எட்கர் ஆலன்போ (செயற்கை அறிவு, AI, உருவாக்கிய ஓவியம்) -
முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.
நான் இரவு உணவை உண்டு விட்டு மறுநாள் காலையில் சற்று நேரம் வரை தூங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். உடனடியாகத் தூங்கி விட்டேன். ஆனால் நான் நினைத்ததைப்போல் இரவில் நன்றாகத் தூங்க முடியவில் லை. நான் தூங்கி அரை மணி நேரம் ஆகி இருக்காது, முன் கதவிலிருந்து அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது. யாரோ பொறுமை இல்லாமல் கதவைத் தட்டினார்கள் ஒரு நிமிடம் கழிந்திருக்கும் நான் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவி மூக்கிற்கு நேராகக் குறிப்புச் சீட்டு ஒன்றை நீட்டினாள். மிகவும் நெருங்கிய மருத்துவ நண்பரான பானனரிடமிருந்து அந்தச் சீட்டு வந்திருந்தது. “நண்பரே என்னை சாந்தியுங்கள்’ என்று அந்தக் குறிப்பு சொன்னது. “எங்களுக்கு உதவுங்கள், எங்களுடைய அதிர்ஷ்டம் அருங்காட்சியகத்தின் இயக்குனர் இறுதியில் பதப்படுத்தப்பட்ட மம்மியைச் சோதித்தறிய எங்களை அனுமதித்திருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதைப் பிரிக்க எனக்கு அனுமதி இருக்கிறது. சில நண்பர்கள் மட்டுமே உடனிருப்பார்கள். நீங்களும் தான், நீங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றிருந்தது. மம்மி இப்பொழுது என் வீட்டில் இருக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு நாம் அதைத் திறக்கலாம் என்றும் இருந்தது.
பானனரின் சொற்கள் எனக்குப் புரிந்த போது நான் நன்றாக விழித்திருந்தேன். பெரும் உற்சாகத்துடன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தேன், வேகமாக ஆடை அணிந்து மருத்துவரின் வீட்டுக்கு விரைந்தேன்.
நான் அங்கு சென்றபோது ஆர்வத்துடன் காத்திருந்தவர்களைப் பார்த்தேன். பொறுமையின்றி அவர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். உணவருந்தும் அறையின் மேசையின் மேல் பெட்டியிலிருந்து எடுத்த மம்மியை வைத்திருந்தார்கள். நான் அறைக்குள் நுழைந்தவுடன் மம்மியைச் சோதிக்கத் தொடங்கினார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைவில் உள்ள லிபியன் மலைகளில் இருந்து எலித்தியாசுக்கு அருகில் உள்ள ஒரு கல்லறையில் இருந்து பானனாரின் உறவினரான கேப்டன் ஆர்தர் சப்பரேட்டாஸ் கொண்டு வந்த ஜோடிகளில் இதுவும் ஒன்று. எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சோடியில் ஒன்றுதான் அது. நைல் நதிக்கரைக்கு அருகில் உள்ள தீப்ஸ் நகரின் வளமான குகையின் பாதாள அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதைக் கண்டு பிடித்தவர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்திருந்தார். அது எப்படி இருந்ததோ அதே நிலையில் 8 ஆண்டுகள் அருங்காட்சியகத்தில் இருந்தது. அதைத் தொடுவதற்கோ திறந்து பார்ப்பதற்கோ இதுவரை யாரையும் அனுமதிக்கவில்லை. இப்பொழுது எங்களைத்தான் அனுமதித்திருக்கிறார்கள் என்றால் எங்களுடைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
