நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம்.
போட்ஸ்வானாவின் நிலப்பகுதி, ஒண்டாரியோவிற்கு சமனானது. ஆயினும் சனத்தொகை 2.5 மில்லியன் மட்டுமே. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 m உயரத்தில் உள்ள சமவெளி பூமியான அதன் சராசரி மழை வீழ்ச்சி 500-700 mm. இங்கு சாரீரப்பதன் மிகவும் குறைவு என்பதால் மிகவும் வறண்ட பூமியாக காட்சி தரும். அரசியல் பொருளாதார நிலை பற்றிக் கூறுவதானால் இதனை ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் எனலாம். சிங்கப்பூருக்கு மனித வளம் போல், போட்ஸ்வானாவிற்கு Diamond, Nickel, Copper போன்ற கனிம வளங்கள் உதவுகின்றன. 1966 இல் சுதந்திரம் பெறும்போது தனிநபர் வருமானத்தில் உலகத்தின் கடை நிலையில் இருந்த போட்ஸ்வானா, இப்போது ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ளது.
நான், நெடுஞ்சாலைப் பொறியியலாளராக இருந்ததால், எனது தள அலுவலகம் அவ்வப்போது இடம் மாறிக் கொண்டிருந்தது. அப்படி நான் வேலை செய்த ஒரு இடம்தான் போஸ்வானாவின் வடக்கில் இருக்கும் Kasane. சுமார் 5000 மக்கள் குடியிருக்கும் அந்த நகரம் சுற்றுலாத் துறையை பொறுத்தவரை மிகவும் பிரபல்யமானது. Chobe National Park ஐ அண்டி இருப்பதோடு உலகப் புகழ்பெற்ற Victoria falls உம் அதில் இருந்து 70 km தூரத்தில் இருப்பது தான் அதற்கு காரணம். அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து Zambia, Zimbabwe, Namibia ஆகிய நாடுகளை ஒரே நேரத்தில் பார்க்கலாம். நான் அங்கு இருக்கும் போது தான் முன்னாள் அமெரிக்க அதிபர் Bill Clinton 3 நாள் அரச விடுமுறையில் அங்கு வந்து தங்கிச் சென்றார்.
Kasane இல் Zimbabwe border post இருந்து Chobe National Park னூடாக Namibia border post ஐ இணைக்கும் 60 km நீளமான வீதி தான் நாம் மேற்கொண்ட கட்டுமானப்பணி. ஆப்பிரிக்காவில் உள்ள National Park களில் Chobe Park க்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமானது. எமக்கென ஒதுக்கப்பட வதிவிடம் Park ஐ அண்டி இருந்ததால் சில மிருகங்களை அங்கிருந்தே பார்க்கலாம். குறிப்பாக யானைகள் எமது சாதாரண விருந்தாளிகள். உலகிலே அதிக யானைகள் (130,000) வாழும் நாடு போட்ஸ்வானா. அதாவது 20 பேருக்கு ஒரு யானை என்ற விகிதத்தில். சிறுத்தைகளும் இடைக்கிடை வந்து போகும். நாய் இறைச்சி அவைக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் இரவில் வருவார்கள். ஒரு நாள் விடிய எழுந்து பார்த்தால் பக்கத்து வீட்டு நாயை காணவில்லை. தடயங்களை வைத்து சிறுத்தையின் வேலை என்று தெரிந்து கொண்டோம்.
வேலைத்தளத்தில் யானைகளோடு நாம் எதிர்கொண்ட பிரச்சனை சுவாரசியமானது. சிந்திக்க வைப்பது. நாம் வேலை செய்ய தொடங்கிய பகுதி நகரை அண்டி இருந்தமையால், எமது வீதிக் கட்டுமானப் பணி, முதல் 2 -3 மாதங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக சென்றது. ஆனால் கட்டுமானம் Park இனுள் சென்றவுடன், நாம் அதுவரை சந்தித்திராத பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டோம். வழமையாக, வீதிக் கட்டுமானத்திற்கு தேவையான தரவுகளை Survey Team வீதியின் இருமருங்கிலும் Timber profile இல் வழங்கி செல்வார்கள். அடுத்த நாள் அதை அடிப்படையாகக் கொண்டு கட்டுமானப் பணி தொடரும். அந்த வகையில் முதல் நாள் Survey Team தரவுகளைக் கொடுத்துச் செல்ல, மறுநாள் சென்ற கட்டுமானப் பணியாளர்கள் அங்கு நாட்டப்பட்டிருந்த எந்த ஒரு Timber profile ஐயும் காணாது திகைத்துப் போனார்கள். அருகே சென்று பார்த்த போது யானைகள் தும்பிக்கையால் அவற்றைப் பிடுங்கி எறிந்திருப்பதை அவதானித்தார்கள். ஏதோ தற்செயலாக நடந்திருக்கும் என எண்ணி திரும்ப அதே வேலையைச் செய்து விட்டு, அடுத்த நாள் போய்ப் பார்த்தால் மீண்டும் அதே கதைதான்.
இந்த சம்பவம் மேலும் இரண்டு மூன்று நாட்கள் தொடரத்தான், பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொண்டார்கள். எனவே profile க்கு வேறு வேறு வர்ணம் பூசிப் பார்த்தார்கள் அதிலும் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போக, இறுதியாக Survey Team இன் வேலையாட்களின் எண்ணிக்கை, வேலை நேரம் என்பவற்றைக் கூட்டி survey வேலையையும் கட்டுமான வேலையையும் ஒரே நாளில் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் தள்ளப்பட்டார்கள். எனினும் ஒரு சில காலத்திற்குள் யானைகள் புதிய சூழலுக்கு பழக்கப்பட்டுப் போக, கட்டுமான பணியாளர்களின் வேலை முறை வழமைக்கு திரும்பியது. நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு கட்டுமானமும் இயற்கையை பாதிக்கும் என்பதையும், அவற்றை மிருகங்கள் கூட விரும்பாது என்பதை அன்று நான் நேரில் கண்டு ஆச்சரியப்பட்டேன். இதை கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம் ஒன்றை நான் கனடா வந்த பின் பார்த்து ரசித்தேன்.
ஒரு சமயம் எருமை ஒன்று கொல்லப்பட்டு, பாதி உண்ணப்பட்ட நிலையில் நடு வீதியில் கிடந்தது. அருகே சென்று திரும்பிப் பார்த்தால் 200 m தூரத்தில் ஆறு ஏழு குட்டிகள் உட்பட 15-20 சிங்கங்கள் சாகவாசமாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நாம் வேலை முடிந்து போன பின் மிகுதியை உண்பதற்காக. இது போன்ற சில சம்பவங்களைத் தவிர எனது வேலை நேரத்தில் எந்த ஒரு மிருகங்களையும் நான் கண்டதில்லை.
இது போன்று அங்கு நான் பெற்ற அனுபவங்கள் பல. இருப்பினும் ஆக்கத்தின் அளவு கருதி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆரம்பத்தில் கூறிய வசதிகளோடு, இடைக்கிடை இப்படி கிடைக்கும் சாகசம் நிறைந்த சுவையான அனுபவங்களை போட்ஸ்வானாவில் பெற்றாலும், தனிமை என்ற கொடுமையும் எம்மோடு எப்போதும் பயணிக்கும். இருப்பினும் ஒருவன் வாழ்க்கையை புரிந்து கொள்ள, உலகை அறிந்து கொள்ள அப்படிப்பட்டதொரு சூழல் தான் நல்லது என்பதை அவசரமும், பரபரப்பும் மிக்க கனடாவிற்கு வந்த பின் தெளிவாக உணர்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.