Website: Stem-Kalvi | Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து ஸ்டெ ம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி குமாரவேலு கணேசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"அண்மையில் யூனிசேப் நிறுவனத்தால் இலங்கையில் நடாத்தப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பற்றிய ஒரு ஆய்வில் தமிழ் பிரதேசங்கள், முக்கியமாக வடமாகாணம், மிகவும் பி ன்தங்கி ய நிலையில் இருந்ததை நாம் எல்லோரும் அவதானித்தோம். வடமாகாணத்தில் 16% ஆன 3ம் வகுப்பு மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25% ஆன 3ம் வகுப்பு மாணவர்களுமே அவர்களின் வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு தமிழ் மாணவர்களின் வயதிற்கேற்ற வாசிப்புத்திறன் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மத்திய மாகாணத்தில் 11% ஆகவும், தென் மாகாணத்தில் 5% ஆகவும், ஊவா மாகாணத்தில் 12%ஆகவும், சப்பிரகமுவா மாகாணத்தில் 19% ஆகவும் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கூட சிங்கள மாணவர்களின் வாசிப்புத்திறன் 52% ஆகக்காணப்படும்போது தமிழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் 30% ஆகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யாவிடில் எமது இளம் சமுதாயம் திறமையாக வாசிக்க முடியாத ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்கி விடும்.
இதன் அடிப்படையில், முதல் கட்டமாக மாணவர்களுக்கு கவர்ச்சியான படங்களுடன் கூடிய கதைப்புத்தகங்களை உருவாக்க எண்ணியுள்ளோம். இவற்றுக்கான படங்கள் செயற்கை நுண்ணறிவு பாவித்து உருவாக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு வயதினருக்கான ஆயிரம் புத்தகங்கள் தயாரிக்கும் இச்செயற்றிட்டத்தில் இணைய விரும்புவர்கள் தயவு செய்து ஸ்டெம் கல்வியின் முகனூல் பக்கத்தின் பின்னூட்டத்தில் தமது விருப்பைத் தெரிவிக்கலாம். நிதியனுசரணை கிடைத்தால் இவற்றை அச்சில் புத்தகமாக வெளியிடலாம். அதுவரை இவை எண்ணிம வடிவில் கைத்தொலைபேசியிலும், கணிணியிலும் உபயோகிக்கத் தக்கதாக வெளியிடப்படும். இச்செயற்றிட்டத்தில் கதைகளின் பதிப்புரிமை மீறப்பட மாட்டாது.”
நூலை வாசிக்க
‘ஆயிரம் தமிழ் வாசிப்புப் புத்தகங்கள்’ திட்டத்திற்கு பல நலன் விரும்பிகளிடமிருந்து ஆதரவு வந்து கொண்டிருப்பது சமுதாயத்தில் இன்னமும் மனித நேயம் நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது என்று தான் கருத வேண்டும். இத்திட்டத்தில் உருவாகும் ஒவ்வொரு நூலிலும் மாணவர்கள் புதிய தேடல்களை மேற்கொள்ளவும் , வாசிப்பதற்கு ஊக்கமளிக்கும் வாசிப்பு அனுபவத்தை தருவதற்கு ஏற்புடைய எழுத்தனுபவத்தை தருவதற்கும் பல எழுத்தாளர்கள், மாணவர்களுடன் பல வருடங்கள் சேர்ந்து கற்பித்து, அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் எனப்பலரும் ஒன்று சேர்ந்திருப்பது சிறப்பு.
- கலாநிதி குமாரவேலு கணேசன் -
ஒவ்வொரு நூலிலும் மாணவர்கள் புதிய சொற்களைக் கற்க வேண்டும் என்பதை நியதியாக்கி, அவர்களது வயதின் அடிப்படையில் அல்லது வாசிப்புத் திறன் அடிப்படையில் இந்நூல்கள் மாணவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
தற்போது செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாகியுள்ள படங்களோடு, பல புதிய கதைகளும், பல பழைய நீதிக்கதைகள், அழ.வள்ளியப்பா போன்றவர்களின் பாடல்களும் உருவாக்கப்பட்டு ஸ்டெம் கல்வியின் முகநூல் பக்கத்தில் வாசிக்க வசதியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பகர்த்தா கணேசன் அவர்கள் கருதுவது போல, எதிர்காலத்தில் நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றால் இவற்றைப் பதிப்பாக்கும் வசதி உருவாகலாம். தாயகத்தில் பாடசாலைகளில் இவை அச்சுப் பிரதியாக மாணவர்களுக்குக் கிடைக்க சந்தர்ப்பம் ஏற்படலாம்.
நூலை வாசிக்க
இங்கிலாந்தில் பாவிக்கப்ப்டும் Oxford Reading Tree போன்று நான்கு வயதில் இருந்து பத்து வயது வரையும் உள்ள மாணவர்களுக்காக அதே போன்ற நிறப்பட்டைகளுடன் (Colour Band) இந்நூல்கள் வெளிவரவுள்ளன. இவற்றை சரியான வகையில் தரப்படுத்த இலங்கைக் கல்வியியலாளர்கள் பலர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இவை எல்லாம் சரியாகக் கணிக்கப்பட்டதன் பின்னரே இந்நூல்கள் வெளிவிடப்படும்.
அத்தோடு, இந்நூல்கள் இரு மொழி நூல்களாகவும் ((ஆங்கிலமும் தமிழும் இணைந்த நூல்கள்) மாற்றம் பெற இருப்பதும், செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கிய அழகிய ஓவியங்களைக் கொண்டிருப்பதும், தற்போது அதிகளவில் நடைமுறையில் உள்ள சிறுவர்களுக்கான தமிழ் வாசிப்பு நூல்களிலிருந்து இந்நூல்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன. தற்போது வெளியாகியுள்ள சிறுவர்களுக்கான நூல்களின் அட்டைப் படங்கள் சிலவற்றை கீழே காணலாம். இத்திட்டம் வளர்ந்து விருட்சமாகி குழந்தைகள் இலக்கியம் அல்லது சிறார் இலக்கியங்களுக்கு புதிய பரிணாமம் ஒன்றை ஏற்படுத்தும் என நம்புவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.