- கங்காருவும் கட்டுரையாசிரியரும் -
அடுத்த நாள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன் நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்த வேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர் மதியவுணவுக்காக அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளை மட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள் பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச் சலித்துக்கொள்ள மட்டுமே எங்களால் முடிந்தது.
அன்று மாலையில் என்னைச் சந்தித்த பூபதி அண்ணா, ATBC வானொலிக்காக எழுத்தாளர் கானா பிரபா என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச் சென்றிருந்தார். மின்கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானா பிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்து வைத்திருந்து வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச் செய்திருந்தார். மறுநாள், என் பாடசாலையான மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், எங்களின் அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்கு என்னைக் கூட்டிப்போயிருந்தார்.
- Twelve Apostles -
அவுஸ்திரேலியாவுக்கு வருகிறேன் என்றதுமே, “அக்கா, ஏதாவதொரு இடம் பார்ப்பதற்கு நான் உங்களைக் கூட்டிப்போவேன்” என அவர் அன்புடன் கூறியிருந்தார். வயதில் சிறியவரான அவருடன் ஊரிலிருக்கும்போது அதிகம் பழகியதில்லை. அதை ஈடுசெய்யும் வகையில் அந்தப் போக்குவரத்தில் கழிந்திருந்த 7 மணித்தியாலத்தில் நாங்கள் பலதையும் பத்தையும் பேசித்தீர்த்தோம்.
விக்ரோரியா மாநிலத்திலுள்ள Port Campbell National Parkஇலுள்ள இந்தச் சுண்ணாம்புக்கல் குன்றுகள், தற்போதும் Twelve Apostles என அழைக்கப்பட்டாலும், எட்டு மட்டுமே கடலரிப்பிலிருந்து தப்பி இப்போது மீதமாயிருக்கின்றன. மலைகளுக்கும் கடலுக்குமிடையில் செல்லும் Great Ocean Road எனும் சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற அழகான வீதியிருகில் இது அமைந்துள்ளது. காதலர் தினம் என்ற படத்தில் வரும் “என்ன விலை அழகே,” என்ற பாடல் இங்குதான் படமாக்கப்பட்டிருந்தது. ‘நள தமயந்தி’ என்ற திரைப்படத்தில் வரும் சிவா விஷ்ணு கோவிலுக்கும் அன்று போயிருந்தோம். அவுஸ்ரேலியாவிலிருக்கும் கோவில்களில் சைவ, வைஷ்ணவ மதத் தெய்வங்கள் இணைந்தேயிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவா விஷ்ணு கோவில் -
அந்த வார இறுதியில் அவுஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச் சங்கத்தினரினால் நிகழ்த்தப்பட்டிருந்த ‘ஒன்றே வேறே’ என்ற எனது நூலின் அறிமுக நிகழ்வு, இதுவரை நிகழ்ந்த எனது நூலறிமுகங்களைப் போலன்றி வித்தியாசமானதாக அமைந்திருந்தது. முகம்தெரியாதவர்கள் அதிகமிருந்த அந்தவிடத்தின் உள்ளே சென்றதும் தன்னை எனக்கு அறிமுகப்படுத்திக்கொண்ட கலாதேவி பாலசண்முகன் அந்த நூலை நான் எழுதியமைக்கு நன்றிதெரிவித்து, நீண்டநாட்களின்பின் நல்லதொரு நூலை வாசித்ததிருப்தி கிடைத்ததாகச் சொன்னபோது என் உணர்வுகளை வடிக்க என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. அவரின் கனிவும் பரந்தமனமும் என்னை வியக்கச்செய்தன.
