ஆஸ்திரியாவின் தலைநகரான வீயன்னா, ஐரோப்பாவின் முக்கியமான மனிதர்கள் பலர் பிறந்து வளர்ந்த நகரமாகும். புதிய சங்கீதம், கட்டிடக்கலை, மருத்துவம் என பல விடயங்கள் உருவாகிய நகரம் என நான் கேள்விப்பட்டிருந்தாலும், நமக்கு யார் முதல் நினைவுக்கு வருவார்கள்? நல்லவற்றை விட கெட்டவைகள் நமது உள்ளங்களில் அதிக காலம் நீடிப்பது உண்மையே! மொர்சாட்,பீத்தோவன், சிக்மண்ட் பிரைட் போன்றவர்கள் வசித்த நகரமான போதிலும், வரலாற்றில் ஈடுபாடான எனக்கு முதல் வருவது ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுகளே.
அடால்ஃப் ஹிட்லர் பிறந்தது (Brauanau am Inn) ஜெர்மன் -ஆஸ்திரிய எல்லையில் என்ற போதும், இளமையில் தந்தை இறந்தபின், தாயுடன் வீயன்னா நகரத்திலே வாழ்ந்தார் . அவர் பாடசாலை முடித்துவிட்டு இளைஞனாக இருக்கும்போது வீயன்னாவில் ஓவியனாகும் நோக்கத்தில் இங்குள்ள நுண்கலை அக்கடமிக்கு இரு முறை (1907,1908) விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம், அவரது ஓவியங்களில் முகங்கள் சரியாக வரையவில்லை என அங்கு நிராகரிக்கப்பட்டது. அதை விட, அவருக்குக் கட்டிடக்கலைஞராகும் திறமை உள்ளது எனத் தேர்வுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் சிபார்சும் செய்தார்கள். ஆனால், அதற்கு மீண்டும் பாடசாலையில் படித்துத் தேர்வெழுதி பல்கலைக்கழகம் போக வேண்டும் ஆனால் ஹிட்லருக்கு அதற்குப் பொறுமையில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட இலட்சியங்களோடு வெறுப்படைந்த மனிதனாக அரசியலுக்குள் பிரவேசித்தார். அவரை ஓவியனாக அனுமதித்திருந்தால், உலகப் புகழ் பெற்ற பிக்காசோ , வான்கோ போன்ற ஓவியக்கலைஞன் கிடைத்திருக்காத போதிலும் அடால்ஃப் ஹிட்லர் என்ற மூன்றாம் தர ஓவியர் உலகத்திற்கு எவ்வளவு நன்மையாக இருந்திருப்பார் என்பது அவரை நிராகரித்தவருக்குத் தெரிந்திருக்காது. மேலும் நிராகரித்தவர், ஹிட்லர் பதவிக்கு வருமுன்பே இறந்து விட்டார் என்ற செய்தியை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் சொன்னார்.
வீயன்னா நகரம் டான்னியூப் நதிக்கரையில் உள்ள போதும் நகரின் முக்கிய பகுதிகள் சில மைல் தூரத்தில் உள்ளன.
எங்களுக்கு காலையில் வீயன்னா நகரை வாகனத்தில் சுற்றிக்காட்டி, மேலைத்தேய சங்கீத மேதைகளான மோச்சாட், பீத்தோவான் போன்றவர்கள் வசித்த இடம், நரம்பியல் நிபுணரான சிக்மண்ட் பிரைட் பணிபுரிந்த பல்கலைக்கழகம், அவர் அடிக்கடி வந்து காபி அருந்திய இடமென்றார்கள். ஒரு பகல் நேரத்துக்குள் வீயன்னாவை எங்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தமிழ் பாடல்களை, சில இடங்களில் வீடியோவை வேகமாக ஃபோவேட் பண்ணி பார்ப்பதுபோல் பார்க்க நேர்ந்தது. அதன்பின் முக்கிய ஒரு சில இடங்களை நடந்து பார்த்தோம்.
வீயன்னாவின் மற்றைய ஐரோப்பிய நகரங்கள் போல் பழைய கட்டிடங்களை அதிகம் கொண்ட ஆனால், சிறிய நகரம். மெல்போர்ன் போன்ற பெரிய நகரங்களோடு ஒப்பிடும்போது, ஆனால் புராதன நகரமாக தெரிந்தது. நாங்கள் ஒரு கூட்டமாக நகர்ப் பகுதியின் நடை பாதையிலிருந்து நடந்து கொண்டிருக்கும்போது பெரிய கட்டிடத்தின் கீழ் உள்ள பெரிய தூணில் முன்னாள் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் முகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.
கென்னடி எனது இளமைக்காலத்தில் ஒரு ஹீரோ போன்றிருந்தார். கென்னடியின் தலைமயிர் கோதியவிதம், வேறு எந்த தலைவர்களிலும் நான் இதுவரை காணவில்லை. மற்றையது எனது கண் தெரியாத தாத்தாவுக்கு வீரகேசரி வாசித்துக் காட்டும்போது அவர், இளம் வயதில் பதவிபெற்ற ஒரே தலைவர் ஜனாதிபதி கென்னடியெனச் சிலாகிப்பார்: இவை எனது சிறுவயது நினைவுகள். பிற்காலத்தில் ஆங்கிலம் (Rhetoric) புரிந்தபின் கென்னடியின் பேச்சுகள் என் மனத்தில் இடம்பெற்று இன்னமும் அவை நினைவில் உள்ளன.
அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிய விரும்பி, வழிகாட்டியைக் கேட்டபோது ‘இந்த இடத்தில் இரண்டு நாட்கள் (June 3-4, 1961) தங்கி சோவியத் ருஸ்சியாவின் அதிபர் குருசோவுடன் அணுவாயுதக் குறைப்பு பற்றி பேசினார் என்றும் அவர் தங்கியதன் நினைவாகவே அந்த இடத்தில் கென்னடியின் உருவம் பளிங்கில் பதிக்கப்பட்டுள்ளது‘ என்றார். அந்த சந்திப்பை கென்னடியே குருசோவிற்கு கடிதம் அனுப்பிஆரம்பித்தார் என்ற தகவல் பின்பு வாசித்தேன். இப்படி ஒரு சந்திப்பு வீயன்னாவில் நடப்பதற்கு, அவுஸ்திரியா ஒரு அணி சேராத நாடாக இருந்தது முக்கிய காரணமாகும்.
வீயன்னாவில் என்னைக் கவர்ந்த மற்றைய ஒரு விடயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். நாங்கள் தெருவில் நடந்து போகும்போது எங்களைக் கடந்து சிலர் மிகவும் அழகான குதிரைகளை அவற்றின் மூக்கு கயிறுகளில் பிடித்து அழைத்து கொண்டு சென்றார்கள். குதிரைகள் ஒவ்வொன்றும் உலக அழகுராணிப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக நினைத்தபடி எவரையும் சட்டை செய்யாது கம்பீரமாகத் தெருவைக் கடந்து சென்று ஒரு கதவூடாக ஒரு இடத்தின் உள்ளே சென்றன.
எனது கழுத்தை நீட்டி உள்ளே பார்த்தபோது, அது ஒரு பெரிய குதிரை லாயம். அந்த இடத்தில் எனது கால்கள் நிலத்தில் வேர் விட்டது போன்ற உணர்வு என்னை பீடித்தது, உடல் அசையவில்லை. ஆனால், மற்றவர்கள் என்னைக் கடந்து சென்று விட்டார்கள். எனது மனைவிகூட முன்னே சென்ற போதிலும் நான் அசையவில்லை. அழகிய பல குதிரைகளை ஒரே இடத்தில் இதுவரை நான் காணவில்லை. சுற்றியிருந்தவர்களை விசாரித்தபோது ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும் பிரபுக்களும் வந்து குதிரையேற்றம் கற்கும் ஒரு பாடசாலை (Royal Stables) என்றார்கள் . தற்பொழுது இந்த குதிரைகள் ஒரு வித காட்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வீரர்களால் குதிரைமேல் சவாரிகள், பல சாகசங்களுடன் சங்கீதமும் கலந்த ஒரு காட்சியாக நடக்கும். அவற்றை பார்க்க பலர் வருவார்கள். சில நாட்களில் குதிரைகளை இந்த விளையாட்டிற்கு பழக்குவதையும் பார்க்க முடியும் என்றார்கள் .
