முன்னுரை
சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
தமிழ்மொழிக் காப்பியங்கள் பிற சமயங்களின் தாக்கத்தினால் தோன்றியவையா? என்பது இக்கட்டுரையின் சிக்கலாக அமைகிறது.
தமிழ்மொழிக் காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர மற்ற காப்பியங்கள் பிற மொழியில் தோன்றியவை. அக்காப்பியங்களைத் தமிழ்மொழியில் மொழியாக்கம் செய்துள்ளனர் அல்லது தழுவி உள்ளனர். எனவே, தமிழ்மொழிக் காப்பியங்கள் பிற சமயங்களின் தாக்கத்தினால் தோன்றவில்லை என்பதே இக்கட்டுரையின் கருதுகோளாக உள்ளது.
காப்பியம் என்னும் சொல்
தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது காப்பியம் எனக் கருத இடம் உண்டு. வடமொழியில் உள்ள காவ்யா என்னும் சொல்லிலிருந்துதான் இச்சொல் தோன்றியது என்பர் மூடர் கூட்டம். அக்கூட்டத்திற்கு முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்றும் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்றும் முதலில் தோன்றிய படைப்புகளும் தமிழ்தான் என்றும் நன்கு தெரியும். இதற்கானச் சான்றுகளும் நாளுக்குநாள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தமிழ்ச் சான்றோர்களும் இங்கு எடுத்துக் கூறிக் கொண்டுதான் உள்ளனர். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இந்தப் பழைய கருத்துகளையே நாம் கூறிக் கொண்டிருப்பது? தமிழில் புதிய கருத்துகள் தோன்றி கொண்டே இருக்கின்றன. கருத்துகள் தோன்றதோன்ற அவற்றைத்தான் இங்கு எடுத்துக்காட்ட வேண்டும் அல்லது கூற வேண்டும். அதைவிடுத்து பழைய செய்தியைக் கூறுவதென்பது தர்மம் இல்லாதச் செயலாகும். தொல்காப்பியத்தின் காலம் இதுதான் என்று வரையறுத்துக் கூறமுடியாத நிலைதான் இங்குள்ளது. தமிழ்மொழியில் என்ன இருந்ததென்று ஆராய்ந்து கூற அறிவில்லார்க்கு, வடமொழியில் என்ன இருந்தது என அறிய முடிகிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது. எனவே, காப்பியம் என்னும் சொல் தமிழ்மொழிக்கே உரிய சொல் என இங்கு வலியுறுத்தப்படுகிறது.
காப்பியம் என்றால் என்ன?
தெய்வத்தையோ அல்லது உயர்ந்த மனிதர்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்டு, வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றைச் சிறப்பித்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கொண்ட நீண்ட கதை (செய்யுள்) காப்பியம் எனப்படும். இதனைத் தண்டியலங்காரம் என்னும் நூல் கூறியுள்ளது. இந்நூல் வடமொழித் தண்டியாசிரியர் இயற்றிய காவியாதரிசம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும் என்பர்.
தமிழ் முதன்மைக் காப்பியங்கள்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியங்கள் ஆகும். பிற எம்மொழியிலிருந்தும் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதப் பெறாதது இவை. பெரியபுராணம் தமிழில் எழுந்த காப்பியம், தமிழகத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் சிறப்பினை எடுத்துரைப்பது.
தண்டியலங்காரம் கூறும் காப்பிய வரையறை தமிழில் தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு நூல்களுக்கும் பொருந்தி வரவில்லை என அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளனர். ஏனென்றால் தண்டியலங்காரம் என்னும் நூல் தமிழ்மொழி இலக்கியத்திற்குரிய இலக்கணம் அன்று; அது வடமொழி இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகும். இவ்வாறு நூல் இருக்கும்பொழுது, எப்படி தமிழ்க் காப்பியத்திற்குப் பொருந்தி வரும்? பொருந்தி வராது.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு நூல்களுக்குப் பின் எழுந்த அனைத்து காப்பியங்களும் பிற மொழியிலிருந்து தமிழிற்குக் கொண்டு வந்தது மட்டுமில்லாமல், இலக்கணத்தையும் பிற மொழியிலிருந்து கொண்டு வந்து நம் மீது திணித்துள்ளனர்; திணிக்கின்றனர் என்றுதான் கூறு வேண்டும். ஏன் தமிழில் காப்பியம் படைப்பதற்குரிய கவிஞர்கள் இல்லாது போயினரா தமிழ்நாட்டில்? அல்லது தமிழர்களிடம் நல்ல சிந்தனைகளே இல்லாது போனதா? தமிழர்களாய் பிறந்த ஒவ்வொருவரும் இதனைச் சிந்தித்துப் பாருங்கள்.
