- விவேகானந்தனூர் சதீஸ். -
இன்னும் இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இவ்விதம் வாட வேண்டும் என்பது புரியாத புதிர். நாட்டில் யுத்தம் முடிந்து பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டன. தமிழர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரரை பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்கின்றார். ஆனால் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 34 பேர் இன்னும் சிறைகளில் வாடுகின்றார்கள். இவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்வதே சரியான செயல். அதே சமயம் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இராணுவ வீரர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்விதம் விடுதலை செய்யப்படும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும், இதுவரை சிறைக்கம்பிகளின் பின் தம் சுதந்திரத்தை இழந்திருந்ததற்காக உரிய நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். இதற்காக நீதிக்காகப் போராடும் அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும். இவ்விதம் சிறையினில் வாடும் அரசியல் கைதிகளுக்காகக் குரல் கொடுக்கும் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.
எழுத்தாள்ர் சிவ ஆரூரன் தொடர்ந்தும் சிறையில் வாடுவதை அனைவரும் அறிவோம். அவரைப்போல் இன்னுமோர் எழுத்தாளரும் தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றார். அவர்தான் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளார் விவேகானந்தனூர் சதீஸ். இவரது சிறுகதைத்தொகுப்பான 'வேப்ப மரமும், பவளம் ஆச்சியும்' ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இது தவிர 'இரும்புக் கதவுக்குள் இருந்து', 'விடியதலைத் தேடும் இரவுகள்' ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. சிறையில் இருந்தவாறே இவற்றை எழுதிய விவேகானந்தனூர் சதீஷ் தொடர்ந்தும் ஊடகங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதையென்று எழுதிக்கொண்டிருக்கின்றார்.
எழுத்தாள்ர் விவேகானந்தனூர் சதீஸ் தன் சிறைச்சாலை அனுபவங்களின் அடிப்படையில் கதை, கவிதை, கட்டுரை என எழுதி வருகின்றார். அவ்வகையில் அவை முக்கியத்தும் மிக்கவை. அவை அனைத்தும் எதிர்காலத்தில் முக்கிய ஆவணங்களாகவுமிருக்கும் என்பதால் நூலுருப்பெற வேண்டும்.
விரைவில் இவரும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு, இதுவரை இழந்த சுதந்திரத்துக்காக உரிய நட்ட ஈட்டினையும் பெற வேண்டும். இதற்காகத் தொடர்ந்தும் மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் சகல அமைப்புகளும் இன, மத, மொழி பேதமின்றி பாடுபட வேண்டும்.
விவேகானந்தனூர் சதீஷின் கவிதையொன்று:
எதிர்பார்ப்பு - விவேகானந்தனூர் சதீஷ் -
கம்பிக் கூண்டு
இருப்பிடத்துக்குள்ளிருந்து
கை விலங்கற்ற காலத்தை
கண் தேடுகிறது.
துணைக் குருவியின் நினைவினில்
எப்போது இணைவோமோ என்று
ஏக்கத்துடன் காத்திருக்கிறது
ஒரு சிறைக் குருவி.
எனது இயல்பு வாழ்வுக்காய்
எதையும் செய்யாதவர்கள்
உனது எதிர்காலத்துக்காவது
ஏதோனும் செய்வார்களா?
எனக்கெனப் புலரும்
பொழுதொன்றில் நான்
இறக்கையிழந்து இருப்பினும்
பரவாயில்லை.
விவேகானந்தனூர் சதீஷின் கவிதைத்தொகுப்புகள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.