மேசைக்கருகே சென்றேன் ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் இரண்டரை அடி ஆழமும் உடைய பெட்டியினுள் மம்மி வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அந்தப் பெட்டி மரத்தால் ஆனது என முதலில் நினைத்திருந்தோம். பிறகு அதை வெட்டும்போதுதான் தெரிந்தது, பேப்பிரஸ் நாணலில் செய்யப்பட்ட மாவு போன்ற கலவையால் ஆனது. இறப்புடன் தொடர்புடைய காட்சிகளால் அது மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. புதிய எழுத்துக்களில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக எங்களுடைய குழுவைச் சார்ந்த மிஸ்டர் கிளிட்டனுக்குப் பழைய எகிப்திய எழுத்துக்களைப் படிக்கத் தெரியும். அவர்கள் இறந்தவரின் பெயரை ‘அலாமிஸ் தியோ’ என அழைத்ததாகக் கூறினார். உள்ளே இருப்பதைச் சிதைத்து விடாமல் வெளிப்பகுதியைப் பிரித்தெடுப்பது சற்றுச் சிரமமாய் இருந்தது. இறுதியில் பிரித்து விட்டோம். உள்ளே வெளியறையைப் போலச் சிறியதொன்று இருந்தது. இரண்டாவது உறையை எளிதில் பிரித்தபோது மூன்றாவது உறை இருந்தது. இந்த உறை நறுமணம் வீசும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. மூன்றாவது உறையைப் பிரித்தவுடன் உடலைப் பார்த்தோம். வழக்கமான முறையில் உடல் மூடப்பட்டிருக்கும் என நாங்கள் நினைத்தோம். மெல்லிய நீண்ட கட்டுப் போடும் பேண்டேஜ் துணிகளால் சுற்றப்பட்டு இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். நாங்கள் ஒன்றும் நினைக்கவில்லை என்றாலும், பாப்பிரஸ் நாணலினால் செய்யப்பட்ட போர்வையால் சுற்றப்பட்டு இருந்தது. அதில் அழகான ஓவியங்கள் இருந்தன ஆன்மாவின் கடமையுடன் தொடர்புடைய ஓவியங்கள் அவை. வேறு உருவங்களும் இருந்தன, பல கடவுள்களின் ஓவியமாக இருக்கலாம், மனித உருவத்தின் ஓவியங்களும் இருந்தன. அவை ஒருவேளை இறந்தவரின் உருவமாக இருக்கலாம் என நினைத்தோம். வெவ்வேறு நிலைகளில் அவை இருந்தன. மேலும் அங்கே இறந்தவரின் பெயர்ப் பட்டியலும் பட்டங்களும் அத்துடன் இறந்தவரின் உறவினர்களது பெயர்களும் பட்டங்களும் எழுதப்பட்டுள்ளன வென்று திரு கிளிட்டன் கூறினார்
போர்வையின் கழுத்துப் பகுதியில் இருந்த பட்டையில் கண்ணாடி மணிகளில் செய்யப்பட்ட பல்வேறு கடவுள்களின் ஓவியங்கள் இருந்தன. இடுப்புப் பகுதியில் அதைப் போல ஒரு பட்டை இருந்தது. அந்தப் போர்வையை விலக்கியவுடன் நாங்கள் உடலைப் பார்த்தோம். அது நல்ல நிலையில் இருந்தது. துர்நாற்றம் அடிக்கவில்லை. தோல் சிவந்த நிறத்தில் கடினமாகவும் மென்மையாகவும் இருந்தது. பற்களும் தலைமுடியும் நன்றாக இருந்தன. கண்கள் நீக்கப்பட்டிருந்தன அந்த இடத்தைக் கண்ணாடி ஆக்கிரமித்து இருந்தது. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் உயிருள்ளவை போலவும் இருந்தன.
