அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சாதனையாளர் விருது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுரை. இவ்வுரையை சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்தினார். சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனின் தலைமையில் நடந்த எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் லிஸா லேக் அவர்கள் தாமரைச்செல்விக்கான விருதினை வழங்கினார்.
திருமதி. ரதிதேவி கந்தசாமி என்ற இயற்பெரைக்கொண்டிருப்பவரும், அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது வதிபவருமான படைப்பிலக்கியவாதி , நீண்ட காலமாக தாமரைச்செல்வி என்னும் புனைபெயரில் படைப்பிலக்கிய பிரதிகளை எழுதிவருகின்றார். அங்கயற்கண்ணி, கானா மணிவண்ணன், வெண்ணிலா சூரியகுமாரன், இந்துமதி முதலான புனைபெயர்களுக்கும் இவர் சொந்தக்காரர்.
வட இலங்கையில் வன்னி பெருநிலப்பரப்பில் பரந்தன் – குமரபுரத்தில் சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதியரின் செல்வப்புதல்வியான தாமரைச்செல்வி, சின்னையா கந்தசாமி அவர்களை வாழ்க்கைத்துணைவராக பெற்றபின்னரும், தொடர்ந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்தவர். பெரும்பாலான பெண் படைப்பாளிகள், திருமணத்தின் பின்னர், குழந்தைகளின் தாயாகிய பின்னர், குடும்பத்தலவியாகிவிட்டால், அதன் சுமையினால் எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுத்துவிடுவது இயல்பு. இவருக்கு கணவராக வந்தவர், அரச ஊழியராக இருந்தவாறே எழுபது – எண்பதுகளில் ஈழத்து பத்திரிகைகள் இதழ்களில் எழுதிவந்திருப்பவர். அவரது பக்கத்துணையோடு, தாமரைச்செல்வி தொடர்ந்தும் அயராமல் எழுதி, இலக்கியச்சாதனை புரிந்திருப்பவர். தாமரைச்செல்வி, இலங்கையில் வன்னிபெருநிலப்பரப்பில் பிறந்து வளர்ந்து, தமிழ் இலக்கிய உலகில் வன்னியாச்சி என்ற பெயரையும் பெற்றிருப்பவர்.
- எழுத்தாளர் தாமரைச்செல்வி -
பரந்தன் இந்து மகா வித்தியாலயம், யாழ் / இந்து மகளிர் கல்லூரி ஆகியனவற்றின் முன்னாள் மாணவியான தாமரைச்செல்வி, 1973 ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலிக்கும், அதனையடுத்து 1974 முதல் பத்திரிகைகள், இலக்கிய இதழ்களுக்கும் எழுதத் தொடங்கினார். தாமரைச்செல்வியின் படைப்பிலக்கியத் தெரிவாக இருந்தவை சிறுகதை, குறுநாவல், நாவல். இவரது முதல் சிறுகதை “ஒரு கோபுரம் சரிகிறது” வீரகேசரி வாரவெளியீட்டில் 1974 இல் வெளியாகிறது. ஆயினும், தனது எழுத்துப்பணியில் சரிந்துவிடாமல், தொடர்ந்தும் காலூன்றி நின்றிருப்பவர்.
இலங்கையில் - வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், தினக்குரல், மல்லிகை, சிரித்திரன், சுடர், வெளிச்சம், நாற்று, ஞானம், மாணிக்கம், கலாவல்லி, களம், தாரகை, ஆதாரம், கிருதயுகம், விளக்கு, அமிர்தகங்கை, பெண்ணின்குரல், தாயகம், வளையோசை, மாருதம், ஜீவநதி , யாழ்மதி, நுட்பம் முதலானவற்றிலும், தமிழ்நாட்டில் - ஆனந்தவிகடன், குங்குமம் , மங்கை, இதயம்பேசுகிறது முதலானவற்றிலும், புகலிடத்தில், பாரீஸ் ஈழநாடு, பாரீஸ் ஈழமுரசு, எரிமலை, களத்தில் , பிரன்ஸ் நடு , மெல்பன் எதிரொலி, கனடா தாய்வீடு , ஐக்கிய இராச்சியம் வணக்கம் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா. அக்கினிக்குஞ்சு ஆகியனவற்றிலும் தொடர்ந்து எழுதிவந்திருப்பவர். இருநூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று குறுநாவல்களும் ஏழு நாவல்களும் எழுதியிருக்கிறார் இந்த இலக்கிய சாதனயாளர்.
