- தேவதாரு மரம் -
டெல்லியில் இருந்து சிம்லாவிற்குச் சென்ற இந்திய ரயில் பயணம் சுகமாக இருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் உணவு மற்றும் பத்திரிகைகளும் தரப்பட்டது. சிம்லா வட இந்தியாவில் மிகவும் சுத்தமான இடமாக எனக்குத்தெரிந்தது. எங்களுடன் பயணித்த ஆங்கிலப்பெண் சிம்லா ஸ்கொட்லாந்து நகரம்போல இருக்கிறதென்றாள். பெரும்பாலான வட இந்தியர்கள் தேன்நிலவிற்கு வரும் இடமாக இது தெரிந்தது . கடைத்தெருக்கள் மிக சுத்தமாகக் காட்சியளித்தன.
சிம்லாவில் எனக்கு ஜுடியின் இருமல் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அறையிலே தங்கியிருந்தேன். ஆக இரண்டு இரவுகள் சிம்லாவில் தங்கியிருந்தோம். இமாலயப் பிரதேசம் என்ற இந்த மாநிலத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்குதான் முதல் முதலாகச் சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்ட தேவதாரு மரததை (Himalayan Chestnut tree) எங்கும் பார்க்கமுடிந்தது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் வருடத்தில் ஒன்பது மாதங்கள் இங்கிருந்துதான் அரசாண்டனராம். ஆங்கிலேயர்களது வைசிராய் மாளிகை பெரிதானதில்லை. அந்த சிறிய மாளிகையில் 40 அதிகாரிகள் 800 வேலைக்காரரை வைத்து முழு இந்தியாவையும் அதனது 40 கோடி மக்களையும் வருடத்தில் 9 மாதங்கள் அரசாண்டார்கள் என்பது வியப்பான விடயமாகத்தோன்றியது. இங்குதான் சிம்லா மகாநாடு, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியத் தலைவர்களைச் சந்திப்பது, தீபெத்தின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவோடு இணைத்த நடவடிக்கை என எல்லா வரலாற்றின் முக்கிய விடயங்கள் நடந்தேறின.
இங்கு என்னைக் கவர்ந்த விடயம்: மாளிகையை விட்டு வெளிவந்தபோது ஒரு இரும்பில் செதுக்கப்பட்ட வெளி பிரேமாகும். அங்குள்ள குறிப்பை வாசித்தபோது, அது இந்து வெளி நாகரிகத்தின் உறைவிடமான மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நாட்டியப் பெண்ணின் சிலையின் வெளி வட்டமாகும். கிறிஸ்துவிற்கு முன்பாக 2300- 1700 காலத்துச் சிற்ப வேலையது. அது தற்போது சிலை டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ளது. அதனது வெளிவடிவமே சிம்லாவில் உள்ளது. மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இன்னுமொரு பெண்ணின் சிலை பாகிஸ்தானிலுள்ள கராச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த சிலையைத் தேடி மீண்டும் டெல்லி அருங்காட்சியகத்திற்கு போக முயன்றபோது பாதைகள் மூடப்பட்டதால் போக முடியவில்லை. அழகான அந்த நான்கு அங்குல உயரமான சிலையை கணணியில் தேடிப்பார்த்தேன். ஏறக்குறைய நாலாயிரம் வருடங்களுக்கு முன்பாக மெழுகில் உருக்கி வெண்கலத்தில் வார்த்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆச்சரியமானது! கிடைத்த இரண்டு சிலைகளைப் பிரித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குக் கொடுப்பது பற்றி இந்த சிம்லா மாளிகையிலே வைத்துத் தீர்மானித்தார்கள். சிம்லா மாளிகை, சுதந்திரத்தின் பின்பு, ஜனாதிபதியினால் உயர்கல்வி நிலையமாக்கப்பட்டுள்ளது.
2) சிம்லாவிலிருந்து எங்கள் பயணம் தர்மசாலா எனப்படும் திபெத்திய அகதிகள் உள்ள நகரத்தை நோக்கித் திரும்பியது. தலாய் லாமா 31 மார்ச் 1959ல் தீபெத்தில் இருந்து தப்பி வெளியேறினார். தலாய் லாமாவோடு இந்திய-சீனப் பிரச்சனை நிழலாக தொடர்ந்தது என்பது சரித்திரம்.