'தண்டியலங்காரம், காப்பியத்திற்கு என வகுத்த இலக்கணக் கூறுகளைக் காலத்தால் அவ்விலக்கண நூலுக்கு முற்பட்டனவாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்து, சில கூறுகள் இக்காப்பியங்களில் அமையவில்லை; சில வேறுபட்டுள்ளன என்றெல்லாம் ஆராய்வது முறையானதாகாது. தண்டியலங்காரக் கருத்துகளை அடுத்து வந்த காப்பியங்களில் அமைத்துப் பார்த்துப் பொருந்திவந்தால் அதுகண்டு மகிழ்தல் முறை. முந்தையவற்றை ஒப்பிட்டுக் குறை கூறுதல் கூடாது" என்று திரு.கி.சிவக்குமார் அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் என்னும் இணையத்தளத்தில் கூறியிருக்கிறார்.
ஏதோ ஒரு கூட்டம் பிறமொழி நூல்களைத் தமிழில் எழுதியது மட்டுமில்லமல், அவை அனைத்தும் தமிழ் நூல்கள் என்று கூறுவதும் கற்பிப்பதும் திரு.கி.சிவக்குமார் அவர்களுக்குத் தவறாகத் தோன்றவில்லை. வடமொழியில் எழுந்த இலக்கண நூல் தமிழில் தோன்றிய இலக்கியத்திற்குப் பொருந்தவில்லை என்று கூறியது மட்டும் உங்களுக்குத் தவறாகத் தோன்றியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். சீவக சிந்தாமணி நூலைத் தவிர மற்ற நூல்கள் எவையும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இப்படி நிலை இருக்கும் பொழுது திரு.கி.சிவக்குமார் அவர்கள் எந்த நூல்களுடன் தண்டியலங்காரத்தை ஒப்பிடக் கூறுகிறார்? என்பதுதான் வினாவாக உள்ளது.
பிறமொழிக் காப்பியங்கள்
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி, பெருங்கதை ஆகியவை வடமொழி, பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளில் அமைந்த காவியங்களைத் தழுவியும் மொழிபெயர்த்தும் எழுதப் பட்டனவை என்று தமிழறிஞர் கூறுவர்.
பிரபுலிங்கலீலை என்னும் காப்பியம், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் கன்னட மொழியிலிருந்து மொழி பெயர்த்து எழுதப்பட்டது எனக் கூறுவர்.
சீறாப்புராணம், இயேசு காவியம் போன்ற காப்பியங்கள் அரபிமொழி, யூதமொழி ஆகியவற்றின் மூலக்கதைகளைத் தமிழின் தன்மைக்கேற்ப அமைத்து எழுதப்பட்டனவாகும்.
இவ்வாறு தமிழில் காப்பியங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் சிலவற்றை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் பிரித்துள்ளனர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் எனவும் உதயணகுமார காப்பியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்கள் எனவும் கூறுவர். ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் சொல்லை மயிலைநாதர் (நன்னூல் உரையில்) அவர்களும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற சொல்லை சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய மூன்றைத் தவிர மற்றவை எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வற்றை இரண்டாகப் பிரித்தனர் என்பது அறிஞர்களின் வினாவாக உள்ளது.
தமிழகத்தில் சமண, பௌத்தச் சமயங்களின் தாக்கம்
தமிழர்கள் இங்கு அனைத்துவகையான ஒழுக்க நெறிகளையும் போற்றி வளர்த்தனர்; வாழ்ந்தனர். மேலும், தமிழர்கள் தாம் மேற்கொண்ட நெறிகளுக்கு எப்பெயரையும் சூட்டிக்கொள்ளவில்லை. அதன் போக்கிலேயே வாழ்ந்தனர். தமிழர்கள் இவ்வாறு வாழ்ந்திருக்கும் பொழுது, இவர்கள் எந்தச் சமயத்தையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.
இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் தோன்றிய சமயங்கள் யாவும் தமிழர்கள் போற்றிய அறக்கருத்துகளைக் கொண்டு உருவானவை; உருவாக்கப்பட்டவை. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், தமிழர்கள் போற்றி வாழ்ந்த அறக்கருத்துகளுள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அவரவர் விருப்பத்திற்கேற்ப சமயங்களை உருவாக்கிக் கொண்டனர். எனவே, தமிழகத்தில் எந்தச் சமயங்களின் கருத்துகளும் தாக்கத்தை எற்படுத்தவில்லை இலக்கியங்களின் வழித் திணித்துள்ளனர் என்பதே உண்மை. அவற்றைப் பின்வருமாறு காணலாம்.
சமண சமயத்தின் கொள்கைகள்
சமணர் என்பதற்குத் ‘துறவிகள்’ என்று பொருள் கூறுகின்றனர். சமணச் சமயத்தின் கொள்கைகளுள் முக்கியமானவை,
01. அகிம்சை.
02. மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை.
03. கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது.
04. எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்.
05. நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு.
06. மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது.
07. முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். (https://ta.wikipedia.org/wiki/)
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஏழு காப்பியங்களும் சமணக் காப்பியங்கள் என்று கூறப்படுகின்றன.
சிலப்பதிகாரம்
தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானது இதுவே. சிலப்பதிகாரம் என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாராட்டப்படுகிறது. புகார்க்காண்டம்(10), மதுரைக்காண்டம்(13), வஞ்சிக்காண்டம்(7) என்னும் மூன்று காண்டங்களில் முப்பது காதைகளை உடையது இக்காப்பியம். சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். கீழ்க்காணும் முப்பெரும் உண்மைகளை விளக்குவது சிலப்பதிகாரம்.
1.அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்; ஊழ்வினை, விடாது பற்றித் தொடரும்; கற்புடைப் பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள் என்னும் கருத்துகளையே மேற்குறித்த வரிகள் சுட்டுகின்றன.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போலவோ, வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஆவர்.
சிலப்பதிகாரம் சமணச் சமயத்தைச் சார்ந்தது என்று அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். சிலப்பதிகாரத்தில் உள்ள கதை மாந்தர்களின் நிகழ்வுகள் என்பன தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும். தமிழக மக்கள் அறம், பொருள். இன்பம், வீடு ஆகிய நான்கு நிலைகளில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். மேற்கூறியவற்றுள் இன்பம் என்பது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வளம்பெற்று இன்பநிலையை அடைவதாகும். இல்லற வாழ்க்கை முடிந்த பிறகு வடக்கிருக்கும் நிலையை மேற்கொள்ளுவதுதான் வீடு நிலையாகும்.
சமணச் சமயம் குடும்ப(திருமண) வாழ்க்கை மேற்கொள்ளுதல் கூடாதெனக் கூறுகின்றது. ஆனால் சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழும்நிலையைக் கூறுகின்றது. எனவே, இந்தக் கருத்தின் படி இக்காப்பியம் சமணக் காப்பியம் இல்லை என்பது அறியப்படுகிறது.
வடக்கு முகமாக அமர்ந்து நிர்வாணநிலையை அடைதலைச் சமணச் சமயம் கூறுகின்றது. இந்நிர்வாண நிலையைத்தான் வீடுபேறு அடைதல் என்பர். கோவலன், கண்ணகி ஆகிய இருவர் மட்டுமல்ல, வேறு எவரும் நிர்வாணநிலை எய்தியதாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. அப்படி இருக்கும் பொழுது இந்நூல் எப்படி சமணக் காப்பியம் எனக் கூற முடியும்? எனவே, இந்நூல் சமணக் காப்பியம் இல்லை என்பதற்கு இச்செய்தி மற்றொரு கருத்தாக அமைகிறது.
கடவுள் இல்லை என்ற கொள்கையை முன் மொழிகிறது சமணச் சமயம். ஆனால் சிலப்பதிகாரம் கண்ணகிக்குச் சிலைவடித்ததையும் வாழிபாடு நிகழ்ந்தியதையும் கூறுகின்றது. எனவே, இக்கருத்தின் மூலமும் இந்நூல் சமணக் காப்பியம் இல்லை என்பது தெளிவாகிறது.
இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்று கூறுவர் அறிஞர். அதற்குச் சான்றாகக்,
குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு
என்ற பாயிர அடிகளை எடுத்துக்காட்டி, அடியார்க்கு நல்லாரின் விளக்கத்தைக் கூறுவர். அதாவது, ‘குணவாயில் என்பது திருக்குணவாயில் என்பதோர் ஊர். கோட்டம் என்பது அருகன் கோட்டம்; அடிகள் என்பது சமணத் துறவியர்க்கானது’(https://www.tamilvu.org/courses/degree/p202/ p2023/html/p2023l21.htm) என்பது உரை ஆசிரியர் தரும் விளக்கம். கோட்டம் என்பது அருகன் கோட்டத்தைக் குறித்தது என்றால் அக்கோட்டம் முருகனைக் குறித்ததாகும். ஏனெனில் அறுகண் என்பதே அருகன் என்றாகி பின்னர் முருகன் என்றானது என்று தமிழ்ச்சிந்தனையாளர் பேரவையின் தலைவர் திரு.பாண்டியன் அவர்கள் பல சான்றுகளைக் கொண்டு நிறுவியுள்ளார். மேலும், அருக்கன்மேடு என்னும் ஊர் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பெயர் முருகன் பெயரால் அமைந்தது என்று அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கூறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் (தமிழகம், புதுவை வரலாறும் பண்பாடும்) கூறியுள்ளனர்.
