- ரோசற்ரே கற்சாசனம்' (Rosetta stone) -
பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனி மரியாதையும் தவிர்க்க முடியவில்லை. முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டமீறிய பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பொது ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி பொருட்கள் ஏலத்திற்கு விடும் பொருட்களைக் கண்காட்சியாக வைத்து பின் ஏலத்திலிடுவார்கள். அப்படியான இடத்திற்கு விஜயம் செய்த அனுபவம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானதோர் அனுபவத்தை லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது நான் எதிர்கொண்டேன். உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல வகையான தொல்பொருட்கள் அழகாக அங்கு அடுக்கிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. நகைச்சுவையல்ல: உண்மை! அனுமதி முற்றிலும் இலவசமே!
அருங்காட்சியககட்டடம் மிகவும் அழகானது. விஸ்தீரமானது. உள்ளே களைத்தவர்கள் இளைப்பாறவும் உணவருந்தவும் இடமுள்ளது. மற்றைய அருங்காட்சியகங்களைப்போல் 'புகைப்படமெடுக்க தடை' போன்ற அறிவிப்புகள் இருக்கவில்லை. உலகத்தில் இதுவரை பிறந்து , வளர்ந்து அழிந்துபோன மானிட சமூகம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு சிருஷ்டிக்கப்பட்ட புது உலகமாக இது எனக்குத் தோன்றியது. உலகத்தின் வரலாற்றை அறிவதற்குச் சிறந்த இடம் வேறு எதுவுமில்லை என உள் உணர்வு சொல்லியது. ஒரு ஆலோசனை: ஒரே நாளில் இவற்றையெல்லாம் பார்க்க முயலவேண்டாம்.
எகிப்தின் மற்றும் இந்தியத் தொல்பொருட்கள், கெய்ரோ மற்றும் இந்திய நகரங்களிலுள்ள அருங்காட்சியகங்களில் பார்க்கமுடியாத பல அரிய பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரே நாளில் இந்தியா மற்றும் எகிப்தின் தொல்பொருட்களை என்னால் பார்க்க முடிந்தது. காரணம்: இரண்டு நாடுகளின் வரலாறும் எனக்கு ஓரளவு தெரிந்ததே. ஆனாலும் இன்னமும் ஒரு நாள் மீண்டும் பார்த்தாலும் எனது பொச்சம் தீராது. பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மொனாலீசா ஓவியம் பிரபலமானது. அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலத்தி, ஓவியத்தின் அருகில் செல்லக் காத்திருந்து பார்த்தேன். அணுக முடியவில்லை. தொலைவில் நின்று பார்த்து காமராவால் படத்தை எடுத்தபோது அதுவும் தெளிவாக வரவில்லை.
லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்தின் 'ரோசற்ரே கற்சாசனம்' (Rosetta stone) முக்கியமானது. ஆனால் இதை ஒரு ஓவியத்தை பார்ப்பதுபோல் பார்த்து கடந்து செல்லமுடியாது. எகிப்தின் அதாவது 2000 வருடங்கள் முன்பாக தொலமியின் (Ptolemy I Soter) ஆட்சிக்காலத்தில் அரசனது கட்டளையாக மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கற்சாசனம், 5000 வருடங்கள் முன்பாக சித்திர வடிவில் உருவான ஹைரோஹிளிவ் (Hieroglyphics code) என்ற மனித குலத்தின் ஆதி மொழியிலும் , அதன் கீழ், பிற்காலத்தில் எகிப்தியர் பாவித்த கொப்ரிக் மொழி, இறுதியில் தொலமி வம்சத்தினரது ஆட்சியில் பாவித்த கிரேக்கமொழி என்பவற்றால் ஒரே விடயம் எழுதப்பட்டிருந்தது. இந்த கற்சாசனத்திலிருந்தே ஹைரோஹிளிவ் மொழியை எகிப்தின் ஆய்வாளர்களால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளமுடிந்தது.
எகிப்தை, பேர்சியா (ஈரான்) கைபற்றி ஆண்ட காலத்தில் ஹெரடற்ரஸ் (Herodotus)என்ற கிரேக்க வரலாற்றாசிரியன் வருகையினால் எகிப்தின் நாகரிகம், மதம், வைத்தியம் என்பன கிரேக்கர்களால் உள்வாங்கப்பட்டன. ஹெரடற்ரஸ் அக்காலத்தில் எழுதியவை தற்போது நாங்கள் எழுதும் பயணக் குறிப்புகள் போன்றவை. இப்பொழுது பார்க்கும்போது பல தகவல் பிழைகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஹெரடற்ரஸ் தானாக அவதானித்தவை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்தவை என்பதே அவரது வரலாற்றுக் குறிப்பாகிறது உலகத்தின் முதலாவது வரலாற்று ஆசிரியர் எனக் கருதியபோதிலும் – ஒரு விதத்தில் தற்போது முகநூல்களில் வரும் தகவல்கள்போல் இருக்கலாம்.