நிலைத்த பார்வையுடன் இருந்ததைத் தவிர பார்ப்பதற்கு உயிர் உள்ளவை போலவே தோன்றின. விரல்களிலும் நகங்களிலும் அற்புதமான ஓவியங்கள் இருந்தன. உடலின் முக்கியமான உறுப்புகளை நீக்கும் துளைகளுக்காக நாங்கள் உடலைக் கவனமாகச் சோதித்தோம். ஒன்றும் தென்படவில்லை பெரும்பான்மையான எகிப்திய மம்மிக்கள் முழுமையாகவே இருக்கும் என்பதை நாங்கள் ஒருவர் கூட அப்பொழுது உணரவில்லை. மூளையை மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியே எடுத்து விடுவோம். உடலின் பக்கவாட்டுப் பகுதியில் வெட்டி வயிற்று உறுப்புகளை எடுத்துவிட்டு உடலை மழித்து முடிகளை நீக்கி நீரால் குளிப்பாட்டி பிறகு உப்புப் போடுவோம். பல வாரங்களுக்கு உடல் அப்படியே இருக்கும். அதன் பின் உடல் பதப்படுத்தத் தயாராகும். நாங்கள் எதிர்பார்த்தபடி எந்தத் தொல்லையும் இல்லை.
டாக்டர் பானனார் அவரே உடலை வெட்டலாம் எனத் தேவையான உபகரணங்களைத் தயார் செய்தார். அது நீண்ட நேரம் செய்ய வேண்டிய வேலை என்பது எனக்குத் தெரியும். அதனால் விடிந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது என அனைவரிடமும் தெரிவித்தேன். மாலையில் மற்ற சோதனைகளைத் தொடரலாம் என்று நினைத்துக் கூறினேன். வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்தபோது யாரோ மின் சோதனைகளைச் செய்யலாம் என்றார்கள். நல்ல கருத்து என அனைவரும் எண்ணினோம். தூக்கத்தைப் பற்றி நினைப்பே எங்களுக்கு மறந்து போனது. மம்மியினுள் மின்சாரத்தைச் செலுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனத் தோன்றியது.
நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. மம்மிக்கு மூன்றிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளாய் இருக்கும். இதைச் செய்யலாம் என நினைத்தவுடன் எங்கள் அனைவருக்கும் ஏன் அவ்வளவு உற்சாகம் எனப் புரியவில்லை. பல தொல்லைகளுக்குப் பின் மம்மியின் நெற்றித் தசையில் மின்கம்பியை இணைத்தோம். நெற்றியைச் சிறிதளவு வெட்டித்தான் மின்கம்பியைப் பொருத்த முடிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தோம். முட்டாள்தனமாக இருந்தது. ஏன் இத்தகைய அறிவிலித்தனமான சோதனையில் இறங்கினோம் என்பது வியப்பா இருந்தது. இரவு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானோம். கிளம்பும்போது மம்மியின் கண்களைப் பார்க்க நேர்ந்தது. பார்த்த காட்சியில் திகைத்துப் போனேன் நீண்ட நேரம் மம்மியின் கண்கள் கண்ணாடியைப் போலவே இருக்கவில்லை இப்பொழுது அவை பாதி மூடி இருந்தன.