மேலும், அடிகள் என்ற சொல் பொதுவானது. அடிகள் என்ற சொல் சமணத் துறவியரைக் குறித்தது என்று எதனடிப்படையில் ஆசிரியர் கூறுகிறார்? என்பது வினாவாக உள்ளது. எனவே, இக்கருத்துகளின் மூலமும் இக்காப்பியம் சமணம் சார்ந்ததில்லை என அறியமுடிகிறது.
குடும்ப வாழ்க்கை வாழாது, துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதலை வற்புறுத்திக் கூறுவது இச்சமயத்தின் முதன்மை கொள்கை எனலாம். குடும்பம் என்பது நம் சமூதாயத்தின் அங்கம். குடும்பம் இல்லையேல் நாளைய சமூதாயம் இல்லை. நல்ல கருத்துகளையும் ஒழுக்கங்களையும் நெறிகளையும் குடும்பம் என்ற அமைப்பின் மூலந்தான் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த முடியும். அப்பொழுதுதான் அவை, காலங்காலமாக இங்கு நிலைத்து நிற்கும். இல்லையென்றால் அவை அழிந்து போகும். இவற்றைச் சமணச் சமயம் உணரவில்லை. ஆனால் தமிழர்கள் இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு நெறிகளையும் போற்றி வாழ்ந்தனர். அதனால்தான் தமிழர் என்றொரு இனம் இன்றும் நிலைத்திருக்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள் முதல் மூன்றைத் தமிழர்கள் அனைவரும் போற்றி வாழ்ந்தனர். நிர்வாணநிலையை அடையும் வீடு பேற்றை மட்டும் பெரும்பாலானோர் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) போற்றி வாழ்ந்துள்ளனர். இதனடிப்படையில் உருவானதுதான் முதுமக்கள் தாழிகள் என்ற அமைப்பாகும். மேலும், தன் நிலைமையில் தாழ்வு ஏற்பட்டதை எண்ணி வடக்கிருத்தலைப் புறநானூறு 213-ஆம் பாடலும், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலைப் புறநானூறு 65-ஆம் பாடலும், மானத்திற்காக வடக்கிருத்தலைப் புறநானூறு 74-ஆம் பாடலும், நட்புக்காக வடக்கிருத்தலைப் புறநானூறு 215-ஆம் பாடலும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே, வீடு பேறு அடைதலைத் தமிழர்கள் பின்பற்றினர் என அறிய முடிகிறது.
பெருங்கதை
கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை ஆகும். இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதை யாக உருவாயிற்று. பெருங்கதை உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. அகவல் யாப்பில் உள்ளது. இது தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.
குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி ஆவான். உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.
'கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.
தீவினையாகும் கருமம் தீர்ந்த உயிர் மேலே செல்லும்
(பெருங்கதை, உஞ்சைக் காண்டம் : 40: 186)
அல்லூண் நீத்தல் (பெருங்கதை, வத்தவ காண்டம் : 4 : 159)
என்பன சமண சமயக் கருத்துகளாம்" என்று தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற இணையத் தளம் கூறுகின்றது. நல்வினை, தீவினை ஆகியவற்றைப் பற்றிப் பௌத்தச் சமயமும்தான் கூறியுள்ளது. பிறகு எந்த அடிப்படையில் இந்நூல் சமணச் சமயம் சார்ந்தது என்கிறார் இவ்வாசிரியர்?
இந்நூல் ஒரு வடமொழி நூல் என்று அறிஞர்களே ஏற்றுக்கொள்கின்றனர். வடமொழி நூலில் வடமொழிக் கருத்துகள்தான் இருக்கும். இதில் நமக்கு எந்த ஐயமும் வேண்டாம். வடமொழி நூலைத் தழுவி, தமிழ்மொழியில் எழுதிய காப்பியத்தைப் பிறமொழி சமயத்தாக்கத்தினால் தோன்றியது என்கின்றனர். இது எந்த விதத்தில் தர்மம்?
சீவக சிந்தாமணி
தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. சீவகன் என்பவர் கதையின் நாயகன் ஆவார். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் இந்நூல் சீவக சிந்தாமணி என்று பெயர் பெற்றது. சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர்.
சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.
சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.
சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு.
இந்நூல் சமணச் சமயத்தைச் சார்ந்தது எனக் கூறுவர். ‘சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர் என்று தமிழ் இணைக்கல்விக்கழகம் கூறுகின்றது. இல்லறச் செய்தியைக் கூறிய பொழுதே இந்நூல் சமணச் சமயத்திற்கு எதிரானது என்பது விளங்குகிறது. இக்கருத்தைப் பற்றி முன்பே விளக்கப்பட்டுள்ளது. எனவே, இதனைச் சமணக் காப்பியம் என்று கூறுவது ஏற்புடையதன்று.
