- இந்தியா வாயில் (India Gate) -
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில் தீ மிதித்தபடி நடக்கும்போது அடிக்கடி கரும்புச் சாறு, மிளகுத் தண்ணீரென குடித்தபடி நண்பன் விசாகனோடு நடந்தேன்.
இறுதியில் மாலையில் நாங்கள் தங்கிய மாடிக் கட்டிடம் உள்ளே சென்றபோது செங்கல்லைச் சூடாக்கும் சூளைபோல் நெருப்பாகக் கொதித்தது. புகை வராததுதான் மிச்சம்! அக்காலத்தில் கட்டிடங்களில் அதிகம் ஏர் கண்டிசன் வசதிகள் இருக்கவில்லை. நாங்கள் நின்ற வீட்டின் பகுதியில் புல்லால் ஆன யன்னல் தட்டியில் நீர் வந்து சிதறி அறையை குளிராக்கும் ஒரு விசித்திர பொறிமுறையை அமைத்திருந்தார்கள். அதில் பட்டு வரும் காற்றின் மூலம் அறையின் வெப்பம் குறைய வேண்டும். ஆனால் நாங்கள் நின்ற அன்று அந்தப் பொறிமுறை வேலை செயதாலும் வெப்பத்தில் மாற்றமில்லை. வேலை செய்த ஃபான் தொடர்ந்து அக்கினி கலந்த காற்றை உள்ளே சுமந்து வந்தது. தரை, கட்டில், மேசை எல்லாம் கொதிநிலையிலிருந்தன. எப்படி இரவில் படுத்து உறங்குவது என்ற சிந்தனையின் இறுதியில் இரண்டு வாளி நீரை சீமந்து தரையில் ஊற்றிவிட்டு அதன்மேல் கம்பளத்தை விரித்துப்படுத்தோம்.
டெல்லியில் நின்ற மூன்று நாட்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர்களுடன் சோசலிசம் பேசியது நினைவுள்ளது. நானும் அக்காலத்தில் மாக்சியத்தை நம்பியதால் எங்கள் சம்பாஷணையில் கம்யூனிசம் எப்படியும் வருமென்ற கருத்து சுவிசேஷ கூட்டங்களில் யேசு மீண்டும் பிறப்பார் எனப் பேசுவதுபோல் இருந்தது. அவர்களது அறிவுத்திறனைப் பார்த்துப் பிரமித்து, நான் படித்த பேராதனை பல்கலைக்கழகம் இப்படி இல்லையே எனக் கவலைப்பட்ட நாட்களுண்டு.
அக்கால நினைவுகள் இதயத்தில் நிறைந்திருக்க, இம்முறை மொத்தமாக ஐந்து இரவுகள் டெல்லியில் கரோல்பாக்கில் தங்கினேன். முதல் நாளே தொண்டையில் ஏதோ பூச்சி புகுந்ததுபோல் இருமல் பற்றிக்கொண்டது. பகல் நேரத்தில் கருப்புக் கண்ணாடி போட்ட தமிழகத் தலைவர்களாக ஆகாயம் இருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்பாக டெல்லியில் பார்த்த சூரியனைத் தாயின் முகத்தைத் தேடும் குழந்தையாக ஆவலுடன் தேடினேன். மாசி மாதம் என்பதால் இன்னமும் உச்சம் கொள்ளவில்லையோ என்று நினைத்தாலும், எனது மூக்குக் கண்ணாடிதானோ என நினைத்து கண்ணாடியைக் கழட்டிவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு எதுவுமில்லை. மனிதர்கள் வயதாகி மறைவதுபோல் சூரியனும் மறைந்துவிட்டதா?
அன்று இரவு ஹோட்டலின் மொட்டை மாடியில் உணவை ஓடர் பண்ணிவிட்டு திருவிழாக் கூட்டத்தில் காதலியைத் தேடும் இளைஞனாக மீண்டும் ஆகாயத்தை பார்த்தேன். அங்கும் ஏமாற்றம்: கருமையாகத் தெரிந்தது. மேகங்களையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. ஒரு நாள் நிகழ்வு என நினைத்தபோது ஐந்து நாளும் இதுவே. பகலில் மதுராநகர் நோக்கிச் செல்லும்வரையில் இதுவே நிலை.
