‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்! அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்! மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால், கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும். அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.
பாடும்மீன் என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம், அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
1991 ஆம் ஆண்டு ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.
நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா “ என்றார்.
முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
அக்காலப்பகுதியில் நாம் நடத்திய தமிழர் ஒன்றியத்தின் முத்தமிழ்விழாவிற்காக நாவன்மைப்போட்டிகளை நடத்தினோம்.
அதற்கு நடுவராக வருகை தந்து போட்டிகளில் பங்குபற்றுபவர்களை தெரிவுசெய்து தரமுடியுமா..? எனக்கேட்டேன். பாடும் மீன் ஶ்ரீகந்தராசா சம்மதித்தார். போட்டி முடிந்ததும், நாவன்மைப்போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்னர் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆலோசனைகளை விரிவுரையாகவே வழங்கினார்.
யாழ்பாணத்திலிருந்து கடந்த இரண்டுவருடங்களுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் தீம்பூனல் வார இதழில் தொடர்ந்தும் குறள் இன்பம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களுக்கு இம்மாதம் 01 ஆம் திகதி 70 ஆவது பிறந்த தினம். இந்தத்தினத்தை அவரது குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடுவதற்கு தயாராகியிருக்கும் இவ்வேளையில் அவரை வாழ்த்திக்கொண்டே, இந்தப்பத்தியை தொடருகின்றேன்.
உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கிருந்தாலும் இயங்குவார்கள். அவ்வாறு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியம், வானொலி, இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான பணிகளில் இயங்கிவருபவர் மீன்பாடும்தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
பாடசாலைப்பருவத்திலேயே இலக்கியப்பணியை ஆரம்பித்தவர். அரைநூற்றாண்டு காலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவருபவர். களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை - சின்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரனான ஶ்ரீகந்தராசா, தனது கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்த பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும் இணைந்து சட்டத்தரணியானவர்.
இவர் கற்ற கல்லூரியில் வெளியான உயிர்ப்பு என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராகவிருந்தபோது இவரது வயது 14 என்பது வியப்பானது!
சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல், முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவுக்கு களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது சிந்தாமணி வார இதழ்.
பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.
கிழக்கிலங்கையிலிருந்து எழுதத்தொடங்கிய ஶ்ரீகந்தராசாவுக்கு தென்னிலங்கையிலும் எழுத்துப்பணியை தொடருவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது சிந்தாமணி. அத்துடன், தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகையிலும் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறார்.
தொடக்கத்தில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்திருந்தாலும், பின்னர் சட்டத்தரணியானதும் கிழக்கிலங்கை நீதிமன்றங்களில் பணியாற்றினார். கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள், ஆய்வு, நாடகம், வில்லிசை முதலான துறைகளிலும் அகலக்கால் பதித்து பல்துறை விற்பன்னராக விளங்கியிருக்கும் இவர், மேடை நாடகங்களிலும் புகழ்பெற்றிருப்பவர். கவிதை இயற்றுவதிலும் மெல்லிசைப்பாடல்கள் புனைவதிலும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்திருப்பவர். இவ்வாறு பல ஆற்றல்களை தனது வசம் வைத்திருக்கும் இவரிடம் நாடகம் எழுதும் இயக்கும் வல்லமையும் இருப்பதனால், எங்கள் அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் இவரை பல்கலைவேந்தன் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறது.
இளம்பருவத்திலேயே நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றியவர். களுவாஞ்சிக்குடியில் நூலகம் இல்லாத குறையை போக்குவதற்காக நண்பர்களுடன் இணைந்து நூலகம் அமைத்தமை, இளஞர்களை இணைத்து இளம் நாடக மன்றம் அமைத்து கிராமங்கள்தோறும் நாடகங்களை அரங்காற்றுகை செய்தமை, வில்லுப்பாட்டுக்களை இயற்றி பொதுமேடைகளில் அரங்கேற்றியமை, மட்டக்களப்பின் நாட்டார் பாடல்களுக்கு நாடகவடிவம் வழங்கி மக்களிடம் அரங்கங்கள் வாயிலாக எடுத்துச்சென்றமை, உட்பட பல்வேறு கலை, இலக்கிய பணிகளில் தீவிரமாக செயற்பட்டிருக்கும் இவர், அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னரும் அயராமல் இயங்கிவருகிறார்.