தொகையான தகவல்கள் பகுப்பறிந்து அதே துறையில் அறிவுள்ள மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறும்போது (Peer Review) அவை விஞ்ஞான ரீதியானதாக நாம் ஏற்றுக்கொள்வோம். அப்படியான அறிவை பெறுவதற்கு அவர்களது மொழியை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அக்காலத்தில் எழுத்தை அறிந்து பகுப்பாய்வதற்கு (Deciphering) இலகுவானதாக இருக்கவில்லை. ஏதாவது ஒரு தடயம் தேவையாக இருந்த வேளையில்தான் இந்தக் கற்சாசனம் தற்செயலாகக் கிடைத்தது.
இதுவரை எகிப்தைப்பற்றி நாம் பெற்ற அறிவிற்கு முக்கிய காரணம் இந்த கற்சாசனமே. எகிப்தின் பயணக் கதையாக நைல் நதிக்கரையோரம் என்ற நூலை நான் எழுதுவதற்குமே பல விரிவுரைகளைப் வாசித்து, செவி சாய்த்தபோது இந்தக் கற்சாசனத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிட்டார்கள். இந்தக் கற்சாசனத்தை தேடிப்பார்ப்பது எனது ஒரு தனிப்பட்ட முயற்சியாகவும் இருந்தது. மூலக் கற்சாசனம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது என அறிந்ததால் அங்கு சென்றேன். அந்த கற்சாசனத்தை அருங்காட்சியகத்தில் நான் தேடியபோது, என்னுடன் மானிடவியல் படித்த, நண்பர் விசாகன் அதனருகே கூட்டிச் சென்றார். அப்பொழுது பக்தனுக்குத் தெய்வம் தோன்றியது போன்ற புல்லரிப்பான அனுபவம் உடலில் ஓடி மறைந்தது.
அந்த அருங்காட்சியகத்திலே அது முக்கியமான காட்சிப்பொருளாக இருந்தபோதிலும் பலருக்கு அது புரிந்தபடியால் அதிகக் கூட்டமில்லை. ஒரு சில இளம் பெண்கள் மட்டும் தலையை ஒதுக்கி உதட்டைப் பிதுக்கி செல்பி எடுக்க அருகே நின்றனர். விசாகனும் நானும் அதிக நேரம் நின்று கற்சாசனத்தைப் பார்க்க முடிந்ததுடன் படங்களும் எடுத்தோம்.
இந்த கற்சாசனத்தின் முக்கியத்துவம் மொழியியலுக்கு மட்டும் உரித்தானது அல்ல. எப்படி எழுத்திலிருந்து மொழி ஒன்று உருவாகிறது என்பதை இது நமக்குப் புரிய வைக்கிறது. உலகத்தில் பல இலட்சம் மொழி பேசப்பட்டபோதும் எழுத்து மொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லை. அரேபிய மொழி ஆபிரிக்கா கண்டத்திற்கு செல்லும்வரை எத்தியோப்பியாவில் மட்டுமே எழுத்து மொழி இருந்தது என்றால் பாருங்கள்!
நாடோடிகளாக இருக்கும்போது அங்கு எழுத்து தேவையில்லை. பிரித்தானிய காலனி ஆதிக்கம் வரும் வரை நமது நாடுகளில் எத்தனை பேருக்கு எழுத வாசிக்கத் தெரியும்? எழுத்து வாசனை இல்லாமல் நம் மூதாததையர்கள் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதானே? இப்பொழுதும் 'ஏன் வாசிக்கவேண்டும்? ஏன் எழுதவேண்டும்?' என்பவர்கள் எம்மத்தியில் உள்ளார்கள்.
அரசுகளின் உருவாக்கமே எழுதும் மொழியை உருவாகிறது. அரசு - அதிகாரிகள் - மக்கள் என்ற முக்கோணத்தை எழுத்து மொழியால் இணைக்கிறது. வரி, அரச நியதிகள், தனியார் உடைமைகளிற்கான குறிப்புகள் என வரும்போது எழுத்தின் தேவை வருகிறது.
எகிப்தின் மொழி படங்களிலானது என்பதால் ஹைரோஹிளிவ் என்கிறோம். அரசு தனது கட்டளைகளை மக்களுக்கு, அதிகாரிகள் மூலம் அறிவிக்கும் தேவை இருந்ததாலே அங்கு எழுத்து உருவாகிறது.
