அண்மையில் பழைய ஈழமுரசு பத்திரிகைகளை எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டுரையொன்று கண்ணில் பட்டது. 10.11.1985 வெளியான ஈழமுரசில் வெளியான சிறுகதைத்திறனாய்வுக் கட்டுரை. அம்பலத்தரசன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை. ஈழமுரசில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சிறுகதைகளத் திறனாய்வு செய்வது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் மாதச் சிறுகதைகளைத் திறனாய்வு செய்திருந்தார் அம்பலத்தரசன். அக்டோபர் மாதக் கதைகளை எழுதியிருந்தவர்கள்: வடகோவை தி.செம்மனச்செல்வி, வதிலி சுக்கின், ச.முருகானந்தன் & சந்திரா தியாகராஜா. இவர்களில் சந்திரா தியாகராஜா , ச.முருகானந்தன் ஆகியோரை ஏற்கனவே அறிந்திருந்தேன். சந்திரா தியாகராஜா தற்போது சந்திரா ரவீந்திரன் என்று நன்கறியப்பட்ட புகலிட ,இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
வடகோவை தி.செம்மனச்செல்வி வேறு யாருமல்லர். எமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் வடகோவை வரதராஜன், யோக வளவன், அமரர் கோமகன் ("நடு' இதழ் ஆசிரியர்) ஆகியோரின் சகோதரிதான். யாழ் பல்கலைக்கழகத் தமிழ்க் கலைத்துறைச் சிறப்புப் பட்டதாரி. ஆசிரியையாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் பற்றி அண்மையில்தான் இவரது அண்மைக்காலச் சிறுகதைத்தொகுப்பான 'காலப்புனல்' மூலம் அறிந்திருந்தேன். இவரது பெயர் செம்மனச்செல்வி தேசிகன். தேசிகன் இவரது கணவனின் பெயர். பொதுவாகத் தமிழ்ப்பெண்கள் தம் பெயரை முன்னாலும், தந்தை அல்லது கணவன் பெயரைப் பின்னாலும் வைத்து எழுதுவதுதான் வழக்கம். ஆண்கள் இதற்கு மாறாகத் தந்தையின் பெயரை முன்னாலும் தம் பெயரைப் பின்னாலும் வைத்து எழுதுவார்கள். ஆனால் இவர் இரு மாதிரியும் தன் பெயரை எழுதுபவர் என்பதை 'காலப்புனல்' வெளிப்படுத்துகின்றது. ஏனென்றால் நூலின் அட்டையல் தே.செம்மனச்செல்வி என்றும் , உள்ளே செம்மனச்செல்வி தேசிகன் என்றும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேற்படி ஈழமுரசுச் சிறுகதைத்திறனாய்வில் அம்பலத்தரசன் விரிவாகவே ஈழமுரசு பத்திரிகையில் வெளியான இவரது 'கெட்டுப் போனவள்' சிறுகதை பற்றி எழுதியுள்ளார். பதினெட்டு வயது இளம் பெண்ணொருத்தியின் நாகரிக, முற்போக்கு எண்ணங்களுக்கும், பழமையில் ஊறிய பெற்றோரின் எண்ணங்களுக்கும் இடையிலான மோதலையே அம்பலத்தரசனின் விமர்சனம் எடுத்துக்காட்டுகின்றது.
இவரது சிறுகதைகள் பெரும்பாலும் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்ததால் நான் பெரிதாக இவரைப்பற்றி அறிந்திருக்கவில்லை. இவரது 'காலப்புனல்' தொகுப்பு மூலம் இவரது இலக்கிய ஆளுமையினை ஓரளவு அறிய முடிகின்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் & வில்லுப்பாட்டு என இவரது பன்முக ஆற்றலைத் தொகுப்பு பிரதிபலிக்கின்றது. அருகி வரும் கலையான வில்லுப்பாட்டு மேலும் இவரது கவனம் திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது. இவரது படைப்புகள் ஒரு மையக்கருத்தை வாசகர்களுக்கு ஓர் அறிவுரையாகக் கூறும் தன்மை மிக்கவை. அதற்கு இவரது ஆசிரியப் பணி அனுபவம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.