ஒருவர் எட்டு பெண்களை மணத்தல் என்பது தமிழன் முதன்முதலில் தோன்றிய காலக்கட்டத்தில் மக்களின் பெருக்கத்திற்காக நிகழ்ந்திருக்கலாம். குடும்பம் என்ற அமைப்பைத் தமிழர்கள் தோன்றிவித்தப் பின்பு ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு நிலை உருவாக்கப்பட்டது. எனவே, இந்நூல் தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராகவும் உள்ளது.
இந்நூலின் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு என்கின்றனர். மேலும், வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர் என்றும் கூறப்படுகிறது. வடமொழி நூல்களைத் தழுவி எழுதப்பட்டது என்றால் இது ஒரு தழுவல் நூல்; தமிழ்மொழி மரபு நூல் இல்லை. எந்த ஒரு இலக்கியமும்(நூல்) அம்மொழி சார்ந்த கருத்துகளைக் கொண்டு புதியதாகப் படைக்கப்படுகிறதோ அதுவே அம்மொழிக்கான இலக்கியமாகும். மற்றவை அனைத்தும் தழுவல், மொழிப்பெயர்ப்பு என்ற தன்மைக்குள் சேரும். எனவே, இந்நூல் தமிழ்மொழி இலக்கியம் அன்று; தழுவல் நூல் என்பது தெளிவாகிறது.
ஒருவன் எட்டுப் பெண்களை மணந்து கொள்வது வடமொழியாளர்களின் பண்பாக இருந்திருக்கலாம். அந்தப் பண்பை எதற்குத் தமிழ்மொழியில் இயற்றித் திணித்தனர்? இங்குள்ள தமிழர்களின் பண்பை மாற்றுவதற்காகவா? போன்ற வினாக்கள் எழுகின்றன.
வளையாபதி
வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி இரண்டு கிடைத்துள்ளன.
‘இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமணச் சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது. நூற்பாடலைக் கொண்டு இவர் சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என யூகிக்கலாம்’(https://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011154.htm) என்று தமிழ் இணையக் கல்விக்கழகம் கூறுகின்றது. நூலே முழுவதுமாகக் கிடைக்கவில்லை. ஆனால் இந்நூல் சமணச் சமயத்தைச் சார்ந்தது என்று கூறுகின்றனர். நூல் முழுவதும் கிடைக்காத பொழுது எதன் அடிப்படையில் இது சமணம் சார்ந்தது என்ற முடிவுக்கு வந்தனர் அறிஞர்?
நாககுமார காப்பியம்
ஐஞ்சிறு காப்பியங்களிலே ஒன்று. முழுமையாகக் கிடைக்கவில்லை. நாககுமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
'நாககுமார காப்பியம் என்பதும் சைன சமயத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட காப்பியம். அந்த நூல் ஒரு செய்யுளம் எஞ்சாமல் மறைந்தது" (தமிழ் இலக்கிய வரலாறு, ப.எ.191) என மு.வரதராசனார் அவர்கள் கூறியுள்ளார்.
'ஐந்து சருக்கங்களை உடையது. 170 பாடல்களையும் கொண்டுள்ளது. சருக்கங்கள் ஒன்று, இரண்டு என எண்ணுப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குத் தனிப்பெயர் இல்லை. விருத்தப்பாவினால் ஆனது. இதற்கு நாகபஞ்சமி கதை என்ற ஒரு பெயரும் உண்டு. நாககுமார காவியத்தின் மூலநூல் வடமொழி என்று கூறுகிறார்கள். இது ஒரு சமண முனிவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்" என்று தமிழ் இணையக் கல்விக்கழகம் கூறுகின்றது.
இந்நூலைப் பற்றி இரு கருத்துகள் உள்ளன என்பது நமக்குப் புலப்படுகிறது. இதில் எது உண்மை என்பது நமது வினாவாக அமைகிறது.
யசோதர காவியம்
இந்நூல் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறுவது. இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு எனலாம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அறங்களில் தலையாயதும் நல்லாறு எனப்படுவதுமாகிய கொல்லாமை என்னும் அறத்தை எடுத்துரைக்க இது எழுந்தது எனலாம். உயிர்க்கொலை கூடாது என்பதையே மையக்கருத்தாகக் கொண்டு தோன்றிய நூல். நல்வினை, தீவினை ஆகியவற்றின் பயனை விளக்கமாகக் கூறிச் செல்கிறது.
நீலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றாகிய நீலகேசி ஒரு சிறந்த வாதநூல் எனலாம். கருத்துகளை எடுத்துரைக்கும் வகைகளையும் அவற்றை மறுத்துரைக்கும் பாங்கினையும் திறம்பட விளக்கும் சிறப்பினது நீலகேசி. சிறந்த வாதநூலாகக் கருதப்படுகின்ற நீலகேசியை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலமும் அறிய இயலவில்லை.
