தர்மசாலாவிலிருந்து எங்களது பயணம் அமிர்தசரஸ் நோக்கி திரும்பியது. பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தபோது, மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியதுடன் சுற்றியிருந்த வாவியில் அந்தக்காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது. அங்கு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா அல்லது பாதிரி எனத் தரகர்கள் எவருமில்லை என்பது முக்கிய விடயமாகும்.அத்துடன் அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள். என்னோடு வந்த சுவிஸ் மற்றும் ஆங்கிலய பெண்கள் இருவரும் இரு மணி நேரமாகச் சப்பாத்தி செய்ய உதவினார்கள். அதன்பின் அங்குள்ள உணவையே நாம் உண்டோம். சப்பாத்தி, பருப்பு, மற்றும் சர்க்கரை சோறு என மிகவும் எளிமையான உணவுதான். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து உணவூட்டிக்கொண்டே இருந்தார்கள்.

நடந்து செல்லும்போது, எனக்கு முன்பு தரையில் ஒரு இலை வந்து விழுந்தது. உடனே ஒரு சீக்கியப் பெண் அதை குனிந்து எடுத்தார். அப்படி ஒரு சுத்தம்! இந்தியாவில் சுத்தத்தை ஆராதிப்பவர்களாகச் சீக்கியர்கள் எனக்கு தோன்றினார்கள்.

பஞ்சாபிய மகாராஜா ரன்ஜித்சிங்கால் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு செப்பு தகடுகளால் கூரை வேயப்பட்டு பின்னர் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட கோயிலுள்ளே 'ஆதிகிரந்தம்' எனப்படும் சீக்கிய குருவால் எழுதப்பட்ட புத்தகம் வைக்கப்பட்டுள்ளது . அதைப் பார்ப்பதற்குப் பல மணிநேரம் காத்து நிற்கவேண்டும். இரவு கோயிலைப் பல முறை பார்த்துவிட்டு அடுத்தநாள் அதிகாலை மீண்டும் வந்தபோது, அப்போதும் அனேகர் வரிசையில் காத்து நிற்பதை காணமுடிந்தது. பக்தியோடு நிற்பவர்கள் மத்தியில் வெறுமனே உல்லாசப்பயணியாய் பார்ப்பதற்குக் காத்து நிற்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.

போல்வார் மகம்மது குன்ஹியின், "முத்துப்பாடி சனங்களின்" கதை என்ற நாவலில் இந்தியப் பிரிவினையின்போது பஞ்சாபிய பெண்ணிடம் இருந்து நம்பிக்கையாக வைத்திருக்கும்படி பெரும் தொகை பணத்தை ஒரு முஸ்லீம் இளைஞன் பெற்றான். அந்தப் பெண்ணை சந்தர்ப்ப வசத்தால் அவன் பிரிந்து விடுகிறான். அரை நூற்றாண்டுகளின் பின்பு அந்த பெண்ணை கண்ட பின்னும் பணத்தை அவளிடம் கொடுக்காது, முதுமையில் 'சாந்தா தாத்தா' என அழைக்கப்படும் அவன், அந்தப் பணத்தை பொற்கோயிலின் உண்டியலில் போட்டதாக அந்த நாவலின் இறுதி முடிவாகிறது. அங்கு நின்ற போது, அந்த நிகழ்வு என் நினைவில் நிழலாடியது.

மதியத்தில் சென்று 'ஜாலியான் வாலாபாக்' பூங்காவைப் பார்த்தேன் – ஒரு விதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சமடைவதற்கு உந்துசக்தியாக இருந்த ஒரு அவலச்சம்பவம் அங்கே நடந்தது! அதே வேளையில் ஆங்கிலேயர்களின் சுயரூபத்தை தோலுரித்த சம்பவமும் அதே. மிகவும் சிறிதான அந்த பூந்தோட்டம், மதில்களால் சுற்றிக் கட்டப்பட்டது. வெளியே செல்லவும் உள்ளே வரவும் ஒரு வாசல் மட்டுமே உள்ளது. அங்கு கொண்டாட்டத்திற்குத் திரண்ட மக்களை தங்களுக்கு எதிராக போராடவந்தவர்கள் என நினைத்து குண்டுகள் தீரும்மட்டும் சுட்டார்கள் சிப்பாய்கள். சுடப்பட்ட குண்டுகளின் துளையைப் பார்த்தபோது மிகவும் பெரிய குண்டுகளாக அவை இருந்தன. 379 பேர் கொல்லப்பட்டு 1200 பேருக்கு மேல் காயமடைந்ததாக அரசு அறிக்கை விட்டது. ஆனாலும் இறந்தவர்கள் தொகை இதைவிட அதிகமாக இருக்குமென சொல்லப்பட்டது. அங்கு பலர் பயத்தில் அங்கிருந்த ஒரு கிணற்றுக்குள் பாய்ந்து காயமடைந்தனர். அந்த கிணறு தற்பொழுது கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.