அவற்றுள்
1, சுமைகள். ( நாவல் ) 1977.
2, விண்ணில் அல்ல விடிவெள்ளி. ( நாவல் ). 1992.
3, தாகம் (நாவல்) – 1993.
4, வேள்வித்தீ (குறுநாவல்) – 1994.
5, ஒரு மழைக்கால இரவு (சிறுகதைகள்) - 1998.
6, அழுவதற்கு நேரமில்லை (சிறுகதைகள்) - 2002.
7, வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்) - 2003.
8, பச்சை வயல் கனவு (நாவல்) – 2004.
9, வன்னியாச்சி (சிறுகதைகள்) – 2005.
10, வன்னியாச்சி (ஒரு மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி மூன்றுநூல்களிலும் வந்த 37 கதைகளையும் சேர்த்து) – 2018.
11, உயிர்வாசம் (நாவல்) – 2019.
நூலுருப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் பெற்ற பரிசுகள்/விருதுகள் இவரது எழுத்துப்பிரதிகளைப்போல நீண்ட பட்டியலைக்கொண்டது.
இவர் எழுதியிருக்கும் இருபது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை.
• முரசொலி பத்திரிகை முதல்பரிசு - வேள்வித்தீ...(குறுநாவல்).
• கலாவல்லி சஞ்சிகை நடாத்திய போட்டியில் மூன்றாம் பரிசு - அவர்கள் தேவர்களின் வாரிசுகள் ( குறுநாவல் )
• இரசிகமணி கனக செந்திநாதன் நினைவாக யாழ் இலக்கிய வட்டம் மல்லிகையின் ஆதரவுடன் நடாத்திய போட்டியில் பாராட்டுப் பரிசு - எரிமலை எப்போது வெடிக்கும் (குறுநாவல்)
• வடகிழக்கு மாகாணசபை விருது - ஒரு மழைக்காலஇரவு (சிறுகதைகள்).
• யாழ் இலக்கியப்பேரவையின் பரிசு - விண்ணில் அல்ல விடிவெள்ளி (நாவல்).
• கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது - தாகம் (நாவல்).
• யாழ் இலக்கியப்பேரவையின் பரிசு - தாகம் (நாவல்).
• வட மாகாண சபை விருது, - வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்).
• வீரகேசரி, யாழ் இலக்கிய வட்டம் இணைந்துநடாத்திய கனகசெந்திநாதன். நினைவுப்போட்டியில் 2 ம் பரிசு - வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்).
• இலங்கை அரச தேசிய சாகித்திய விருது - பச்சை வயல் கனவு (நாவல் ).
• யாழ் இலக்கியப்பேரவையின் விருது - பச்சை வயல் கனவு (நாவல்).
• தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்தநாவல் விருது- உயிர்வாசம் (2019).
• இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது – உயிர்வாசம் (2019).
இலக்கியப் பணிக்கான விருதுகள், கௌரவிப்புகள்:
• அக்கராயன் மகளிர்அபிவிருத்திநிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது (2000).
• வடகிழக்கு மாகாணசபையின் ஆளுநர் விருது (2001).
• கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியமணிப்பட்டமும் தங்கப்பதக்கமும் (2002).
• மல்லிகை இதழின் அட்டைப்பட கௌரவம் (மார்ச் 2002).
• கொழும்பு கலைஇலக்கிய கழகத்தின் விருது (2003).
• யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தமது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப்பணிக்கான கௌரவிப்பு (2005).
• தமிழ்நாடு சின்னப்பா பாரதி அறக்கட்டளை விருது (2010).