சூளாமணி
ஐஞ்சிறு காப்பியத் தொகுதியுள் சூளாமணி பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியிருப்பினும் என்ன காரணத்தினால் சிறு காப்பியப் பிரிவில் சேர்த்து வழங்கினார்கள் என்று தெரியவில்லை. சூளாமணியின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சூளாமணிக் காப்பியத்தை இயற்றியவர் தோலாமொழித் தேவர்.
ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதையொன்றினைப் பொருளாகக் கொண்டு எழுந்த நூல் சூளாமணி என்றும், அருகக் கடவுளால் அருளிச் செய்யப்பட்ட மகாபுராணமே இதற்கு முதல் நூல் என்றும் கூறுவர். மேலும் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள ஸ்ரீபுராணம் தான் முதல் நூல் என்றும் கூறுவர். இந்தக் கருத்திற்கு ஏற்கனவே விடைக் கண்டோம்.
மேலும், மேற்காட்டப்பட்ட வளையாபதி, நாககுமார காப்பியம், யசோத காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியவற்றைச் சமணச் சமயம் சார்ந்தது எனக் கூறியுள்ளனர். நூல்கள் முழுவதும் கிடைக்காத பொழுது, அவற்றைச் சமண நூல்கள் என்று கூறுவது ஏற்புடையதன்று. சமணச் சமயங்கள் கூறுகின்ற அறக்கருத்துகள் எல்லாம் நம் தமிழ்மொழியில் உள்ளவையே. எனவே, பிற மொழிக் காப்பியங்களின் வழி சமணக் கருத்துகளைத் திணித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேருமந்திர புரணாம், சாந்திபுராணம் ஆகிய இரண்டும் சமணக் காப்பியங்கள் என்று கூறுகின்றனர். இவையும் சமணக் கருத்துகளைத் தமிழர்களின் புகுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையே ஆகும்.
பௌத்தச் சமயத்தின் கொள்கைகள்
'ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். சித்தார்த் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், புத்தி தெளித்ததால் புத்தர் என அழைக்கப்பட்டார். அவர் கண்ட உண்மைகளை அனைவருக்கும் கூறினார். புத்தம் என்பதே பௌத்தம் என்று மருவியது.
புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.
'நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.
நான்கு உயரிய உண்மைகள்
1. துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
2.ஆசைஃபற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள்
1. நல்ல நம்பிக்கை: நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.
2. நல்லெண்ணம்: இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.
3. நல்வாய்மை அல்லது நல்லமொழி: பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.
4. நற்செய்கை: பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.
5. நல்வாழ்க்கை: பிச்சை எடுத்து வாழ்தல்.
6. நன் முயற்சி: தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
7. நற்சாட்சி: சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.
8. நல்ல தியானம்: லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.
சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.
புத்தர் ஒவ்வொரு மனிதனும் ஆசையை ஒழிக்க வேண்டும் என்கிறார். இவர் கருத்தே இவருக்கு முரண்பட்டு நிற்;கிறது. ஆசையைத் துறக்கக் கூறுகிறார். ஆனால் எட்டு வழிகளைப் பின்பற்றக் கூறுகிறார். இந்த எட்டு வழிகளைப் பின்பற்றுவதே ஒரு வகையான ஆசை(விருப்பம்) தானே? இந்த உலகம் இந்த எட்டு நிலைகளில் இயங்க வேண்டும் என்று புத்தர் விரும்புகிறார். பிறகு எப்படி நாம் விருப்பத்தை விட முடியும்? எனவே, புத்தர் அவர்கள் கூறிய கருத்து அவருக்கே முரணாக உள்ளது என்பது தெளிவாகிறது.
இல்வாழ்க்கை முறையை விடுத்து, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வலியுறுத்திருக்கிறார். இவர் கூறுவது போல் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தால், இவரது போதனைகளை நாளை யார் தூக்கி பிடிப்பது? என்னும் வினா எழுகிறது. நம்முடைய நல்ல கருத்துகள் இங்கு நிலைக்க வேண்டுமென்றால், அதற்கு இம்மண்ணில் மக்கள் வேண்டுமல்லவா? மக்கள் வேண்டுமென்றால் இல்வாழ்க்கையும் வேண்டும். அப்பொழுதுதான் நம் கருத்துகளுடன் மக்களும் இங்கிருப்பர்.