- செம்மனச்செல்வி தேசிகன் -
சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இவரது புனைகதைகள் பின்னப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது., உதாரணத்துக்குத் தொகுப்பின் முதற்கதையான வீரகேசரியில் வெளியான 'பிள்ளையார் பிடிக்கப் போய்..' சிறுகதை வர்க்க வேறுபாடு எவ்விதம் ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பெறுவதில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை செல்வச்செழிப்பில் வாழும் நிமலன் மற்றும் ஏழமையில் வாடும் நகுலன் ஆகிய சிறுவர்களை மையமாகக்கொண்டு கூறியிருக்கின்றார். வடகோவை வரதராஜன், கோமகன் ஆகியோருக்கு உள்ள நகைச்சுவை உணர்ச்சி இவரது எழுத்திலும் தென்படுவதைக் கதையின் நடை, முடிவு மூலம் அவதானிக்க முடிகின்றது. 'பிள்ளையார் பிடிக்கப் போய்..' கதை பின்வருமாறு முடிகின்றது:
"கடவுளே நான் என்ன செய்யப்போறன்' பாக்கியம் இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். பாக்கியத்தின் குரல் கடவுளுக்குக் கேட்டது. கடவுள் மனிதர்களைப் பார்த்துச் சிரித்தார். பிள்ளையார் பிடிக்கப் போன மனிதர்கள் நல்ல குரங்குகளைப் பிடித்திருக்கின்றார்கள். கடவுள் திருவாய் மலர்ந்தருளினார்."
பாக்கியத்தின் மகனான நகுலனுக்கு ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் புலைமைப்பரிசில் கிட்டாமல் போய்விடுகின்றது. புலமைப்பரிசில் கிடைத்திருந்தால் நகுலனுக்குப் பொருளியல் ரீதியில் மிகுந்த நன்மை தந்திருக்கும். அதே சமயம் கட்டுப்பாடுகள் நிறைந்த படிப்பில் ஆர்வமில்லாமலிருந்த் நிமலனை அவனது பெற்றோர் நேரத்துக்கு நேரம் உணவு கொடுத்து, கவனித்து, பாடப் பயிற்சிகளைச் செய்ய ஊக்குவித்து புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சித்தியடைய வைத்து விடுகின்றார். அவ்விதம் சித்தியடைந்தும் அவனுக்கு உதவிப்பணம் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவனது தாய் பல் வைத்தியர். தந்தையார் பொறியியலாளர். ஆனால் அவன் அவ்விதம் சித்தியடைந்தது அவர்களது குடும்ப்பெருமையை ஏற்றி விட்டிருக்கிறது. அவர்களது கெளரவம், அந்தஸ்து, பெருமையை மகன் காப்பாற்றி விட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இதுதான் கதை. இக்கதையினூடு கதாசிரியர் சாடியிருப்பது மானுடர் மத்தியில் நிலவும் வர்க்க வேறுபாட்டை.
இன்னுமொரு கதை 'சிற்பிகளும் சிற்பங்களும்' மதவெறி எவ்விதம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது என்பதைச் சாடுகின்றது. தற்போது இலங்கை அரசியலில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வெடித்திருக்கும் குருந்தூர் மலை ஆலயப் பிரச்சினையின் மத்தியில் இக்கதையின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகின்றது. சமந்தா (சிங்கள ஆசிரியை), ராதிகா (தமிழ் ஆசிரியை),கதீஜா (முஸ்லிம் ஆசிரியை) என மூன்று மதங்களைச் சேர்ந்த ஆசிரியைகளுக்கு மத்தியில் நிகழும் மதம் பற்றிய உரையாடல்தான் கதை. இறுதியில் ராதிகா சக ஆசிரியைகளின் மதம் பற்றிய கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலிறுப்பாள்: "மதம் மதமாக இருக்கின்ற வரையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அது மதங்கொள்கின்றபோதுதான் முரண்பாடுகள் தோன்றுகின்றன. அது போலவே இனம் இனமாக இருக்கின்ற வரையில் முரண்பாடுகள் தோன்றுவதில்லை. அது இனவெறியாக மாறும்போது முரண்பாடுகளும், கலவரங்களும் தோன்றுகின்றன."
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல் இத்தொகுப்பை மேற்படி இரு கதைகளையும் வைத்து பதம் பார்க்க முடிகின்றது. நூலின் என்னுரையில் 85 காலப்பகுதியில் பல கதைகளை பத்திரிகைகளில் எழுதியதாக செம்மனச்செல்வி தேசிகன் கூறுகின்றார். நிச்சயம் எதிர்காலத்தில் நூலகம் மேலும் பல பத்திரிகைகளை ஆவணப்படுத்துகையில் காணாமல் போன இவரது கதைகள் பல மீளக்கிடைக்கும் என்று நம்புவோம்.
இத்தொகுப்பில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் & வில்லுப்பாட்டு இவை தனித்தனி பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் வடிவமைப்பு வாசகர்களுக்கு அவர்கள்தம் வாசிப்பை இன்னும் இலகுவாக்கியிருக்குமென்பதென் கருத்து. எதிர்காலப்பதிப்புகளில் இது பற்றியும் கவனம் எடுப்பார்களாக.
செம்மனச்செல்வி என்பது இவரது புனைபெயராகவிருக்கக் கூடுமென்று முன்பு எண்ணினேன். ஆனால் அது இவரது இயற்பெயர் என்பதைப் பின்னர் அறிந்தேன். அதற்காக இவரது பெற்றோரைப் பாராட்டலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.