கொடை வள்ளல் கர்ணனிற்கு, கொடுப்பது மட்டுமல்ல குணம். கொடுக்கையிலும் மற்றவர் நிலையுணர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவன் கர்ணன். நாம் நண்பர்களுக்கோ, அறிந்தவர்களுக்கோ, உதவி புரிதல் மட்டும் முக்கியமல்ல. ஒருவரிற்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த போது , அவரதனை நம்மிடம் கேளாமல் இருக்கையிலேயே, அவரின் நிலையுணர்ந்து, அவரிற்கு எம்மால் முடிந்த வகையில் உதவுதலே உண்மை நட்பாகவும். அதுவே வள்ளுவரின் குறளான உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788) என்ற குறளுக்கு முன்னுதாரணமாகும்.
உதவி உணரப்பட்டு , உணர்வோடு , உண்மையன்போடு , உரிய நேரத்தில் வழங்கப்படலே உண்மை நட்பின் உயர்வாகும். இங்கு உதவி யென்பது பணவுதவி என்று மட்டுமே கருதுவது தவறு. நண்பன் மனம் வருந்தி நிற்கையில்,அவனிற்கு ஆறுதல் கூறுவது. அவனின் ஆற்றலை அவனிற்கு உணர்த்தி , அவனுக்கு வந்துள்ள இடர்களை வென்றிடும் உளவலிமையை அவனிற்குக் கொடுப்பது. தளர்ந்த மனதிற்கு ஆறுதல் கூறித் தன்னம்பிக்கை ஊட்டுவது. நண்பனின் முகக் குறிப்பறிந்து , அவனின் வாட்டத்தை உணர்ந்து , அவனிற்குத் தன் சக்திக்கு ஏற்ற வகையில் , எந்த வகையிலாவது உதவி செய்யத் துடிப்பவனே , உண்மை நண்பனாவான்.
எவனொருவன் , தான் நலிந்த நிலையிலிருந்த போது, தான் கேளாமலே முன்வந்து, தனக்குத் தக்க உதவிகள் புரிந்திட்ட உண்மை நண்பன் , இன்று மனவுளைச்சல் உற்று நிற்கையில் , உதவாது விலகி நின்று வேடிக்கை பார்க்கின்றானோ , அவனைப்போன்ற ஒரு சுயநலவாதி இந்த உலகில் இருக்க முடியாது.
கும்பகர்ணனின் நன்றியுள்ளம், கர்ணனின் நன்றிமறவா நட்புள்ளம், குகனின் ஆதரவுமிக்க நல்லுள்ளம் இவையெல்லாம் நன்றிமறவா நற்பண்புமிக்க நல்ல மனிதர்களின் வரலாறன்றோ. ஆனால் இன்று நம்மிடையே புரூட்டஸ் போன்ற நம்பிக்கைத் துரோகிகளும், எட்டப்பன் போன்ற சுயநலவாதிகளும், காக்கைவன்னியன் போன்ற பதவி வெறிகொண்ட கயவர்களும் அதிகமாக நடமாடி வருதலையே காண்கின்றோம்.
மனிதம் - மனிதப் பண்பு - நன்றியுணர்வு என்பன அருகி , மற்றவரை விழ்த்தித் தாம் எவ்வகையிலாவது முன்னேற வேண்டும் என்ற சுயநலமிக்க மாக்கள் கூட்டமாக , சமூகம் சீர்கெட்ட நிலைக்குச் செல்கின்றது.
இந்நிலையில் , ஒரு சிலர் , அறம் - சத்தியம் - நேர்மை - நன்றி எனக் கதைக்கையில் , அவர்களைப் பார்த்து பைத்தியக்காரர்கள் எனத் தமக்குள் எள்ளி நகையாடும் கூட்டமே இன்று அதிகரித்து வருகின்றது.
இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலாதவர் (குறள் 270) என்ற வள்ளுவனின் குறள் அன்றும் இவர் போன்றோர் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் நமக்கு உணர்த்துகின்றது.
எது எவ்வாறாயினும் , நாம் நம்மளவில் நன்றி மறவாதவர்களாக இருப்போம். நாம் இன்னலுற்று துயருற்றிருந்த காலத்தில், எமக்கு ஏதோவொரு வகையில் , சிறிதளவாவது உதவி செய்தவர்களின் உதவியை , வாழ்நாள் முழுதும் மனதில் கொண்டு வாழ்வோம். இவ்வாறு உதவியவர்களில் யாரும், காலமாற்றத்தில் எமக்கு இடைஞ்சல் தரினும் , அவர்கள் செய்த உதவியை நினைந்து , அவ் இன்னல்களைத் தாங்கி , அவர்கள் மேல் பகை காட்டாது வாழ்வோம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் (குறள் 316) என வள்ளுவன் அன்றே கூறிச் சென்றுவிட்டான்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.(குறள் 114)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.