நாம் இங்கு புத்தரின் போதனைகளைத் தவறு எனக் கூறவில்லை. அவற்றில் சில மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்று கூறுகிறோம். ஆசையை நல்ல ஆசை, தீய ஆசை எனப் பிரித்து, நல்லதை விரும்புங்கள் என்று கூறியிருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையோடு துறவற வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திருக்க வேண்டும். இவற்றைப் பௌத்தச் சமயம் பின்பற்றி இருந்தால், இம்மதம் இன்றும் நிலைத்திருந்திருக்கும் என்பது நமது கருத்தாகும். இவை இல்லாததால் பௌத்தச் சமயம் வழக்கொழிந்தது.
மணிமேகலை, குண்டகேசி ஆகிய இரு காப்பியங்களும் பௌத்தச் சமயத்தைப் பற்றிக் கூறுகின்றன என்பர்.
மணிமேகலை
மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற்றப்பட்டு அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணியை நீக்குவதும் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும். இனி, இக்காப்பியம் கூறும் சமயக் கோட்பாடுகளையும் பிறவற்றையும் பார்க்கலாம்.
வினைக் கோட்பாடு, நிலையாமைக் கோட்பாடு, அறநெறிக் கோட்பாடு இம்மூன்றும் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளாகக் கூறுவர்.
வினைக்கோட்பாட்டை நல்வினை, தீவினை ஆகிய இருநிலைகளில் பிரித்து, எவையெவை நல்வினை, எவையெவை தீவினை என இந்நூல் விளக்கிக் கூறியுள்ளது. நல்வினை, தீவினை ஆகிய இரண்டையும் பௌத்தர் மட்டும்தான் அறிந்திருந்தனரா? தமிழர்கள் அறியவில்லையா?
தமிழர்கள் தோன்றியதற்குப் பின்புதான் அனைத்து இனங்களும் தோன்றின. தமிழர்கள் ஒரு பிரிவினர் இலங்கையிலிருந்து சிந்துவெளி பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். அதற்குப் பின்புதான் சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்தனர் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், புத்தர் தமிழ்க்குடிகளில் ஒன்றானச் சாக்கா குடியைச் சேர்ந்தவர் எனத் தமிழ்ச்சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.பாண்டியன் அவர்கள் சான்றுகளுடன் விளக்கி உள்ளார். இவ்வாறு நிலை இருக்கும்பொழுது, எங்கிருந்தோ கருத்துகள் தமிழ்மொழிக்கு வந்தன எனக் கூறுவது தமிழ்மொழிக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
நிலையாமைக் கோட்பாடுகள் பற்றியும் அறக்கோட்பாடுகள் பற்றியும் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் அதிகமாகவே கூறப்பட்டுள்ளன. எனவே, வினைக் கோட்பாடு, நிலையாமைக் கோட்பாடு, அறநெறிக் கோட்பாடு ஆகிய இம்மூன்றும் பௌத்தச் சமயத்திற்கு மட்டும் உரியவை எனக் கருதுவது ஏற்புடையதன்று.
குண்டலகேசி
'கேசி என்பது பெண்ணின் கூந்தலால் (முடி) வந்த பெயர். சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என இக்காப்பியத் தலைவி பெயர் பெற்றாள். அவள் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார். யாப்பருங்கல விருத்தி நான்கு இடங்களில் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகிறது. வீரசோழிய உரை இந்நூலை இரண்டு இடங்களில் குறிப்பதுடன் இதன் ஒரு பாடலையும் மேற்கோள் காட்டுகிறது. புறத்திரட்டில் இந்நூலின் பாடல்கள் 10 எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தம் சிவஞான சித்தியார் பரபக்க உரையில் இதன் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வைசிய புராணம் குண்டலகேசி பெயரால் ஒரு கதை சொல்கிறது. என்றாலும் நீலகேசி உரையே குண்டலகேசி வரலாற்றை அறிய உதவுகிறது. குண்டலகேசியின் வாதத்தை மறுப்பதாகப் பல பாடல்களின் முதற்குறிப்பைத் தருகிறது நீலகேசி. மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற நூலில் ஏறத்தாழ 92 குண்டலகேசிப் பாடல்களின் முதற்குறிப்பைத் தொகுத்துத் தந்துள்ளார் மயிலை. சீனி. வேங்கடசாமி, அவர்கள். 14ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் இருந்து, பின்னர் அழிந்திருக்கக் கூடும். இந்நூலாசிரியர் புத்தரிடம் பக்தி மிக்கவர் என்பதும், அவருடைய முற்பிறப்பு வரலாறு முழுவதையும் நன்கு அறிந்தவர் என்பதும், உலகியல் அறிவு மிக்கவர் என்பதும், அரச வாழ்வில் தொடர்புடையவர் என்பதும் அவர்தம் பாடல் மூலமாக அறிய முடிகிறது.
குண்டலகேசி கதை வடமொழியில் தேரீகாதை உரையிலும் (தர்ம பாலர்), தேரீ அவதானம், தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும் தமிழில் நீலகேசி மொக்கலவாதச் சருக்க உரையிலும் (சமய திவாகர முனிவர் உரை - பாடல் 286) சிற்சில வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது" என இரா.காசிராசன் அவர்கள் கூறுகிறார்.