கத்தியபடி ஏற்பட்ட மாற்றத்தை நான் தெரிவித்ததால் மற்ற அனைவரும் அதை உடனே கவனித்தார்கள். என்ன நடந்தது என நான் எச்சரித்தேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எச்சரிக்கை என்பது என்னுடைய உணர்வுக்குப் பொருத்தமான சொல்லாக முடியாது. நேற்று மாலையில் அதிகம் மது அருந்தவில்லை என்றாலும் கூட இதைத்தான் உணர்ந்திருப்பேன். என்னுடைய பிற நண்பர்களும் பயத்தை மறைக்க முயலவில்லை. டாக்டர் பானனார்தான் பரிதாபத்திற்குரிய மனிதரானார். தன்னைத்தானே மறைத்துக்கொள்ள நினைத்தாரோ என்று தோன்றியது .திரு பக்கிங் காம் மேசைக்கடியில் முழங்காலில் தவழ்ந்தார். முதல் முறை மின் தாக்குதல் கொடுத்தபின் மின்சார சோதனை செய்வது சிறந்தது என நாங்கள் முடிவு செய்தோம்
வலது காலை நகர்த்த வைக்க முடியுமா?வெனப் பார்க்கலாம் என முடிவு செய்தோம். வெறுமையாக வைத்திருந்த கால் பகுதியில் சிறிதாக வெட்டி மின்கம்பியைப் பொருத்தினோம். மின்சாரத்தைச் செலுத்தினோம். உயிர் இருப்பது போல மம்மி முதன்முறையாகக் காலை வயிற்றின் பின் பகுதி வரை மடக்கி பின் நேராக நீட்டியதுடன் டாக்டர் பானனாரை நன்றாக உதைத்தது. அவர் பின்னால் பறந்து போய் வலப்புற சன்னல் வழியாகத் தெருவில் விழுந்தார். தெருவில் எங்கள் நண்பனின் உடைந்த உடல் பகுதிகளைப் பார்ப்போமோ என்று அஞ்சி விரைந்தோம். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, காயம் எதுவும் இல்லை. அவர் மாடிக்கு விரைந்து வந்து மேலும் ஆர்வத்துடன் சோதனைகளைத் தொடர விரும்பினார். டாக்டரின் அறிவுரைப்படி நாங்கள் மம்மியின் மூக்கை வெட்டினோம். டாக்டர் மின்கம்பியை இணைத்தார். மின்சாரம் பல விளைவுகளைத் தந்தது. முதலில் உடலின் கண்கள் திறந்தன, இரண்டாவதாக அது தும்மியது, மூன்றாவதாக அது எழுந்து அமர்ந்தது. அதன் பின் முஷ்டியை மடக்கி டாக்டர் பானனாரிடம் காட்டியது.
பிறகு மிஸ்டர் கிளிட்டன் மற்றும் மிஸ்டர் பக்கிங்காமிடம் திரும்பி அழகான எகிப்திய மொழியில் பேசியது. “கண்ணியவான்களே நான் இதைச் சொல்லத்தான் வேண்டும். உங்களுடைய நடவடிக்கை எனக்கு விந்தையாக மட்டுமல்ல வருத்தமாகவும் இருந்தது. டாக்டர் பானனரிடம் நான் எதையும் சிறப்பாக எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். நல்ல விஷயங்கள் எதுவும் தெரியாத குண்டு முட்டாள் அவர். எனக்கு அவர் மேல் பரிதாபம் தான். நான் அவரை மன்னிக்கிறேன் ஆனால் நீங்கள் இருவரும் எகிப்து சென்றிருக்கிறீர்கள். அங்கு வாழ்ந்திருக்கிறீர்கள், எகிப்து மொழியை அறிவீர்கள். எகிப்தின் வழக்கங்கள் நன்கு தெரியும். உங்களுடைய மொழியை எழுதப் படிக்கத் தெரிவது போல் இருவருக்கும் எகிப்து மொழியை நன்றாக எழுதவும் படிக்கவும் முடியும். நீங்கள் இருவரும் மம்மிகளிடம் நன்றாக நடந்து கொள்வீர்கள் என்றும் அவற்றை நன்றாகக் கையாளுவீர்கள் என்றும் எனக்கு என்றும் நம்பிக்கை உண்டு,
இதைவிட கண்ணியமாக நன்றாக நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைத்திருந்தேன். இங்கே இருந்து கொண்டு என்னை இப்படி நடத்த நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? இந்தக் குளிரில் என்னைப் பிரித்து சோதிக்க இந்தப் புதியவர்களை எப்படி அனுமதிக்க முடிந்தது? நீங்கள் உண்மையாகவே இந்த மடத்தனமான டாக்டருக்கு எனது மூக்கைப் பிடித்து இழுக்க உதவியிருக்கிறீர்கள் நாங்கள் பிணம் என்று நினைத்த மம்மியிடம் இருந்து இத்தகைய சொற்களைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் கதவை நோக்கி விரைந்து இருப்போம் என்றோ, மயங்கி விழுந்திருக்கலாம் என்றோ, நகரக்கூட முடியாமல் பயந்து போய் அங்கேயே நின்றிருப்போம் என்றோ நீங்கள் கற்பனை செய்யலாம். நடந்த நிகழ்ச்சிக்குப் பின் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்று நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் . ஆனால் இவற்றில் எதுவும் ஏன் நிகழவில்லை என்பதை என்னால் விளக்க முடியவில்லை.