மீண்டும் சிறிய பஸ்சில் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஜிம்மி என்ற ஆஸ்திரேலியருக்கும் இருமல் தொற்றிக்கொண்டது. எனக்கு ஓரளவு குணமாகிவிட்டது. இப்பொழுது ஜுடியின் இன்னொரு செயல் எங்களுக்கு எரிச்சலையூட்டியது. தொடர்ச்சியாக பரிமாறப்படும் உணவைப் பற்றிக் குறை கூடியபடியே வந்ததுதான் அது! பலருக்கு வட இந்திய உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் அதைத் தொடர்ந்து குறைகூறுவதும் எப்பொழுதும் எதிர்மறையாகப் பேசுவதும் பலருக்குச் சினத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. எங்களைவிட எங்களது வழிகாட்டியான வர்ஷாவுக்கு இந்நடத்தை மிகவும் சங்கடமான விடயமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
வழிகாட்டி வருஷாவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். 'தன்னை திருமணம் முடிக்கும்படி பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்; ஆனால் எனக்கு இந்த வேலை பிடித்ததிருக்கிறது' என்றாள். ஒரு அர்ப்பணிப்போடு இந்தத் தொழிலைச் செய்யும் பெண் அவள்.
‘இந்தியாவில் ராஜஸ்தானே மிகவும் பழமை வாய்ந்த மாநிலம், மற்றும் பெண்களை வேலை செய்யவிடாத மாநிலம் என நினைக்கிறேன்‘ என்றபோது ‘உண்மைதான், என்னால் இப்பொழுது உறவினர்களைச் சந்திக்க முடியாது எப்பொழுது கல்யாணம் என்று கேட்டு வதைக்கிறார்கள். பெண்ணுக்குக் கல்யாணத்தை விட வேறு பல விடயங்கள் இருக்கிறன என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு ‘தனது தந்தை மிகவும் நல்லவர்; தன்னை தனியாக ஐரோப்பா செல்ல அனுமதித்தார்’ என்றாள்.
"இந்தியாவின் சமூகத்தில் பல மாற்றங்கள் தற்போது ஏற்பட தொடங்கியுள்ளன" என அவளே சொன்னாள். ருஷ்சியாவை மேற்கு நாடுகள் விலத்தி வைப்பதுபோல், எங்கள் பிரயாணத்தில் ஜுடியை புறக்கணிக்க முடிவு செய்தோம். அதைத் தொடக்கி வைத்தது கீம்லி என்ற 23 வயதான பிரித்தானியப் பெண்தான். அவளே எங்களுள் வயதில் குறைந்தவள். தொடர்ந்து ஜுடியை மறைமுகமாக திட்டியபடியே இருந்தாள். ஆரம்பத்தில் ஜுடியுடன் பேசுவதைக் குறைத்தோம். உணவுண்ணும்போது விலகியிருந்தோம். அதன் பின்பு ஜுடி தனிமையாக்கப்பட்டார்! அவரும் இறுதியில் ஓரளவு தனது பேச்சுகளைக் குறைந்துகொண்டார். சிறிய குழுவாகப் பயணம் செய்யும்போது பயணத்தில் எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என்பது மிக முக்கியமான விதி.