டெல்லியில் உதித்த சூரியன் மட்டுமல்ல, சந்திரன், நட்சத்திரங்கள் மேகங்கள் எல்லாம் நல்லதங்காள்போல் குடும்பமாகத் தற்கொலை செய்து விட்டனவோ என எண்ணத் தோன்றியது. அந்த கவலையில் முழுப் போத்தல் பியரையும் குடித்து முடித்தேன்.
இப்படிப்போனால் டெல்லி மக்களின் சுகாதாரம் என்னவாவது? டெல்லி என்ற நகரத்தில் 25 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். எத்தனை வெளிக்கள விளையாட்டுகள் நடக்கின்றது. அவர்களுக்காக வானிலை மாறவேண்டும். சூரிய ஒளி, சுத்தமான காற்று, மேகங்கள் வேண்டும். காளிதாசன் நல்லவேளை அக்காலத்தில் பிறந்திருந்தான். இலகுவாக மேகத்தை கண்டான். இக்காலத்தில் நிச்சயம் அவனால் மேகத்தைத் தூதுவிடமுடியாது.
மக்களுக்காக டெல்லி மாற வேண்டும். தற்போது மத்திய அரசின் கீழே இருப்பதால் மாற்றுவது இலகுவான விடயம். டெல்லியின் மெட்ரோவில் பயணித்தபோது அது நல்ல சேவையாக இருந்தது. அதைப் பல பாகங்களாக பிரித்து மேலும் விஸ்தரித்து பெரிதாக வேண்டும். டெல்லியை மாற்ற முடியாது என்பதல்ல. அக்கால ஆரம்பத்தில் சீனாவின் தலைநகர் பீக்கிங் இப்படி இருந்தது. ஆனால் இப்போது மாறிவிட்டது.
இனிமேல் விடயத்திற்கு வருவோம்.
டெல்லியில் நான் ஒரு பீகார் சாரதியிடம் ஏமாந்த கதையை சொல்லவேண்டும் . பல இடங்களில் பயணம் செய்ததால் ஓரளவு விஷயம் தெரிந்தவன் என்பதுடன் இதுவரை பெரிதாக ஒன்றும் ஏமாறவில்லை என்ற கர்வமிருந்தது. அதையெல்லாம் சிதறு தேங்காயாக அடித்த சம்பவத்தை எழுதாமல் விடமுடியாது. ஆனாலும் பலர் பயணத்தின்போது பெரிதாகப் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது எனது ஏமாற்றம் சிறியதே. ஆனாலும் மற்றவர்களுக்காக அதை சொல்லியே ஆகவேண்டும்.
எவருக்கும் உதவியாகவோ தானமாகவோ பணத்தைக் கொடுக்கும்போது நமக்கு மனமகிழ்வு ஏற்படும். ஆனால் ஒரு சிறிய சில்லறைத் தொகையைக் கூட நம்மை ஏமாற்றி ஒருவர் எடுக்கும்போது ஏற்படும் வலி அதிகமானது. அது பல காலம் நீடிக்கும் ஒரு வலி. ஒரு விதத்தில் எதிர்காலத்தில் படிப்பினையாக இருக்கலாம் என பின்பு ஆறுதல் அடையமுடியும்.