தனது உள்ளார்ந்த ஆற்றல்களை புலம் பெயர்ந்தபின்னரும் வற்றிப்போகச்செய்யாமல் இவர் வெளிப்படுத்தி வந்திருப்பதை அருகிருந்து பார்த்துவந்திருப்பதனாலும், இவருடன் இணைந்து சில பொதுப்பணிகளில் ஈடுபட்டதனாலும் இவர் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் தமிழ் அகதிகள் கழகம், ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியனவற்றிலும் தலைவராகவிருந்த பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, இம்மாநிலத்தில் தமிழ் ஆர்வலர் மருத்துவர் பொன். சத்தியநாதன் நடத்திய தமிழ் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.
இவர் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில்தான் அதன் பெயர் ஈழத்தமிழ்ச்சங்கமாக மாறியது. இச்சங்கத்தினால் நிருவகிக்கப்பட்டு வந்த தமிழ்ப்பாடசாலைகள் இரண்டாயிரமாம் ஆண்டுவரையில் இச்சங்கத்தின் உபகுழு ஒன்றின் மேற்பார்வையிலேயே இயங்கிவந்தன.
இவர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பு என்னும் ஓர் அமைப்பைச் சட்டரீதியாக அமைப்பதற்கான சரத்து ஒன்றினை அமைப்புவிதிகளில் முறைப்படி இணைத்து, சகல தமிழ்ப் பாடசாலைகளும் பாடசாலைகள் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும் செயற்பாட்டினை ஏற்படுத்தினார்.
அதன்மூலம் பாடசாலைகளின் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதற்கு வழிவகுத்தார்
அவுஸ்திரேலியாவில் ஒலிக்கும் பல வானொலிகளிலும் இவரது உரைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களையும் தமிழ்த்திரையிசைக்கு உயிர்ப்பளித்த கவிஞர்களின் பாடல் வரிகளையும் இணைத்து ஒலிச்சித்திரங்களையும் வழங்கியிருக்கிறார்.
எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் பிரபல நாடகமான 'வலை' இவரது இயக்கத்தில் மெல்பனில் மேடையேற்றப்பட்டதை பார்த்து வியந்திருக்கின்றேன். அதனை இவர் நெறிப்படுத்தியிருந்த பாங்கும் ஒலி, ஒளி அரங்க நிர்மாணம் என்பனவும் மறக்கமுடியாத நிகழ்வாக மனதில் நிலைத்திருக்கிறது.
பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவின் மணிவிழாக்காலத்தில், ஞானம் இதழ் அட்டைப்பட அதிதியாக பாராட்டி இவரது சேவைகளை பதிவுசெய்துள்ளது.
விக்ரோரியா மாநிலத்தில் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழி ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் இவரும் ஒருவர்.
சிட்னியில் இருந்து இயங்கும் அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தினால் தேசியப் பரீட்சகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட இவர், இச்சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தமிழ் மாணவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு மேற்பார்வையாளராகவும், தமிழ் மாணவர்களுக்குப் தமிழ்ப்பேச்சுக்கலையில் பயிற்சிகொடுத்து, போட்டிகளுக்குத் தயார்செய்து வரும்பணியிலும் ஈடுபட்டு வருமிவர் எழுதியிருக்கும் நூல்கள்: சந்ததிச் சுவடுகள், மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள், தமிழினமே தாயகமே, தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் , ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம், Sankam Period and Sankam Literature ( சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் - ஆங்கில மொழிபெயர்ப்பு)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் உரைச்சித்திர இறுவட்டையும் வெளியிட்டுள்ளார்.
விரைவில், “ இன்னும் கன்னியாக “ என்ற கதைத் தொகுதியும் சங்க இலக்கிய காட்சிகள் என்ற ஆய்வு நூலும் வெளிவரவிருக்கிறது.
இவற்றை கிழக்கிலங்கை மகுடம் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் புகலிட தமிழ் சமூகத்திற்கு தொடர்ந்தும் பயன்பட வேண்டியவர். அத்துடன் தமிழ் சமூகமும் இவரை தக்க முறையில் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எழுபது அகவையை நெருங்கியிருக்கும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசாவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.