ஆஸ்திரேலிய பழங்குடிகள் 50,000 வருட வரலாறு கொண்டபோதிலும் ஆட்சிமுறை எதுவும் உருவாகவில்லை. அவர்கள் மத்தியில் 200-300 மேற்பட்ட வாய் மொழிகள், பிரித்தானியர் வரும்போது, இருந்ததாகவும் அவைகள் பல செழிப்பாகவும் அபிவிருத்தியடைந்தவையாகவும் உள்ளதாகக் கூறுவார்கள். உதாரணமாக அவுஸ்திரேலிய ஆதிவாசிகளது மொழியில் இரவை ஆறு பிரிவாகப் பிரித்துப் பெயரிட்டுள்ளார்கள். நமது தமிழிலோ ஆங்கிலத்திலோ ஆறு பிரிவுகள் இருப்பதாக எனக்குத் தெரியாது. ஆதிவாசிகளான அவர்களது தேவைக்காக மொழி உருவாக்கப்படுகிறது அவர்கள் கற்கால நாகரிகத்தில் நட்சத்திரம், நிலா, ஆகாயம் ஆகியவற்றை மையப்படுத்தி அவர்களது வாழ்வு இருந்தது. திறந்தவெளியில் படுத்துறங்குவது, அதிகாலையில் வேட்டையாடுவது என்ற தேவையைப் பொறுத்து அவர்களது மொழி உருவாகிறது. அதே போல் வட அமரிக்கா ஆதிவாசிகள் மரங்களின் செதுக்கி ஓவியங்களை வரைந்து தங்களது மொழி பரிமாற்றத்தை நடத்தினார்கள். அதுபோல் அந்தீஸ் மலைப் பிரதேசத்தில் நிலையான அரசை உருவாக்கி வாழ்ந்த இன்கா மக்கள் கயிற்றின் முடிச்சுகள் வழியாக அரச கட்டளையைப் பெற்றார்கள். அதைப்போல் 50,000 வருடங்கள் முன்பாக அரசை உருவாக்கிய எகிப்தியரகள் தங்களுக்கு உரிய மொழியை உருவாக்கி அரசு நடத்தினார்கள்.
கிறிஸ்துவிற்கு முன் 332 ல் அலக்சாணடர், எகிப்தைக் கைப்பற்றும் மட்டும் படங்களாலான ஹைரோஹிளிவ் அவர்கள் மொழியாக இருந்திருக்கிறது. இடைக்காலத்தில் எகிப்தின் மதகுருக்கள், முக்கியமாக எகிப்தின் வடபகுதியில், கொப்ரிக் (Coptic) என்ற மொழியையும் கிறிஸ்துவிற்கு முன் 600 ஆண்டுகளிலிருந்து பாவித்தார்கள். பிற்காலத்தில் தொலமி வம்சத்தின் காலத்தில்(ஹெலனிஸ்ரிக் காலம் - Hellenic period ) கிரேக்கமொழி அரச மொழியாகிறது.
இந்த மூன்று மொழிகளில் பிரிவுண்டு. ஹைரோஹிளிவ்- தெய்வ மொழி , கொப்பரிக் - மதகுருக்களின் மொழி, கிரேக்கம் அரசர்களின் மொழி என மூன்று மொழிகளிலும் எழுதப்படுகிறது. அக்காலத்தில் மொழி பிரச்சனை இருந்திருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.. கிரேக்க அரசர்களும் அதிகாரிகளும் எகிப்தியரகளின் மொழியைப் படிக்கவில்லை. கிளியோபட்ரா VII மட்டுமே மக்களின் மொழியை கற்றிருந்த அரசியாக இருந்தார்.
நாம் பார்த்த கற்சாசனம் ஆரம்பத்தில் கருங்கல்லான நாற்சதுரமாக இருந்து பின்பு உடைக்கப்பட்டுள்ளது. உடைந்த மற்றைய துண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலே எழுதியிருந்த ஹைரோஹிளிவ்வின் பெரும் பகுதிகள் இல்லை. தற்போதைய மதிப்பீடுகளின் படி 7 அடி உயரம் 3 அடிக்குக் குறைவாகக் கருங்கல்லின் ஒரு பக்கம் வழுக்காகப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது . நைல் நதியின் கழிமுகத்தில் உள்ள பழைய நகரான சயிஸ்(Sais) ஒரு கோவிலருகே இருந்திருக்கலாம் என நம்பப்படும் இந்த கற்சாசனம் பிற்காலத்தில் கோட்டை ஒன்றின் கட்டிட வேலைக்குப் பாவிக்கப்பட்டது .