ஒருவேளை மம்மி இயல்பாக இயற்கையாகப் பேசியதால் நாங்கள் அஞ்சவில் லையோ என்னவோ. வழக்கத்திற்கு மாறான இந்த நிகழ்ச்சிகளால் நாங்கள் யாருமே பயப்படுவது போல் தெரியவில்லை. எல்லாமே நன்றாகத் தான் இருந்தது நான் மம்மியின் பக்கவாட்டில் நகர்ந்தேன். அப்போதுதான் மம்மியின் முஷ்டி என்னைக் குத்தாது. டாக்டர் பானனர் தனது கரங்களைக் கால் சட்டைப் பையில் விட்டிருந்தார். மம்மியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். முகம் எல்லாம் சிவந்து போனது . மிஸ்டர் கிளிட்டன் அவருடைய சட்டையின் கழுத்துப்பட்டையை இழுத்தார், பின் தாடையில் தட்டிக் கொண்டிருந்தார். மிஸ்டர் பக்கிங்காம் திகைத்துப் போய் தரையைப் பார்த்தார், பிறகு வாயின் மேல் விரல் வைத்தார்.
எகிப்து மனிதன் அவரைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு பிறகு, “நீங்க பேச மாட்டீங்களா பக்கிங்ஹாம், நான் கேட்பது உங்கள் காதில் விழுகிறதா? தயவு செய்து வாயிலிருந்து விரலை எடுங்கள்’. இதைக் கேட்டவுடன் திரு பக்கிங்காம் லேசாகக் குதித்தார். அவருடைய வாயிலிருந்து விரலை எடுத்தார் பின் மற்றொரு விரலை வாயின் மறுபுறம் வைத்தார் .பக்கிங்ஹாமிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் மம்மி திரு கிளிட்டானிடம் திரும்பியது. எங்களுடைய செயல்களைப் பற்றி அவரிடம் மிகவும் கடுமையாகக் கேட்டது.
மிஸ்டர் கிளிட்டன் எகிப்திய மொழியில் மிக அழகாகவும் சரியாகவும் விளக்கமாக எடுத்துரைத்தார். எகிப்திய மொழியில் இயல்பாகப் பேசினார்கள் மிஸ்டர் கிளிட்டன் மிக நன்றாகவே பேசினார். நாங்கள் யாராவது மம்மியிடம் பேச விரும்பினால் அவர்கள் இருவரில் ஒருவர் எங்கள் உரை பெயர்ப்பாளராக மாறினார்கள். மம்மிக்கு நவீன சொற்களில் சில புரியவில்லை. இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் உதாரணமாக அரசியல் என்ற சொல்லை மிஸ்டர் கிளிட்டனால் நீண்ட நேரம் எகிப்தியனுக்குப் புரியவைக்கவே முடியவில்லை. மிஸ்டர் கிளிட்டன் மம்மியுடன் பேசும்போது நவீன அறிவியல் வளர்ச்சியைப் பற்றி ஆர்வத்துடன் விவரித்தார்.