1950ல் தீபெத்தை சீனா தனது பிரதேசமாகக் கைப்பற்றிக் கொண்டது. ஏறக்குறைய 9 வருடங்கள் சீனாவுடனான போராட்டங்கள், எதிர்ப்புகளின் பின்பாக இந்த தலாய் லாமாவின் வெளியேற்றம் நடந்தது. அப்பொழுது 14ம் தலைலாமாவுக்கு வயது 23. பிற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தலாய்லாமா அங்கிருந்தே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
அருணாசலபிரதேசத்துடாக சீன இந்திய எல்லையை தலாய்லாமாவும் அவரோடு வந்தவர்களும் கடந்தார்கள். ஏற்கனவே இந்தியப் பிரதமர் நேரு இதை அறிந்திருந்ததால் இராணுவ பாதுகாப்பு கொடுத்து வரவேற்கப்பட்டார். அத்துடன் தலாய்லாமாவை ஒரு அரசியல் தலைவராகவும் வெளியேற்றப்பட்ட (Government in exile) அரசை நடத்தும் அனுமதியும் இந்தியப் பிரதமர் நேருவால் அளிக்கப்பட்டது . ஆரம்பத்தில் தலாய்லாமா வெளியேறுவது நல்லது என நினைத்த சீனா பின் தலாய்லாமாவுக்கு கிடைத்த வரவேற்புகளால் இந்தியா மீது ஆத்திரமடைந்தது. அத்துடன் தீபெத்தில் கிளர்ச்சி உருவாகி பின் அது சீனாவினால் அடக்கப்பட்டது. புராதன சீனாவின் மத்திய அரசு பலமாக இருந்த காலங்களில் தீபெத் சீனாவின் பகுதியாக இருந்தது உண்மையே. அதேவேளையில் பல காலம் தீபெத் தனிநாடாகவும் இருந்தது. சீனா - இந்தியா போருக்கும் தொடர்ச்சியான முறுகல் நிலைக்கும் தலாய்லாமாவும் ஒருவிதத்தில் காரணமாகும் எனலாம். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா நகரத்தில் 1960ல் தலாய்லாமா அவருடன் சார்ந்தவர்களுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் நாங்கள் தர்மசாலாவில் நின்ற போது பனி படர்ந்த மலைகளிடையே ஒரு லாசா நகர் அமைந்திருப்பதைக் காணமுடிந்தது. எங்கும் தீபத்திய அகதிகள் தற்போது 4 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் கடைகள், விடுதிகள் எனப் பல சிறு வியாபாரம் செய்தனர். அவர்களுக்காக கலாச்சார மண்டபங்கள் அமைத்து அங்கு அவர்களது நாடகம், கைத்தொழில் மற்றும் துணி, கம்பளி போர்வைகள் செய்வது போன்ற கலைகள் பாதுகாக்கப்படுகிறன. மற்றைய நாட்டு அகதிகளுக்கு இல்லாத சலுகைகள் திபெத்திய அகதிகளுக்கு இந்தியாவில் உள்ளது. முக்கியமாக இலங்கை அகதிகளுடன் மூன்று வருடம் இந்தியாவில் வேலை செய்த எனக்கு இது சிறிது பொறாமையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்தியா, தலாய்லாமாவையும் திபெத்திய அகதிகளையும் பாதுகாக்கக் கொடுக்கும் விலை அதிகம் என்பது எனது கணிப்பு.
மேற்கு நாடுகளில் தலாய்லாமாவும் தர்மசாலையும் பிரபலமாக இருப்பதால் உல்லாசப்பிரயாணிகள் இங்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட இரு கிலோ மீட்டர் நீளமான பிரதேசத்தில் இரு மருங்கும் திபெத்தியக் கடைகள் இருந்தன. அவற்றைத் தாண்டியே திபெத்திய புத்த கோவிலும் தலாய்லாமாவின் வசிப்பிடமும் இருந்தன.
தலாய்லாமாவின் வீட்டு வாசலிலிருந்த காவலாளியிடம் விசாரித்தபோது நேற்று கோயிலுக்கு வந்தார் என கூறினார். 88 வயதான தலாய்லாமாவை காண சென்றபோது அவர் உள்ளே இருப்பதாகவும் தற்போது உடல் நலிந்த நிலையில் உள்ளதாகவும் அறிந்தோம். விடுதலைப்புலிகள் பிரபாகரனோடு ஈழம் தொலைந்துபோனதுபோல் தலாய்லாமோவோடு தீபெத் பிரச்சனை இல்லாது போகும் சாத்தியம் உள்ளது. தலாய்லாமா தனியொருவராக தீபெத் பிரச்சனையை உலகம் முழுவதும் காவித்திரிந்தவர். ஆனால் அவரது தலையிலிருந்த சுமையை சுமப்பதற்கு மீண்டும் ஒரு குழுவோ அல்லது பிரதிநிதி வருவாரோ என்பது சந்தேகமே. எனினும் அவரது மதரீதியான தலைமை தொடர்கிறது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.