மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11. என்னை மிகவும் பாதித்த இலக்கிய ஆளுமைகளின் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். குறுகிய அவரது வாழ்வு மானுட உலகுக்கு ஒளி தந்ததொரு மின்னலாக அமைந்து விட்டது. என்னை அவரது சிந்தனைத் தெளிவு மிகவும் கவர்ந்தது. அவரிடம் காணப்படும் முரண்பாடுகள் கூட அவரது தேடலின் விளைவுகளே.
தேசிய விடுதலை, வர்ண விடுதலை, வர்க்க விடுதலை, பெண் விடுதலை. மானுட விடுதலை பற்றி அவருக்கு மிகுந்த தெளிவு இருந்தது. அதனையே அவரது எழுத்துகள், வாழ்க்கை ஆகியன புலப்படுத்துகின்றன. வர்ண விடுதலைக்காக ஏனைய விடுதலைகளை அவர் புறக்கணித்து விடவில்லை. வர்ண விடுதலையை , பெண் விடுதலையை வற்புறுத்திய அவர் கூடவே வர்க்க விடுதலையையும் வலியுறுத்தினார். அத்துடன் நிற்கவில்லை மானுட விடுதலையையும் முன் வைத்தார். மானுட விடுதலையை வேண்டிய அவர் அதற்காக ஏனையு விடுதலைகளைப் புறக்கணித்துப் போரிடாது ஓய்ந்திருக்கவில்லை. அனைத்து விடுதலைகளுக்காகவும் களத்தில் இறங்கிப் போராடிய சமூக, அரசியற் போராளி அவர். அவரது அந்த ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது.
இவ்விதம் மானுடரின் பல்வகை விடுதலைக்காகவும் குரலெழுப்பின அவரது எழுத்துகள். அத்துடன் நின்று விடவில்லை. மானுடரின் இருப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்பின. நல்லதோர் உதாரணம் அவரது 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் 'நிற்பதுவே நடப்பதுவே' என்று ஆரம்பமாகும் புகழ்பெற்ற கவிதை.
தமிழ் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பும் மகத்தானது. கவிதை, சிறுகதை, வசனகவிதை , காப்பியம் & மொழிபெயர்ப்பு என அவரது பன்முகப்பட்ட பங்களிப்பு முக்கியமானது.
அவரது எழுத்துகளின் வீரியமும் முக்கியமானது. வாசிப்போரைத் தட்டி எழுப்புவன அவை. வாசிப்போருக்கு இன்பம் தருபவை அவை. வாசிப்போரைச் சிந்திக்க வைப்பவை அவை. வாசிப்போருக்கு வழிகாட்டிகளாக இருப்பவை அவை.
எனக்கு மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வு கொட்டும் இடித்தாளத்துடன் மின்னிப் பெய்யும் மழை. அதனை இரசிப்பதென்றால எனக்கு மிகவும் பிடிக்கும். மழை பற்றிய இரு கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஒன்று கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'சிந்தனையும் மின்னொளியும்' , அடுத்தது மகாக்வி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' .
அ.ந.க.வின் கவிதை இயற்கை நிகழ்வு கவிஞனுக்குக் கற்பிக்கும் பாடத்தைக் கவித்துவத்துடன் வெளிப்படுத்தினால், பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி'யோ இடியுடன் மின்னிப் பெய்யும் மழையைச் சொற்சித்திரமாக்கி உணர்வினை வசியப்படுத்தும்.
மகாகவியை நினைவு கூரும் முகமாக அவரது 'மழை'க் கவிதையின் காணொளிகளைப் பார்த்து, கேட்டு மகிழ்வோம்.
பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி'க் காணொளிகள்:
1. மழை -: https://www.youtube.com/watch?v=Qce-Gun6NoU
2. திக்குகள் எட்டும் சிதறி - https://www.youtube.com/watch?v=_zidiBlBy2A
3. https://www.youtube.com/watch?v=6VLwFlKbesY
பாரதியாரின் 'மழை' கவிதை முழுமையாகக் கீழே:
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா
அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்