முனைவர் பட்ட ஆய்வாளர் - பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது) - நெறியாளர் - முனைவர் ச. இராமலட்சுமி, துணை முதல்வர் மற்றும் துறைத் தலைவர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் கொண்டவைகளாகும். வீரமுடன் இணைந்த மன்னராட்சி முறையின் சிறப்பினைப் பற்றி கூறுகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கின்ற பண்பானது அனைத்து மக்களிடமும் விளங்கியது. அதில் மன்னராகப் போற்றப்பட்டவரின் கடமைகள் மனிதநேயத்தன்மையுடன் காட்டப்பட்ட தன்மையினைப் பற்றி அறியலாம். மனிதர்களின் குறைகளைப் போக்கி விட்டு மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவது மனிதநேயப் பண்பாகும். மன்னர்களின் ஆட்சியின் சிறப்பினால் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டினைச் செழிப்பாக வாழ வைத்த செய்தியினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. மன்னர்களின் மனித நேயப் பண்பு செல்வத்தைத் தனக்கென சேர்த்து வைக்காமல் பிறருக்குக் கொடுக்கும் ஈகை பண்போடு விளங்கியத் தன்மை கூறப்படுகின்றது. போரின் போதும் அனைவரையும் காப்பாற்றியமை மனிதநேயம் மிக்க செயலாகப் போற்றப்படுகின்றது.
கலைச்சொற்கள்: வீரம், மனிதநேயம், மன்னர்கள், ஈகை, போர்
முன்னுரை
இலக்கியங்கள் காதல், வீரம், கொடை, மனிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கி இருக்கின்றன. புலவர்களின் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும் சேர்ந்து மனிதத் தன்மையின் அடையாளமாக விளங்கக் கூடிய ஒன்றான மனிதநேயம் என்பதனை அனைவருக்கும் அறிவுறுத்தியது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை மனிதனால் பாதுகாக்கப் படுகின்ற அனைத்தும் மனிதநேயத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது. மனிதன் என்ற சொல்லானது மனிதம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. மனதில் பலவகையான எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்களே மனிதனைச் சிறந்தவனாகக் காட்டுகிறது. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதத்தன்மையினை வெளிப்படுத்துவது மனிதமாகும். மனிதனை மனிதன் மதித்து அன்பு செய்வதையே முக்கிய நோக்கமாகக் கருதுகின்றது. மனிதனது குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவதே மனிதமாகும். வறுமை இல்லாத வாழ்வினை மக்களுக்கு அளிக்க விரும்பினர். நாட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிரம்பி நாடு செழிப்புற இருக்க வேண்டும் என்பதனையே தங்களுடைய கொள்கையாகக் கொண்டு மன்னர்கள் வாழ்ந்தார்கள். மாதம் மும்மாரி மழை பொழிந்து நாட்டினை வளப்படுத்தியது. மனிதத்தன்மையை உணர்ந்த மன்னர்கள் மக்களுக்கு முன்னுதாராணமாக விளங்கினார்கள். இதனால் மனிதநேயம் சங்க இலக்கியத்தில் சிறந்த செல்வாக்குடன் விளங்கியது என்பதனைக் காணலாம்.