படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் ! கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை ! - முருகபூபதி -
“ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. கீழே தாங்கி நிற்பவர்கள் அனுபவம் மிகுந்தவர். அவர்களின் அனுபவம் என்ற அத்திவாரத்தில்தான் இளைய தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது. இவ் இருவர்களும் பிரதான மாணவர்களே. இந்த இருவரிடையேயும் வளரும் 'கொண்டு கொடுத்தல்' உறவு இருவரையும் வளர்க்கும் “ இவ்வாறு ஈழத்து தமிழ் அரங்கத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் பா. நிரோஷனின் அரங்க ஆளுமைகள் நால்வர் என்ற நேர்காணல் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை கூறியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதியிருக்கும் கூத்த யாத்திரை ( நான் கொண்டதும் கொடுத்ததும் ) கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரண்டு நூல்களும், மேற்குறித்த அவரது கருத்தை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் விரிந்த தளத்தில் பேசுகின்றன. கால ஓட்டத்தினூடே மாறிவந்த கூத்து பற்றிய அவரது கருத்தியலையும் செயற்பாடுகளையும் பற்றிப் பேசுகிறது கூத்தே உன் பன்மை அழகு. அவரது இளமைப்பராயம் முதல் அவர் கூத்துக்கலைக்கு அறிமுகமான பின்னணியையும் கூத்து அனுபவங்களையும் வாழ்வில் கண்டு மகிழ்ந்த கூத்துக்கலைஞர்கள் பற்றியும் தனக்கு கூத்தறிவூட்டிய அண்ணாவிமார்கள், ஆசிரியர்கள் பற்றியும் விளக்குகிறது கூத்த யாத்திரை என்ற நூல்.