இந்த குதிரை பாடசாலையை இன்னமும் ஸ்பானிய குதிரைகளின் பாடசாலை என்பார்கள். இவை ஆரம்பத்தில் அரபு நாட்டுக் குதிரைகளின் வம்சத்தில் வந்தவை. ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டினரே குதிரையேற்றத்திற்குப் பாடசாலைகளை முதல் முறையாக ஆரம்பித்தவர்கள். பிற்காலத்தில் மற்றைய அரசர்கள், குதிரைகளின் பாடசாலைகளை அமைத்துப் பராமரித்தார்கள். இவற்றில் முக்கியமானது நடனக் குதிரைகள் (Lipizzaner Horses). இவற்றின் காட்சியை சில நாட்களில் மட்டும் பார்க்க முடியும்.
ஒரே நாளில் வீயன்னாவை முழுவதுமாக சுற்றி பார்க்க முடியாது என்ற குறை இருந்தபோதும் வீயன்னாவின் (Iconic )அடையாளமாக நிற்பது புனித ஸ்ரிபன் கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த தேவாலயம் கி. பி 1147 கட்டத் தொடங்கியபோதும், தற்போது நாங்கள் பார்ப்பது 13 ஆவது நூற்றாண்டில் வீயன்னாவின் நடுவே கட்டப்பட்ட தேவாலயம். ஆயிரம் வருடங்கள் தொடர்ச்சியாக மாற்றங்களுடன் ரோமானிக் (Romanic Architecture)) மற்றும் கொத்திக் (Gothic Archetecture) கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. ஐரோப்பாவில் நடந்த போர்களால், பல தடவை உடைந்தபோது போது மீண்டும் , மீண்டும் புதிப்பித்து கட்டப்பட்ட ஐரோப்பாவின் முக்கிய தேவாலயமாகும். இந்த தேவாலயத்தின் நிலவறையில் அடியில் பிரேதங்களை வைப்பதற்கான சவக்காலை உள்ளது என்கிறார்கள். இந்த தேவாலயம் கட்டப்பட்ட இடம் ரோமர்களது சவக்காலை இருந்த இடமென்கிறார்கள். தேவாலயத்தின் உள்ளேயும் ஒரு அரசரது பிரேதம் கொண்ட கல்லாலான சவப்பெட்டி ( Sarcophagus) வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையும் யேசு, மரியாள் , அவரது சீடர்கள் பெயர்களில் தேவாலயங்கள் அமைந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். இங்கு புனித ஸ்ரிவன் யார் என பார்த்தபோது புனித ஸ்ரிபனை கிறிஸ்தவ மதத்தின் முதல் தியாகியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனாலே பல இடங்களில் ஐரோப்பாவில் புனித ஸ்ரிவன் தேவாலயங்கள் உள்ளன.
கொஞ்சம் வேதாகமத்தை அறிவோம்.
ஜெருசெலேம், ரோமர்களது ஆட்சியின் கீழ் இருந்தபோதும் அங்கு மதம் சம்பந்தமான அதிகாரம் யூதர்களிடம் இருந்தது. தற்போது ஈரான் ஆப்கானிஸ்தானில் மத சம்பந்தமான சட்டங்களும் தீர்ப்புகளும் முல்லாக்களிடம் இருப்பதுபோல். தெய்வ மத நிந்தனையென்ற (Blasphemy) விடயங்களில் மதக் குழுவினரால் தண்டனை விதிக்க முடியும்.
புனித ஸ்ரிவன் கதை, யேசு நாதர் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் பின்பாக நடந்த கதையாகச் சொல்லப்படுகிறது.
தற்காலத்தில் அமரிக்காவின் யூத செனட்டரான பேணி சாண்டர் ( Bernie Sander) இஸ்ரேலிய பிரதமராகிய நெத்தனியாகுவை ( Netanyahu) குற்றம் சாட்டுவதுபோல், யேசு நாதரின் கொலைக்கு யூத தலைவர்களே பொறுப்பு என அக்காலத்தில் துணிந்து கூறியதுடன், இறையருள் பெற்று அற்புதங்கள் நடத்தியவர் புனித ஸ்ரிவன்.
