- எழுத்தாளர், ஓவியர் 'பொன்னரி' கனகசிங்கம் -
எழுத்தாளர் தாமரைச்செல்வி தான் 'சுடர்' சஞ்சிகையில் எழுதத்தொடங்கிய காலத்தில் அதன் ஆசிரியராகவிருந்தவர் கனகசிங்கம் என்றும், அவரே அரி, பொன்னரி என்பன அவரது புனைபெயர்கள் என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு பதிவொன்றினைத் தனது முகநூற் பக்கத்தில் இட்டிருந்ததுடன், அண்மையில் ஆஸ்திரேலியாவின் நடந்த 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க'த்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் தான் முதன்முறைடாக அவரைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டு அவருடனான புகைப்படமொன்றினையும் பகிர்ந்திருந்தார். அதனை நன்றியுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கூடவே 'சுட'ரில் வெளியான அவரது ஓவியங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
பத்திரிகைகள் , சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கபூர்வமாக இருப்பவர்கள். எழுத்தாளர்களின் ஆரம்பக் காலகட்டங்களில் அவர்களது ஆதரவும், ஊக்கமும் பெரிதும் முக்கியமானவை என்பதற்கோர் உதாரணம் 'சுடர்' ஆசிரியர் கனகசிங்கம்.
பேராசிரியர் கைலாசபதி, தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், ஈழநாடு வாரமலர் ஆசிரியர் பெருமாள் இத்தருணத்தில் நினைவுக்கு வருகின்றார்கள். இவர்களைப்போன்றவர்களால் உருவான, வளர்ந்த எழுத்தாளர்கள் எத்தனை பேர்.
இத்தருணத்தில் நான் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்த அமரர் பெருமாள் அவர்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் என் இளமைப்பருவத்தில் என் சிறுகதைகளை, கட்டுரைகளை, கவிதைகளை ஈழநாடு வாரமலரில் பிரசுரித்து ஊக்கப்படுத்தியவர் அவர் என்பதை மறக்க முடியாது.
- எழுத்தாளர் தாமரைச்செல்வி & 'சுடர்' ஆசிரியர் கனகசிங்கம் -
தாமரைச்செல்வியின் குறிப்பு:
"ஈழத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் சுடர் சஞ்சிகை முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. எழுபது எண்பதுகளில் நிறைய எழுத்தாளர்களை குறிப்பாக பல பெண் எழுத்தாளர்களை வளர்த்தெடுத்திருக்கிறது. கலைச்செல்வி மூலம் உருவான பல எழுத்தாளர்களை அறிந்திருக்கிறோம். அதே போல அடுத்த கட்ட பல எழுத்தாளர்கள் சுடர் மூலம் வளர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் சுடர் ஆசிரியராக இருந்தவர் திரு. கனகசிங்கம் அவர்கள். . பொன்னரி, அரி, என்ற பெயர்களில்தான் அப்போது நாம் அவரை அறிந்திருந்தோம்.அவருடன் எந்த அறிமுகமும் இல்லாத போதும் எனது கதைகளை மட்டுமின்றி நான் வரைந்து அனுப்பும் ஓவியங்களையும் பிரசுரித்து ஆதரவு தந்தவர். சுடரில் வந்த எனது அநேகமான கதைகளுக்கு நானே ஓவியமும் வரைந்திருக்கிறேன்."
'பொன்னரி' என்னும் பெயரில் கனகசிங்கம் அவர்கள் 'சுட'ரில் வரைந்த ஓவியங்கள்: