இருபத்தி நான்காம் வயதில் பாரதி - ஜோதிகுமார் -
1
ஆன்ம உணர்த்திறன்மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.
மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் - அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் - இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.
சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.
இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.
ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே” (1898).
பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.