- கலாதேவி பாலசண்முகன் -
என்னை அறிமுகப்படுத்திய பூபதி அண்ணா என் தந்தையாரைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியமை நெஞ்சைத் தொட்டது. ‘ஒன்றே வேறே’ தொடர்பாகக் கருத்துரைத்த கலாதேவி பாலசண்முகனும், பாலசந்தர் செளந்தரபாண்டியனும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பத்து நிமிடத்துக்குள் சிறப்பாக உரையாற்றினார்கள். ரொறன்ரோவில் நிகழும் நூல்வெளியீடுகளில் நிகழ்வதுபோல, ஆசியுரை, வாழ்த்துரையென நேரவீணடிப்புக்கள் எதுவும் அங்கிருக்கவில்லை, வரிசையாக நின்று என்வலப் கொடுத்து நூல் வாங்கும் சடங்கும் அங்கு நிகழவில்லை. பலரின் நூல்கள் விலைபோடப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விருப்பமானவர்கள் வாங்கிக்கொண்டனர். அது புத்தகம் படிக்கப்படலாம் என்றொரு உத்தரவாதத்தைத் தந்தது. பெயரினால் மட்டுமறிந்திருந்த டொக்டர் நொயல் நடேசன், ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம், அக்னிக்குஞ்சு யாழ். பாஸ்கர், எழுத்தாளர் சகுந்தலா கணநாதன் ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கன்று கிடைத்திருந்தது. தலைமைவகித்த சகுந்தலா அவர்களின் கணவர், தனது மனைவியைப் பற்றி உயர்வாகவும் நெகிழ்வாகவும் என்னுடன் கதைத்தபோது முதுமையிலிருக்கும் அந்த அன்பான தம்பதியரைப் பார்க்க நெகிழ்ச்சியாகவிருந்தது.
- கங்காரு தேசத்திக் கங்காருகள் -
பாலச்சந்தர் உரையாற்றியபோது, இலங்கையரின் பேச்சுத்தமிழைக் கேட்பதற்காகத் தான் சிலரின் வீடுகளுக்குப் போவதுண்டெனவும், பேச்சுத்தமிழைவிட எழுத்துத்தமிழ் அற்புதமாக இருக்கிறதெனவும் இலங்கைத் தமிழைக் கிலாகித்துப் பேசியிருந்தார். நூலின் சில பகுதிளைத் தான் மீளமீள வாசித்ததாகவும் அவர் கூறியபோது அண்மையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகம் வந்தது. ரொறன்ரோக் கல்விச் சபையிலுள்ள மாணவர்களின் தமிழ் மொழித்திறனை மதிப்பிடுபவராகவும் நான் வேலைசெய்கிறேன் அப்படியான ஒரு மதிப்பீட்டின்போது, என் இலங்கைத் தமிழைக் கேட்கத் தனக்கு ஆசையாகவிருந்ததெனத் தன் அம்மா சொன்னதாகவும், தனக்கும் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்ததெனவும் மாணவி ஒருவர் கூறியிருந்தார். இவ்வகையான நிகழ்வுகள் ஏன்தான் எங்களின் சில எழுத்தாளர்கள் இந்தியத் தமிழில் கதைகளை எழுதுகிறார்களோ என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது. இல்லையா?
- பாலச்சந்தர் உரை -
அன்றிரவு, தியாகராஜா மாஸ்ரரின் மகன் ஶ்ரீகந்தராஜா அவர்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தார். எண்பதை அண்மித்திருக்கும் வயதிலும் தனது கல்லூரியைச் சேர்ந்த மாணவியைச் சந்தித்து வாழ்த்த வேண்டுமென்ற அவரின் பண்பு என்னைப் பிரமிக்கச் செய்தது. மகாஜனாவில் தியாகராஜா மாஸ்ரரிடம் நான் கற்கவில்லை என்றாலும், வெள்ளை வேட்டிசேட்டுடனும் கல்லூரிக்கு வரும் அவரின் அமைதியான உருவமும் அதிர்ந்துபேசாத தன்மையும் என்னைக் கவர்ந்திருந்தன. அதை அவருக்கும் கூறி மகிழ்ந்தேன்.
