“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
1942 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் பீர்முகம்மது, தனது நீண்டகால உழைப்பிலும் தேடலிலும் வெளியான இலக்கியப் படைப்புகளையும், தொகுப்பு நூல்களையும் வரவாக்கித்தந்துவிட்டு, 81 வயதில் விடைபெற்றிருக்கிறார். மலேசியா தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பீர்முகம்மது தவிர்க்க முடியாத ஆளுமை. மலேசியா தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது பங்களிப்பும் சேவையும் பலரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஜப்பானியரின் ஆட்சிக்காலத்தில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்த பீர்முகம்மது, இளமைக்காலத்தில் வறுமையை அனுபவித்தவர். படிப்பதற்கும் வசதியற்ற குடும்பச் சூழ்நிலையில், ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டவாறே இரவு நேரப்பாடசாலையில் படித்தார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் அதிர்வுகளைக்கொண்டது.
அவரது வாய்மொழிக்கூற்று இவ்வாறு அமைந்துள்ளது.
“என் பள்ளி வாழ்வைத் தொடர முடியாமல் பல சிக்கல்கள் ஏற்பட்டன. மூன்றாம் ஆண்டிலேயே எனது தந்தையார் என்னை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவேண்டாம் எனக் கூறிவிட்டார். பிள்ளைகள் அதிகமாகிவிட்டதை ஒரு காரணமாகக் காட்டினார். என்னால் அதனைத் தாங்க இயலாது வீட்டை விட்டு ஓடிவிட்டேன். ஸ்தாபாக்கில் இருக்கும் பஞ்சாபி குடும்பத்தில் அடைக்கலமானேன். அவரது பிள்ளைகள் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர் குடும்பத்தின் மூத்த மகன் அப்போது சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்தார். காலையில் பள்ளிக்குச் செல்லவும் மாலையில் அவர்களின் மாடுகளைப் பார்த்துக்கொள்ளும்படியும் யோசனை கூறினார். அப்போது அவர்களிடத்தில் நாற்பது மாடுகள் வரை இருந்தன. பிறகு அவரே அவரது தந்தையாரிடம் பேசி எனக்கு முப்பது வெள்ளி சம்பளம் வாங்கிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் அது பெரிய தொகையாக இருந்தது. சம்பளம் போக அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டேன், தூங்கினேன். இதைவிட வேறென்ன வேண்டுமென அங்கேயே தங்கிப் படித்தேன்.
நான் தேர்வில் நல்ல தேர்ச்சியையே பெற்று வந்தேன். படிப்பேன். படித்ததை, புரிந்து கொண்டதை தேர்வில் எழுதுவேன். இப்படித்தான் ஒரு முறை தேர்ச்சி அறிக்கையைக் கொண்டு வந்திருந்தேன். பஞ்சாபி நண்பனின் அப்பாவிடம் காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர் குதூகலமானார். தன்னிடம் எவ்வளவோ பணமிருந்தும் அவர் பிள்ளைகள் சரியாகப் படிக்காததையும் நான் முதல் மாணவனாக வந்தது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறினார். படிப்பிற்காக நான் வெளிநாடு சென்றாலும் தாம் செலவு செய்வதாகச் சொன்னார். அதனையெல்லாம் ஓர் அங்கீகாரமாக ஏற்று நான் அங்கேயே இருந்தேன். இச்சமயத்தில்தான் நான் மாடு மேய்த்துக்கொண்டு படிப்பதைத் தெரிந்துகொண்ட பெரியப்பா என்னை வந்து அழைத்துச்சென்றார். அவரது பொறுப்பில் என்னை வைத்துக்கொண்டார்." ( நன்றி வல்லினம் – ம. நவீன் )
மேற்குறித்த தகவல்களை நாம், வல்லினம் இணைய இதழுக்கு பீர்முகம்மது வழங்கியிருக்கும் நேர்காணலில் இருந்து தெரிந்துகொள்கின்றோம்.
அவர் எனக்கு முதல் முதலில் மெல்பனில்தான் அறிமுகமானார். இங்கு நடந்த பட்டிமன்றத்திற்கு ஒரு குழுவினருடன் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் சிட்னியில் வதியும் எழுத்தாளர் மாத்தளை சோமுவுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அந்தப் பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர், பீர்முகம்மதுவை விளித்துப்பேசும்போது, வேடிக்கையாக “ சபையோர்களே… இவரது பெயரில் பீரும் மதுவும் இருக்கிறது “ என்றார்.
மாற்றுக்கருத்துக்களுக்கு அப்பால் நட்புறவுக்கு முன்மாதிரியாகத்திகழ்ந்த பீர்முகம்மது எனது மெல்பன் வீட்டுக்கும் வருகை தந்திருப்பவர்.
