சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
திரு. சாள்ஸ் தேவசகாயம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவரும் இந்தத் தமிழ் மிரர் பத்திரிகை தமிழ் வாசகர்களை மட்டுமல்ல, ஆங்கிலம் தெரிந்த பல்வேறு சமூகங்களையும் சென்றடைவதால், தமிழர்களைப் பற்றி, அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தை, அரசியல் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் ஏனைய கனடியர்களும் அறிந்து கொள்ள மிகவும் உதவியான ஊடகமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே இப்போது நடக்கும் சில விழாக்கள் திசை மறிக் கொண்டிருக்கும் போது, இந்த விழாவில் முக்கியமாக ஒரு விடயத்தை அவதானித்தேன். சைவமும் தமிழும் இரு கண்கள் என்பது போல, கனடாவில் இருக்கும் இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளில் அனேகமானவை தமிழர்கள் முக்கியமாக வணங்கும் முருக்கடவுளைக் கருப்பொருளாகக் கொண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முருகனைப் பற்றிய பாடல்களும், நடனங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. பிரதம விருந்தினர் திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்களின் உரையும் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பு சார்ந்ததாகவும், குடும்பத்தில் பெண்களின் முக்கிய பங்களிப்பு, மற்றும் இளைய தலைமுறையினரின் ஒழுக்கம் சார்ந்ததாகவும் அமைந்திருந்தது.
தமிழ்மிரர் பத்திரிகையில் வெளிவரும் இளைய தலைமுறையினரின் பக்கங்களுக்குப் பொறுப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்ததால், இளைய தலைமுறையினர் சார்ந்த நிகழ்வுகள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மற்றும் இளைய தலைமுறையினரின் பல நிகழ்சிகள் இடம் பெற்றது மட்டுமல்ல, அவர்களைப் பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. கடந்த 30 வருடங்களாக எமது தாய்மொழிக்காக இங்குள்ளவர்கள் உழைத்த உழைப்பின் பலனை இந்த விழாவில் இளையோர்களின் வடிவில் காணமுடிந்தது. அவர்களின் வியப்புமிகு திறனைப் பார்த்த போது, ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் வரிகள்தான் நினைவில் வந்தன. நாளைய எமது சமூகத்தைக் கனடிய மண்ணில் தமிழர்களாக வழிநடத்தப் போவது இவர்களைப் போன்ற இளையோர்தான் என்பதில் தமிழ் மக்களாகிய எமக்கும் பெருமை உண்டு!
விழா இணைப்பளர்களாக சாள்ஸ் தேவசகாயத்தின் குடும்பத்தினரும், நளினி செல்வியா, மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். அபிஷேகா லொயிட்சன் அறிவிப்பாளராக விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார். நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. விருந்தினர்களுக்குத் தேனீர், சிற்றுண்டிகளுடன் இரவு உணவும் வழங்கப்பட்டது. இந்த விழா சிறப்பாக நடைபெற உதவியாக இருந்த கனடிய வர்த்தகப் பெருமக்களுக்கு வாசகர்கள் சார்பாக எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.