குண்டலகேசி வேறுமொழி நூல் என்று அறிஞர்களே ஒப்புகொள்கின்றனர். எனவே, வேறுமொழியாளரின் கருத்துகளை இங்குப் புகுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது.
முடிவுரை
தமிழ்மொழிக் காப்பியங்கள் பிற சமயங்களின் தாக்கத்தினால் தோன்றவில்லை. பிற சமயங்களின் கருத்தாக்கங்கள் காப்பியங்களில் இருப்பதாகக் கூறி, அறிஞர் திணித்துள்ளனர் என்பதே இக்கட்டுரையின் முடிவாக அமைகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு நூல்களைத் தவிர மற்ற நூல்கள் யாவும் பிறமொழிகளைத் தழுவிய நூல்கள் என்றும் முன்பே கூறினோம். பிறமொழியாளர்கள் எழுதிய நூல்களில் அவர்களின் கருத்துகள் புகுத்தப்பட்டிருக்கும். அவற்றைத் தமிழ்மொழியில் எழுதி, அக்கருத்துகளைத் தமிழர்களின் மீது புகுத்தி உள்ளனர் என்றும் கண்டோம். எனவே, எந்தச் சமயக் கொள்கைகளும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்னும் கருத்தோடு பிறமொழிக் கொள்களைத் தமிழ்மொழியில் காப்பியங்களின் மூலம் திணித்துள்ளனர் எனத் தெளிவாக அறிய முடிகிறது.
தமிழர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தங்களுக்கென்று உருவாக்கி வாழ்ந்தனர். இந்நெறிகளுக்குத் தமிழர்கள் ஒரு பெயரைச் சூட்டிக்கொள்ளவில்லை. உலகிலேயே தமிழர் என்ற ஒர் இனம் மட்டுமே வாழ்ந்தனர். குமரிக்கண்ட கடல்கோளிற்குப் பிறகு அங்கிருந்து தப்பித்த தமிழர்கள், இலங்கை, சிந்துவெளி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இலங்கையில் குடியேறிய தமிழர்கள் நம் முன்னோர்கள் பின் பற்றிய நெறிகளைப் பின்பற்றினர். சிந்துவெளிக்கும் மற்ற பகுதிகளுக்கும் குடியேறிய தமிழர்கள், பல ஆண்டுகளுகள் கழிந்த பிறகு அவர்களின் பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள்தான் பின்னாளில் வேற்றுமை தோன்றலாயின. அவரவர் தங்களுக்கென்று ஒரு பெயர் வைத்துக் கொள்கின்றனர். தமிழர்களுக்கும் தமிழர்கள் பின்பற்றிய நெறிகளுக்கும் இவர்கள்ததான் பெயர் சூட்டினர் என்றே கூறலாம். தமிழர்கள் பின்பற்றிய நெறிகளிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ளத்தான், இவர்கள் தங்களாகவே பௌத்தம், சமணம், ஆரியம் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் உலகத்தில் ஒரு இனம் இருக்கிறதென்றால் அதற்கு எந்தப் பெயரும் தேவையில்லை. மாறாக ஒரு இனம் தோன்றுகிற பொழுதுதான் வேறுபடுத்திக்காட்ட பெயர் தேவையாகிறது. எனவே, தமிழர்கள்தான் உலகின் மூத்தக்குடி; அவர்களே அனைத்து நெறிகளையும் போற்றி வாழ்ந்து, வளர்த்தவர் ஆவர் என இங்கு உணர்த்தப்படுகிறது.
துணைநூற்பட்டியல்
ஆனந்தன்.சு.(ஆ.), தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி – 620 002, இரண்டாம் பதிப்பு ஜூலை-2002.
சாமிநாதையர்.உ.வே. (பதி.ஆ.), சிலப்பதிகாரம் (மூலமும் அரும்பத உரையும்), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை – 600 090, பதினொன்றாம் பதிப்பு-2008.
சுந்தரமூர்த்தி.கு.(பதி.ஆ.), தண்டியலங்காரம் மூலமும் பழையவுரையும், உரிமை ஆசிரியருக்கே, 1967.
தமிழண்ணல் (ஆ.), புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 625001, இருபத்து ஒன்பதாம் பதிப்பு – ஆகஸ்ட் 2012.
வரதராசன்.மு.(ஆ.), தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுதில்லி-110001, முப்பத்தி நான்காம் பதிப்பு – 2021.
ஸ்ரீசந்திரன்.ஜெ(உ.ஆ.), மணிமேகலை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 600017, மூன்றாம் பதிப்பு – 2002.
இணையத்தளம்: www.tamilvu.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.