இங்குள்ள சுவரில் குண்டுகள் பாய்த்திருந்ததைப் பார்த்தபோது காத்தான்குடி மசூதிக்குப் போனபோது விடுதலைப் புலிகளால் அங்கு நடந்த படுகொலையும் அப்போது அவர்கள் சுட்டதால் சுவரில் பதிந்திருந்த குண்டுகளின் துளைகளும் எனக்கு நினைவுக்கு வந்தன.

இந்த மக்களைக் கொலை செய்ய ஆங்கிலேய ராணுவ அதிகாரி உத்தரவிட்டாலும் ஆயுதங்களைப் பாவித்தவர்கள் இந்தியர்களே! கூர்க்கா மற்றும் பாலுசிஸ்தான் படைவீரர்களும் இதில் அடங்கும். தற்போது அங்கு ஒரு அடையாள தூணும் புதிதாக இரண்டாவது பாதையும் உள்ளது. இந்த இரண்டாவது பாதை அக்காலத்தில் இருந்திருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற சிந்தனை மனத்தில் எழாமலில்லை.

மாலையில் இந்திய பாகிஸ்தான்(ATTARI-WAGAH Border) எல்லையில் நடக்கும் எல்லைக் காவலர்களது மாற்றத்துடன் நாடுகளின் கொடி இறக்கும் நிகழ்வுக்கு போயிருந்தோம். கிட்டத்தட்ட 3 மணி நேர நிகழ்வு பொலிவூட் படம் அல்லது T-20 கிரிக்கட் விளையாட்டுபோல் தொடர்ச்சியாக எந்த தொய்வில்லாது எங்களை இருக்கையில் வைத்திருந்தது அந்நிகழ்வு. இதை நடத்துபவர்கள் பாகிஸ்தான்-இந்தியா என்ற இரு நாடுகளின் எல்லைப் படையினரே. இந்தியப் பகுதியில் 50,000 மக்களும் பாகிஸ்தான் பகுதியில் 10,000 பேர்கள் வந்திருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்த நிகழ்வில் தொடர் அணிவகுப்புடன் தேசபக்தி பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். பாகிஸ்தான் பக்கத்தில் ஒரு காலில்லாத இராணுவ வீரர், பாக்கிஸ்தானின் தேசியக்கொடியைக் கையில் ஏந்தியபடி பம்பரமாகச் சுழன்ற காட்சி எனது மனத்தில் பல காலம் பசுமையாக நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். அவர் நிச்சயமாக ஏதாவது துப்பாக்கி ரவையால் அல்லது கண்ணி வெடியால் காலை இழந்தவராக இருக்கவேண்டும். முப்பத்தைந்து வருடங்கள் முன்பு ஈழப்போராளிகளில் காலிழந்த பலரைப் பார்த்தேன். எதிரியால் மட்டுமல்ல பயிற்சியின்போதும் விபத்தாலும் இவை நடந்ததுண்டு. இளங்கோ என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர் ஒருவர் கைகுண்டை எறிந்து பழகும்போது குண்டு வெடித்து காலிழந்தவர். பலகாலம் சென்னையிலிருந்த அவரை சந்தித்தேன். இளைஞரான அவரைப் பார்த்தபோது போரையும் சண்டையும் வெறுப்பதை விட வேறு என்ன செய்யமுடியும்?

நாங்கள் அன்று இரவு அமிர்தசரசிலிருந்து ரயிலில் ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். பல காலத்தின் பின் இரவு ரெயிலில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. என் முன்பாக ஒரு குழந்தையுடன் பஞ்சாபி பெண்ணெருவரிருந்தார். நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க நினைக்கும் அழகான முகத்தோற்றம் கொண்ட பெண்மணி. கழுத்தின் கீழ் உப்பிய பலுனாக உடல் வாகு. அந்தப் பெண்ணின் முக அழகிற்கு அப்பால் எனது கவனத்தைக் கவர்ந்ததன் காரணம், தனது ஒரு காலை கணவனது மடியில் அவர் போட்டிருந்ததுதான்! அது இந்தியாவில் நான் பார்த்திராத காட்சி. இரவு பத்து மணியளவில் மேல் அந்தப் பெண் பேர்த்தில் சாய்ந்து இலகுவாக உறங்கிவிட்டார். ஆனால் மற்றவர்கள் உறங்கமுடியாதபடி அவரது உரத்த குறட்டையை சத்தம் அந்த ரெயில் பெட்டியை நிரப்பியதுடன் ரயிலின் ஓசையை அடக்கி வாசித்தது!