குறிப்பாக மம்மியைச் சோதிப்பதில் நாங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதைப் பற்றி. மம்மியை வருத்தப்படுத்தியதற்காக மிஸ்டர் கிளிட்டன் மன்னிப்புக் கேட்டதுடன் மேலும் தொடர்ந்து சோதனை செய்ய விரும்புவதைக் குறிப்பாக உணர்த்தினார். மம்மி மிஸ்டர் கிளிட்டனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டது, ஆனால் தொடர்ந்து அதைச் சோதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக மேசையிலிருந்து இறங்கி வந்து எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கியது. அவர் கைகுலுக்கியவுடன் மின்சாரம் செலுத்திய போது ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்தோம். முன்னெற்றியில் இருந்த காயத்தினைத் தைத்தோம் காலை மருந்து வைத்துக் கட்டினோம். மூக்கின் மேல் மருந்துப் பட்டையை ஒட்டினோம். கவுன்ட்டுக்கு (இது மம்மியின் பட்டங்களில் ஒன்று என்று அறிந்திருந்தோம்) நிச்சயமாகக் குளிரால் நடுங்கியிருக்க வேண்டும். உடனே டாக்டர் துணிகள் வைக்கும் அலமாரியிலிருந்து மாலையில் அணியும் கறுப்பு மேல்சட்டை, ஒரு சோடி நீல கால் சட்டைகள், ரோசா நிற சட்டை, வெள்ளை நிற மேலங்கி, ஒரு தொப்பி, ஒரு ஜோடிப் புதையரணம் (பூட்ஸ்) மற்றும் டை அனைத்தையும் எடுத்து வந்தார். ஏனெனில் டாக்டரும் கவுன்ட்டும் முற்றிலும் வேறுபட்ட அளவிலிருந்தார்கள்
டாக்டர் அளவில் பெரிதாக இருந்தார், எகிப்தியருக்கு அவருடைய சட்டை பொருந்தவில்லை. அவர் ஆடை அணிந்த உடன் மிஸ்டர் கிளிட்டன் அவரை நெருப்புக் கருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார். நாங்கள் கீழே உட்கார்ந்தோம் எங்களுடைய உரையாடல் உற்சாகமாக ஆரம்பித்தது கவுன்ட் இன்னும் எப்படி உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். “நீங்கள் இப்போது இறக்கும் நேரம் என்று நான் நினைத்தேன்” என்றார் மிஸ்டர் பக்கிங்காம் ஏன் ? என்று கேட்ட கவுன்ட் மிகவும் அதிர்ந்து போய் எனக்கு 700 வயது தான் ஆகிறது என்னுடைய அப்பா ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். இறக்கும்போது கூட அவருக்கு வயதானது போல் தெரியவில்லை சரமாரியான வினாக்கள் எழ அதைத் தொடர்ந்து விடையும் வந்தது. கவுன்ட் புதைக்கப்பட்டு 5050 வருடங்களாகியிருக்க வேண்டும் என நாங்கள் நம்பி இருந்தோம். இதை ஒத்துக் கொண்டார் . ஆனால் அவரைப் புதைக்கும் போது அவருக்கு வயது 700. நிச்சயமாகக் கவுன்ட் இளைஞர் தான் என்பதை பக்கிங்காம் அவசரமாக ஒத்துக் கொண்டார்
ஆனால் இறந்து போய் புதைத்து ஐந்தாயிரம் ஆண்டுகளான பின்பும் அவர் எங்களோடு உயிருடன் நலமாக இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதை அறிய பக்கிம்ஹாம் விரும்பினார். அதன் பின் அவர் காலத்து மருத்துவர்கள் மக்களைப் பக்குவப்படுத்தினார்கள் என்பதை விளக்கினார். நமது காலத்து மருத்துவத்தை விட பல மடங்கு சிறந்த அவரது கால மருத்துவ அறிவைக் கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ந்தோம். அதன் பின் அவர் இறந்து போய்ப் புதைக்கப்படவில்லை, உயிருடன் புதைக்கப்பட்டார் என்று கூறினார்