• கண்டாவளை பிரதேச சபையின் கலாசாரப்பிரிவின் ஒளிச்சுடர் விருது (2011).
• மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது (2012).
இவற்றுக்கும் அப்பால், பூங்காவனம் , ஞானம் முதலான இதழ்களில் அட்டைப்பட அதிதி கௌரவமும் பெற்றிருக்கும் தாமரைச்செல்வி, குயின்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் “சக்தி” அமைப்பின் கௌரவிப்பனையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் பெற்றிருப்பவர்.
இன்றைய தினம், எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், சிட்னியில் உங்கள் அனைவர் முன்னிலையில் நடத்தும் 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்டுகிறார்.
படைப்பிலக்கியப்பிரதிகளுடன் பாடசாலை மாணவர்களுக்காக சிறுவர் நாடகங்கள் பலவும் எழுதியிருப்பவர். அத்துடன் சிறந்த ஓவியராகவும் திகழும் தாமரைச்செல்வி அவர்கள், வீரகேசரி, தினகரன், சுடர், ஈழநாடு, ஜீவநதி, ஞானம் முதலானவற்றிலும், தழிழ்நாட்டில் குங்குமம் ஆகியனவற்றிலும் தனது சிறுகதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவந்த ‘சித்திரா’ எனும் சித்திரக்கதை சஞ்சிகையில் கதையும் ஓவியமுமாக சித்திரக் கதைகளும் படைத்துள்ளார். எழுதியுள்ளார். எண்பதாம் ஆண்டளவில் சூரியகாந்தி என்ற கையெழுத்து சஞ்சிகை நடத்தி ஐந்து இதழ்கள் வெளியிட்டிருப்பவர்.
இவரின் ஐந்துசிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவற்றை மொழிபெயர்த்தவர்கள் இலங்கையின் இலக்கிய ஆளுமைகள் பேராசிரியர் சி. சிவசேகரம்., ஏ. ஜே. கனகரட்ணா, எஸ். இராஜசிங்கம். கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் மூன்று சிறுகதைகளை 1. ஒரு மழைக்கால இரவு - மொழிபெயர்ப்பு. திருமதி. ஜெயசித்ரா. 2. வன்னியாச்சி அனுராதா ஜயசிங்க. வாழ்க்கை பேராசிரியர் பியசீலி. விஜயமான ஆகியோரின் மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் வெளிவந்துள்ளன. இவரின் ஓட்டம் என்ற சிறுகதை ஜேர்மன் மொழியில் எவலின். மாசிலாமணி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
குறும்படங்கள்.
இவரின் "பசி" சிறுகதை தமிழ்நாடு ஜே. டி. இமயவர்மன் என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு லண்டனில் நடந்த விம்பம் குறும்படவிழாவில் பார்வையாளர் தெரிவாக விருது பெற்றது.
இவரது வேறு நான்கு சிறுகதைகள் குறும்படங்களாக வெளிவந்துள்ளன.
“1996“ ( இடைவெளி ) - இயக்குனர் முள்ளும் மலரும் மகேந்திரன்.
“ பாதணி“ - ஜான். மகேந்திரன்.
“ சாம்பல்மேடு” - திலகன்.
“ பாதை “ -
தாமரைச்செல்வியின் படைப்புகளை முன்வைத்து சில பல்கலைக்கழக மாணவர் ஆய்வுகள் மேற்கொண்டு பட்டங்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை பாடத்திட்டத்தின் கீழ், இலங்கை கல்வி அமைச்சின் தமிழ் மொழிக்கான பதினோராம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் இவரது “இன்னொருபக்கம்” என்ற சிறுகதை இணைக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு கல்வி அமைச்சு தமது பதினோராம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் “ பசி” கதையை இணைத்திருக்கிறது. இவ்வாறு கடந்த அரைநூற்றாண்டு காலமாக இலக்கியச்சேவையாற்றிவரும் படைப்பிலக்கியவாதி தமாரைச்செல்வி என்ற திருமதி ரதிதேவி கந்தசாமி அவர்களை எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.