தொடர்நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (1) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!
என் பெயர் விக்கிரமாதித்தன். என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத் தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.
அட்டா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.