மறுநாள் சுற்றுலாப் பயணிகளுக்கென இயங்குமொரு சேவையினருடன் பென்குவின்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். போகும்வழியில் துள்ளித்துள்ளி ஓடும் கங்காருகளையும், மரங்களில் தம்மை மறந்து நித்திரையிலிருந்த கொவாலாக்களையும் பார்த்ததுடன், கங்காருக்களுக்கு உணவூட்டக்கூடியதாகவும் இருந்ததில் சிலிர்ப்பாகவிருந்தது. மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால்,
பென்குவின்களைப் பார்ப்பதற்குக் கடற்கரையில் குளிருக்குள் காத்திருக்க வேண்டுமே என்ற தயக்கத்துடன் சென்றிருந்த எனக்கு, வாழ்க்கையில் மறக்கமுடியாததொரு இனிய அனுபவத்தை அந்தப் பயணம் தந்திருந்தது.மாணவர்களுக்கான ‘தமிழ் படிப்போம்’ என்ற என் நூலிலுள்ள அவுஸ்திரேலியா பற்றிய கட்டுரையில், பிலிப் தீவுக்கு ஆயிரக்கணக்கான பென்குவின்கள் மாலைநேரத்தில் வரும். அவற்றைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமென இணையத்திலிருந்த தகவல்களின்படி எழுதியிருந்தேன். ஆனால், அவை அசைந்தசைந்து வருவதும், திரும்பித் தண்ணீருக்குள் போவதுமாக இருப்பதைப் பார்த்து ஆர்ப்பரித்து, பின்னர் முடிவில் கூட்டம்கூட்டமாக ஆடிஆடி நடந்தபடி அவற்றின் பொந்துகளுக்குப் போவதைப் பார்த்தது விபரிக்கவோ, படத்துக்குள் அடக்கவோ முடியாததொரு நிறைவைத் தந்தது. இந்தக் குட்டிப் பென்குவின்களைப் பார்ப்பதே இத்தனை இன்பமென்றால் Antarcticaக்குப் போனால் எப்படியிருக்குமென வியந்தேன்.
- பிலிப் தீவில் பென்குவின்கள் -
அடுத்த நாள் ராஜனின் அக்கா கெளரி என்னிடம் வந்திருந்தா. ஊரிலிருக்கும்போது, எங்கள் இருவரினதும் வீடுகளுக்கிடையிலிருந்த வேலியில் வைத்த பொட்டுக்கூடாக நெடுநேரம் நாங்கள் பலதையும் கதைப்போம். ஆனால், கடந்த 40 வருடங்களாகச் சந்திக்கக் கிடைத்திருக்கவில்லை. ரோகிணி ரீச்சர் தன் கடைசிக்காலங்களில்கூட என்னைப் பற்றிக் கதைத்திருக்கிறா எனக் கெளரி அன்று சொன்னபோது எனக்குக் கவலையாக இருந்தது. ‘மகாஜனாவும் நானும்’ என்ற என் கட்டுரையில், ”வீட்டுக்கு வா கொஞ்சம்கூடக் கணக்குப் படிக்கலாம் என்று தன் வீட்டுக்கு கூப்பிட்ட ரோகிணி ரீச்சர் அம்மாட்டை கையொப்பம் வாங்கிக்கொண்டு வா, சாரணராகச் சேரலாம் எனக்கூறி, பல தடவைகள் என்னைப் பெருமைகொள்ள வைத்த சாரணியத்துக்கு வித்திட்டிருந்தா,” என அன்புடன் அவவை நினைவுகூர்ந்திருந்தேன். என் வாழ்க்கையில் முக்கியமானதொரு இடத்தில் அவ இருந்தா. இருப்பினும், நாட்டிலேற்பட்ட பிரச்சினைகளும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களும் இப்படி எத்தனை அன்புள்ளங்களைத் தொலைவில் வைத்திருந்திருக்கிறது என மனம் நொந்தது.
மெல்பேர்ன் விமானநிலையத்தில் பாமினி வழியனுப்பிவிட சிட்னி விமானநிலையத்தில் விஜி வந்து என்னைச் சந்திருந்தா. பாமினி வீட்டுத் தோடையைப் பார்த்துப் பிரமித்துப்போயிருந்த நான், விஜியின் வீட்டில் செழித்தோங்கிருந்த மாமரத்தையும் வாழைகளையும் பார்த்தும் அதிலேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டேன். அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்திருக்கலாமே என மீளவும் ஆதங்கமாகவிருந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.