அவருக்கு உடல்நிலை நலமாக இல்லை, அவரது உடல்நிலை அவரை உறங்க வைத்துவிட்டது. மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. எனவே அவர்கள் அவரைப் பக்குவப்படுத்தி மம்மி ஆக்கிப் புதைத்து விட்டார்கள். நீண்ட அமைதிக்குப்பின் டாக்டர் பானனர் பேசினார். ‘அது முடியும்’ பிறகு அவர் கூறினார், ‘நைல் நதிக்கரையோரத்தில் இதைப்போலவே புதைக்கப்பட்ட மம்மிகள் இருக்கக்கூடும். அவையும் ஒருவேளை உயிருடன் வரலாம்’ என்றார். ‘முற்றிலும் உண்மை’ பதிலளித்தார் கவுன்ட். உயிருடன் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள். தயவு செய்து நீங்கள் விளக்கமாகச் சொல்வீர்களா என்று நான் கேட்டேன், ‘உயிருடன் இருக்கும் போது உங்களை ஏன் பதப்படுத்தினார்கள்’ ‘நன்றாகச் சொல்வேன்’ என்றார். “என்னுடைய காலத்தில் மனிதர்கள் 800 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் விபத்தில் இறப்பவர்களைத் தவிர சிலர் 600 ஆண்டுகளிலேயே இறந்தார்கள். சிலர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள் ஆனால் 800 ஆண்டுகள் சராசரியாக வாழ்ந்தார்கள்.
மனிதர்களை எப்படிப் பக்குவப்படுத்துவது என்பதைக் கண்டுபிடித்தவுடன் எங்களுடைய அறிவியல் அறிஞர்கள் நவீன வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் வரலாற்றைக் கடந்த கால வரலாற்று அறிஞர்கள் திருத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என நினைத்தார்கள். உதாரணத்திற்கு 500 வயதானவர் வரலாற்றை எழுதுகிறார், பிறகு அவரைப் பக்குவப்படுத்துகிறார்கள். ஆனால் 500 அல்லது 600 ஆண்டுகளுக்குப் பின் அவர் உயிருடன் வரவேண்டும் என பக்குவப்படுத்துபவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பின் அவர் உயிருடன் வரும்போது அவருடைய வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொண்ட மக்களைச் சந்திப்பார். புதிய மக்களுக்கு வரலாற்று அறிஞரின் காலகட்டத்தின் உண்மை வரலாறு புரியாது. உயிருடன் திரும்பி வந்தவரால் புதியவர்களின் தவறைச் சரி செய்ய முடியும். மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பதையும் மக்களுக்குக் கூறுவார்.
இப்படியாக மறுபடியும் வரலாற்றைச் சொல்வது வரலாற்றை எழுதுவது சில வரலாற்று அறிஞர்களால் நிகழும். அவர்கள் பல காலங்களில் பலமுறை உயிருடன் திரும்பி அவர்கள் காலத்தைய வரலாறு உண்மையானது என்றும் ஒருபோதும் தவறாகாது என்றும் உணர்த்துவார்கள்”. ‘நல்லது’ என்றார் பக்கிங்ஹாம் ,அற்புதமான விஷயம் நிச்சயமாகக் கவுன்ட் உங்களது காலத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்ந்து இருக்கிறார்கள். பிறகு பல காலம் கழித்து உயிருடன் மீண்டு வர முடிந்தது . இதிலிருந்து உங்கள் காலத்தவர்கள் மிகச்சிறந்த அறிவுடையவர்கள் என்று உணர முடியும் இது இப்படித்தான் ஆனால் எகிப்தியர்கள் அறிவியலில் பின்தங்கி இருந்தார்கள் நவீன மனிதர்கள் ஆகிய நாங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?” “என்னால் உறுதியாகக் கூற முடியாது” என்று