எனக்கு மேலுள்ள பேர்த்தில் படுத்த ஆஸ்திரேலியன் ஜிம்மி 'எனக்கு தலைமேலே யாரோ சுத்தியலாலே அடிப்பது போலிருக்கிறது’ என்று நகைச்சுவையாக என்னிடம் சொல்லியபோது, 'பாவம், உடல் பருமனே காரணம்' என்றேன். அந்த பஞ்சாபி பெண்ணின் தயவில் நாங்கள் சிவராத்திரி விரதமிருந்தபடி ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து எங்களது பயணம் வானொன்றில் யோகாசனத்தின் தலை நகரெனச் சொல்லப்படும் ரிசிகேஷ் நோக்கி தொடங்கியது.

ரிசிகேஷத்தில், கங்கைநதி அமைதியாக சலசலத்து தெளிவாக ஓடியது. காசியைப்போல் கூட்டம் அதிகமில்லை. சில மணிநேரம் கரையிலிருந்தபடியே கால்களை நீரில் நனைத்தபடி இருந்தேன். எங்கு பார்த்தாலும் யோகா சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள் அமைந்திருந்தன. மறு நாள் காலையில் இரு மணி நேர வகுப்பிற்கு பணம் கொடுத்து யோக பழகுவதற்கு சியாமளா மற்றவர்களுடன் சென்றார். நான் அவர்களுடன் இணைந்து கொள்ள மறுத்துவிட்டேன். அதைவிட மலையில் நடத்தல், ஆற்றில் செல்லுதல் என பல சுவாரசியமான விடயங்களுக்கு ரிசிகேஷ் புகழ்பெற்றிருந்தது. மாலையில் நாங்கள் கங்கைக்கரையில் நடந்த 2023 சர்வதேசிய யோகா மகா நாட்டிற்கு சென்றோம். ஒரு வித அரசியல் மகாநாடுபோல் ஒருவரை ஒருவர் புகழ்வதும் பொன்னாடை போர்த்துவதுமாக இருந்தது. அதற்கு மத்திய அரசு அமைச்சர் ஒருவரும் வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள், கொல்லனது பட்டடையில் அகப்பட்ட ஈயாக, வேறுவழியில்லாது கங்கை நதியோரத்து படிகளில் குந்தியிருந்தேன்.

அடுத்த நாள் நாங்கள் சென்ற இடம் மகேஸ்யோகி தங்கியிருந்ததும் 1968ல் அவருடன் பீட்டில் இசைக்குழுவினர் இணைந்து கொண்ட ஆச்சிரமம். அது தற்போது கங்கைகரையில் கைவிட்ட நிலையில், இந்திய வனத்துறையினரால் நிர்வாகிக்கப்படுகிறது. இன்றும் பழைய நினைவுகளுடன் பல உல்லாசப்பிரயாணிகள் இங்கே வந்துபோகிறார்கள்.

ரிசிகேஷ் அருகே உள்ள மலையருகே, ஒரு முகாம் போன்ற பகுதியில் எங்கள் பயணத்தின் கடைசி இரவைக் கழித்தோம். மலைப்பகுதி என்றபோதும் நல்ல வசதிகளுடன் அது இருந்தது. மறுநாள் மீண்டும் டில்லி வந்தோம். எங்களுடன் வந்த ஜுடி இருமல் குணமாகிவிட்டதால் இப்போது அமைதியாக இருந்தார். ஆனால் வழிகாட்டியாகிய வர்ஷாவின் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. என்ன என்று கேட்டபோது, பயணம் பற்றிய ரிவியூவில் ஜுடி பத்துக்கு மூன்று புள்ளிகள் மட்டுமே வழங்கினார் என்றார். நாங்களெல்லாம் பத்திற்கு பத்து புள்ளிகள் வழங்கி சரி செய்கிறோம் என வர்ஷாவிடம் மற்றவர்களுக்கும் சேர்த்துச் சொன்னேன்.

பயணத்தில் எந்தக் குறையில்லாதிருந்தபோதும் வட இந்திய உணவு மட்டும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எப்பொழுது சென்னை திரும்புவோம், இட்லி தோசையை பார்போம் என்ற ஏக்கம் மனத்திலிருந்தது. சென்னைக்கு வந்ததும் நீல வானமும் வெண்முகிலும் பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தன!

அதேவேளையில்……

எங்கும் நாம் வாழும் வீடு கடலருகே அமைந்துவிடுவதும் ஒரு பாக்கியமே என்று நினைக்கத்தோன்றியது!

(முற்றும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்