குறிஞ்சிப்பாட்டு சுட்டும் 'பிறங்குமலை மீமிசைக்கடவுள் முருகப்பெருமான்' - - முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.
“உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”(பொருந.131-132)
எனவும்,
“முருகன் நற்போர் நெடுவேள் ஆவி”(அகம்.1)
என்றும்,
“அணங்குடை முருகன் கோட்டத்து“(புறம்.299)
எனவும் பல இலக்கியச் சான்றுகளைச் சுட்டிச் செல்லலாம். வெறியாட்டு என்ற நிகழ்வு முருகவழிபாடாகச் சுட்டப்படுவதையும் அகநூல்களில் காணமுடியும். இவ்வாறு மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் கடவுளாகப் போற்றப்படும் முருகனைக் குறித்த செய்திகள் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.