மென்மையாகக் கூறிய கவுன்ட், “நீங்கள் பேசும் அறிவியல் எப்படிப்பட்டது” நாங்கள் நம்பி இருக்கும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி அவரிடம் கேட்க இதுவே சரியான தருணம். அவருடைய பதிலில் நாங்கள் ஏமாந்திருந்தோம். அவர் அறிந்த அனைத்தையும் நாங்கள் அறிவோம், கண்ணாடி செய்வதை. செய்யும் முறையை அவர் அறிவார். மூளையும் நரம்பு மண்டலமும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் அறிவார். எகிப்தியர்களுக்கு வெகு தொலைவு எடை நிறைந்தவற்றைச் சுமந்து நினைவுச் சின்னங்களைக் கட்டத் தெரியும் என அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அவர் பலவற்றைப் பட்டியலிட்டார். நீராவி ஆற்றலைப் பயன்படுத்துவது உட்பட நாங்கள் அறியாமை நிறைந்தவர்களாகவும், முட்டாள்களாகவும் உணர்ந்தோம். பிறகு டாக்டர் பானனர் பேசினார் அவர் காலத்தின் பார்த்தார் ஆடை நெய்தல் தொழில் குறித்து கவுன்ட் என நினைக்கிறார் என்று கேட்டார்
கவுன்ட் டாக்டரைப் அதன், பின் அவர் அணிந்திருந்த உடைகளைக் கீழே குனிந்து நோக்கினார். அவருடைய விரல்களால் கால் சட்டைகளைத் தேய்த்துப் பார்த்தார் .சட்டைத் துணியையும் தொட்டுப் பார்த்தார் அணிந்திருந்த டையைத் தொட்டுப் பார்த்துவிட்டுக் கீழே விட்டார். அவர் முகத்தில் புன்னகை தோன்றி ஒரு காதில் இருந்து மறு காது வரை படர்ந்தது. பதில் சொல்ல தேவை இருப்பதாக அவர் நினைப்பது போல் தெரியவில்லை. எங்களுடைய நன்மையைக் கருதிய அளவில் வினாக்கள் நின்றுவிடவில்லை. விளையாட்டுத்தனமாகவும் மாறியது. நாங்கள் நல்ல மனநிலைக்குத் திரும்பினோம். டாக்டர் பானனர் மம்மியை அப்படியே விட்டு விடப் போவதில்லை. பானனர் மம்மியை நோக்கி கண்ணியத்துடன் பெருமையாக நடந்து போய் நேர்மையான ஒரு கேள்வியைக் கேட்டார் பானனரின் மாத்திரைகளைப் போன்ற மருந்துகளைப் பற்றி எகிப்தியர்கள் கேள்விப்பட்டதுண்டா? என்றார் ஆர்வத்துடன் பதிலுக்குக் காத்திருந்தோம் பதில் இல்லை.
எகிப்தியரின் முகம் சிவந்தது, தலையைக் குனிந்து கொண்டார். ஒருபோதும் வெல்லப்போவதில்லை, உறுதியாகச் சொல்லலாம், தோற்றதும் இல்லை அதுவும் தெளிவாகத் தெரிகிறது. என்னால் தோற்றுப் போன மம்மியின் பார்வையைத் தாங்க முடியவில்லை. எனது தொப்பியை எடுத்து விட்டு மம்மிக்குத் தலைவணங்கி அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். நான் வீட்டுக்குப் போனபோது மணி 4ஐக் கடந்திருந்தது. நேராகப் படுக்கப் . இப்போது மணி பத்து. காலை ஏழு மணிக்கு எழுந்து என்னுடைய குடும்பத்திற்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் என் மனைவியை மறுபடியும் பார்க்கப் போவதில்லை. இனிமேலும் எங்களுக்கிடையே அன்பிருக்கப் போவதில்லை. உண்மைதான் நான் உறுதியாகச் சொல்கிறேன். எல்லாமே தவறாக இருக்கிறது, தவிர 2045-ல் யார் தலைவராக இருப்பார் என அறிய ஆர்வமாக இருக்கிறது. அதனால் இந்தக் காபியைக் குடித்த பின் டாக்டர் பானனர் வீட்டுக்குப் போய் 200 ஆண்டுகளுக்கு என்னைப் பதப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.