ஆகஸ்து சீசரின் காலத்தில் முற்றாக எகிப்து கைப்பற்றப்பட்டபோதிலும் எகிப்திய கோவில்களில் வழிபாடுகள் 4வது நூற்றாண்டிலிருந்து குறையத் தொடங்கியது. சமகாலத்தில் ஓதோடொக்ஸ் கிறிஸ்துவம் எகிப்திற்கு வந்து சேருகிறது. இப்படியான மதங்களின் வருகை எகிப்தியர்களின் புராதன மதவழிபாட்டை பின் தள்ளுகிறது.
இந்த கற்சாசனம் ரோமர்கள் கிறிஸ்துவ கோவில்கள் தவிர்ந்த மற்றயைவைகள் அழிக்கப்படவேண்டும் எனக் கட்டளை இட்ட காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கவேண்டும் என வரலாற்றாசிரியர்கள் எண்ணுகிறார்கள். பிற்காலத்தில் ஓட்டமான் பேரசு நைல் நதியருகேயுள்ள கட்டும் ஜுலியன் கோட்டையின் கட்டுமானத்தில் இந்த கல்லைப் பாவிக்கிறது. பிற்காலத்தில் நெப்போலியனது படைகள் இந்தக்கோட்டையைக் கைப்பற்றிய போது இந்த கற்சாசனம் அவர்கள் கண்ணில் படுகிறது . நெப்போலியன் நேரடியாக இந்த கற்சாசனத்தை பார்த்தார் என்கிறார்கள்
நெப்போலியன் தனியாக பிரமிட் உள்ளே சென்று பார்த்தாக வரலாறு வேறு உள்ளது மட்டுமல்ல எகிப்தில் ஆய்வாளர்களை பிரான்சிலிருந்து கொண்டு சென்றதாக நான் ஏற்கனவே அறிந்தேன். எகிப்தில் வரலாற்றை வெளி உலகிற்குக் கொண்டு வந்த முக்கியமானவராக நெப்போலியனைக் கருதலாம். அதன் மூலம் இந்த கற்சாசனத்தின் பதிவுகள் ஐரோப்பா எங்கும் செல்கின்றன. பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. இதில் முக்கியமான விடயம் பிரான்சியர் இந்த கற்சாசனத்தை பாரிசுக்குக் கொண்டு செல்லாது தங்களுடனே எகிப்தில் வைத்திருக்கிறார்கள்.
நெப்போலியன், பிரித்தானியர்களிடம் தோற்ற பின்பும் பிரான்சியபடைகள், அலக்சாண்டியாவில் கற்சாசனத்தை வைத்திருந்தார்கள். பிரித்தானியர்கள் அலக்சாண்டிரியாவை கைபற்றிய பின்பே இந்த கற்சாசனம் கைமாறுகிறது. பிரித்தானியர்கள் எகிப்தின் பல தொல்லியல் பொருட்களை லண்டனுக்கு கொண்டு வந்தார்கள்.
- கிளியோபட்ரா – கண்டிசின் மகள் என்ற 17 வயதான மம்மி -
எகிப்தின் வரலாற்றுப் பொருட்கள் பல லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் என்னைக் குழப்பியது கிளியோபட்ரா – கண்டிசின் மகள் என்ற 17 வயதான மம்மியாகும். நமக்குத் தெரிந்த கிளியோபட்ராV11 அல்ல இவள்.... அவர் இறக்கும்போது 38 வயதென்கிறார்கள். கிளியோபட்ரா என்பது அக்காலத்தில் மிகவும் பிரபலமான பெயர். தொலமி வம்சத்தில் 7 கிளியோபட்ராக்கள் இருந்தார்கள் . இந்த கிளியோபட்ரா பற்றிய வரலாற்றுத் தகவல் இல்லை என்பதால் கிளியோபற்றா தற்கொலை செய்தபின் சீசரின் மகனான சிசேரீயன் கொல்லப்படுகிறான், ஆனால் 'மார்க் அன்ரனிக்கு பிறந்த மகளோ?' எனத் தலையைப் பிய்க்க வைத்தது அந்த மம்மி. இது பற்றி இணையத்திலும் சரியான தகவல்கள் இல்லை.
எகிப்தின் வரலாற்றின் ஒரு பகுதியை லண்டனில் பார்க்க முடிந்தது எனக்கு ஒரு மனத்திருப்தியைத் தந்தது. உலக சரித்திரத்தின் எச்சங்கள் எமக்கு வெளிப்படுத்தும் உண்மைகளுக்கு எல்லையுண்டோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.