுள்ளதை இலக்கு சஞ்சிகையின் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சிற்றிதழ் சஞ்சிகைகளில் ஒன்றான இலக்கு தமிழ் இலக்கிய உலகில் கவனிப்புக்குரிய சிற்றிதழ்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது. எவ்வித இலக்குமற்று பூற்றீசல்களாகச் சஞ்சிகைகள் வெளிவரும் காலகட்டத்தில் தனக்கென்று ஓர் இலக்கினை நிர்ணயித்து, அதன் வழி செயற்பட்ட இலக்குவின் நோக்கமும் செயலும் முக்கியமானவை. வெளியான இலக்கு இதழ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக ஆவணப்படுத்தப்படுவதும் முக்கியமானது என்னும் எண்ணம் இவ்விதழ்களை வாசித்தபோது தோன்றியது. அதன் மூலம் இலக்கு சஞ்சிகையின் இலக்கினையும், அந்த இலக்கினை இலக்கு அடைந்ததா என்பது பற்றியும் அறிந்துகொள்வது வாசகர்களுக்கும் , இலக்கியத்திறனாய்வாளர்களுக்கும் இலகுவானதாகவிருக்கும். அதே சமயம் சிற்றிதழ் வரலாற்றில் இலக்கு சஞ்சிகையின் நிலையினை வெளிப்படுத்தும் நல்லதோர் ஆவணமாகவும் அது விளங்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.