2006 ஆம் ஆண்டு என்னையும் அவர் மலேசியாவுக்கு அழைத்திருக்கிறார். அதற்கு முன்னர் தமிழக எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, “ தீபம் “ பார்த்தசாரதி உட்பட பலரையும் அழைத்து உபசரித்தவர். இலக்கிய சந்திப்புகளை ஏற்பாடு செய்தவர். சுருக்கமாகச்சொன்னால் மலேசியாவுக்கும் மற்றும் சில நாடுகளுக்குமிடையே இலக்கியப்பாலமாகவும் அவர் திகழ்ந்தவர்.
பீர்முகம்மது, வெண்மணல் ( சிறுகதை ) பெண் குதிரை ( நாவல் ) கைதிகள் கண்ட கண்டம், மண்ணும் மனிதர்களும் ( பயண இலக்கியம் ) முதலான நூல்களையும் வேரும் வாழ்வும் என்ற தலைப்பில் மூன்று பாகங்களில் மலேசியா எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு நூல்களையும் மலேசியத்தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும், திசைகள் நோக்கிய பயணங்கள் முதலான நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.
பீர்முகம்மது தொகுத்த ( மூன்று பாகங்களில் ) வேரும் வாழ்வும் 93 சிறுகதைகளைக்கொண்டது.
மலேசியாவில் தமிழ் ஊடகத்துறைக்கு சிறந்த சேவையாற்றிய ஆளுமைகளைப் பற்றியெல்லாம் பீர்முகம்மது விரிவாக எழுதியிருக்கிறார். அத்துடன் உதயசக்தி என்ற இதழுக்கும் ஆசிரியராகவிருந்தார் எனத் தெரிந்துகொள்கின்றோம். தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் சில இலக்கிய விருதுகளும் பெற்றிருப்பவர். அவர் சிறந்த இலக்கிய ஆவணத்தொகுப்பாளராக தொடர்ச்சியாக இயங்கிவந்திருப்பவர்.
அண்மைக்காலங்களில் நான் எழுதிவரும் எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் ( இரண்டாம் பாகத்தில் – அங்கம் 63 இல் ) நண்பர் பீர்முகம்மது பற்றியும் இவ்வாறு எழுதியிருந்தேன்.
"2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் நின்ற சமயம், நீர்கொழும்பிலிருக்கும் எனது சகோதரிகளுக்கு ஒரு கவலை வந்துவிட்டது. எனக்கு அவசரமாக ஒரு தகவல் சொல்வதற்கு முயன்றிருக்கிறார்கள். எனது அம்மாவின் இறந்த நினைவு தின – வருடாந்த திதியின் திகதியை எனக்குத் தெரியப்படுத்தி, ஏதாவது ஒரு கோயிலுக்கு செல்லுமாறும் அன்றைய தினத்தில் மச்சம் மாமிசத்தை புசிக்காமல் தவிர்க்குமாறு சொல்வதற்கும் அவர்கள் முயன்றிருக்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்த எனது மனைவிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
ஒருநாள் இரவு மலேசியாவில் நண்பர் பீர்முகம்மதுவின் குடும்பத்தினருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, மனைவி அழைப்பு எடுத்து அம்மாவின் திதியை நினைவுபடுத்தினார். மறுநாள் பீர்முகம்மது மலேசியாவில் பிரசித்திபெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு என்னை அழைத்துச்சென்றார். அன்றுதான் அம்மாவின் திதி. பீர்முகம்மதுவுக்கு ஒரு விபத்தில் கால் முறிந்து சிகிச்சை பெற்றிருந்தார். அவரால் அந்தப் படிகளில் ஏறுவது சிரமம்.
அவர் மலையடிவாரத்தில் காரிலிருந்துகொண்டு என்னை அனுப்பினார். மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க மலையேறினேன். முகப்பில் 140 அடி உயரமான முருகனின் பொன்னிற உருவச்சிலை. அந்த பத்துமலை திருத்தலத்துக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் தினமும் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.
மலையேறி அம்மாவுக்காக பிரார்த்தனை செய்தேன். அந்திம காலத்தில் அம்மாவின் அருகிலிருந்து பணிவிடை செய்யவும், அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவும், தாய்க்குத் தலைமகனாக இருந்தபோதிலும், அவர்களின் பூதவுடலுக்கு கொள்ளிவைக்கவும் பாக்கியம் அற்றவனாக புலம்பெயர் வாழ்வில் சோகமான அத்தியாயங்களை கடந்து வந்திருக்கும் நான், அம்மாவுக்காக அன்று மலையேறினேன். இறங்கி வந்து பீர்முகம்மதுவின் கையைப்பற்றி நன்றி தெரிவித்தேன். எனது பெயரில் முருகன் இருக்கிறார். உங்களது பெயரில் முகம்மது இருக்கிறார். நாம் இலக்கியத்தில் இணைந்திருக்கின்றோம் “
இன்று அந்த நேசத்திற்குரிய இலக்கிய நண்பரின் நினைவுகளுடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன். எழுத்தாளர் சை . பீர்முகம்மது அவர்களின் இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது. அவரது படைப்புகளும், தொகுப்புகளும் மலேசியாவின் தமிழ் இலக்கிய வரலாற்றை பேசிக்கொண்டிருக்கும். அன்னாரின் குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.