எங்களை டில்லி விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு கொண்டு வந்த பீகார் சாரதி தானே எங்களை மதுராபுரி கொண்டு செல்வதாக கூறி ஒரு தொகையைக் கேட்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் அவன் கேட்ட தொகைக்குச் சம்மதித்தேன். அவன் கேட்ட தொகை அதிகமாக இருந்தது ஆனாலும் பரவாயில்லை எனத் தெரிந்தே சம்மதித்தேன். இறுதியில் வாகனத்தில் பல மைல் தூரம் சென்ற பின்பு மதுராபுரிக்கு ஆறு கிலோமீட்டர் முன்பாக தெரு மூடப்பட்டுவிட்டது என அறிந்தோம். ஹோலி பண்டிகைக்கு முதல் நாட்களானபடியால் எங்கும் கூட்டம். "மதுராபுரிக்குப் போக முடியாது. நீங்கள் நடந்து போகவேண்டும்" என்றார்கள். நாங்கள் அப்படிப் போக விரும்பாது திரும்பினோம். அதற்கு அவன் பொறுப்பில்லை என்பதால் அவனுக்குப் பேசிய பணத்தைக் கொடுக்க விரும்பினோம். என்னிடம் இந்தியப் பணமில்லை. எமது அவுஸ்திரேலிய டாலரை மாற்றி நாங்கள் போகாத மதுராபுரிக்குப் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. சாரதிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாற்றுவதற்குக் கொண்டுபோன இடத்தில் அதை மாற்றச் சொல்லியபோது மாற்றி அவனிடம் கொடுத்தோம். பின்பு ஹோட்டலில் மீண்டும் கேட்டபோது ஒரு டாலரில் கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் குறைந்திருந்ததைக் கவனித்தேன் . அப்பொழுது புரிந்தது பணம் மாற்றுபவர்கள் இந்த பீகார் சாரதியோடு கூட்டாகச் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை! விடயத்தைப் புரிந்தபின் மிகவும் முட்டாள்தனமாக ஏமாந்தோமே என எழுந்த கசப்பு, நாக்கில் குயினையின் மருந்தாக கசத்தது.
பல தடவை பயணம் செய்த மைக்கேல் என்ற ஜேர்மனியர் சொன்னது நினைவுக்கு வந்தது: "இந்தியாவில் பயணம் பண்ணும்போது அதிக முட்டாளாக இருக்கலாம் ஆனால் அதை வெளிக்காட்டக்கூடாது." அப்பொழுது நான் நினைத்தேன், மதுராபுரிக்குப் போகாததால் நான் பணம் கொடுக்க மறுத்திருக்க வேண்டும் அல்லது குறைவாகக் கொடுத்திருக்கவேண்டும் அதேபோல் கேட்ட பணத்தைப் பேரம் பேசாது ஒப்புக் கொண்டது என்பனவற்றை வைத்து என்னை அடிமுட்டாளாக அந்த பீகாரி கணித்திருக்கவேண்டும்.
- குதுப்மினார் கோபுரம் -
டெல்லியில் இந்தியா கேட் மற்றும் குதுப்மினார் எனது பார்க்க விரும்பிய இடங்களையெல்லாம் சுற்றிலாப் பயணம் தொடங்கு முன்பே வேகமாகப் பார்த்தேன். என் போன்ற சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்மா வியாதி கொண்டவர்கள் சுற்றுலாப் பயணியாக வந்து இருப்பதற்கு தகுதி இல்லாத இடம்தான் டெல்லி என உணர்ந்தேன்.
எங்களோடு ஆறு பேர் கொண்ட குழு சேர்ந்து கொண்டது. அதில் 3 பேர் ஆஸ்திரேலியர் மற்றைய மூவர்கள் சுவிஸ், ஜேர்மன், பிரித்தானியாவை சேர்ந்தவர்கள். எங்களது பயண வழிகாட்டியான வார்ஷா என்ற ராஜ்புத்திர பெண்ணுடன் சேர்த்து ஒன்பது பேர் கொண்ட சிறிய குழுவாக உருவெடுத்தது.
எங்கள் பயணத்தின் ஆரம்பம் பழைய டெல்லியில் உள்ள பள்ளிவாசலில் தொடங்கியது. ஜும்மா மஜித் (Jama Masjid, Delhi) என்ற 1656 ஷாஜகானினால் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல். மிகவும் பிரமாண்டமானது. அமைப்பும் பாவிக்கப்பட்ட பளிங்குக் கற்களும் தற்போதைய தாஜ்மகாலின் ஒத்திகையாக இருந்ததோ என நினைக்கத் தோன்றியது.