கிரிக்க மொழி பேசும் யூதனாகிய ஸ்ரிபன் அக்காலத்தில் மக்களுக்கு முக்கியமாக ஏழைகள், விதவைகளுக்கு உணவளிக்கும் பதவியில் இருந்தார். அக்காலத்தில் ஜெருசலேமில் உள்ள யூதர்களுக்கும் மற்றைய யூதர்களுக்கும் வித்தியாசங்கள் இருந்தது. புனித ஸ்ரிபன் கத்தோலிக்க மதத்தின் முதல் சேவகர் (Deacon) அதாவது தற்போதைய குருவானவர் போன்றவரெனக் கருதப்படுகிறார். புனித ஸ்ரிவன், யூதர்களின் கோயில் , விக்கிரகங்கள் என்ற கருத்தை எதிர்த்தார். அத்துடன் வெளிநாட்டில் பிறந்த யூதர் (Hellenised Jew) அதாவது அந்நியன் என்ற காரணங்களால் புனித ஸ்ரிபனை அக்காலத்தில் யூதர்கள் தெய்வ நிந்தனை: அதாவது மோசசையும் அவரது பத்துக் கட்டளைகளுக்கும் எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கல்லெறிந்து (இறக்கும்வரை ) கொல்லப்பட்டார்.
இப்படியாக கொல்லப்பட்ட புனித ஸ்ரிவன், கிறிஸ்தவ மதத்தின் முதல் தியாகியாக கொண்டாடப்படுகிறார். புனித ஸ்ரிவனை தியாகியாக வடிவமைத்து அவருக்கு ஐரோப்பாவின் பல இடங்களில் தேவாலயங்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மத்திய காலத்தில் யூதர்களுக்கு எதிரான உணர்வுகள் ஐரோப்பிய மக்கள் மனங்களில் ஆழமாக விதை கொண்டுள்ளது. பாமர மக்கள், அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல ஐரோப்பிய இலக்கியங்களில் இது ஆழமாகத் தெரிகிறது. சேக்ஸ்பியரது (Merchant of Venice ) டாஸ்கோவிஸ்கியின் பிறதர்ஸ் ஒவ் கரமசோவ்விலும் ( The Brothers Karamazov” by Fyodor Dostoyevsky) என்னால் பார்க்க முடிந்தது. ஒரு வேளை இக்காலத்தில் அந்த புத்தகங்களை அரசுகள் யூதர்களுக்கு எதிரானது ( Anti-semitic) எனத் தடை செய்ய முடியும். இப்படியாக கிட்டத்தட்ட 2000 வருடங்களாக புகைந்த யூதவெறுப்பு 1930 களில் அடால்ஃப் ஹிட்லரால் மீண்டும் பகிரங்கமாக ஊதி நெருப்பாக்கப்படுகிறது. முழு ஐரோப்பியர்களும் தங்களது பாவத்தின் சம்பளத்தை அடால்ஃப் ஹிட்லர் என்ற தனி மனிதனிடம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பிவிடுகிறார்கள். இவர்களது குற்ற உணர்வு இப்பொழுது பாலஸ்த்தீனியர்களின் கழுத்தை நெரிக்கிறது.
வீயன்னாவின் மத்திய பகுதியில் தியேட்டர் மியூசியம் ஒன்றுண்டு. அங்குள்ள அரங்கத்தில் பீதோவான் போன்ற சங்கீத மேதைகளின் நிகழ்வுகள் நடந்தது. அத்துடன் சங்கீதம் சம்பந்தமான பல புத்தகங்கள் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவைகளைப் பார்க்க எனக்கு கிடைக்காத போதும், அங்குள்ள சிறிய அரங்கத்தில் எங்களுக்காக பிரத்தியேகமான சங்கீதம் நடந்தது. இதுவரையும் செவ்வியல்- மேற்கத்தைய சங்கீதத்தைக் கேட்கவோ அல்லது அதில் ஈடுபாடு காட்டாத எனக்கு உண்மையில் அது ஒரு அறுசுவை விருந்தாக இருந்தது.
குறைந்தபட்சம் ஒரு கிழமையாவது நின்று பார்க்கக் கூடிய விடயங்கள்கொண்ட வீயன்னாவில் ஒரு பகலில் பார்ப்பது, அடுப்பில் சமைத்த கறியை அகப்பையால் எடுத்து சமையல்காரன் நாக்கில் வைத்து ருசி பார்த்து திருப்தியடைவது போன்ற விடயமாகும். ஆனாலும் வீயன்னாவின் அழகை செவிகளாலும் கண்களிலும் நுகர முடிந்தது என்ற நினைவுடன் எங்கள் பயணம் மேலே நதியில் தொடர்ந்தது.
[ நதியில் பயணம் மேலும் தொடரும் ]