- ஜும்மா மஜித் (Jama Masjid, Delhi) -
பழைய டெல்லியில் உள்ள கடைகள் மற்றும் சாந்தினி சவுக் என்பன முகலாய மன்னனான ஷாஜகானின் மகள் ஜகனாரா பேகத்தினால் (Jahanara Begum) வடிவமைக்கப்பட்டது. ஷாஜகானின் காலத்தில், ஆக்ராவிலிருந்து டெல்லிக்குத் தலைநகர் மாறியது. ஷாஜகானின் மகளாகவிருந்த ஜகனாரா பேகம் என்ற இளவரசியின் கதையை வாசிக்க முடிந்தது. இந்தியச் சரித்திரத்தில் பலராலும் முக்கிய பெண்ணாகக் குறிப்பிடப்படும் ஜகனாரா பேகம், கவிதாயினி- மருத்துவர்- அரசியல் ஆலோசகர் எனப் பல விடயங்கள் புலமை வாய்ந்த பெண்ணாக இருந்திருக்கிறார். அவரை பற்றிப் பல இலக்கியங்கள், திரைப்படங்கள் வந்துள்ளன.
- ஜும்மா மஜித் (Jama Masjid, Delhi) -
ஜகனாரா பேகம், என்னைக் கவர்ந்த விடயங்கள் பல: அவுரங்சீப்பால், ஷாஜகான் சிறையில் அடைக்கப்பட்டபோது கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் தந்தை இறக்கும்வரை சிறையிலிருந்து தந்தைக்குப் பணிவிடை செய்த தகவல். மேலும் ஜகனாரா பேகம், அவுரங்கசீப்புடன் பல இடங்களில் தர்க்கம் புரிந்ததாகவும், முக்கியமாக இஸ்லாமியர்கள் அற்றவர்கள்மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்ததாகவும் அறிந்தேன் . அவுரங்கசீப்பின் அரசவையில் முதன்மை இளவரசியாக திருமணம் முடிக்காது இருந்ததாக வரலாறு சொல்கிறது.
இதேபோல் அருகேயுள்ள டெல்லி குருத்துவாராவுக்கும் நாங்கள் சென்றோம். அது 24 நவம்பர் 1675ல் டெக் பகதூர்(Tegh Baahadur) என்ற சீக்கிய குரு அவுரங்கசீப்பின் கட்டளையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் 1783ல் கட்டப்பட்டுள்ளது. அது நான் சென்ற முதலாவதாகக் குருத்துவாராவாகும். எல்லோரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். எனது முழங்கால் பிரச்சனையால் நிலத்தில் அமர்த்திருக்க முடியவில்லை. விரைவாக வெளிவந்தேன்.
- டெல்லி குருத்துவாரா -
எங்களுடன் வந்த ஆறுபேரில் ஜுடி என்ற 50 வயதான ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இருமல் தொற்றிக்கொண்டது. வாகனத்தில் எங்களது சீட்டுக்கு முன்னால் இருந்து பயணித்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவரான கத்தரினா என்ற பெண் முகக்கவசம் அணியும்படி வற்புறுத்தினார். அதே நேரத்தில் சுவிட்சலாண்டில் இருந்து வந்த பற்றீசியா முகக்கவசம் அணிந்தார். ஆனால் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் திருமந்திரத்திற்கு அமைய, தாராள மனத்துடன் ஜுடி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டார். எங்களுக்கு அது விசித்திரமாகப்பட்டது. என்னைப் பொறுத்தவரை எங்களது சாரதிக்கு வியாதி வந்தால் எல்லோரது பயணம் தடைப்படும். எனது சீட்டுக்கு முன்பாக இருந்து இருமியபடி வந்த ஜுடியை நாங்கள் எல்லோரும் மனத்துள் திட்டியபடி பயணம் செய்தோம் .
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.